Saturday, March 01, 2008

வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்

"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா."
கேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்.

"இருக்கலாம். நண்பா." நான்.

"காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி."

"இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா இருந்தா ஈஸ்ட்ரோஜன்."

"ஆங். ஆண்ட்ரோஜன். காதல் எனக்குள்ள சுரக்க ஆரம்பிச்சிருச்சி நண்பா."

"எனக்கு வேற ஒண்ணுதான் அளவுக்கு அதிகமா சுரக்கறதா தெரியுது."

"என்னது."

"ஹார்மோன் இல்லை. சலைவா. தமிழ்ல சொல்லணும்னா ஜொள்ளு."

"ஹி.. ஹி." வழிந்தான்.

அவனை இப்படி வழிய வைத்தவள் ஸ்ருதி ராஜ்தான். கோதுமை பிரதேச செழிப்பில் மிளிர்ந்த கோதுமை நிறத்தவள். அலுவலகத்தில் கவன ஈர்ப்பு பெற்ற கட்டழகி. இந்த ஈர்க்குச்சிக்கு அவள் மேல் காதலா. இருக்கட்டும்.
இந்த மும்பை நகரில் தமிழ்பேச தெரிந்தவன் அறைநண்பனாக வேண்டும் என்பதற்காகவே இவனையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

"நண்பா. நீ தான் என் காதலுக்கு உதவி பண்ணனும்."

"நான் என்னடா பண்ணனும். தூது போகனுமா. கணையாழியை கழட்டிக் கொடு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி சென்று அவளிடம் உன் காதலை சொல்கிறேன்."

"அதெல்லாம் வேண்டாம். காதலை சொல்லுறத எல்லாம் நான் பாத்துக்கறேன். அவகிட்ட பேச நீ எனக்கு இந்தி கத்துக்கொடு போதும்."

"உனக்கு இந்தி சொல்லித் தரணுமா. கொஞ்சம் கஷ்டம் முயற்சி பண்றேன்."

"தாங்ஸ். அப்புறம் இரண்டாவது உதவி. நீ அவகிட்ட இந்தியில கடலை போடறதை நிறுத்தணும்."

"இது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம ஆஃபீஸ்ல இருக்கறதிலேயே உருப்படியான ஃபிகர் அது ஒண்ணுதான். இருந்தாலும் ஃபிரெண்டு நீ கேட்டுட்ட. உனக்காக முயற்சி பண்ணுறேன். ஒரு நண்பனுக்காக இந்த தியாகத்தை கூட நான் பண்ண மாட்டேனா என்ன."

"டேய்..."

"சரி. சரி. ஒழிஞ்சித் தொலை. உனக்காக விட்டுக் கொடுத்துட்டேன்."

"அது போதும் நண்பா. எனக்கு இந்தி சொல்லிக் கொடு. இந்தியில பேசியே காதலை வளர்க்கிறேன். ஆமா காதலுக்கு இந்தியில என்ன"

"ப்யார். இஷ்க். முஹப்பத். மூணுமே காதல்தான்."

"ஒண்ணு ஒண்ணா சொல்லுடா. எழுதிக்கிறேன்."

"சொல்லித் தொலைக்கறேன். என்ன பண்றது. மஜ்பூரி."

"இப்ப என்னமோ சொன்னியே அது என்ன"

'எது."

"ஏதோ பேல்பூரி மாதிரி சொன்னியே."

மஜ்பூரி என்ற வார்த்தை எனக்கு பழக்கத்தில் வந்திருந்தது. இதற்கான தமிழ்வார்த்தை என்ன என்று மண்டையை உடைத்துக் கொண்டு "(காலத்தின்) கட்டாயம். கம்பல்ஷன்." என்று ஒரு வழியாக மொழிபெயர்த்தேன்.

அவனுக்கு காதல் ஆரம்பித்தது. எனக்கு தலைவலி.

"எல்லாம் சரிடா. அவளுக்கு உன் மேல காதல் வரும்னு நினைக்கிறாயா."

"உனக்கு காதலோட முதல் விதி தெரியுமா."

"அது என்னடா."

"எந்த ஒரு பெண்ணும் காதல் விசை அவள் மீது செலுத்தப்படாத வரை காதலற்ற நிலையிலும், காதல் செலுத்தப்பெற்றால் காதல் இயக்கத்திலும் தொடர்ந்து இருக்கிறாள். இதுதான் காதல் நிலைமம்."

"தெய்வமே. ஒரு முடிவோடதான் இருக்கே. நடத்து."

அவன் நடத்தத் துவங்கினான்.

ஸ்ருதியிடம் நெருங்கி பழகத் துவங்கினான். அவளுக்காக சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்கினான். இருவரையும் ஒன்றாக நிறைய பார்க்க முடிந்தது. திங்கட்கிழமைகளில் வடாபாவ் சாப்பிட அழைத்துச் சென்றான். செவ்வாயில் பாவ் பாஜி. புதனில் தஹி சேவ் பூரி. வியாழனில் போஹா. வெள்ளிக் கிழமை ரகடா பட்டீஸ். அவனது காதல் நாளொரு பொழுதும் தினமொரு சாட் ஐட்டமுமாக வளர்ந்தது.
ஸ்ருதிதாசன் என்ற பெயரில் இணையத்தில் கவிதைகள் எழுதினான். முப்பது நாட்களில் இந்தியுடன் முட்டி மோதினான். இதற்கென்ன அர்த்தம் அதற்கென்ன அர்த்தம் என்று என்னை பின்னி பெடலெடுத்தான். பிராண்டி எடுப்பதால்தான் ஃபிரெண்டு என்று சொல்கிறார்கள் போலும்.

மாதங்கள் மூன்று ஓடி மறைந்தன.

"நண்பா. இந்த இந்தி கவிதை எப்படி." என்றான்.

ஆகா. இத்துணை நாளா தமிழில் மட்டும் கவிதை எழுதியவன் இப்போது இந்தியிலுமா.

கவிதையை படித்தேன்.

"ஜப் தூ ஹன்ஸ்தி ஹை ஹஜாரோன் ஃபூல் கில்தி ஹை.
ஜப் தூ போல்தி ஹை பான்சுரி பஜ்தி ஹை."

"தமிழ்ல சொல்லவா." சொன்னான்.

"நீ சிரித்தால் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன.
நீ பேசினால் புல்லாங்குழல் ஒலிக்கிறது."

"அபாரம்டா. பன்மொழி புலவனாயிட்ட. கவிதையில கலக்கற போ."

சிரித்தான்.

"அதெல்லாம் சரிடா. உன் காதலெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு. கனெக்ட் பண்ணி காதல் கரெண்டு கொடுத்து பல்பு பிரகாசமா எரியுது போல."

சிரித்தான்.

"காதலை சொல்லிட்டியா."

"இல்லைடா. காதலோட இரண்டாவது விதியை கிட்டத்தட்ட இப்பத்தான் அப்ளை பண்ணி முடிச்சிருக்கேன்."

"அது என்னடா இரண்டாவது விதி."

"காதல் விசையானது காதலின் எடை மற்றும் காதல் முடுக்கம் இரண்டிற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். இதுதான் இரண்டாவது விதி. அவளுக்குள்ள காதல் விசை வர்ரதுக்காக என்னோட காதலில கொஞ்சம் கொஞ்சமா முடுக்கத்தை கூட்டி காதலின் எடையையும் அதிகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன்."

"விளங்கின மாதிரிதான். இப்ப என்ன செய்யப் போற."

"நாளைக்கு அவளோட பிறந்த நாள். காதலின் மூன்றாவது விதியை செயல்படுத்தப் போகிறேன். காதலை சொல்லப் போகிறேன்."

பரிசாக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை காட்டினான். அழகாக காதலின் சின்னம் பொறித்து இருந்தது அதில்.

"அது என்னடா மூன்றாவது விதி."

"காதலைச் சொல்லுதல். எந்த ஒரு காதல் விசைக்கும் சமமான அதே போன்ற எதிர் காதல் விசை உண்டு."

"சரிதான்."

"நான் எவ்வளவு விசையோட நாளைக்கு காதலை சொல்லப் போறனோ. அதே விசையோட அவளும் பதிலுக்கு காதலை சொல்லுவா."

"வாழ்த்துக்கள். நண்பா. உன் காதல் கொடி அவள் உள்ளத்தில் பறக்கட்டும். ஆல் தி பெஸ்ட்."

அடுத்த நாள் அவன் மகிழ்ச்சியாக தன் காதலைச் சொல்ல கிளம்பி சென்றான்.

----------------

மாலை வீடு திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.

"என்னடா. என்ன ஆச்சு."

"முடிஞ்சு போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு."

"என்னடா சொல்றே."

"அவள் கிட்ட காதலை சொன்னேன். வாட் ஈஸ் திஸ் ஃபூலிஷ்னஸ். யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்டுன்னு சொன்னா."

"அச்சச்சோ. கவலைப்படாத. எப்படியும் உன் காதலை அவ புரிஞ்சிப்பா. ஏத்துப்பா."

"இல்லைடா. முக்கேஷ்னு ஒருத்தனை அறிமுகப்படுத்துனா. அவனைத்தான் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம். வேலைய கூட ரிசைன் பண்ணப் போறாளாம்."

கேட்ட எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. "நண்பா...." பேச வாயெடுத்தேன்.

"இல்லை நண்பா. என்னை கொஞ்சம் தனியா விடு. எனக்கு கொஞ்சம் அழணும்."

புரிந்து கொண்டு அமைதியானேன். கவலையின் கனத்த மெளனம் இருவருக்கும் இடையில்.

அவன் தன் காதலை கண்ணீரால் கழுவித் தள்ளும் முயற்சியில் இறங்கினான்.

உள்ளத்தில் தோன்றி உயிரில் உறைந்த காதலை அத்துணை எளிதில் உதறித் தள்ள முடியுமா.

கண்ணீரில் கரைந்து காணாமல் போவதோ காதல். காலம் அவனுக்கு பதில் சொல்லக்கூடும்.

-----------------

19 comments:

said...

பின்னூட்ட கயமைக் குறிப்பு 1:
இந்த கதை கதைமாந்தர் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவது அல்ல.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)
கதை நல்லா இருக்கு... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜெகதீசன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அச்சச்சோ.. என்னங்க இப்டி டிராஜ்டில முடிச்சிட்டீங்க? :(

நல்ல ஃப்ளோ.. நல்லாருந்தது படிக்க.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி காயத்ரி.

எல்லா காதலும் வெற்றியாய் முடிவதில்லையே.

நிறைய ஆட்டோகிராப்புகள் கண்ணீரில் நனைத்தே இருக்கின்றன.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

யாருப்பா அது அ.பி யின் அக்கவுன்டை ஹேக் செய்து இந்த பதிவை போட்டது?? அ.பி நீங்க ஒன்றும் வருத்தப்படவேண்டாம் நாம சிக்கிரமா சரிபண்ணிடலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்..

நம்ம பதிவை நாம லாக் இன் பண்ணி பதிவு போட்டா அது பேர் கூட ஹேக்கிங்கா.

நம்ம பதிவை நம்ம கிட்ட இருந்து நாமே எப்படி காப்பாத்துறது. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இது தல அரை பிளேடு பதிவா...புரியலியே.!!

எங்கையே தப்பு நடந்திருக்கு. ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சுவாரஸியமாக இருந்தது கதையின் நடை...சோகமான முடிவு தான் கஷ்டமாக இருக்கிறது,
எல்லா காதலும் ஏற்றுக்கொள்ள படுவதில்லை என்பது யதார்த்தமான உண்மை!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்..

ஆமாங்க.. ஏதோ நடந்திருக்கு. பாருங்க கடைசி இரண்டு பதிவும் காதல் கதையா இருக்கு.

சம்திங் ஈஸ் டெஃபனட்லி ராங்.

யாரு அது மனசை சாரி பதிவை ஹேக் பண்ணது. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி திவ்யா.

காதல் கதையில் காகிதத்தில் அழகாகத்தான் இருக்கிறது. யதார்த்தத்தில்..

யதார்த்தத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை காலம் கொடுக்கிறது.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//

ஆமாங்க.. ஏதோ நடந்திருக்கு. பாருங்க கடைசி இரண்டு பதிவும் காதல் கதையா இருக்கு.
//

காதல் கதையா இல்லை காதல் தோல்வி கதையா கொஞ்சம் தெளிவா சொல்லவேண்டியது தான!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்

//காதல் கதையா இல்லை காதல் தோல்வி கதையா கொஞ்சம் தெளிவா சொல்லவேண்டியது தான!//

காதல் கதைன்னாலே தோல்வி கதைதான்.

காதல்ல ஜெயிச்சாலும் கிரகம் கல்யாணத்துலதான முடியுது. ஆக கொண்டு எப்பவுமே தோல்விதான்.

காதல்ன்ற விஷயம் மனுசப்பய தோக்கறதுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒண்ணு.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
காதல்ல ஜெயிச்சாலும் கிரகம் கல்யாணத்துலதான முடியுது. ஆக கொண்டு எப்பவுமே தோல்விதான்.
//
சரியான பாய்ன்ட்! யோசிக்காம விட்டதுக்கு மன்னிக்கவும்.

//
காதல்ன்ற விஷயம் மனுசப்பய தோக்கறதுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒண்ணு.
//
திருத்தம்... ஆம்பளைங்க தோக்குறதுக்காகவே.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்

மனுசப்பய அப்படின்னு சொன்னாலே ஆம்பிளைங்கதான்.

ஏன்னா..
பொண்ணுங்க காதலிக்கறப்ப தேவதைகள்.
கல்யாணத்துக்கு பிறகு ராட்சசிகள்.
அவங்க மனுசங்களா எப்பவுமே இருக்கறதில்லை. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:) கதை நல்லா இருக்கு

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி shayanth.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்போ காதலில் நாலாவது விதி, தனிமையில் கண்ணீர் சிந்துவது தானே? - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்லா இருந்தது கதை.

-------------------------------------------------------------------------------------------------------------