Friday, March 14, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

இந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில், இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெட்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை குறித்தும் செறித்தும் பறித்தும் பயோனித்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொடருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............

Tuesday, March 11, 2008

பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.

செய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.

----------

ஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.

கலைஞர் கடிதம்: உடன்பிறப்பே. கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன. பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும். டெல்லி எருமைகள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய். பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது. இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை. பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.

--------

குமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.

கல்யாணமான புதிதில் கணவன்:
கமலா. நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.

--------

தலைவரே. உளர்றத நிறுத்துங்க. பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம். ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.

---------

ஆசிரியர்: நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.
மாணவன்: ரொம்ப தாங்ஸ் சார்.

--------

பந்தியில்:

அது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே. நெய்யா?

இல்லை. பால் பாயாசம்.

-----

பால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.

ஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.

----

Sunday, March 09, 2008

ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்

புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.

அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.

இது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏன் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.

"ராதை." புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.

"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்."

"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்."

"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்."

"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல."

"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ."

"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்."

"கண்ணா...."

"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை.."

"கண்ணா.. ஆனால் என் கணவன்."

"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. "

"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்."

"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா." மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.

ராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராதை தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...

விளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.

ஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.

"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்." ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்."

"நிச்சயமாக.."

"நிச்சயமாக ராதா. எனது கண்ணே."

கண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.




---

வீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.
பரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.

கண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.

ராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.
கணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.

கண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.

கண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.

அவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.

சமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.
ஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.
கண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.

கண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.

----------