Wednesday, August 29, 2007

போண்டா மற்றும் போளியின் கதை.

(முன்குறிப்பு: இது சிறுவர்களுக்கான நீதி கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)

அது ஒரு ஹோட்டல்.
அங்கு பல பலகாரங்கள் இருந்தன. தோசை, இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா, புட்டு, போளி, ஆப்பம் இன்னும் பல. தினமும் வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த எல்லா பண்டங்களையும் ஆர்டர் செய்தார்கள். இவற்றில் போண்டா வாடிக்கையாளர்களை கவர புரட்சிகரமான கோஷங்களை இட்டது. போண்டாவை பலர் ஆர்டர் செய்தனர்.

போண்டாவின் கோஷங்கள் போளியின் கொள்கைக்கு(!) முரணானவையாக இருந்தன. போண்டாவை எதிர்த்து போளி குரல் கொடுக்கத்துவங்கியது. போண்டாவின் சைட் டிஷ்கள் போண்டாவை ஆதரித்தன. போளியின் சைட் டிஷ்கள் போளியை ஆதரித்தன. போளி போண்டாவை எதிர்த்து போளி போண்டாவாக வேடமிட்டு போண்டாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்த்தது. போண்டாவும் அதை சமாளிக்க கீரைபோண்டா, கோதுமை போண்டா என வேடமிட்டு போளிக்கு எதிராக முழங்கியது.

இதனால் வாடிக்கையாளர்கள் போண்டாவையும் போளியையும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
இதனால் போண்டாவும் போளியும் ஒன்றையொன்று எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமே வாடிக்கையாளர்களை கவர ஆரம்பித்தன.

போளி போண்டாவை ஆர்டர் செய்பவர்களை திட்ட ஆரம்பித்தது. சிலர் போளியின் ஆட்சேபணைக்கு பயந்து போண்டாவை ஆர்டர் செய்வதை நிறுத்தினர் அல்லது திருட்டுத்தனமாக போண்டா ஆர்டர் செய்தனர். போளி அனைவரையும் பகைக்க ஆரம்பித்தது. இதனால் போளிக்கு எதிரான குரல்கள் அதிகமாயின.

தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினர். நெருப்பு தணலாய் போளியை வறுத்தெடுக்க கிளம்பியது.

இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பார்த்த வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். முதன் முறையாக ஹோட்டலுக்கு வந்தவர்கள் தெரியாமல் போண்டாவையோ போளியையோ ஆர்டர் செய்தவர்கள் மறுமுறை ஹோட்டலுக்கு வரவே அஞ்சினர்.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள்.

பலகாரங்கள் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களுக்குள் எத்தனை வேற்றுமையிருந்தாலும் தங்களுக்குள் மோதிக் கொள்வது தங்களுக்குத்தான் அவமானம் என்பதை உணர்ந்தன. பலகாரங்கள் திருந்தியதால் முன்பு போல வாடிக்கையாளர்கள் வந்து பயமின்றி வேண்டியதை ஆர்டர் செய்தார்கள்.

பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.

நீதி: ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

பரங்கி மலையில் தெரிந்த ஜோதி

(இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)

காட்சி 1:

இடம் : கல்லூரி மாணவர் விடுதி
பாத்திரங்கள்: மாணவர்கள் கல்யாணம், பாண்டி, நாகு, ரெட்டி.

கல்யாணம்: டேய் பாண்டி, நீ நாகு, ரெட்டி மூணு பேருமா எங்கயோ கிளம்பிட்டிருக்க மாதிரி இருக்கு.

பாண்டி: ஆமாடா, நீயும் வர்றியா.

கல்யாணம்: எங்க போறீங்க.

பாண்டி: பரங்கி மலை ஜோதி.

கல்யாணம்: திருவண்ணாமலை தீபம் தெரியும். அது என்ன பரங்கி மலை ஜோதி. பரங்கி மலையில தீபம் ஏத்துவாங்களா என்ன.

நாகு: ம்ம்ம்.. பரங்கிமலையில மெழுகுவத்திதான் ஏத்துவாங்க. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேக்கிறான் பாரு. உனக்கு பரங்கி மலை ஜோதி தெரியாது?

கல்யாணம்: தெரியாதுடா.

பாண்டி: அது ஒரு புனிதத்தலம் உன்னை மாதிரி பக்திமான்கள் ஒரு தடவையாவது அதை விசிட் பண்ணனும்.

கல்யாணம்: அப்படியா.

நாகு: கலாய்க்காத பாண்டி. ஜோதின்றது அந்த மாதிரி படங்களை காட்டற தியேட்டர்.

கல்யாணம்: அந்த மாதிரின்னா..

பாண்டி: ஏய். யப்பா. நீ நல்லவந்தான். ஒத்துக்கறேன். ஓவரா ஆக்டு குடுக்காதடா. நீ பலான படமே பார்த்தது கிடையாது.

கல்யாணம்: ம்கூம். அதெல்லாம் தப்பு.

நாகு: ஏய்.. இவன் ரொம்ப நல்லவண்டா.

பாண்டி: களவும் கற்று மற அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எங்க கூட படத்துக்கு வர்றியாடா.

ரெட்டி: ரா. ரா. மஞ்சி ஃபிலிமு. "கலர்ஸ் ஆஃப் தி லைஃப்". கலர்ஃபுல் ஃபிலிமுரா.

நாகு: ரெட்டி ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்துட்டான். இது மூணாவது தடவை.

பாண்டி: ரெட்டி.. நீ ஜோதி தியேட்டர்க்கு சீசன் டிக்கட்டே வெச்சிருக்கியாமே.

ரெட்டி: லேதுரா. அந்த அபத்தம்.

பாண்டி: சரி. சரி. நம்பறேன்.. கல்யாணம் நீ வர்றியா இல்லையா.

கல்யாணம்: நான் வரமாட்டேன். இது நம்ம கலாச்சாரத்திற்கே விரோதம்.

பாண்டி: இங்க பார்றா நம்ம கலாச்சார காவலரை. உனக்கு பயம் அதனாலதான் வர மாட்டேங்கிற.

கல்யாணம்: பயமா... எனக்கா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.

பாண்டி: அப்ப உனக்கு பயம் இல்லைன்னு ப்ரூவ் பண்ணு.

கல்யாணம்: நான் ஏன் ப்ரூவ் பண்ணனும்.

பாண்டி: ஆம்பிளையா இருந்தா ப்ரூவ் பண்ணு. நூறு ரூபாய் பெட்.

கல்யாணம்: பெட்டெல்லாம் வேண்டாம்.

பாண்டி: அப்ப நீ பயப்படற. தோத்திட்ட. எடு நூறு ரூபாய்.

கல்யாணம்: அதெல்லாம் இல்லை.

பாண்டி: அப்ப வா. தியேட்டருக்கு. பெட்ல ஜெயிச்சினா உனக்கு நூறு ரூபாய்.

கல்யாணம்: (தயங்கியவாறு)... சரி வர்றேன்.

பாண்டி: அது வீரனுக்கு அழகு. உன் கற்பு எல்லாம் போகாது. நான் கியாரண்டி.

(நால்வருமாக கிளம்புகிறார்கள்).





காட்சி 2:
-----------

(படம் பார்த்து முடித்துவிட்டு நான்கு நண்பர்களும் தியேட்டர் வெளியே..)

பாண்டி: கல்யாணம். படம் எப்படிடா இருந்தது.

கல்யாணம்: ம்ம்..

ரெட்டி: ஆக்சுவலி சீன்ஸ் கட். அந்த பாக லேது.

கல்யாணம்: தியேட்டர்ல ஒருத்தர் கால மிதிச்சிட்டேண்டா. அப்புறம் பார்த்தா அது நம்ம லெக்சரர்.

பாண்டி: ஹா.. ஹா..

கல்யாணம்: பார்த்திட்டார்னா தப்பா நினைச்சிக்க மாட்டாரு.

பாண்டி: நாம படம் பார்க்க வந்தோம். அவரு என்ன சாமி கும்பிடவா வந்தாரு. நாம அவரை கண்டுக்க கூடாது. அவரும் நம்மள கண்டுக்க மாட்டாரு. பயப்படாதே.

கல்யாணம்: ம்ம்..

பாண்டி: மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கியே. ஆமா. இப்ப உன் கலாச்சாராம் என்ன ஆச்சு.

கல்யாணம்: ஆக்சுவலி நாம பார்த்தது இங்லீஷ் படம். அதனால நம்ம கலாச்சாரத்துக்கு ஒண்ணும் இல்லை.

பாண்டி: யப்பா.. பெரிய ஆளுடா நீ.

கல்யாணம்: நீ பெட்ல தோத்துட்ட. உனக்குதான் நூறு ரூபாய் நஷ்டம்.

பாண்டி: நூறு ரூபாய் நஷ்டமா... ஹா. ஹா.. நூறு ரூபாய் லாபம்.

கல்யாணம்: எப்படி..

நாகு: நீ படத்துக்கு வரமாட்டேன்னு நான் பாண்டி கிட்ட இருநூறு ரூபாய் பெட் கட்டியிருந்தேன். கவுத்திட்டியேடா.

கல்யாணம்: அடப்பாவிகளா.
-------------------------------------------------

(ஜோதி தரிசனம் முடிந்தது)

Tuesday, August 28, 2007

டாக்டர் விஜய்.. வாழ்க... வாழ்க...

செய்தி:- சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. நடிப்புத்திறன், வாழ்வியல் பண்பாடு, சமூக சிந்தனை ஆகியவற்றுக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

------------------

நடிப்புத்திறன்

நடிகர் விஜயின் நடிப்புத்திறனை ஒரு வரியில் சொல்லமுடியாது. இரண்டு வரியில் சொல்லி விடலாம்.
"அண்ணா. ஏனுங்கண்ணா."

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த நடிகர் அவர். முகபாவங்களை வெளிப்படுத்துவதில் அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.
அவரது நடிப்புத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதிலிருந்தே அவர் எத்தனை சிறந்த நடிகர் என்பது தெள்ளென விளங்கும்.

வாழ்வியல் பண்பாடு:

அதிகம் பேசாதவர். பேசத்தெரியாது என்பது காரணமில்லை. அடக்கம்தான் காரணம். இது அவரது வாழ்வியல் பண்பாடு.
படத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கோடி வரை வாங்கும் அசாதாரண நடிகரான இவர் தமது சம்பாத்தியத்தை நல்ல முறைகளில் முதலீடு செய்யும் வாழ்வியல் நெறியுடையவர்.
இவரது வாழ்வியல் முறை: நடிகருக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
இத்தகு இவரது வாழ்வியல் பண்பாடு தமிழ் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

சமூக சிந்தனை:

இவரது சமூக சிந்தனைபற்றி நாளெல்லாம் சொல்லலாம்.
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பயன்படுத்தி வந்த வடுமாங்காய் மற்றும் தயிர்சாதத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்திய இவரது அரும்பணி இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த சமுதாய நோக்கு உள்ள படங்கள் பலவற்றில் இவர் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ற ஒரு திரைப்படத்தில் இவரை பாராட்டி தபால் தலையே வெளியிடப்பட்டது.
இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.
இவரது திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சென்னையின் அனைத்து ரவுடிகளையும் அழித்து சென்னையை அமைதிப்பூங்காவாக்கியவர்.
இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகு சிறந்த நடிப்புத்திறன், சீரிய வாழ்வியல் பண்பாடு, சீர்மிகு சிந்தனைகள் கொண்ட இவர் டாக்டர் பட்டம் பெற்றது அந்த டாக்டர் பட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும்.
வாழ்க டாக்டர் விஜய்.
வாழ்க அவருக்கு பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மற்றும் ரசிகர்கள்.
வாழ்க ! வாழ்க !

Friday, August 24, 2007

தற்கொலை பன்னிக்க சிலவழிகள்

பன்னி(bunny)யின் தற்கொலை முயற்சிகள்.



ஒரே நேரத்துல ஏகப்பட்ட சிகரெட்டு குடிச்சா கேன்சர் வந்து போய் சேந்துடலாம் இல்லை.



மணியாக மணியாக மேல போயிடலாம்.



இந்தியன் கிரிக்கட் டீம் பேட் பண்ணா டைரக்டா சொர்க்கம்தான்.




அவங்க போகட்டும். நமக்கு பிரளயம் வரும்.



கேப்டன் பிரபாகரன் படம் நியாபகத்துக்கு வருது.






என்ன ஒரு பிளானிங்.



இவ்வளவு கஷ்டம் எதுக்கு பேசாம தொடர்ந்து டி.வி. பார்த்தா போதாதா.

Wednesday, August 22, 2007

பதிவர் மொக்கராசுவின் மொக்கை பதிவு.

இது பதிவர் மொக்கராசுவின் கதை.

மொக்கராசு உலகமறிந்த மொக்கை பதிவர். தமது பெயருக்கேற்ப மொக்கையான பதிவுகளை எழுதுபவர். இத்தகைய மொக்கராசு பதிவுலகமோ காணாத மொக்கை ஒன்றை பதிய முடிவெடுத்தார். மொக்கை என்றால் உங்க வீட்டு மொக்கை எங்க வீட்டு மொக்கையல்ல உலகமகா மொக்கையாக இருக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் மொக்கை பதிவென்றால் தன் பதிவைத்தான் காட்டும் அளவுக்கு அது இருக்கு வேண்டும் என்று நினைத்தார்.

மூளையை கசக்கினார். மொக்கை ரசத்தை பிழிந்தார்.
ஒவ்வொரு எழுத்தையும் ரம்பத்தால் ராவி வலையேற்றினார்.
மொக்கை தாங்காமல் அவரது கணினியின் கீபோர்டு கதறியதை கூட அவர் பொருட்படுத்தவில்லை.
திரட்டிகளில் இணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை தன் கதையை தானே படித்துப்பார்த்தார் மொக்கராசு.
அவரது மொக்கையை அவராலேயே தாங்க முடியாமல் மொக்கராசு மண்டை சிதறி இறந்தார்.

அதற்குள் அந்த மொக்கை பதிவு வலையுலகமெங்கும் பரவிவிட்டது. அந்த பதிவை திறந்த சிலரின் கணினிகள் புகை கக்கின. நெருப்பு நரி நிஜமாகவே நெருப்பை கக்கியது. மொக்கை பதிவை படித்த இதய பலவீனமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆணிபிடுங்குவதில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என அப்பதிவை திறந்தவர்கள் மொக்கையின் தாக்கத்தால் தங்கள் தலையில் கடப்பாரை இறங்குவதாக உணர்ந்தார்கள்.

பலர் பதிவை படித்து பைத்தியமானார்கள். பத்தாவது இருபதாவது மாடியென உயரமான இடங்களில் வேலை செய்த பலர் ஜன்னல்கள் மூலம் எகிறி குதித்தனர். பலர் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து தங்கள் கணினியே தாக்க ஆரம்பித்தனர். வீடுகள், பிரெளசிங் செண்டர்கள் எல்லாவற்றிலும் இதே நிலைதான். மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பலருக்கு என்ன ஆனது என்று அறியாமல் குழம்பின.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அனைத்து நாடுகளின் உளவுத்துறையும் உஷார் படுத்தப்பட்டன.

ஒய்டுகே இதனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை என பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இது பின்லேடனின் சதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து அதிபரும் கருத்து தெரிவித்தனர்.

இத்தனை களேபரத்துக்கும் பின் இத்தனைக்கும் காரணம் ஒரு மொக்கை பதிவே என்று தெரிய வந்தது.

இந்தப்பதிவை தடைசெய்யக் கோரி ஐநாவின் மனிதஉரிமை அமைப்பு கோரிக்கை விடுத்தது.

போர்க்கால நடவடிக்கை எடுத்து பிளாக்கரில் அந்த மொக்கை பதிவு முடக்கப்பட்டது.

உலகமே பெருமூச்சு வாங்கியது.

இந்த மொக்கை பதிவின் ஆற்றல் அணுகுண்டின் ஆற்றலை விட அளப்பரியது என்று வியந்த அமெரிக்க இராணுவம் அதன் காப்பி ரைட்சை வாங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தன்னை எதிர்க்கும் நாடுகள் மீது இப்பதிவை ஏவிவிட அமெரிக்க இராணுவம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

ஐநாவில் மொக்கைபதிவு தடுப்புத் தீர்மானமும் அதையடுத்து நிறைவேறியுள்ளது.

இவ்வாறு உலகையே கலக்கிய மொக்கைராசுவின் மொக்கை பதிவு ஒரு முடிவுக்கு வந்தது.

சுபம்.

Tuesday, August 21, 2007

அகோ கேளும் பிள்ளாய் - வியாசரின் மசாலா கதை.

"வியாசரே. ஒரு சூப்பர் கதை வேணும்"
"எழுதிடலாம்".
"இது வரைக்கும் இப்படி ஒரு கதை வந்ததே இல்லை அப்படின்ற மாதிரி இருக்கணும். கதையில மசாலா, வயலென்ஸ், செண்டிமெண்ட், கவர்ச்சி எல்லாமே தூக்கலா இருக்கணும்."
"அவ்வளவுதான. கதைய கேளுங்க."

---------------------

சந்தனு ராஜா கங்கைக்கு போனார். ஒரு அழகான பொண்ணை பார்த்தார்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" வழிந்தார்.
"நான் ஃப்ரீ டைப். என்ன நீங்க கொஸ்டின் எதுவும் பண்ணமாட்டீங்கன்னாதான் எனக்கு ஓக்கே".
ராஜா சான்சை மிஸ் பண்ண விரும்பவில்லை. "சரி. அப்படியே."

ஒண்ணு இல்ல ஏழு குழந்தைங்க பிறந்து எல்லாவற்றையும் கங்கையில தூக்கி போட்டு அந்த பெண் கொல்ல எட்டாவது குழந்தைய தூக்கி போடறப்ப ராஜா அப்ஜெக்ட் பண்ணார்.
"ஆக்சுவலி நான் கங்கா. என்னோட ஃப்ரீடம்ல நீங்க குறுக்கிட்டிட்டீங்க. இந்தாங்க உங்க குழுந்தை". கங்கை போயேவிட்டாள்.
குழந்தை பீஷ்மன் பெரியவனானான்.

சேம் கங்கா ரிவர். சேம் ராஜா. இப்ப வேற பொண்ணு. சத்யவதி.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" மீண்டும் வழிந்தார்.
"ஓ. ஓக்கே. ஆனா என்னோட குழந்தைங்கதான் நாளைக்கு ராஜாவாவணும். உங்க பெரிய பையன் கிடையாது. இந்த கண்டிஷன் உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கு ஓக்கே."
அகெய்ன் கண்டிசன். ராஜா சோகத்தோடு திரும்பினார்.

அப்பாவுக்காக பிள்ளை பீஷ்மர் கல்யாணமே செய்யாமல் விட்டு கொடுக்க.. அப்பாவுக்கு கல்யாணம் நடக்க... இரண்டு பிள்ளை பிறக்க... அப்பாவும் ஒரு பிள்ளையும் போய் சேர...

பீஷ்மர் தம்பிக்கு கல்யாணம் செய்ய மூணு பொண்ணுங்கள கடத்தறாரு. அம்பா அம்பிகா அம்பாலிகா.
அம்பாவை லவ் ஃபெயிலியர்னு சொல்லி டீல்ல விட்டுட்டு தம்பி மத்த இரண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ண.....
கொஞ்ச நாளிலே தம்பி அல்பாயுசுல போக... அடுத்த வாரிசு. பிக் கொஸ்டின்... ????

சத்யவதி பீஷ்மர் கிட்ட சொன்னாங்க.
"மகனே. கல்யாணம் ஆகுறதுக்கு மின்னாடி பராசரரும் நானும் ஒரு போட்ல தனியாயிருக்கப்ப அவர் எனக்கு ஒரு குழந்தையை (!!) கொடுத்தாரு. அதுதான் வியாசன்.
அவனை கூட்டி வந்து அம்பிகாவுக்கும் அம்பாலிகாவுக்கும் குழந்தை கொடுக்க சொல்லலாம். தீர்ந்தது வாரிசுப் பிரச்சனை."

வியாசர் வந்தார். கொஞ்சம் பார்க்க அசிங்கமா இருந்தாருன்னு அம்பிகா கண்ணை மூடிக்க கண்ணில்லாத திருதராஸ்டிரனை கொழந்தையா கொடுத்தாரு.

அவரை பார்த்து பயத்துல வெளுத்துப்போன அம்பாலிகாவுக்கு வெளுத்துப்போன பாண்டுவை குழந்தையா கொடுத்தாரு.

"மகனே. இரண்டு கொழந்தையிலும் டிஃபக்ட் இருக்கு. அம்பிகாவுக்கு இன்னொரு குழந்தை"

அம்பிகா தனக்கு பதிலா வேலைக்காரிய அனுப்ப வேலைக்காரிக்கு விதுரனை குழந்தையா கொடுத்தாரு வியாசர்.

"அம்மா. அவ்வளவுதான். இதுக்கு மேல என்ன தப்பு பண்ண சொல்லாத" வியாசர் கிளம்பி போயிட்டார்.
கிடைச்ச வாரிசுங்கள பீஷ்மர் பராமரிச்சு வளர்க்க ஆரம்பிச்சாரு.

திருதராஷ்டிரனை காந்தாரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

பாண்டு குந்தி, மாதரின்னு இரண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

பாண்டு காட்டுக்கு வேட்டைக்கு போனார். அங்க மேடிங் பண்ணிக்கிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்க ஆக்சுவலா மானா மாறி ஏதோ டிஃப்ரண்டா டிரை பண்ணிக்கிட்டிருந்த முனிவருக்கு கோபம் வந்து..
"அந்த மாதிரி எண்ணத்தோட நீ உன்னோட மனைவியை டச் பண்ணினா அவுட்" அப்படின்னு சாபம் கொடுத்துட்டாரு.

இனி எனக்கு பிள்ளை குட்டியே பிறக்காதா அப்படின்னு சோகமா இருந்த பாண்டு கிட்ட குந்தி ஒரு பிளாஷ் பேக் சொன்னாங்க.

---

குந்தியோட கவனிப்புல மகிழ்ந்த துர்வாசர் குந்திக்கு ஒரு மந்திரம் சொல்றாரு. அந்த மந்திரத்தை சொல்லி எந்த கடவுளை கூப்பிடறமோ அந்த கடவுள் வந்து ஒரு குழந்தைய கொடுத்துட்டு போவாரு.

குந்தி அதை டெஸ்ட் பண்ண சூரியனை கூப்பிடறாங்க. சூரியன் வந்து ஒரு குழந்தைய கொடுத்துடறாரு.
"அச்சச்சோ எனக்கு கல்யாணமே ஆகலையே. குழந்தைய கொடுத்துட்டீங்களே.".
"குழந்தை பெற்றாலும் நீ கன்னியே." அப்படின்னு சூரியன் சொல்லிட்டு போயிடறாரு.
கன்னி குந்தி குழந்தை கர்ணனை ஆத்தோட போட்டுடறாங்க.
----

பிளாஷ்பேக்கல குழந்தை பிறந்து கதைய மறச்சிட்டு வரம்கிடைச்ச கதைய மட்டும் பாண்டு கிட்ட குந்தி சொல்ல சந்தோஷமான பாண்டு மந்திரம் சொல்லி குழந்தை வர வைக்க சொல்றாரு.
குந்தி மந்திரம் சொல்றாங்க.
தர்மதேவனான எமன் வந்து குழந்தை கொடுக்கறாரு. யுதிஷ்டிரன்.
வாயு வந்து குழந்தை கொடுக்கறாரு. பீமன்.
இந்திரன் வந்து குழந்தை கொடுக்கறாரு. அர்ச்சுனன்.
"அக்கா. எனக்கும் குழந்தை" மாதரி கேட்க மாதரிக்கு மந்திரம் சொல்றாங்க குந்தி.
மாதரி அசுவினி தேவர்களை கூப்பிட நகுல சகாதேவர்கள் கிடைக்கிறாங்க.

இதே டைம்ல மண்பானையில பிறக்கறாங்க துரியோதன், துச்சாதனன் உள்ளிட்ட நூறு கெளரவர்கள்.

பாண்டு சாபத்தை மறந்து மாதரியை அந்த மாதிரி எண்ணத்தோட டச் பண்ண செத்து போறாரு. கூடவே மாதரியும்.

----

எல்லா குழந்தைகளும் வளருது. துரோணாச்சாரியார் கிட்ட சண்டை படிக்குது.

பெரிதானதும் யுதிஷ்டிரன ராஜாவாக்குறாங்க. துரியோதனன் சதி பண்ண அஞ்சு பேரும் தப்பிக்கிறாங்க.

அர்ச்சுனன் ஒரு போட்டியில திரெளபதிய ஜெயிக்க அஞ்சு பேருமா அவளை வீட்டுக்கு கொண்டு வர்றாங்க.
"அம்மா. நாங்க என்ன கொண்டு வந்திருக்கோம் பாரு." யுதிஷ்டிரன்.
"எதை கொண்டு வந்தாலும் அஞ்சு பேருமா ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கங்க". குந்தி பார்க்காமலேயே சொல்லிடறாங்க.
"அர்ச்சுனா. அம்மாவே சொல்லிட்டாங்க. அவங்க வார்த்தைய நாம மீற கூடாது. திரெளபதிய அஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" யுதிஷ்டிரன்.
அர்ச்சுனன் சரி அப்படின்றான்.

அஞ்சு பேருமா கல்யாணம் பண்ணி திரெளபதிய பஞ்சாலியாக்கி ராஜ்யத்தையும் ஆளுறாங்க.
நாரதர் இந்த கல்யாணம் மூலமா உங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. ஆளுக்கு ஒரு வருடம் அப்படின்னு சைக்ளிக் ரொட்டேசன்ல வாழ்க்கை நடத்துங்கன்னு அட்வைஸ் பண்றாரு.
சரின்னு இப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு, இந்த அக்ரிமெண்ட மீறுனா நாடுகடத்தல் அப்படின்னு பேசி வச்சிக்கிறாங்க.
யுதிஷ்டிரனுடைய வருடத்துல தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டதுக்காக அர்ச்சுனன் அக்ரிமண்ட் படி தன்னுடைய தப்புக்கு கொஞ்சநாள் நாட்டை விட்டு போறேன்னு சொல்லி கிளம்புறான்.
அர்ச்சுனன் ஊரை சுத்தி வந்து அல்லி, நாக கன்னிகை, சுபத்ரா... எக்சட்ரா எக்சட்ரான்னு கல்யாணமா பண்ணிக்கிட்டே போறான்.
பீமனும் தம் பங்குக்கு இடும்பின்ற ராட்சசியை கல்யாணம் பண்றான்.

நாட்டை பிரிச்சு கொடுத்தாலும் சந்தோஷப்படாத துரியோதனன் தர்மனை சூதுக்கு கூப்பிட...
ஹிஸ்டரியில இல்லாத அளவுக்கு தருமனும் மனைவியை வெச்சு சூதாடுறான்.
சூதுல ஜெயிச்ச துரியோதன் பாஞ்சாலியை இழுத்து வர சொல்ல...
அஞ்சு பேருக்கு மனைவியான பாஞ்சாலி இனி நூறு பேருக்கு பணிப்பெண்ணா இருக்கட்டும்னு கர்ணன் சொல்ல....
துச்சாதணன் சபை நடுவுல வெச்சு ஸ்டிரிப் டீஸ் அட்டெம்ட் பண்றான்.
கரெக்டா டைமுக்கு வந்து கிருஷ்ணர் காப்பாத்துறாரு.

அப்புறமா பாண்டவர்ங்க கேமோட ரூல் படி 13 வருடம் கழிச்சி வந்து நாட்டை கேக்கிறாங்க.
துரியோதனன் தர மாட்டேன்னு சொன்னதும் சண்டை போட்டு கோடிக்கணக்கான பேரை கொன்னு கடைசியா ஆட்சிய புடிக்கிறாங்க.

----------------------------------------

"கதையோட அவட்லைன் எப்படி" வியாசர் கேட்கிறார்.
"சூப்பர். பின்னிட்டீங்க."
இதுதான் வியாசரின் சூப்பர் ஹிட்டான மகாபாரத கதை.

---------------------

நினைவின் நதிக்கரை நீங்கி....



நீண்டு கொண்டிருக்கிறது என் உறக்கம்
விழித்தெழுந்து ஆவதென்ன...
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் கனவு...
கனவுகளை கலைக்க விரும்பாமல் நான்.
கண்விழித்த ஒருகணத்தில் பாய்ந்த ஒளிவெள்ளம்
கனவுகளை கவர்ந்து செல்ல முயல..
கண்களை இறுக்கி கனவுகளை தேக்கிக்கொண்டேன்.
நினைவின் நதிக்கரை நீங்கி
கனவின் காட்சிகளின் நீட்சியில் நிம்மதி பெறுகிறேன்.
கவிழ்ந்து கனவோடையில்
நீந்தி திளைக்கின்றேன் நான்.
நீடுதுயில் நீக்கவந்தவன் நீயெனில்
நீங்கிச் செல்.
என்னை என்கனவுகளில் களிக்கவிடு.
இதோ மீண்டும் கனவினில் மூழ்கிவிட்டேன்.

Monday, August 20, 2007

ஒரு தொண்டன் தலீவனான கதை....

"தலீவா..." மோகன்ராஜ் என்னை எப்பவுமே இப்படித்தான் கூப்பிடுவான்.

"தலீவா.. நம்ப காலேஜ் ஆனுவல் டேக்கு ஒரு கவியரங்கம் நடக்குது. எனக்கு ஒரு கவிதை வேணுமே.".

"கவியரங்கத்துக்கு நீயே சொந்தமா கவிதை எழுதிட்டு போயேன் மோகன்ராஜ்".

"என்ன தலீவா. உன்னோட கவிதை ஒன்னை படிக்கலாம்னு நினைச்சேன். நீ யாரு. வாக்கிங் அண்டு டாக்கிங் டமில் டிக்ஸனரி்".

"ஓட்டாதே. நீ தலையில வைக்கிற ஐஸ்னால எனக்கு ஜன்னியே வந்துடும் போல இருக்கு." கவிதை எழுதி கொடுத்தேன்.

நல்ல குரல் அவனுக்கு. ஏற்ற இறக்கத்தோடு வாசித்து கைத்தட்டல்களை வாரிக் கொண்டான்.

-------------------

"தலைவா. ஒரு பட்டி மன்றம் பேச போறேன். மேட்டரு வேணுமே."

"என்ன தலைப்பு".

"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது சமூக சிந்தனையே."

"நல்ல தலைப்பு".

"அவரோட அச்சமில்லை அச்சமில்லை பாட்டை சொல்லலாமா. நல்ல சமூக சிந்தனை பாட்டு இல்லை".

"அச்சமில்லை அச்சமில்லை பாரதியார் பாட்டு. மோகன்ராஜ்".

--------------------------------------

"தலீவா நம்ப தலைவரோட பிறந்த நாளுக்கு நம்ப கட்சியோட நகர கிளை சார்பா ஒரு மலர் வெளியிடறோம். அதுல போடறதுக்கு ஒரு கவிதை எழுதி தர்றியா."

சில நாட்கள் கழித்து அந்த மலரில் வெளியான அவனது (!!) கவிதையை கொண்டு வந்து காட்டினான்.

------------------------------

"தலீவா. பஸ் ஸ்டாண்டுல நம்ப பேனர் பார்த்தியா."

"இல்லியே மோகன்ராஜ்".

இழுத்து கொண்டு போய் காட்டினான்.

நகருக்கு வரும் கட்சித்தலைவரை இருகரம் கூப்பி மாணவர் அணி செயலாளர் (!!!) மோகன்ராஜ் வரவேற்று கொண்டிருந்தார்.

இவன் எப்போது மாணவர் அணி செயலர் ஆனான் என்று நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

--------------------


துறைத்தலைவர் என்னை அழைத்திருந்தார்.

"என்னடா நினைச்சிருக்கான் உன் ஃபிரண்டு மோகன்ராஜ். நாலு ஆட்டோவில போய் யாரையோ அடிச்சிருக்கான். உனக்கு தெரியுமா ?"
"தெரியாது. சார்".
"இவன மாதிரி ஸ்டூடண்டெல்லாம் நம்ம காலேஜ்ல படிக்கிறாங்கன்னு நினைச்சா.... சே... இதுக்கு மேல இப்படி பண்ணினான்னா சஸ்பெண்டுதான்னு சொல்லி வை.".

"இதை அவனையே கூப்பிட்டு சொல்ல வேண்டியதுதான. நான்தான் கிடைச்சனா." மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

----------

"தலீவா. நம்ம தலைவருக்கு எதிரா போஸ்டர் ஒட்டியிருந்தான் தலைவா அவன். வுடுவனா நானு. பின்னிட்டோம் இல்லை". அடுத்த நாள் மோகன்ராஜ் என்னிடம் அளந்து கொண்டிருந்தான்.
இவனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

--------

கல்லூரி நாட்கள் முடிந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.
அவனைப்பற்றிய தகவல்களோ தொடர்போ இல்லை.
பணிநிமித்தம் பலஇடங்கள் சுற்றிய வண்ணம் நான்.

ஒரு விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது அவனை பார்க்க நேர்ந்தது.
கரைவேட்டிகள் சூழ வீட்டிற்கே வந்திருந்தான்.

"தலைவா. எம்.எல்.ஏ. எலக்சன்ல நிக்கிறேன். மறக்காம ஓட்டு போட்டுடு." மோகன்ராஜ்.

இளங்கவிக்கோ (!!) மோகன்ராஜ் தேர்தலில் போட்டி. பேப்பரில் படித்தது. இவன்தானா அது !!!

"தலிவா. இவர்தான் கவிஞர் காசிமுத்து. நமக்கான கவிதையெல்லாம் இப்ப இவர்தான் எழுதறாரு."

பக்கத்திலிருந்த அந்த கோஸ்ட் ரைட்டரை பார்த்து சிரித்தேன்.

----------

Friday, August 17, 2007

பின்நவீனத்துவம் - அப்படின்னா என்னன்னா....

பின்நவீனத்துவம் பிரியலை.. பிரியலைன்னு நெறைய பேரு சவுண்டு உடறாங்க.
சில பேருக்கு டவுசர் கிழியுது. சில பேரு பாயை பிரண்டறாங்க.

பின் நவீனத்துவத்துவ கவிதைய பார்த்து பின்னங்கால் பிடறிபட ஓட வேண்டிய தேவையில்லை.
அத எப்படி ஸ்ட்ரெயிட்டா ஃபேஸ் பண்றதுன்றதுக்கு எதோ நம்மால முடிஞ்ச டிப்ஸ்.

1. பேசிக் பாயிண்ட்:பின்நவீனத்துவம் புரியணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா. நீங்க பேசிக் பாயிண்ட்லயே தப்பு பண்ணறீங்க அப்படின்னு அர்த்தம்.
பிரியாம இருக்கறதுதான் பின்நவீனம். பத்து தடவை என்ன பத்தாயிரம் தடவை படிச்சாலும் எந்த கவிதை புரியலையோ அது தான் பின் நவீன கவிதை.
இன்னும் சொல்லப் போனா ஒரு நல்ல ஸ்டாண்டர்டான பின் நவீன கவிதைன்னா அதை எழுதணவங்களுக்கே அது புரிய கூடாது.

ஏன்னா ஒரு உண்மையான கவிதை அப்படின்றது கவிஞனால எழுதப்படுவதில்லை. எந்த கவிதை கவிஞனை எழுதி போகுதோ அதுதான் கவிதை.

அதனால புரிஞ்சிக்கணும்ன்ற ஐடியாவை விடுங்க.

2. கட்டுடைத்தல்:

பின்நவீன கவிதைகள் கட்டுடைக்க வந்த கருவிகள்.
கட்டு்ன்னா கீரைக்கட்டு, விறகுகட்டு அப்படின்னு நினைச்சிடாதிங்க.
கட்டுன்றது இந்த சமுதாயத்தில இருக்கிற அடிமை விலங்குகள்.
சமூகத்தில் வியாதியாய் வியாபித்து விரவியிருக்கும் விலங்குகளை விலக்கியெறிந்து, விழிப்புணர்வை விடுதலையை விழையத்தருதலை கட்டுடைத்தல் என்கிறோம்.
இத்தகு கவிதைகளின் ஆற்றல் அளப்பரியது. ஹார்ஸ் பவரில் அளக்கப்படுவது.


3. கவிதையின் பின் நவீனத்துவ கூறுகள்.

ஒரு கவிதையை பின்நவீனத்துவ கவிதை என அடையாளம் காட்டக் கூடியவற்றைத்தான் பின் நவீனத்துக் கூறுகள் என்கிறோம்.

(அ) ஒலிக் கூறுகள்:ஒலி மூலமாக கவிதையின் பின்நவீனத்துவத்தை உணர்த்துதல்.
(எடுத்துக்காட்டு)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
ஊஊஊஊஊஊஊஊஊஊ...
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...

(ஆ) வினைக்குறிப்புகள்:

அளவுக்கு அதிகமாக வினைச்சொற்களை பயன்படுத்துதல்.

(எ.கா) அதிர்ந்து உலாவி உழாவி உதிர்ந்து உரமான உன் நினைவுகள்.
திணறி திரிந்து திசைமாறி தடம்மாறி தவித்து தத்தளிக்கும் நான்.

(இ) அருஞ்சொல் கூறுகள்.
முன்னே எப்போதும் கேட்டோ படித்தோ இராத வார்த்ததைகளை பயன்படுத்துதல்.
இப்படிப்பட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டால் இருக்கும் வார்ததைகளை புரியாதது போல் எழுதுதல்.
(எ.கா) நிட்சிந்தையிலமென, உள்ளுறைபுயம்,

(ஈ) பிறமொழிக்கூறுகள்:பிறமொழிச்சொல்லை எடுத்தாளுதல்...
(எ.கா) அமானுஷ்யம், விஸ்தாரம், கம்பீரம், அசுவம், சாசுவதம்


அப்பாடா.... இப்படி இருக்கற மேல இருக்கற எல்லா கூறுகளையும்... கூறுகட்டி அடுக்கி நிறுத்தி வர்றதுதான் பின் நவீனத்துவக் கவிதை.

பின்நவீன கவிதையை எதிர்க்கொள்ள இரண்டே வழிதான் இருக்கு.

ஒண்ணு: கவிதைய படிக்காமலேயே நல்ல கவிதை... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுதுன்னு சொல்லி தப்பிச்சிடறது.

இரண்டு: கவி்தைய படிக்கணும்னு முடிவு எடுத்துட்டா டிரவுசர் கிழியாம இருக்கறதுக்காக வேட்டி கட்டிக்கிட்டு படிக்கிறது.

அம்புட்டுதான்.

Thursday, August 16, 2007

டாக்டர்..... என்னை காப்பாத்துங்க......

ஆறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அமைதியான மதிய நேரம். அந்த ஆற்றை கடப்பதற்கான கயிற்று பாலம் சற்று பழையதாக இருந்தது.
நடக்கத் தொடங்கினேன் நான் இயற்கையை இரசித்த படி.
பாலத்தின் மையத்தை அடைந்து விட்டேன். திடீரென ஆற்றில் வெள்ளம்.
கயிற்று பாலத்தின் எதிர் நுனி கட்டியிருந்த கம்பம் உடைந்து விழுவதாக தோன்றியது.
ஓட துவங்கினேன். இல்லை.
பாலம் அறுந்து விழ துவங்கியது.
தலை குப்புற கீழே விழுந்து கொண்டிருந்தேன். தண்ணீரை நோக்கி....
"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ'....
கத்தியது நானில்லை.
....
சுரேஷ் என் அறை நண்பன்.
"அடப்பாவி... என் கை போச்சு"..
"என்னடா ஆச்சு".
"கட்டில்ல இருந்து எம்மேல விழுந்துட்டு கேள்வி வேற கேட்கிறியா ??".
"சாரிடா. பயங்கரமான கனவு".
இப்படித்தான் அது ஆரம்பித்தது.

---------------------------

காட்டில் நடந்து கொண்டிருந்தேன். அமேசான் காடு போலிருந்தது. உயரமான மரங்கள்.
மரத்தின் உச்சியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்து கொண்டிருந்தது.
நேரே வந்து என் மீது வந்து விழுந்தது.
அது....
அனகோன்டா !!!!!
"போ..." கையை வீசி தள்ளினேன்.
"டிங்... தட.. தட.. தட.. டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...."
---
கண் திறந்து பார்த்தால்.... காபி டபரா ஒரு புறமும்... காபி டம்ளர் ஒரு புறமுமாக விழுந்து கிடந்தது.
தரை முழுக்க காபி....
அதிர்ச்சி கலையாமல் அம்மா. அவள் கையிலிருந்த என் பெட் காபியை தட்டி விட்டுருக்கிறேன்....
"என்னடா ஆச்சு..."...
"ஒண்ணுமில்லம்மா ஒரு கனவு"....
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இடத்திலும் அது தொடர்ந்தது.

-----------------------

நான் குதிரையில்......
எதிரே மிகப்பெரிய கோட்டை..
குதிரையை விட்டு இறங்கி நடக்கிறேன்.
என்ன இது மலர்ப்பாதை...
யாரிந்த கன்னிகள் இருபுறமும் மலர்த்தூவிய படி....
(வர்ணனைகள் சென்சார் செய்யபட்டுவிட்டது).... சொர்க்கம்.
"அரசே உங்கள் பூப்பாதங்களை இந்த தங்க தாம்பாளத்தில் வையுங்கள்."
எனது வலது காலை மெல்ல தூக்கி அந்த தாம்பாளத்தில் வைக்....
யாரது. என்னை பின்னிருந்து இழுப்பது.
...
"யோவ். அறிவிருக்கா... ஓடுற டிரயின்ல இருந்து வெளிய காலை எடுத்து வைக்க இருந்தியே..."
என்ன ஆச்சு... நான் எங்க இருக்கேன்.
இது டிரெயின்... என்னை இழுத்த அது டி.டி.ஆர்... சென்னைக்கு டிரெயினில் ஊரிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் இருந்தால் அடுத்த அடி சொர்க்கத்தில்தான் எடுத்து வைத்திருப்பேன்

----------------

"இதுதான் டாக்டர் நடந்தது...... என்னை காப்பாத்துங்க".
"இருங்க பயப்பட ஒண்ணுமில்லை...இது ஒரு இல்லுமினேஷன். எத்தனை நாளா உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருது."
"ஒரு மூணு மாசமா டாக்டர். அதுக்கு முந்தி நான் இப்படி இருந்ததே இல்லை.".
"ஐ சீ.... நீங்க பேசிக்கலா எதனாலயோ டிஸ்டர்ப்டா இருக்கீங்க...."
"அப்படி ஒண்ணுமில்லையே டாக்டர். நாலு வருஷமா சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். லைஃப்ல டிஸ்டர்ப்டா ஆகறமாதிரி எதுவுமில்லையே."
"இந்த மூணு மாசத்துல எதோ ஒண்ணு உங்களை பாதிச்சிருக்கு. வீடு எதாவது மாத்தினீங்களா."
"இல்லை டாக்டர்..."
"இந்த மூணு மாசத்துல நீங்க வழக்கமா செய்யற சில விஷயங்கள்ல இருந்து மாறி வித்தியாசமா எதாவது செய்யறீங்களா."
"அப்படி எதுவுமில்லை டாக்டர்... அதே ஆபீஸ். அதே வேலை. அதே ஃபிரண்ட்ஸ்...."
"எதாவது வித்தியாசமான பழக்கங்கள்...."
"இல்லை...."
"ஏதாவது ஒரு விஷயத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிறீங்க.. இல்லை யோசிக்கிறீங்க அப்படி எதாவது..."
"எஸ். டாக்டர்..... என் ஃபிரண்டு ஒருத்தன் எனக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தினான்"
"வலைப்பதிவு ?".
"எஸ். டாக்டர். பிளாக்கிங். ஒரு நாளைக்கு மூணுல இருந்து நாலு மணி நேரம் அதுல ஸ்பெண்ட் பண்றேன்."
"ஐ காட் இட்".
"டாக்டர்.."
"நீங்க இதுல ஓவரா இன்வால்வ் ஆனதுதான் உங்க பிரச்சனைகளுக்கு காரணம். கொஞ்ச நாளைக்கு பிளாக்கிங்க விடுங்க".
"சரி. டாக்டர்".
இப்போதெல்லாம் அது தொடர்வதில்லை.
---------------------------------


பி.கு: (இது கற்பனைக் கதை. இதற்கும் நான் சில மாதங்களாக காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அரைபிளேடு)

Tuesday, August 14, 2007

கொலையின் விலை:

1.
"பஸ்ல வேற யாராவது டிக்கட் எடுக்கணுமா."
காயத்ரியை கண்டக்டரின் குரல் எழுப்பியது.
நல்ல கனவு. கனவில் சிவா. அவர்களுடைய நாளைய நல்வாழ்வு கனவாக விரிகையில் கண்டக்டரின் குரல் அதை கலைத்திருந்தது.
சிவா சொன்னது போல் தாம்பரத்தில் காத்திருப்பான். சென்னையில் ஏதேனும் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ளலாம்.


2.

அவன் ஸ்கூட்டரை ஸ்டாண்டினான்.
வயது இருபத்தைந்து. இந்திப்பட கதாநாயகன் போல் இருந்தான்.
ஆளரவமற்ற அந்த பங்களாவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
"இங்கதான இருந்தா. எங்க போனா ?".


3.
"வேகமா ஓட்டுடா. ". சான்ட்ரோ பறந்து கொண்டு இருந்தது.
"சும்மா இருடா. எனக்கே கை கால் எல்லாம் நடுங்குது. வண்டியில ஒரு பிணம் வேற இருக்குது." .
"பயப்படாதடா. அந்த பிணத்தை இதே ஈ.சி. ஆர். ரோட்டுல இருக்கிற பாழும் கிணத்துல தள்ளிடலாம். "
"நம்ப மேல ஒரு பிரச்சனையும் வராது இல்லை."
"ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடுவோம்"
"லாரி. பார்த்துடா."


4.
"வண்டியில மூணு பேர் வந்திருக்காங்க சார். இரண்டு பையனுங்க ஒரு பொண்ணு. பையனுங்க குடிச்சிருக்கானுங்க. டிரங்க் அண்டு டிரைவ். "


5.
"சார். என்னோட காயத்ரியை எப்படியாவது கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்."
"சிவா. முழு தகவலும் சொல்லுங்க".
"காயத்ரிக்கும் எனக்கும் நேத்துதான் வட பழனி கோயில்ல கல்யாணம் ஆச்சு சார். லவ் மேரேஜ். அவ எனக்காக அவங்க வீட்டை விட்டு வந்துட்டா. திருட்டுத்தனமாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பைக்ல மகாபலிபுரம் போலாம்னு ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல போயிட்டிருந்தோம். சோழிங்க நல்லூர் தாண்டி வண்டி கிளட்ச் ஒயர் அறுந்துட்டது. அங்கயே ஒரு பங்களா காம்பவுண்டு பக்கம் மர நிழல்ல அவளை நிக்க சொல்லிட்டுநான் வண்டியை தள்ளிக்கிட்டு மெக்கானிக் ஷாப் வரைக்கும் போய் சரி பண்ணிக்கிட்டு வந்தா காயத்ரியை காணலை சார்."


6.
"ஆமா சார். நீங்க சொல்லுற மாதிரி அந்த சிவப்பு சுடிதார் போட்ட பொண்ணு இங்க தான் ரோட்டு பக்கத்துலயே நின்னுட்டு இருந்தது சார்.
ஒரு சிவப்பு சாண்ட்ரோ கார் தாறுமாறா வந்து அந்த பொண்ண இடிச்சிருச்சி.
நான் தூரத்துல இருந்து ஓடி வர்றதுக்குள்ள அந்த பொண்ண கார்ல இருந்த இரண்டு பேருமா சேர்ந்து பின் சீட்ல போட்டுக்னு கிளம்பிட்டாங்க. சார்".
இளநீர் கடைக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.


7. "சாரி. சிவா. உங்க காயத்ரியை அவங்க கார்ல இடிச்சதுல காயத்ரி அந்த இடத்துலேயே இறந்திருக்காங்க.
பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடலாம்ன்ற மோட்டிவோட அவங்க மகாபலிபுரம் பக்கமா பறந்திருக்காங்க.
ஆனா லாரில மோதி அந்த இரண்டு பசங்களும் கூட.......... சாரி...".
சிவா தாங்க முடியாதவனாய் அழுது கொண்டிருந்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 13, 2007

கஞ்சப் பய கதை..

ஒரு ஊர்ல ஒரு கஞ்சப் பய இருந்தானாம்.

படு கஞ்சன். ஒரு வேளதான் சாப்பிடுவான்.

கண்ணாலம் கட்டிக்கிட்டா செலவுன்னு கல்யாணமே கட்டிக்கல அவன்.

தன்ன விட பெரிய ஒரு கஞ்சன் பக்கத்து ஊர்ல இருக்கான்னு கேள்விப்பட்டான் அவன். அட நம்மள விட கஞ்சனா.... பாத்து கொஞ்சம் டிப்ஸ் வாங்கலாம்னு நினைச்சான்.

கிளம்பி பக்கத்து ஊர்ல அவன் வீட்டுக்கு போய் சேருறப்ப இராத்திரி எட்டு ஆயி இருட்டிருச்சி. அந்த கஞ்சனை பார்த்து ஐயா. நீங்க ரொம்ப கஞ்சம்னு கேள்விப்பட்டேன். உங்க கிட்ட பேசி கொஞ்சம் கஞ்சத்தனத்தை கத்துக்கலாம்னு வந்தேன்னு இவன் சொல்ல..

அதுக்கு அவன்.... பேச்சுதானே காசா... பணமா. உள்ள வா. ஆனா காபி தண்ணி தரமாட்டேன்னு சொல்ல... இவனும் சரின்னு வீட்டுக்குள்ளாற போனாம்.

பேச ஆரம்பிச்சாங்க. வீட்டுக்காரன் எழுந்து விளக்கை அணைச்சான். நாம பேசதான செய்யறோம். விளக்கு எதுக்கு. தேவையில்லாத கரண்டு செலவு பாருங்க அப்படின்னான்.

இவனும் சரிதான்னாம். பேசுனாங்க. பேசுனாங்க. ஒரு மணி நேரம் பேசுனாங்க. இவன் கிளம்புறேன்னாம்.

சரி நான் விளக்க போடுறேன்னு வீட்டுக்காரன் எழுந்தான்.

இவன் இருங்க ஒரு நிமிடம். வேட்டிய கட்டிக்கறேன்னாம்.

வீட்டுக்காரன் என்னது வேட்டிய கட்டலையான்னு கேட்க.... இவன் விளக்குதான் இல்லையே. இருட்டுல வேட்டி எதுக்கு. அப்புறம் அழுக்கு ஆகும். துவைக்கணும் அப்படின்னு செலவு பாருங்க அப்படின்னான்.

பக்கத்து ஊர்க்காரன் ஐயா. நான் கஞ்சன்னா நீங்க உலக மகா கஞ்சன்னு சொல்லி தொபுக்கடீர்னு இவன் கால்ல விழுந்துட்டானாம். நம்ம பய நமுட்டு சிரிப்போட கிளம்பி வந்தானாம்.

-----------------------------------
(எப்பவோ கேட்ட கதை...)
உங்களுக்கு இவனை விட பெரிய கஞ்சன் யாரையாச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்.

--------------------------

Sunday, August 12, 2007

டாலரின் வீழ்ச்சி ஒரு ஆராய்ச்சி...

டாலர் மதிப்பு டமால்னு விழுந்து போச்சேன்னு நமக்கு கவலையா கீதுபா.

ஒன்ஸ் அப்பான் ய டைம் ஒன் டாலர் ஈக்வல் டு 45 ருப்பீஸ்.

இப்ப நாப்பது ரூபாவா ஆகிப்போச்சி...

இதுக்கு காரணம் இன்னாவா இருக்கும்.

ஒரு பொருள் சுளுவா கிடைக்காட்டி அதோட மதிப்பு கூடிடும். இப்போ டாலர் நிறைய இருக்கு. ரூபா கம்மியா இருக்கு... டாலர் வெச்சிருக்கவங்க அத கொடுத்து ரூபா வேணும்னு சொல்றப்ப ரூபாவோட தேவை அதிகமாகி மதிப்பு கூடுது.

இது மாதிரி எதனால ஆச்சின்னா...

காரணம் "சிவாஜி.....".

சிவாஜி என்ன பண்றாரு.... இந்தியாவுல கறுப்பா இருக்கற ரூபாயை வெளிநாட்டுக்கு கடத்தி அதை டாலராக்குறாரு. அந்த டாலரை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை வெச்சு திருப்பி ரூபாயா வாங்குறாரு. இப்படி ரூபாயை கொடுத்து ரூபாயை வாங்குனதால ரூபாய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுடுச்சி. இந்தியாவுல இருந்த கள்ள ரூபாய் எல்லாம் காணாம போய் வெறும் நல்ல ரூபாய் மட்டும் தான் பாக்கி இருக்கு. அதனால ரூபாய்க்கு கிராக்கி வந்து டாலருக்கு நாப்பத்தஞ்சின்னு கிடைச்ச ரூபாய் இப்ப நாப்பதுன்னு கிடைக்குது.

சிவாஜி நாட்டுக்கு நல்லது பண்ண கிளம்பி இப்படி ரூபாயை கிடைக்காம பண்ணிட்டாருப்பா.
அதனாலதான் டாலருக்கு நாப்பதுதான் கிடைக்குது.
நம்ப அண்டார்ஸ்டான்டிங் கரீக்டுதானே ?

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

பெயர்: அரைபிளேடு

வயது: நிச்சயமாக காணாமல் போகும் வயதல்ல

அடையாளம்: அருகிலுள்ள புகைப்படத்தை பார்க்கவும்.

தொழில்: ஜல்லியடிப்பது

காணாமல் போன தேதி: பிப்ரவரி 19 2007 இல் இருந்து காணவில்லை.

காணமல் போன அன்று முண்டா பனியன் கோடு போட்ட டிராயரோடு அரைக்கை சட்டை முழுக்கால் சட்டை என முழு காஸ்ட்யூமில் இருந்தார்

தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: http://araiblade.blogspot.com