Wednesday, November 14, 2007

நாம பிரிஞ்சிடலாம்...

"நாம பிரிஞ்சிடலாம்" சொன்னவளை பார்த்து சிலையாக உட்கார்ந்திருந்தான் அவன்.

"ஐ யம் சீரியஸ். எனக்கு உங்ககூட தொடர்ந்து வாழ்ந்து குப்பை கொட்ட முடியும்னு தோணலை."

"ஏன். நாம லவ்பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஐ ஸ்டில் லவ் யூ."

"எஸ். லவ் பண்ணினோம். கல்யாணத்துக்கு முன்னே நான் பார்த்த நீங்க வேற. இப்ப நான் பார்க்கிற நீங்க வேற.".

"அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்."

"யூ ஆர் ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியும் கவிதை எழுதினீங்க. என் மேல இருக்க காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு நினைச்சேன். ஆனா கவிதை மேல இருக்கிற காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது".

"பிரச்சனை அதுதானா. நான் கவிதை எழுதறதையே விட்டுடறேன்."

"பிரச்சனை அது இல்லை. நீங்கதான்."

"நானா. கல்யாணமாகி இந்த ஆறு மாசத்தில எப்பவாவது உன்னை எதாவது சொல்லியிருப்பனா. நீ சொல்ற மாதிரிதானே கேட்டுக்கறேன்."

"பிரச்சனையே அதுதான். நீங்க சொல்லி நான் கேட்கணும். இங்க தலைகீழா இருக்கு. நான் சொல்றதை எல்லாம் நீங்க கேட்டுக்கறீங்க."

"அதுல என்ன தப்பு. அதுதானே பெண்சுதந்திரம்."

"சுதந்திரம்னா என்னோட கருத்தை நீங்க கேட்டுக்கணும். உங்க கருத்தையும் சொல்லணும். இரண்டுல எது நல்லதோ அதை நீங்க செய்யணும். யூ நீட் டு கைட் மி."

"நீ சொல்றது வித்தியாசமா இருக்கு. நான் எப்பவாவது உன்னை அதிர்ந்து எதாவது சொல்லியிருக்கனா. இன்ஃபேக்ட் நீதான் ஒரு சில சமயங்கள்ல என்னை திட்டியிருக்க. அப்ப கூட நான் அமைதியாதான் இருந்திருக்கேன்.".

"நான் ஏதாவது தப்பு பண்ணினா நீங்க சொல்லணும்ன்றதுதான் நான் எதிர்பார்க்கிறது. இந்த ஆறு மாத வாழ்க்கையில என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாயிருக்கு."

"நான் என்ன தப்பு செய்யறேன். நீ கேட்கறது எல்லாம் வாங்கி தர்றேன். அப்பப்ப வெளியில போய் சாப்பிடறோம். நேத்து கூட வெளிய போனோம்.".

"சரிதான். இல்லைன்னு சொல்லலை. நேத்து நாம வெளிய போனப்ப நான் போட்டிருந்த டிரஸ் கலர் சொல்லுங்க பார்ப்போம்."

"...."

"சொல்ல மாட்டீங்க. கவனிக்கலை. நான் என்னை நீங்க வெளிய கூட்டிட்டு போகணும்னு விரும்பலை. என்னை கவனிக்கனும்னுதான் விரும்பறேன்."

"நியாபகம் இல்லாதது தப்பா."

"நியாபகம் இல்லாததுன்னு இல்லை. எதையும் கவனிச்சு பார்த்தா மறக்காது. நீங்க.. உங்க வேலை. உங்க இலக்கியங்கள்... உங்க உலகம் தனி. இதுல நான் தேவையில்லாம இருக்கேன்னு தோணுது."

"அப்படியெல்லாம் இல்லை. என் உலகமே நீதான்."

"பொய். உங்களுக்கு நான் தேவையில்லை.".

"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். தண்ணியடிக்கிறேனா.. இல்லை கண்டபடி ஊர் சுத்தறேனா."

"அப்படியிருந்தா கூட பரவாயில்லையே. திருத்திடலாம். நீங்க தனிரகம். நீங்க நல்லவர்தான். இல்லைன்ல. ஓவர் நல்லவராயிருக்கீங்க. அதுதான் பிரச்சனை. கெட்டவனை திருத்திடலாம். நல்லவனை திருத்தமுடியாது."

"....."

"நீங்க சாஃப்ட்ன்றதாலதான் உங்களை பிடிச்சிருந்தது. ஆனா இவ்வளவு ஓவர் சாஃப்டான ஆளா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. இப்படி இருந்தீங்கன்னா நீங்க வாழ்க்கையில முன்னேறவும் மாட்டீங்க."

"என்னதான் சொல்ல வர்ற.."

"உங்க கூட தொடர்ந்து வாழ விரும்பலை. நாம பிரிஞ்சிடலாம்".

அவர்கள் பிரிந்து போனார்கள். அவன் இப்போது கூட அதிர்ந்து பேசமுடியாதவனாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.

Monday, November 12, 2007

அஜால் குஜால் கவிதை

நேரம் பொழுதாச்சி.
கருக்கல் கவிழ்ந்தாச்சி.
ஓலைக் குடிசையது
ஒருத்தன் தட்டி நின்னான்.

"மாரி மரிக்கொழுந்தே
மச்சான் வந்திருக்கேன்.
கதவை திறந்திடடி.
கால்கடுக்க நின்னிருக்கேன்."

"வெளக்கு வெச்சு
வெகுநேரம் ஆயிருச்சு.
காலையில போனதுதான்.
காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்து போனதுதான்.
கடை தேடி போனாயோ.
கண்டதையும் குடிச்சாயோ.
கதவை திறக்க மாட்டேன்."

"கோவம் அதுதானா.
குடிச்சா குடலழிஞ்சி போகுமின்னு
நீ சொன்ன கேட்டுக்கிட்டேன்.
சத்தியமா குடிக்கலை நான்.
குலதெய்வம் மேல சத்தியம்தான்."

"எத்தனை சத்தியம்தான்
நாளும் நாளும் நான்கேட்பேன்.
நிச்சயமா நம்ப மாட்டேன்."

"நிசத்ததான் நான் சொன்னேன்.
நம்பிடடி என் தங்கம்.
காலையில ஆயாகடையில
வாங்கி துன்ன ஆப்பம்.
இன்னம் வருது பாரு ஏப்பம்.
வேற எதுவும் இறங்கலியே.
வெறும்வயிறாத்தான் வந்திருக்கேன்."

"பின்ன ஏன் பொழுதாச்சு.
கண்ட காவாளி பயகூட
சகவாசம் வச்சு
சீட்டாடி வந்தாயா."

"அச்சச்சோ. அப்படி ஏதுமில்லை.
தொட்டு தாலி கட்டுன பின்னாடி
கெட்ட சகவாசம் விட்டாச்சு."

"பின்ன வேறென்ன.
இம்புட்டு நேரம் நீயும்
இருந்ததெங்க."

"பட்ட உழைப்புக்குத்தான்
கூலி பணமா கிடைச்சுதடி.
பத்து கடையேறி
பதமா பார்த்து பார்த்து
பாதாம் அல்வா வாங்கி வந்தேன்"

"நிசமாவா".

"அதுமட்டும் இல்லையடி.
முத்து முத்து முல்லைப்பூவும்
முழங்கணக்கில் வாங்கி வந்தேன்.
அதனால நேரமாச்சு.
கதவை திறந்திடடி".

"அப்படியா?".

கதவும் திறந்திடுச்சி.
திறந்த கதவு மூடிருச்சி.
விளக்கும் அணைஞ்சிருச்சி.
வானத்து நட்சத்திரமே,
எதைப்பார்த்து கண்ணடிச்சே.

Thursday, November 01, 2007

சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. ஒரு தீர்வு

சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.


1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்சின்னு சமீபத்துல படிக்க முடிஞ்சது. (நன்றி வெட்டி, வசந்தம் ரவி.).

"இவன் கிட்ட நிறைய காசு இருக்கு. நாலு இடம் அலைஞ்சி எங்க பொருள் கம்மியா கிடைக்கும்னு தேட கூட இவனுக்கு நேரம் கிடையாது. கேட்ட விலைய கொடுத்துடுவான்டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு" ஆட்டோக்காரன்ல இருந்து வீட்டு புரோக்கர்ல இருந்து வீட்டு ஓனர் வரிக்கும் எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு விலை ஏத்தறாங்க.

புத்து லட்சத்துல வீட்ட கட்டிட்டு அதை இருபது லட்சத்துக்கு விக்கற ரியல் எஸ்டேட்காரன் சமூகத்தை சீரழிக்கிறானா.

இல்ல இருபத்தஞ்சாயிரம் சம்பளக்கார சாஃப்ட்வேர் இஞ்சினியர் அந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டு மாசம் பத்தாயிர ரூபா சுளையா வட்டியோட இருபது வருசத்துக்கு கட்டணுமேன்னு கவலையோட இருக்கானே அவன் சமூகத்தை சீரழிக்கிறானா.

ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.

2. காலை 5 மணிக்கு எழுந்து அரக்க பரக்க தயாராகி எங்கோ சென்னை புறநகரிலோ அல்லது பெங்களூர் புறநகரிலோ இருக்கும் ஆஃபிஸ் செல்ல பேருந்தை பிடித்து அதில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து.. பின்னர் பின்னிரவு வரை வேலை செய்து மீண்டும் எட்டு மணியோ பத்து மணியோ அதற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சேரும் சாஃப்ட்வேர் மக்களே இங்கு பெரும்பான்மை.
இவர்களுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவே நேரம் இல்லாத போது சமூகத்தை சீரழிக்க நேரம் நிச்சயமாக கிடையாது.

வீக் எண்டுகளில் சிலர் உற்சாக பானங்களால் கவிழ்ந்து விடுவதால் எழுந்து நிற்கவே நேரம் இல்லாததால் வீக் எண்டுகளிலும் சமூகத்தை சீரழிக்க வாய்ப்பு கிடையாது.


3. ஹோட்டல்ல விலையேறிச்சின்னாலும் ஐட்டிக்காரன்தான் பொறுப்பா. சரவணபவன் எல்லா ஊர்லயுமே சாப்பாடு 40 ரூபா வைக்கிறானே இது எப்படி.
கமிட்மெண்ட் இல்லாத பேச்சிலர் சாஃப்டுவேர் இஞ்சினியர்க்கு வேணும்னா இது கட்டுப்படியாவலாம். குடும்பஸ்தனுக்கு எல்லாம் மாசம் ஒரு தடவை போனாலே பெரிய விஷயம்தான்.
"குந்தி தின்னா குன்றே மாளும்" இருபத்தஞ்சாயிரம் எந்த மூலைக்கு.

4. ஐபாட் வாங்கி பாட்டு கேட்டாலோ, இல்லை 8 மெகா பிக்சல் காமிரா வாங்கி படம் எடுத்தாலோ, பிராட்பாண்ட் இண்டர்நெட் கனெக்சன் வாங்கினாலோ சமூகம் சீரழியுமா என்ன.
காமெடி பண்ணாதீங்க.

5. பேச்சிலருக்கு வீடு கொடுக்கவே பத்து வருசத்துக்கு மின்னாடி யோசிச்ச மெட்றாஸ் இன்னிக்கு வீடு பேச்சிலருக்கு மட்டும்தான்னுது.

"அஞ்சி பேரா தங்கிக்கு தம்பி. பத்தாயிரம் கொடுங்க. ஆளுக்கு இரண்டாயிரம்தான் வருது.".

"சார். நானும் சாஃப்ட்வேர்தான். ஆனா ஃபேமிலி. மாசம் அஞ்சாயிரம் தர்றேன்."

"கட்டுபடியாவதுங்க. பேச்சிலர் பசங்க நாலு பேர் கேட்டிருக்காங்க. எட்டாயிரம் தர்றதா சொன்னாங்க. அவங்களுக்கே விட்டிடலாம்னு இருக்கேன்."

அய்யா தப்பு சாஃப்டுவேர் இஞ்சினியருங்க மேல இல்லை. பேராசைக்கார வீட்டுக்காரங்க மேலதான்.

6. ஆட்டோக்காரன் அதிகமா கேக்குறதுக்கு எல்லாம் சாஃப்ட்வேரு காரணமில்லைங்க.
நீங்க ஆட்டோவுல டைடல் பார்க்குல இருந்து கிளம்பி டைடல் பார்க்குக்கே போகணும்னா கூட 60 ரூபா ஆகும்னு தெரியுமா உங்களுக்கு.

7. நடந்து போறவனுக்கு சைக்கிள் வேணும்னு ஆசை.
சைக்கிள்காரனுக்கு பைக் வேணும்னு ஆசை.
பைக் வெச்சிருக்கவனுக்கு கார் வாங்கணுன்னு ஆசை.
கார் வெச்சிருக்கவனுக்கு ஒசத்தியான வெளிநாட்டு கார் வாங்கணும்னு ஆசை.
வெளிநாட்டு கார் வெச்சிருக்கவனுக்கு இன்னும் நாலஞ்சி கார் வாங்கணும்னு ஆசை.
ஆசைகள் மட்டும் குறையவே குறையாது...

அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.

இன்னமும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்ங்களாலதான் வெலைவாசி ஏறுது. சமூகம் சீரழியுதுன்னு நீங்க சொன்னா...
இந்த உலகமகா பிரச்சனைக்கு எங்கிட்ட தீர்வு இருக்கு:

பிரச்சனைக்கு காரணம் இன்னான்னா இருபத்தோரு இரபத்திரண்டு வயசுல சாஃப்ட்வேர் இஞ்சினியராவுற நிறைய பசங்க கையில கும்சா இருபபத்தஞ்சி கிடைச்சதும் அளவுக்கு அதிகமா செலவழிச்சு வெல வாசிய ஏத்திடறாங்கன்னு தெரியுது.

நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்ச கையோட கபால்னு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்போட்டம்னா பொறுப்பு வரும். வீண் செலவு இருக்காது.

கல்யாணம்னு ஆகிபோச்சின்னா இருபத்தஞ்சாயிரம் என்ன... லட்சலட்சமா சம்பாதிச்சாலும் பத்தாது.

அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.

நம்ம சமூக பிரச்சனை ஆட்டோ மெட்டிக்கா தீர்ந்துடும்.