எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன். இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.
இது சொர்க்கமா. இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.
இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.
இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே. இது என்ன கசக்கிறது. மீண்டும் மயங்குகிறேன்.
இம்முறை கண்களை திறக்கிறேன். ஏதோ தெளிவாக உணர்கிறேன். சிரித்தபடி அந்தப் பெரியவர்.
"ஐயா. நான் யார். நீங்கள் யார். இது எந்த இடம்."
"பொறுமை தம்பி. மிகவும் களைத்திருக்கிறாய்.".
"இல்லை ஐயா. இப்போது மிகவும் தெம்பானவனாக உணர்கிறேன். தாங்களே என்னைக் காப்பாற்றி போஷித்தவர் என்று அறிகிறேன். ஆயின் எதுவும் நினைவில் இல்லை. தாங்கள் விளக்க முடியுமா."
"தம்பி. நீ நமது தேசத்தின் குதிரை வீரன். நானொரு சாதாரணத்துறவி. இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் நீ காட்டிய வீரத்தை நினைத்தால் எனக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது."
"ஆம். ஐயா நினைவுக்கு வருகிறது. நமது பகையரசன் கிழக்கு கோட்டையில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் நமது படைப்பிரிவு கிளம்பியது. குதிரைவீரர்களும் காலாட் படையினரும் பல எந்திரப் பொறிகளுடன் கிளம்பினோம். கோட்டையின் மதில் சுவரை தாக்கியழித்து கோட்டையை கைப்பற்ற யுத்தமும் துவங்கினோம். நினைவுக்கு வருகிறது. ஆயின் யுத்தம் என்னவானது. நாம் வென்றோமா ?"
"துரதிர்ஷ்ட வசமாக இல்லை தம்பி. மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்தது. நமது வீரர்கள் மதிலை உடைத்து உள் போந்தார்கள். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நானும் உங்கள் உடனிருந்தேன். கோட்டையை முற்றுகையிட்டு எரியூட்டினோம். என்னமாய் போரிட்டாய் தம்பி நீ. கிட்டத்தட்ட வெல்லும் தருணத்தில் பகைவனின் வடதிசைப் படைகள் வந்து சேர்ந்தன. எண்ணிக்கையில் குறைவான நமது படை அழித்து தள்ளப்பட்டது. நான் பின் வாங்கினேன். போரில் காயம் பட்ட நீ மயங்கி விழுந்தாய். உனது குதிரை உன்னை நமது எல்லையில் கொண்டு வந்து சேர்த்தது. உன்னைக் காப்பாற்றி சிகிச்சையளித்தேன்."
"ஐயா. ஏன் அவ்வாறு செய்தீர்கள். புறமுதுகு காட்டியன் என்ற பழி எனக்கு தேவையா. அந்த யுத்தத்திலேயே நான் வீரமரணம் அடைந்திருக்கக்கூடாதா."
"தம்பி. தேசம் இன்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. அதை வீணில் போக்காதே. அந்த யுத்தத்தில் நாம் தோற்றிருக்கலாம். ஆனால் நமது சேதத்தை விட பகைவனின் சேதம் இருமடங்கு அதிகம். கிழக்குக் கோட்டையை முற்றிலும் எரியூட்டிவிட்டோம். பகையரசன் புலம் பெயர்ந்து இப்போது மேற்குக் கோட்டையில் இருக்கிறான். நமது அரசரும் மேற்குக் கோட்டை மீதான படையெடுப்புக்கு படைகளை திரட்டி வருகிறார்."
"நல்ல செய்தி ஐயா. நானும் படைப்பிரிவில் சென்று சேர விரும்புகிறேன்."
"மகிழ்ச்சி. அடுத்த ஐந்து தினங்களுக்கு ஊர்க்காவல் படையில் இரு. அரசரின் செய்தி வந்ததும் படையினருடன் சென்று சேர்வாய்."
"மிக்க நன்றி ஐயா."
--------
அடுத்த ஐந்து நாட்களும் ஊர்க்காவல் படையில் ஊரைச் சுற்றி வந்தேன். அந்த ஐந்து தினங்களும் ஐந்து மணித்துளிகளாய்ப் பறந்து மறைந்தன.
இந்த தேசத்தின் மக்கள்தான் இந்த போர்க்காலத்தில் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். வீரர்களுக்கு வேண்டிய தானியம் உழவர்களின் மிகுந்த உழைப்பில் தேவைக்கு அதிகமாகவே வந்து சேர்ந்து கொண்டிருந்தது.
போருக்கு தேவையான வண்டிகள் இயந்திர பொறிகள் செய்வதற்கு நாட்டின் தெற்குப்பகுதி காடுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அங்கு நான் சென்ற போது நான் கண்ட காட்சிகள் என் கண்களை அகலத்திறப்பனவாய் இருந்தது.
கொல்லர்களின் உலைக்களத்தில் வால்களும் வேல்களும் வெகுவாக தயாராகிக் கொண்டிருந்தன. காட்டை ஒட்டிய துறைமுகத்தில் மரக்கலங்கள் கம்பீரமாக நின்றிருந்தன.
அந்தத் துறவியை அங்கு சந்தித்தேன்.
"தம்பி அந்த மரக்கலங்களை பார்த்தாயா. இந்த முறை யுத்தம் தரையிலல்ல கடலில்." புன்னகைத்தார்.
"கப்பல்களில் வீரர்கள் கிளம்புகிறோம். படைப்பிரிவு எதிரி பார்க்காத இடத்தில் கரையில் இறங்கி பகைவனின் கோட்டையை நோக்கி முன்னேறும். அதே நேரத்தில் கப்பல்கள் கடற்கரை பிரதேசங்களை தாக்கி அழிவு ஏற்படுத்தும். எதிரிப் படைகள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படும் போது காவல் அதிகமில்லாத கோட்டையை நம்படை மோதி கைப்பற்றும்."
"திட்டம் வெகு அருமை ஐயா."
"நம் அரசரை என்னவென்று நினைத்தாய்."
------------
எதிரியின் மண்ணில் வந்து இறங்கிகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கப்பல் பயணம் அத்துனை சுகமானதாக இல்லை. இந்த நேரத்தில் நமது கப்பல் படை எதிரியின் கடலோர கிராமங்களை அலைகழித்துக் கொண்டிருக்கும். எதிர்பார்த்தது போல் எதிரி்ப் படைகள் கோட்டையை சுற்றி அதிகம் இல்லை.
கோட்டையைத் தாக்க துவங்கினோம். எந்திரப் பொறிகள் கோட்டையை நோக்கி கவண் கற்களையும் தீப்பந்தங்களையும் வீசின. வெளிப்போந்த வீரர்களை என்னுடனான குதிரைப்படை எதிர்கொண்டு மோதியது. தலைகளை வெட்டி வீசி முன்னேறிக் கொண்டிருந்தேன். கோட்டை எரியத் துவங்கியது. திட்டமிட்டபடி என் தலைமையிலான சிறு படைப்பிரிவு கோட்டையின் பின்வாசலை நோக்கி முன்னேறியது.
நினைத்தது சரியே. தப்பித்து வடக்குக் கோட்டைக்கு செல்வதற்காக பகையரசன் நான்கு மெய்க்காப்பாளர்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்.
"விடாதீர்கள். தாக்குங்கள்" பாய்ந்தோம்.
எனது வேல் பகையரசனின் மார்பில் பாய்ந்தது. வேகமாக குதிரையை செலுத்திக் கொண்டு வாளை சக்கரவாகமாக சுழற்றினேன்.
பகையரசனின் தலை கணத்தில் துண்டானது.
"வெற்றி. வெற்றி."
------------
"யூ ஆர் விக்டோரியஸ்" என்று என் கணினித் திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எட்டு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த மைக்ரோசாஃப்டின் "ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்" தந்த அலுப்புடன் தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.
தூக்கத்திலும் கனவு.
இம்முறை கப்பல் தலைவனாக "கலபதி"யாக பத்துக் கப்பல்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறேன்.
எதிரியின் துறைமுகத்தையும் அதனருகில் இருக்கும் கோட்டையையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை.
"தளபதி கோட்டையின் சுவரிலிருந்து பீரங்கிகள் குண்டு மழை பொழிகின்றன. இரண்டு கப்பல்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டன. என்ன செய்வது."
என்ன செய்யலாம். தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.
Wednesday, December 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பகைவனின் தலைகொண்ட அந்த போர்வீரனை பாராட்டி பரணி பாடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :))
-------------------------------------------------------------------------------------------------------------
:-((
கதை அருமையா போச்சு. இருந்தாலும் முடிவை நான் பாதி படிக்கும் போதே யூகிச்சிட்டேன்.
என் பழைய ரூமேட் எனக்கு ஒரு மாசமா (அக்டோபர்ல) இதை சொல்லி கொடுத்துட்டு இருந்தாரு. முக்கியமா அந்த கப்பல் படையும், இயந்திர பொறியும் படிச்சவுடனே அது தான் ஞாபகம் வந்துச்சு...
நீங்க வேற மாதிரி முடிச்சிருந்தா நான் இது Age of Empiresனு நினைச்சு படிச்சேனு சொல்லலாம்னு பார்த்தேன். ஆனா இப்ப :-(((((((((
-------------------------------------------------------------------------------------------------------------
கணிணியில் எட்டு மணி நேரம் விளையாட்டு. ம்ம்ம்ம். எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் - எட்டு மணி நேரம் விளையாட.
கதை அருமை.
-------------------------------------------------------------------------------------------------------------
கல்லூரி நாட்களில் ராத்திரி பகல் பாராமல் விளையாடிய விளையாட்டு!!
அப்பொழுது இருந்த ஆர்வம் இப்பொழுது எங்கு போனது என்று தெரியவில்லை!!
கதை படிக்க ஆரம்பித்தவுடனே எனக்கு அந்த விளையாட்டு ஞாபகம் வந்துவிட்டது!! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
வெட்டி
உங்களுக்கு ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ் அவ்வளவா பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அதனாலதான் :-( போல.
அனுபவிச்சி விளையாட வேண்டிய விளையாட்டு.
இங்க எழுதியிருக்கிற கதை "Regicide" வகை விளையாட்டு. எதிரி ராஜாவை வெட்டினா வெற்றி :)
-------------
சீனா..
என்னிடம் ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ் ஒரிஜினலே இருக்கிறது.
7 எதிரி அரசர்களை வைத்துக்கொண்டு மக்கள் தொகை 200 என்று வைத்துக் கொண்டு விளையாடினால் ஒரு விளையாட்டு முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகும் :))
---------
CVR
அந்த விளையாட்டு மீதான ஆர்வம் எனக்கு இப்போதும் அப்படியே இருக்கிறது. கணினி விளையாட்டுக்களில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்தான்.
அதுவும் ரிசர்ச் செய்து ஒவ்வொரு ஏஜ் ஆக மாறுவது. படைபலம் பெருக்குவது... ஒரு கனவுலகில் மிதப்பது போல் இருக்கும்.
அந்த கனவை கதையாக கொண்டு வரலாம் என்றுதான் இந்தக் கதை. :)
நன்றி.
-----------
-------------------------------------------------------------------------------------------------------------
//உங்களுக்கு ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ் அவ்வளவா பிடிக்கலைன்னு நினைக்கிறேன். அதனாலதான் :-( போல. //
பிடிக்காதுனு இல்லை. நான் பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இப்படி சண்டை போடுங்க, அப்படி சண்டை போடுங்கனு சொல்லிட்டு ஏதாவது ஒரு கதையை சொல்லிட்டு இருப்பேன் :-)
இந்த கதை நான் நினைச்ச மாதிரியே முடிஞ்சதுல ஒரு வருத்தம் :-( வேற மாதிரி இருந்தா நான் இப்படி முடிச்சிருந்தா நல்லா இருக்கும்னு உங்களுக்கு சொல்லியிருக்கலாம் இல்லை. (இப்ப நீங்களே நல்லா முடிச்சிட்டீங்க). அதான் ;)
-------------------------------------------------------------------------------------------------------------
இந்த விளையாட்டை நான் விளையாண்டதில்லை. கேள்விபட்டதும் இல்லை. ஆனா படிச்சுகிட்டு வரும் போது கல்கியோட பொன்னியின் செல்வன் நினைவுக்கு வந்தது. :-)
உள் போந்தனர்ன்னு எழுதியிருக்கீங்க. உள்ளே சென்றனர்ங்கற பொருள்லன்னு நினைக்கிறேன். போதுதல்ன்னா வருதல்; போந்தனர் என்றால் வந்தனர் என்று பொருள் என்பது நான் படித்த இலக்கியங்களை வைத்துப் புரிந்து கொண்டது. சொல் ஒரு சொல் பதிவிலும் ஒரு இடுகை போதுதல் பத்தி இருக்கு. படிச்சிருக்கீங்களான்னு தெரியலை.
எ-டு: நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்; போந்தார் போந்தெண்ணிக் கொள்
-------------------------------------------------------------------------------------------------------------
குமரன்
இங்கு உட்போந்தனர் என்பதன் பொருள் உட்புகுந்தனர் என்பதாம்.
போந்து என்பது "புகுந்து" என்று பொருள் படும்.
நீராட போதுமினோ எனில் நீராட புகுவீர் என்றும் பொருள் கொள்ளலாம்.
"எனச் சொல்லப் போந்தனர்." என்பதற்கு "எனச் சொல்ல புகுந்தனர்/தலைப்பட்டனர்" எனப் பொருள் வரும்.
:)
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment