Monday, February 19, 2007

அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.

1. அமெரிக்காவில் நிகழும் சாலைவிபத்துகளில் குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் நிகழும் விபத்துகளின் சதவீதம்

a) 20 சதவீதம்
b) 30 சதவீதம்
c) 40 சதவீதம்
d) 50 சதவீதம்

2. ஒரு ஷாட் விஸ்கி என்பது எதற்கு சமம் என்றால்

a) ஒரு பாட்டில் பியர்
b) இரண்டு பாட்டில் பியர்
c) மூன்று பாட்டில் பியர்
d) நான்கு பாட்டில் பியர்

3. மரிஜிவானா என்பதை உட்கொண்டால்

a) நன்கு கார் ஓட்ட முடியும்
b) கார் ஓட்டுதலில் பல தவறுகள் நிகழும்.
c) ஒரு விளைவும் இல்லை.
d) கார் கட்டுப்பாட்டில் இருக்காது.


இந்த கேள்விகளுக்கும் எனது அமெரிக்க சாலைகளில் கார் ஓட்ட தேவையான அடிப்படையான அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

எனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கு முன் டி.எம்.வி. (டிபார்ட்மெண்ட் ஆப் மோட்டார் வெஹிக்கிள்ஸ்) இல் கேட்கப்பட்ட கேள்விகள் இவை. (விடைகள் அறிந்தவர்கள் பின்னூட்டலாம்.)

இவற்றை முன்கூட்டியே படித்திருந்ததால் எழுத்து தேர்வில் தேறிவிட்டேன். பின்னர் ரோடு டெஸ்ட்.

அமெரிக்காவில் அதிகம் கார் ஓட்டி பழக்கம் இல்லை. இந்தியாவில் கியர் வைத்த கார் ஓட்டிய நமக்கு கியர் இல்லாத அமெரிக்க வண்டிகள் பிஸ்கோத்து என்ற எண்ணம் அதிகமிருந்தது.
அதனால முன்ன பின்ன ஓட்டி பழகாம நேராக போயாச்சு.

ரோடு டெஸ்ட்டுக்கு ஆபிசர் வந்தார்.

"இது உன் கார் ஓட்டும் திறனை கண்டறியும் சோதனை. வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்".

சரி. சரி. நாம இந்தியாவுல ஓட்டாத காரா என்ன.

நண்பர்கள் சொல்லியிருந்தபடி காரின் கண்ணாடியை சரி செய்ய முயன்றேன்.
இன்னாடா காரு இது. கண்ணாடியை அட்ஜஸ்ட் பண்ண சுவிச்சு எங்க இருக்குன்னு தெரியலையே. கஷ்டப்பட்டு கண்டுபிடித்து சரிசெய்தேன்.

சீட் பெல்ட் போட்டுக்கிட்டு "ரெடி ஆபிசர்."

"இப்ப காரை எடுத்து நான் சொல்ற மாதிரி ஓட்டி திரும்பி நாம இங்கே வரணும்"

"சரிங்க ஆபிசர்"

காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன்.

சிக்னல் போட வலது பக்கம் இருந்த நெம்புகோலை தட்ட கண்ணெதிரே வைப்பர்கள் ஆடின. அருகே ஆபிசர்.

இந்தியாவில் சிக்னலுக்கானது வலது பக்கம். பழக்க தோஷம். நொந்து கொண்டு அசடு வழிந்து இடது பக்க நெம்புகோலை தட்டி சிக்னல் போட்டு வெளியே எடுத்தேன்.

பின்னால் பாதசாரிகள் இருவர். எனக்காக சற்றே விலகி நின்றனர். அமெரிக்கா காரங்க ரொம்ம நல்லவங்கப்பா.

பிறகு வெளியே எடுத்து மெதுவாக ஆபிசர் சொன்னபடி ரோட்டிற்கு வந்து ஓட்ட ஆரம்பித்தேன்.

"வலது பக்கம் திரும்பு" என்றார் ஆபிசர்.

இடது பக்கம் திரும்பி ஒரு பாழடைந்த குடோனுக்குள் நுழைந்தேன் நான்.

"சாரி. சார்". மீண்டும் வழிசல்.

"பரவாயில்லை வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்த இடத்துக்கே செலுத்து."

மீண்டும் டி.எம்.வி. நோக்கி வண்டி. "உள்ளே நுழை".

இவ்வளவுதான சிக்னலை இந்த முறை சரியாக போட்டு (!!!) உள்ளே நுழைய தயாரானேன்.

"இடது பக்கமாக நுழைகிறாய். வலது பக்கமாக நுழை."

சே. அமெரிக்காவில் வலது பக்கமாக தானே ஓட்ட வேண்டும்.

அப்பாடா உள்ளே போயாச்சு.

"ரிவர்ஸ் பார்க்கிங் ப்ளீஸ்".

ஐந்து நிமிட தீவிர முயற்சிக்குப்பின் வண்டியை பார்க்கியிருந்தேன்.


ஆபிசரை பார்த்தேன். உள்ளுக்குள் உலகமகா கேள்வி. எனக்கு லைசன்ஸ் உண்டா ? விடை எனக்கே தெரிந்திருந்தது.

படுதீவிரமாக எழுதி கொண்டிருந்தார்.

பிறகு அந்த காகிதத்தை என்னிடம் கொடுத்தார்.

இவருக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்படுகிறது. காரணங்களாவன....

1. வண்டியை கிளப்பும் போது கண்ணாடியில் படிந்திருந்த பனிப்படலத்தை நீக்கும் வழியை இவர் அறியவில்லை.
2. வண்டியின் கண்ட்ரோல்கள் எங்கு எங்கு உள்ளன என்பதை அறியவில்லை.
3. வண்டியை ஓட்டி நடைபயணிகளை கொல்ல முயற்சி.
4. ஓட்டும் போது லேன் மாற்றி ஓட்டியமை.
5. வளைவுகளில் மிக மெதுவாக ஓட்டியமை.
6. தடுக்காவிட்டால் இடது பக்கமாக வண்டி ஓட்டியிருப்பார்.
7. ஸ்டாப் சிக்னலில் ஸ்டாப் செய்யவில்லை.
8. பார்க்கிங்கின் போது பக்கத்து வண்டியை இடிக்க முயற்சி.

இவ்வளவு தப்பா. எங்க ஊருல நான் இன்னா சூப்பரா கார் ஓட்டுவேன் தெரியுமா.

இவங்க என்னடான்னா ரைட்டுல ஓட்டணும்னு தப்பு தப்பா ரூல்ஸ் வெச்சிக்னு நம்மள தப்பு சொல்றாங்க.

இப்பத்திக்கு எனக்கு உங்க லைசன்ஸே தேவையில்லைன்னு திரும்பி வந்துட்டேன்.

நம்ம ஊர்ல சரியா ஓட்டிக்கிட்டு இருந்த நான் இந்த ஊருக்கு தகுந்த மாதிரி தப்பு தப்பா ஓட்டி நெறைய பழகணுமாம். ம்ம்ம்.......

Friday, February 16, 2007

மாவாட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம்.

மாவாட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம்.


விடுநர்

அரைபிளேடு
ஆறாம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி.

பெறுநர்

ஆட்சித்தலைவர்
மாவட்டம்
தமிழ்நாடு.


ஐயா
பொருள்: மாவாட்ட வேண்டி விண்ணப்பம்.

எங்கள் ஊரில் அரிசியும் உளுந்தும் ஊறப்போட்டு வைத்திருக்கிறோம்.
ஆனால் மாவாட்டும் வசதிகள் இல்லாததால் மாவாட்ட வில்லை.
தாங்கள் தயை கூர்ந்து எங்கள் கிராமத்திற்கு வந்து மாவாட்டி தர வேண்டுகிறேன்.


அன்புடன்
அரைபிளேடு.

தேதி: 23-12-1987.

----------------------------------------

மேற்கண்டது நான் ஆறாம் வகுப்பு அரைப்பரீட்சைக்கு தமிழ்த் தாளில் எழுதிய கடிதம்.

எனது தமிழையா விடைத்தாளை தரும் போது வினவினார். "என்னடா இது".

"சார். கொஸ்டின் பேப்பர்ல இருந்த கேள்விக்கு தான் சார் நான் பதில் எழுதினேன்".

"சரி. கொஸ்டின் பேப்பர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததால இதுக்கு போனா போதுன்னு மார்க் போட்டுருக்கேன். ஒழிஞ்சி போ."

அப்பாடா தப்பிச்சேன்.

கொஸ்டின் பேப்பர்ல என்ன தப்பா? தலைப்பை திரும்பவும் படிக்கவும்.