Friday, October 26, 2007

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்.

காதலையும் காதல் பெரு கல்யாண வாழ்வையும் வாழ்த்திப்பாடிய அடிமைப் புலவர்களே... ஓதுங்குங்கள்... இதோ பட்டினத்தான் வருகிறான்...
பெண்ணைப் பெரும் பொருள் என்று கொண்டு வாழ்நாள் முழுதும் அவளுக்கு அடிமையாகி அல்லல் பெறும் மானிடர்காள்...
பெண்தான் வாழ்வின் பெரும் பொருளா ? வாழ்வின் பயனோ ? இவளின்றி இங்கு வாழ்வு இல்லையா...
இங்கு அடிமைப்பட்டவன் ஆண்.. பெண்ணடிமைப்பட்டாள் என்ற பொய்மையைக் காட்டி மேலும் மேலும் வதைக்கப் படுபவனும் ஆண்.
பெண்ணிடம் அழகு கண்டு பின்னலைந்து தன் வாழ்வு தொலைந்து, வாழ்வு முழுமையும் பின்னலைவதையே தொழிலாகக் கொண்டு, பின்னலைந்திடுவோன் எனப் பழியுமேற்று வாழும் வாழ்வுமோர் வாழ்வோ ?
பெண்ணின் பெரிதும் உண்டோ.... உண்டு... உணர்வீர்... உணர்வு கொள்வீர்...
இதோ பட்டினத்தான் சொல்வான்....


மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைந்துமுன் மெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையயைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும்

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு முத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும்

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும்

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யொழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்

இதற்கு பிறகு பட்டினத்தார் சொல்பவை சென்சாரில் காணாமல் போகின்றன....

மேலும் சில பாடல்களில் சொல்வார்...

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சி மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன்இ இறைவாஇ கச்சியேகம்பனே.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே.

பெண் மாயப்பிசாசம் என்பதை கண்டு சொன்னவன் பட்டினத்தான்.
பட்டு தெரிந்ததால் அவன் பட்டினத்தான்.
அவன் வார்த்தைகளின் உண்மை உணர்ந்தும் ஊமையாய் இருக்குமென் மனமே உன்னை என் செய்ய...

குழியில் விழும் அனைவராலும் வெளியேற முடிவதில்லை சில பட்டினத்தான்களைத் தவிர.

சேறு என்று தெரிந்தும் மூழ்கி சுகங்கண்டு அதிலேயே வாழும் எருமையின் வாழ்வோ நம் வாழ்வு. எருமையாய் இருப்பதால்தான் அனைத்துத் தாக்குதல்களையுந்தாங்கி பொறுமையாய் இருக்கிறோமோ.?

விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கைதான் ஆணின் வாழ்க்கை போலும். :)

Thursday, October 11, 2007

புரட்டுஆசி மாதமும் சிக்கன் பிரியாணியும்

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று எந்த சாத்திரம் சொல்லுகிறது என்று தெரியவில்லை.

புரட்டாசி மாதத்தில் நம்ம ஊரில் கறிகடைகளில் வியாபாரம் மந்தம்தான்.

புரட்டாசி மாதம் வெங்கடாசலபதிக்கு விசேசம். அதுவும் சனிக்கிழமைகள் இன்னும் விசேசம். நாமம் போட்டு நாலு வீட்டில் அரிசி வாங்கி சமைத்து வெங்கடாசலபதியை வணங்குவதை பார்க்கலாம்.

நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு சனிக்கிழமை விருந்திற்கு தொலைபேசியில் அழைத்தார். "நீங்க என்ன சாப்பிடுவீங்க" என்று கேட்டவரிடம் "நான் வெஜிடேரியன்தான்" என்று சொன்னேன்.

நானும் இன்னொரு நண்பருமாக விருந்திற்கு சென்றோம். அங்கு சென்று பார்த்தால் நம்மை அழைத்த நண்பரோ சிக்கன் பிரியாணியும் ஆம்லேட்டும் வெஜிட்டபிள் பிரியாணியும் செய்திருந்தார்.

"நீங்க நான்-வெஜிட்டேரியன்னு சொன்னீங்க இல்ல. அதுதான் ஸ்பெசலாய் செய்தோம்,"

"அச்சச்சோ. நான் வந்து நான் வெஜிட்டேரியன்னுதான் சொன்னேன். நான் சிக்கன் சாப்பிடுறது இல்லை."

"ஓ. புரட்டாசி மாசம். நாங்களும் சாப்பிட மாட்டோம். உங்களுக்காகத்தான் செய்தோம். ஒரு வேளை நீங்களும் புரட்டாசின்றதால சாப்பிட மாட்டீங்களா."

"இது புரட்டாசி மாசம்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். நான் எப்பவுமே சிக்கன் சாப்பிடறதில்லை. முட்டை மட்டும் சாப்பிடுவேன்". - நான்.

"நீங்க ஏன் சாப்பிடறது இல்லை. வீட்டுல சாப்பிட மாட்டாங்களா." - நண்பர்

"சே. சே.. வீட்டுல எல்லோரும் நல்லா சாப்பிடுவாங்க. என்னோட தாத்தா சாப்பிட ஆரம்பிச்சாருன்னா முழு கோழிப்பண்ணையையே சாப்பிட்டு முடிச்சிடுவாரு. நான் மட்டும்தான் சாப்பிடமாட்டேன்." - நான்.

"ஏன் நீங்க மட்டும்"

"அது என்னமோ தெரியலை. அசைவம் சாப்பிட்டா ஒரு உயிரை கொல்கிறோம் அப்படின்ற எண்ணமா இருக்கலாம். நம்ம வயிறு ஒரு கோழியையோ இல்லை ஆட்டையோ புதைக்கிற கல்லறை இல்லை அப்படின்னு எங்கயோ சின்ன வயசுல படிச்சது. சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது இல்லை"

"அதென்ன முட்டை மட்டும்."

"நான் வந்து சைவமும் இல்லை. அசைவமும் இல்லை. "முசைவம்". அதாவது முட்டை மட்டும் சாப்பிடற சைவம். இங்லீஷ்ல சொல்லனும்ணா எக்டேரியன். முட்டைன்றது இன்னும் உயிர் வராத ஒண்ணுன்றதால அதை சைவத்துலயே சேத்துக்கலாம்". - நான்.

"நீங்க புரட்டாசி பார்ப்பீங்களா"

"வீட்டுல பார்ப்பாங்க. நான் பார்க்கிறது இல்லை. சிக்கன் சாப்பிடலைன்னாலும் நான் ஆம்லேட் சாப்பிடறேன். "

அழைத்த நண்பர் சைவம் மட்டும் சாப்பிட, நான் முசைவம் சாப்பிட, உடன் வந்த நண்பர் மட்டும் அசைவம் சாப்பிட்டார்.

"பீர் குடிக்கிறீர்களா?" நண்பர் கேட்டார்.

"நான் குடிக்கிறதில்லை. ஆமா பீருக்கு புரட்டாசி கிடையாதா ?" நான்.

"பீரை கூல்டிரிங்ஸ்ல சேர்த்துட்டாங்களே. உங்களுக்கு தெரியாதா ?"

"அப்படியா... எப்ப ?"

"நீங்க முட்டைய சைவத்துல சேர்த்தாங்கன்னீங்களே அப்பவேதான்" நண்பர் சிரித்தார்.

இப்படியாக எங்கள் புரட்டாசி சனிக்கிழமை விருந்து முடிந்தது.

Wednesday, October 10, 2007

தமிழக பொற்கோவில் - புகைப்படங்கள்

இடம்: வேலூர் மாவட்டம். அரியூர் - மலைக்கோடி. இப்போது புதியபெயர் "ஸ்ரீபுரம்"

கோவில்: மகாலட்சுமி கோவில். 1000 கிலோ தங்கம். செலவு ரூ. 300 கோடி. 400 பொற்கொல்லர்களின் உழைப்பு.

சாமியார்: ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா (இன்னொரு அம்மா!! சாமியார் )
Tuesday, October 09, 2007

எனது பிராமண நண்பன்

இது எனது நண்பனை பற்றிய கதை மட்டுமில்லை. எனக்கு கல்யாணமான கதையும் கூட.

எந்த கவலையும் இல்லாம சுத்திக்கிட்டிருந்த இந்த கடங்காரனுக்கு கால்கட்டு போடனும்னு எங்க வீட்டுல பெருங்கவலை.
வீட்டுல என்னுடைய ஜாதகத்தோட சாதக பாதகங்களை பார்த்து வரிகள் (வரனுக்கு பெண்பால்) எல்லாம் தள்ளி போக இந்த வகையிலயாவது ஜாதகம் நமக்கு சாதகமா இருக்கேன்னு நானும் சந்தோஷமாத்தான் இருந்தேன்.

என்னோட ஜாதக கட்டங்கள்ள சுடோகு போட்டு பார்த்த ஜோசியர் இந்த புள்ளையாண்டான் துர்கை கோயிலுக்கு போய் விளக்கு ஏத்துனாதான் கல்யாணம் ஆகும்னு அடிச்சு சொல்லிட்டார்.

என்னது கோவிலுக்கு நானா. இந்த பகுத்தறிவு ஆண் சிங்கத்தை கோவிலுக்கு, அதுவும் ஒரு பொம்பளை சாமியோட கோவிலுக்கு போய் விளக்கேத்த சொல்லுறதா.

என்ன இருந்தாலும் பெற்ற தாய் கண்கண்ட தெய்வமில்லையா. அவங்களுக்காக கோவிலுக்கு போக கடைசியாக ஒத்துக் கொண்டேன்.

கோவிலில் வரிசையில் இந்த ஐயரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தேன்.

"சாமி. பையனுக்கு கல்யாணம் ஆகணும்னு ஒரு அர்ச்சனை."- அம்மா.

"பேர். நட்சத்திரம் ராசி சொல்லுங்கோ" - ஐயர்

"பிரபு. கேட்டை நட்சத்திரம். விருச்சிக ராசி."

அர்ச்சனை முடிந்தது.
"இந்தாடா இதை ஐயர் தட்டுல போடு." - அம்மா
பத்து ரூபாயை தட்டில் போட்டேன்.

"விவாக பிராப்திரஸ்து" சொல்லி ஐயர் எலுமிச்சம்பழம் தர வாங்கி கொண்டேன்.

"பிரபு.. நோக்கு என்னை நியாபகம் இருக்கா..." கேள்வி கேட்ட ஐயரை உற்றுப் பார்த்தேன்.

"டேய்... சங்கர்... நீ இங்க...."

"சித்த இரு. இவாளை எல்லாம் அனுப்பிண்டு வந்துர்றேன்."

சித்தவே அவனது வருகைக்காக இருந்த நேரத்தில் சித்தத்தில் சங்கரின் பழைய நினைவுகள் சுழன்றது.

சங்கர் என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன்.

ஒரு முறை தமிழ் வகுப்பி்ல் அவன் ஏதோ குறும்பு செய்ய.... நான் அவனை வயிற்றில் ஓங்கி குத்த... அவன் "ஆ" என்று அலர... எங்கள் தமிழாசிரியை இருவரையும் பெஞ்சில் ஏற்றினார்.

"சங்கர். ஐயர் பையனா இருந்துக்கிட்டு என்னடா அட்டகாசம். அப்பா அர்ச்சகர்ன்றதால நீயும் குருக்களா போயிடலாம்னு படிக்காம இருக்கியா. ஏண்டா பிரபு.. உனக்கு என்ன வந்தது கேடு. அவனாவது படிக்கலைன்னாலும் அர்ச்சகரா போயிடுவான். நீ என்ன பண்ணுவ. இரண்டு பேரும் கிளாஸ் முடியர வரைக்கும் பெஞ்சிலயே நில்லுங்க".

பெஞ்சில் இருவருமாய் நின்ற காலமும்... எங்கள் தமிழாசிரியையின் தீர்க்க தரிசனம் நிஜமானதும் நினைவில் வர சங்கர் வந்து சேர்ந்தான்.

"சங்கர்.. நீ என்னடா இந்த கோவில்ல ஐயரா.. "

"ஆமா"

"என் கையால அடிவாங்கினவன்... இன்னிக்கு என்னைப்பார்த்து விவாக பிராப்தி கொஸ்து... சாம்பார்னு சொல்லுற.."

"அது பிராப்திரஸ்து"

"சரி. ஏதோ ஒண்ணு. நீ பத்தாவது முடிச்சிட்டு பாலிடெக்னிக்தானா சேர்ந்த.. இங்க எப்படி ஐயரா.."

"என்னோட தோப்பனாருக்கு நான் பாலிடெக்னிக் படிச்சு நல்ல வேலைல சேரணும்னுதான் ஆசை. அவரை மாதிரி நான் கோவில்ல தட்டு தூக்கி ஜீவனம் பண்ண கூடாதுன்னு நினைச்சார்.
ஆனா.. விதி... நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படிக்கறச்சே தோப்பனார் காலமாயிட்டார்... வேற வருமானமில்லாத குடும்பம்.. அம்மா.. தங்கைன்னு இரண்டு ஜீவன்...
கடைசியில நான் படிப்பை நிறுத்திட்டு தட்டு தூக்கிட்டேன்... தட்டுல விழுந்த வருமானத்துலய தங்கை கல்யாணம் நடந்துட்டது. வாழ்க்கை போயிட்டிருக்கு" சிரித்தான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெறுமையாய் சிரித்தேன். பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

"வர்றேன் சங்கர்"

"அடிக்கடி இந்த பக்கம் வாடா."

"சரி." சற்று கனத்த மனத்துடன் கிளம்பினேன்.

காலம் ஓடியது. எனக்கு கல்யாணம் ஆனது.
எனக்கு கல்யாணம் ஆனது நான் துர்க்கை கோவிலுக்கு போனதால்தான் என்று அம்மா நம்பினார்.
எனக்கும் டவுட்டுதான். ஒரு வேளை கோவில்ல கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜுஸ் போட்டு குடிச்சதாலதான் எனக்கு கல்யாணம் நடந்திருக்குமோ.

எனி வே. மேரேஜ் ஈஸ் என் ஐ ஓப்பனர். அது எனது நாத்திக கண்ணைத் திறந்தது.

கல்யாணத்திற்கு பிறகு நானும் விதியை நம்பத் துவங்கினேன்.