புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று எந்த சாத்திரம் சொல்லுகிறது என்று தெரியவில்லை.
புரட்டாசி மாதத்தில் நம்ம ஊரில் கறிகடைகளில் வியாபாரம் மந்தம்தான்.
புரட்டாசி மாதம் வெங்கடாசலபதிக்கு விசேசம். அதுவும் சனிக்கிழமைகள் இன்னும் விசேசம். நாமம் போட்டு நாலு வீட்டில் அரிசி வாங்கி சமைத்து வெங்கடாசலபதியை வணங்குவதை பார்க்கலாம்.
நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு சனிக்கிழமை விருந்திற்கு தொலைபேசியில் அழைத்தார். "நீங்க என்ன சாப்பிடுவீங்க" என்று கேட்டவரிடம் "நான் வெஜிடேரியன்தான்" என்று சொன்னேன்.
நானும் இன்னொரு நண்பருமாக விருந்திற்கு சென்றோம். அங்கு சென்று பார்த்தால் நம்மை அழைத்த நண்பரோ சிக்கன் பிரியாணியும் ஆம்லேட்டும் வெஜிட்டபிள் பிரியாணியும் செய்திருந்தார்.
"நீங்க நான்-வெஜிட்டேரியன்னு சொன்னீங்க இல்ல. அதுதான் ஸ்பெசலாய் செய்தோம்,"
"அச்சச்சோ. நான் வந்து நான் வெஜிட்டேரியன்னுதான் சொன்னேன். நான் சிக்கன் சாப்பிடுறது இல்லை."
"ஓ. புரட்டாசி மாசம். நாங்களும் சாப்பிட மாட்டோம். உங்களுக்காகத்தான் செய்தோம். ஒரு வேளை நீங்களும் புரட்டாசின்றதால சாப்பிட மாட்டீங்களா."
"இது புரட்டாசி மாசம்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். நான் எப்பவுமே சிக்கன் சாப்பிடறதில்லை. முட்டை மட்டும் சாப்பிடுவேன்". - நான்.
"நீங்க ஏன் சாப்பிடறது இல்லை. வீட்டுல சாப்பிட மாட்டாங்களா." - நண்பர்
"சே. சே.. வீட்டுல எல்லோரும் நல்லா சாப்பிடுவாங்க. என்னோட தாத்தா சாப்பிட ஆரம்பிச்சாருன்னா முழு கோழிப்பண்ணையையே சாப்பிட்டு முடிச்சிடுவாரு. நான் மட்டும்தான் சாப்பிடமாட்டேன்." - நான்.
"ஏன் நீங்க மட்டும்"
"அது என்னமோ தெரியலை. அசைவம் சாப்பிட்டா ஒரு உயிரை கொல்கிறோம் அப்படின்ற எண்ணமா இருக்கலாம். நம்ம வயிறு ஒரு கோழியையோ இல்லை ஆட்டையோ புதைக்கிற கல்லறை இல்லை அப்படின்னு எங்கயோ சின்ன வயசுல படிச்சது. சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது இல்லை"
"அதென்ன முட்டை மட்டும்."
"நான் வந்து சைவமும் இல்லை. அசைவமும் இல்லை. "முசைவம்". அதாவது முட்டை மட்டும் சாப்பிடற சைவம். இங்லீஷ்ல சொல்லனும்ணா எக்டேரியன். முட்டைன்றது இன்னும் உயிர் வராத ஒண்ணுன்றதால அதை சைவத்துலயே சேத்துக்கலாம்". - நான்.
"நீங்க புரட்டாசி பார்ப்பீங்களா"
"வீட்டுல பார்ப்பாங்க. நான் பார்க்கிறது இல்லை. சிக்கன் சாப்பிடலைன்னாலும் நான் ஆம்லேட் சாப்பிடறேன். "
அழைத்த நண்பர் சைவம் மட்டும் சாப்பிட, நான் முசைவம் சாப்பிட, உடன் வந்த நண்பர் மட்டும் அசைவம் சாப்பிட்டார்.
"பீர் குடிக்கிறீர்களா?" நண்பர் கேட்டார்.
"நான் குடிக்கிறதில்லை. ஆமா பீருக்கு புரட்டாசி கிடையாதா ?" நான்.
"பீரை கூல்டிரிங்ஸ்ல சேர்த்துட்டாங்களே. உங்களுக்கு தெரியாதா ?"
"அப்படியா... எப்ப ?"
"நீங்க முட்டைய சைவத்துல சேர்த்தாங்கன்னீங்களே அப்பவேதான்" நண்பர் சிரித்தார்.
இப்படியாக எங்கள் புரட்டாசி சனிக்கிழமை விருந்து முடிந்தது.
Thursday, October 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//"நீங்க முட்டைய சைவத்துல சேர்த்தாங்கன்னீங்களே அப்பவேதான்" நண்பர் சிரித்தார்//
ஹஹ்ஹஹ்ஹஹ்.
ஓஹ் மூணாங்கிழமையா அங்கே
-------------------------------------------------------------------------------------------------------------
vegan, vegetarian, eggitarian, ovo-lacto vegetarian இப்படி எம்புட்டு மேட்டர் இருக்கு இப்போ!!! :))
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment