Tuesday, October 09, 2007

எனது பிராமண நண்பன்

இது எனது நண்பனை பற்றிய கதை மட்டுமில்லை. எனக்கு கல்யாணமான கதையும் கூட.

எந்த கவலையும் இல்லாம சுத்திக்கிட்டிருந்த இந்த கடங்காரனுக்கு கால்கட்டு போடனும்னு எங்க வீட்டுல பெருங்கவலை.
வீட்டுல என்னுடைய ஜாதகத்தோட சாதக பாதகங்களை பார்த்து வரிகள் (வரனுக்கு பெண்பால்) எல்லாம் தள்ளி போக இந்த வகையிலயாவது ஜாதகம் நமக்கு சாதகமா இருக்கேன்னு நானும் சந்தோஷமாத்தான் இருந்தேன்.

என்னோட ஜாதக கட்டங்கள்ள சுடோகு போட்டு பார்த்த ஜோசியர் இந்த புள்ளையாண்டான் துர்கை கோயிலுக்கு போய் விளக்கு ஏத்துனாதான் கல்யாணம் ஆகும்னு அடிச்சு சொல்லிட்டார்.

என்னது கோவிலுக்கு நானா. இந்த பகுத்தறிவு ஆண் சிங்கத்தை கோவிலுக்கு, அதுவும் ஒரு பொம்பளை சாமியோட கோவிலுக்கு போய் விளக்கேத்த சொல்லுறதா.

என்ன இருந்தாலும் பெற்ற தாய் கண்கண்ட தெய்வமில்லையா. அவங்களுக்காக கோவிலுக்கு போக கடைசியாக ஒத்துக் கொண்டேன்.

கோவிலில் வரிசையில் இந்த ஐயரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தேன்.

"சாமி. பையனுக்கு கல்யாணம் ஆகணும்னு ஒரு அர்ச்சனை."- அம்மா.

"பேர். நட்சத்திரம் ராசி சொல்லுங்கோ" - ஐயர்

"பிரபு. கேட்டை நட்சத்திரம். விருச்சிக ராசி."

அர்ச்சனை முடிந்தது.
"இந்தாடா இதை ஐயர் தட்டுல போடு." - அம்மா
பத்து ரூபாயை தட்டில் போட்டேன்.

"விவாக பிராப்திரஸ்து" சொல்லி ஐயர் எலுமிச்சம்பழம் தர வாங்கி கொண்டேன்.

"பிரபு.. நோக்கு என்னை நியாபகம் இருக்கா..." கேள்வி கேட்ட ஐயரை உற்றுப் பார்த்தேன்.

"டேய்... சங்கர்... நீ இங்க...."

"சித்த இரு. இவாளை எல்லாம் அனுப்பிண்டு வந்துர்றேன்."

சித்தவே அவனது வருகைக்காக இருந்த நேரத்தில் சித்தத்தில் சங்கரின் பழைய நினைவுகள் சுழன்றது.

சங்கர் என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன்.

ஒரு முறை தமிழ் வகுப்பி்ல் அவன் ஏதோ குறும்பு செய்ய.... நான் அவனை வயிற்றில் ஓங்கி குத்த... அவன் "ஆ" என்று அலர... எங்கள் தமிழாசிரியை இருவரையும் பெஞ்சில் ஏற்றினார்.

"சங்கர். ஐயர் பையனா இருந்துக்கிட்டு என்னடா அட்டகாசம். அப்பா அர்ச்சகர்ன்றதால நீயும் குருக்களா போயிடலாம்னு படிக்காம இருக்கியா. ஏண்டா பிரபு.. உனக்கு என்ன வந்தது கேடு. அவனாவது படிக்கலைன்னாலும் அர்ச்சகரா போயிடுவான். நீ என்ன பண்ணுவ. இரண்டு பேரும் கிளாஸ் முடியர வரைக்கும் பெஞ்சிலயே நில்லுங்க".

பெஞ்சில் இருவருமாய் நின்ற காலமும்... எங்கள் தமிழாசிரியையின் தீர்க்க தரிசனம் நிஜமானதும் நினைவில் வர சங்கர் வந்து சேர்ந்தான்.

"சங்கர்.. நீ என்னடா இந்த கோவில்ல ஐயரா.. "

"ஆமா"

"என் கையால அடிவாங்கினவன்... இன்னிக்கு என்னைப்பார்த்து விவாக பிராப்தி கொஸ்து... சாம்பார்னு சொல்லுற.."

"அது பிராப்திரஸ்து"

"சரி. ஏதோ ஒண்ணு. நீ பத்தாவது முடிச்சிட்டு பாலிடெக்னிக்தானா சேர்ந்த.. இங்க எப்படி ஐயரா.."

"என்னோட தோப்பனாருக்கு நான் பாலிடெக்னிக் படிச்சு நல்ல வேலைல சேரணும்னுதான் ஆசை. அவரை மாதிரி நான் கோவில்ல தட்டு தூக்கி ஜீவனம் பண்ண கூடாதுன்னு நினைச்சார்.
ஆனா.. விதி... நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படிக்கறச்சே தோப்பனார் காலமாயிட்டார்... வேற வருமானமில்லாத குடும்பம்.. அம்மா.. தங்கைன்னு இரண்டு ஜீவன்...
கடைசியில நான் படிப்பை நிறுத்திட்டு தட்டு தூக்கிட்டேன்... தட்டுல விழுந்த வருமானத்துலய தங்கை கல்யாணம் நடந்துட்டது. வாழ்க்கை போயிட்டிருக்கு" சிரித்தான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெறுமையாய் சிரித்தேன். பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

"வர்றேன் சங்கர்"

"அடிக்கடி இந்த பக்கம் வாடா."

"சரி." சற்று கனத்த மனத்துடன் கிளம்பினேன்.

காலம் ஓடியது. எனக்கு கல்யாணம் ஆனது.
எனக்கு கல்யாணம் ஆனது நான் துர்க்கை கோவிலுக்கு போனதால்தான் என்று அம்மா நம்பினார்.
எனக்கும் டவுட்டுதான். ஒரு வேளை கோவில்ல கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜுஸ் போட்டு குடிச்சதாலதான் எனக்கு கல்யாணம் நடந்திருக்குமோ.

எனி வே. மேரேஜ் ஈஸ் என் ஐ ஓப்பனர். அது எனது நாத்திக கண்ணைத் திறந்தது.

கல்யாணத்திற்கு பிறகு நானும் விதியை நம்பத் துவங்கினேன்.

5 comments:

said...

அரைபிளேடு,

சேம் பின்ச்.... :))

எங்கூட படிச்ச ஒருத்தனும் கோவில் பூசாரியா இருக்கான். ஊருக்கு போயிருந்தப்போ ரோட்டுலே பார்த்த அவன் பெரிய ஜடாமுடி'ல்லாம் வைச்சிட்டு வந்து நன்னாயிருக்கீயா ராமா'னு கேட்டான்.

இன்னும் கல்யாணம் ஆகல'டா மாப்பிளை,அப்போ நல்லாதானே இருப்பேன்னு சொன்னேன். ஹி ஹி பயப்புள்ள எந்த எலுமிச்சபழமும் கொடுக்கலை... :))


//காலம் ஓடியது. எனக்கு கல்யாணம் ஆனது.
எனக்கு கல்யாணம் ஆனது நான் துர்க்கை கோவிலுக்கு போனதால்தான் என்று அம்மா நம்பினார்.
எனக்கும் டவுட்டுதான். ஒரு வேளை கோவில்ல கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜுஸ் போட்டு குடிச்சதாலதான் எனக்கு கல்யாணம் நடந்திருக்குமோ.//

சான்ஸே இல்லை..... சத்தம் போட்டு சிரிச்சேன்...... :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹ்ம். தட்டு ஏந்தி அதுல வர துட்ட வச்சு வாழரது கஷ்டம் தான்.

ஒவ்வொரு தட்டுக்குப் பின்னாடியும் என்னென்ன கதை இருக்கோ. ஐயோ பாவம்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அச்சச்சோ... பாவம்....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//SurveySan said...
ஹ்ம். தட்டு ஏந்தி அதுல வர துட்ட வச்சு வாழரது கஷ்டம் தான்.

ஒவ்வொரு தட்டுக்குப் பின்னாடியும் என்னென்ன கதை இருக்கோ. ஐயோ பாவம்.
//

தட்டுல விழுந்த வருமானத்துலய தங்கை கல்யாணம் நடந்துட்டது.

:))

சர்வேஷா,
என்னது ?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ராம்...

வருகைக்கு நன்றி. நம்ம கூட படிச்சவன் நமக்கே ஆசிர்வாதம் செய்யற அளவுக்கு பெரிய ஆளாகுறான்றது ஆச்சரியம்தானே.

சர்வேசன்...

விருப்பப்பட்டு ஒரு தொழிலில் ஈடுபடுவது ஒரு வகை. ஆனால் ஒருவனுக்கு பொருளாதார காரணங்களால் அவன் விரும்பாத வேலை குலத்தொழிலாக திணிக்கப்படும்போது..
"ஒன்றே குலம்" என்ற கருத்து அதன் உண்மையான வடிவில் நடைமுறைப்படுத்தப்படும்போது குலங்களும் காணாமல் போகும். குலத்தொழில்களும் காணாமல் போகும்.
கோவிலுக்கு உள்ளே தட்டேந்துபவனும் வெளியே தட்டேந்துபவனும் காணாமல் போவார்கள்.
கடவுள்கள் யாரும் தன்னை வழிபட தட்டேந்திய இடைத்தரகர்களை நியமிக்கவில்லை என்றே நம்புகிறேன்.

மற்றபடி நண்பனுக்கு ஜாப் சாடிஸ்ஃபேக்சன் இல்லையே தவிர வருமானம் நன்றாகவே வருகிறது. :)

லக்கி...

நண்பன் பாவம்தான். இந்த நவீன மய உலகில் ஒவ்வொருவரும் ஜாப் சாடிஸ்ஃபேக்சனுக்காக வருடத்திற்கு இரண்டு கம்பனியாவது தாவும்போது... ஒரே தட்டு.. ஒரே கோவில்... ஒரே மந்திரம்... இப்படிப்பட்ட வேலையை ஆண்டுகணக்கில் செய்வது பற்றி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.

கோவியாரே...

குடும்பத்தை காப்பாற்ற தட்டேந்தினேன் என்று நண்பன் சொன்னாலும் தட்டேந்துவது மட்டும்தான் அவன் முன்னால் இருந்திருக்க கூடிய ஒரே வழியாக இருக்க முடியமா என்று சிந்திக்கிறேன்.
படிக்காததால் அப்பளமிடுவது அல்லது தட்டேந்துவது இரண்டு ஆப்சன் மட்டுமே அவன் முன்னிருக்க காரணம் என்னவாக இருக்கும். தட்டேந்துவதை கெளரவ குறைச்சலாக அவன் கருதினால் கெளரவமான உடலுழைப்பு தேவைப்படக்கூடிய வேலைகளில் ஒன்றை அவன் நாடாதது ஏன்.
சில கேள்விகள் சிக்கலானவை. சமூகம் இன்னமும் மாறவேண்டியிருக்கிறது.



-------------------------------------------------------------------------------------------------------------