Monday, January 22, 2007

ஆ. ஏ. அ. ஆனான் 8. - சமஉரிமைகளின் சகாப்தம் - நிறைவு..

"திருமணம் என்பது இரண்டு முதலாளிகள் இரண்டு அடிமைகள் ஆக மொத்தம் இரண்டு பேர்."

ஆக குடும்பம் என்ற அமைப்பு நன்றாக செயல்பட இரண்டு அடிமைகள் தேவைப்படுகிறார்கள்.
ஆணும் இங்கு அடிமையே.

"மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கோ கண்ணுக்கு தெரியாத சங்கலிகளால் கட்டப்படுகிறான்".

அந்த சங்கிலிகள் ஆண் என்றால் பெண். பெண் என்றால் ஆண்.

பெண் மட்டும்தான் அடிமையாக இருக்கிறாள் என்றும் ஆண்கள் அனைவரும் சுதந்திர புருஷர்கள் என்றும் நிறுத்தப்பட்டுள்ள தவறான பிம்பத்தை உடைக்கவே இந்த கட்டுரைத் தொடர்.
நிறையவே எழுதும் எண்ணம் இருந்துது. ஆனால் பெண்களைப்போல் ஆண் அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்புவதில்லை.
அவன் என்றும் பெண்ணின் அன்புச் சிறையில் அடிமையாக இருப்பதையே விரும்புகிறான்.

"தான் களைத்து வீடு திரும்பினால் தன்னை அன்போடு கவனித்துக்கொள்ள ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை செலுத்துகிறது.".
அவனுடைய வாழ்க்கை முறையே அந்த ஒருத்திக்காக சுழலத்துவங்குகிறது.

இன்று இருவரும் பணி செய்யும் சூழலில் இருவரும் களைத்து திரும்ப ஒருவரை ஒருவர் கவனிக்க இயலாத சூழலில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆணோ பெண்ணோ அன்பிற்காக விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கை. அது அடிமைத்தளையாகாது.

தவளையும் எலியும் கயிறால் கட்டப்பட்ட கதையை படித்திருப்பீர்கள். தவளை தண்ணீருக்கு இழுக்க எலி தரைக்கு இழுத்ததாம். தவளைகள் தரையிலும் இருக்க பழக்கபட்டவை. தண்ணீருக்குள் இருக்க முடியாத எலிகள் மிக மிக பரிதாபமானவை. சமயத்தில் தவளைகள் கை ஓங்குகிறது. எலிகள் தண்ணீரில் மூச்சு திணருகின்றன. தண்ணீருக்கு போகாதே என்று எலி தவளையிடம் சொல்லவும் கூடாது. அதே போல் தண்ணீரில் மூழ்கு என்று எலியை தவளை நிர்ப்பந்திக்கவும் கூடாது. எத்துனைதான் சமவாய்ப்பு கொடுத்தாலும் எலிகள் தவளைகளாக முடியாது.. தவளைகள் எலிகளாக முடியாது. விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை இரண்டும் புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை.


"வார் ஆஃப் த செக்ஸஸ்" காலத்துக்கும் உள்ள பிரச்சனையே. ஒருவர் வெல்வது மற்றவர் தோற்பது என்பது தனிப்பட்ட நபர்களின் திறமையை பொறுத்ததாகவே உள்ளது. வீடு மதுரையா சிதம்பரமா என்ற சொற்றொடர் இதையே குறிக்கிறது.

வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தான் வேதாளத்தை அன்பால் வசப்படுத்தவேண்டும். அது ஆண் வேதாளமாக இருந்தாலும் சரி பெண் வேதாளமாக இருந்தாலும் சரி.

பெண் முன்னேற்றம் என்பது ஆண்களைப்போல் பெண்ணும் சுதந்திரமாக தனியாக இரண்டாம் ஆட்டம் பார்ப்பதோ.. அல்லது பெண்களுக்கும் பிரத்யேகமான ஃபில்டர் சிகரெட்டுகளோ.. அல்லது பார்ட்டிகளும் பார்களுமோ என்ற எண்ணம் நிச்சயமாக என்னால் ஒத்துக்கொள்ள முடியாதது. ஏனெனில் எனது குறுகிய மனப்பான்மை என்பதை நான் இங்கு ஒத்துக் கொள்கிறேன். இந்த எண்ணம் ஆணாதிக்க (!!!) எண்ணமோ என்னவோ நானறியேன்.

என்னைப் பொறுத்த வரையில் சமஉரிமை என்பது.. "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக" வாழ்தல். எனவே உரிமைகள் அதிகம் உள்ள ஆண்களே பெண்களுக்கு உரிமை தாருங்கள். அதே போல் உரிமை அதிகம் உள்ள பெண்களே ஆண்களுக்கு உரிமை தாருங்கள்.
அவ்வளவே !!!!

(முற்றும்)

-----------------------------------------

(இனி நமது ஆணுரிமைக்குரல் இங்கு கேட்காது என்பதை இக்கணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
ஊரிலிருந்து வாழ்க்கைத் துணை திரும்பிவருவதால் நமது எழுத்து சுதந்திரம் தணிக்கைக்கு உட்படும்.
குடும்ப பாரம் காரணமாக பதிவுகள் போடும் வேகம் மட்டுப்படும்.
எனவே இனி இப்பக்கங்கள் சமஉரிமையை பேசாது இனி முடிந்த வரை ஜல்லியாகவே இருக்கும்.
ஜல்லிகள் துவங்கி விட்டன என்பதற்கு எனது முந்தைய பதிவே சான்று :) )

Saturday, January 20, 2007

இது ஒரு ஜல்லி பதிவு..


ஜல்லி என்றால் என்ன ?

ஜல்லி என்பது கட்டடம் கட்ட தேவைப்படும் ஒரு மூலப்பொருள்.
இது கருங்கல் பாறைகளை உடைத்து உருவாக்கப்படுகிறது. (பார்க்க படம்)




இதுதான் ஜல்லி



ஜல்லி எத்தனை வகைப்படும் ?

1. அரை ஜல்லி. (கான்கிரீட் தளங்களில் பயன்படும்)
2. முக்கா ஜல்லி (ரோடுகள் போட பயன்படும்)
3. முழு ஜல்லி. (இதுபோன்ற பதிவுகள் போட பயன்படும்.)


அரைஜல்லி: ஒரு லோடு ஜல்லிக்கு ஒரு கையளவு ஜல்லி பதம்.


முக்கால்ஜல்லி:


ஜல்லி அடிப்பது எப்படி ?

ஜல்லி அடிப்பது ஜல்லியின் அளவை பொறுத்தது.
மிக குறைந்த அளவு என்றால் ஒரு தாலா போதும்.
சற்று அதிக அளவிற்கு என்றால் ஒரு மாட்டு வண்டி.
மிக அதிக அளவில் தேவையானால் ஒரு லாரி.



கப்பலில் ஜல்லியடித்தல்.

ஜல்லியின் பயன்: ரோடு

ஜல்லியின் பயன்: ரயில்ரோடு.

ஜல்லியின் பயன்கள் என்ன என்ன ?

1. கான்கிரீட் தளங்கள் அமைக்கலாம்.
2. ரோடுகள் போடலாம்.
3. ரயில்ரோடுகளில் பயன் படும்.
4. மிக முக்கியமான பயன் நான் சொல்லித்தான் தமிழ் பதிவர்களுக்கு தெரிய வேண்டுமா என்ன ? :)

Thursday, January 18, 2007

மெகாஆஆஆஆஆ செல்வ அன்ன லட்சுமி... நிறைவு பகுதி.

"அன்ன லட்சுமி"... குரல் கேட்டு திரும்பினாள் மெகாலட்சுமி.
"அம்மா அன்ன லட்சுமி. என்னை தெரியலியாம்மா ?"

"அம்மா. அன்ன லட்சுமி. எக்சிபிஷன்ல அப்பா அம்மாவை தொலைச்சுட்டு அழுதுகிட்டு இருந்த பதினைஞ்சி வயசு சின்னப் பொண்ணான உன்னை எடுத்து கல்யாணம் பண்ணி கொடுத்த இந்த அண்ணனை எப்படியம்மா மறந்த ?"

"அண்ணே..." ஆமாம். மெகாலட்சுமியோட அண்ணன் கிடைத்துவிட்டார்.

பக்கத்தில் படு குழப்பத்தோடு கே.கே.

சின்ன ஃப்ளாஷ் பேக்....

மெகா லட்சுமி செல்வ லட்சுமியாய் பர்மாவில் பிறந்து கனகாம்பரத்தோடு படித்து பதினைந்து வயதில் எக்சிபிஷனில் காணாமல் போய்...

பூர்ண சுந்தரம்தான் செல்வ லட்சுமியை தங்கையாய் தத்தெடுத்து வளர்த்தார்.

மூணு அண்ணன்கள் நாலு அண்ணிகள் நடுவில் செல்வ லட்சுமி அன்ன லட்சுமி என்று பெயரிடப்பட்டு செல்ல லட்சுமியாய் வளர்ந்தாள்.

அமெரிக்க டாக்டருக்கு கல்யாணம் செய்து வைத்தார் பூர்ண சுந்தரம்.

"அவன் உன்னை அமெரிக்காவுல ஏமாத்தி தனியா விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டம்மா... அப்புறம் நீ என்ன ஆன ஏது ஆனன்னே தெரியலம்மா".

(பிளாஷ்பேக்)..

அமெரிக்காவில் அன்ன லட்சுமி மேல் படிப்பு படித்து பெரிய ஆளாகிறார்.

இதற்கு முன் நெகடிவ்வாக வந்த டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... இப்போது கலரில்.

ஆம். அன்ன லட்சுமி வளைகுடா யுத்தத்தின் போது சீனியர் புஷ்ஷின் அரசியல் ஆலோகர்... !!!!!!

சதாமின் சதியால் பிறது அரபிக்கடலில் எறியப்பட்டு இராமேஸ்வரத்தில் கரை ஒதுங்குகிறார்.

அதற்கு பின் அவர் குணசேகரின் குடும்ப விளக்கான கதையையும்... கே.கே. வின் நைட் லாம்பான கதையையும் நாமறிவோம்.

(பின்தொடர்ந்த சதுர வட்டை சதீஷ் அமெரிக்க அதிகாரி. லட்சுமியின் பாதுகாப்புக்கு அனுப்பப் பட்டவர்).

இப்போது அண்ணன் அண்ணி அவர்களுடைய ஒரே பையன் கீரிப்பிள்ளை சித்தன் மற்றும் அவனுடைய கீரிப்பிள்ளை எல்லாம் இப்போது மெகாலட்சுமி வீட்டில். மெகாஆஆ குடும்பம்.

பத்து ஆண்டுகள் பறக்கின்றன.

இதற்கு இடையில் முப்பது கல்யாணங்கள். அறுபது விவாகரத்துக்கள். பத்து சாவு. ஒண்ணு கூட இயற்கையான சாவு இல்லை. இதுல இரண்டு தற்கொலை. எட்டு கொலை.

தீவிரவாதியான காவேரி மகன் காமேசு லட்சுமியால் திருந்தி லட்சுமியின் அண்ணன் மகளை மணந்து விவாகரத்து செய்து போலீசால் சுடப்பட்டு சாகிறான். (ஒரு வில்லன் ஓவர்).

மாயாவின் அம்மா லட்சுமிக்கு வைத்த விஷத்தை தானே சாப்பிட்டு சாகிறார். (சைடு வில்லி கோவிந்தா)

சந்தன கருப்பு சந்தனம் கடத்தும் போது லட்சுமியால் கண்டுபிடிக்கப்பட்டு சந்தனக்கட்டையும் கையுமாக போலீசால் கைது செய்யப்படுகிறார். (இன்னொரு வில்லன் அவுட்)

பர்மா சின்னம்மாவை பர்மா அப்பா அடித்து திருத்துகிறார். மாப்பிள்ளையும் மனம் திருந்துகிறார். (திருந்திய வில்லர்கள் வாழ்க)

சதிமேல் சதி செய்த மாயாதான் தனசேகரை கொன்றாள் என்பதை லட்சுமி கண்டுபிடிக்க போலீஸ் மாயாவை கைது செய்கிறது.

மாயா தன் மகனை பிரிய நேர கண்கலங்குகிறாள்.
"அம்மா நான் உன் மகனே இல்லை. நான் லட்சுமியம்மாவோட மகன். இப்ப அவங்க மகளா இருக்க தங்கச்சிதான் உங்க மகள். உங்க இரண்டு பேரையும் திருத்தணும்னு நானும் தங்கச்சியும் சின்ன வயசுல நீங்க பிரசவ மயக்கத்துல இருக்கப்பவே மாறிட்டோம்."

அவர்கள் இருவரின் தியாகத்தை புரிந்து லட்சுமி நெகிழ்கிறார்.

பர்மா அப்பா மாயாவுக்கு கைவிலங்கு மாட்டும் போது கையிலிருந்த மச்சத்தை பார்த்து அதிர்ச்சியாகிறார்.
"லட்சுமி அது மட்டுமில்லைம்மா. மாயா உன் தங்கச்சிம்மா. உங்க சின்னம்மாக்கும் சின்னதா இருக்கற ஒரு அம்மாவுக்கு பிறந்தவதான் மாயா. அவதான் தொலைஞ்சி போயி இப்பதான் கிடைச்சிருக்கா"

"என்ன மாயா என் சொந்த தங்கச்சியா. தங்கச்சி என் மேல கோபப் படாதம்மா உங்கிட்ட இருந்து குணசேகர காப்பாத்ததான் நான் அவரை கல்யாணம் பண்ணேன். அதே மாதிரி உங்கிட்ட இருந்து கே.கே. வையும் கனகாம்பரத்தையும் காப்பாத்ததான் நான் கே.கே.வையும் கல்யாணம் பண்ணேன்".

"செல்வ லட்சுமி" தழு தழுப்பான குரல். திரும்பி பார்த்தால் கனகாம்பரம். வாழைப்பழம் விழுங்கி கோமாவில் இருந்த கனகாம்பரத்துக்கு நினைவு திரும்பி விட்டது. "எனக்காகத்தான் நீ என் புருஷனை கல்யாணம் பண்ணி தியாகம் பண்ணேன்னு புரிஞ்சிகிட்டேன். என்னை மன்னிச்சுடு".

கே.கே. விழித்து கொண்டு நிற்க இமய மலையிலிரந்து திரும்பிய குணசேகரும் பக்கத்தில்.
அமெரிக்க மனைவியால் அடித்து துரத்தப்பட்ட லட்சுமியின் அமெரிக்க டாக்டர் கணவர் மன்னிக்க சொல்லி லட்சுமி காலில் வந்து விழுகிறார். லட்சுமி டாக்டர் கணவனை மன்னிக்கிறார்.

கே.கே., குணசேகர், டாக்டர், ஒண்பதாவது படிக்கறப்ப காதலிச்ச ஒலகநாதன். லட்சுமி யாருக்கு?

மற்ற மூவருக்கும் ஏற்கனவே சான்ஸ் கொடுத்து விட்டதால் ஒலகநாதனுடன் தான் இனி தன் வாழ்க்கை என்று புரட்சிகர முடிவெடுக்கிறார் மெகா செல்வ அன்ன லட்சுமி.

கே.கே. வையும் கனகாம்பரத்தையும் சேர்த்து வைக்கிறார் லட்சுமி. (பார்த்து திருந்தி திருந்திய வில்லன்களின் லிஸ்ட்டில் இணைகிறார்கள் கே..கே. மற்றும் கனகாம்பரத்தின் அண்ணன்கள்)

குணசேகர் மீண்டும் இமய மலைக்கு கிளம்புகிறார்.

டாக்டர் உகாண்டாவுக்கு பிராக்டீஸ்க்கு கிளம்புகிறார்.

அனைவரின் பிரச்சனையும் தீர்ந்து விட புது உலகம் காண ஒலகநாதனுடன் கிளம்புகிறார் புதுமைப்பெண் மெகா செல்வ அன்ன லட்சுமி.

(முற்றும்)

காதல் தடவி கீசிய கவிஜைகள்..

(இந்த கவிதைகள் பேனாவால் எழுதப்பட்டவை அல்ல.
அரைபிளேடால் காதல் தடவி கீசப்பட்டவை.)




நீ தலைவாரினாய்
நட்சத்திரங்கள் சிதறின.
பொடுகு.

*****

எனது உயிர்
உனக்கே உனக்கு..
சொல்லிவிட்ட பின்பும்
ஏன் உயிர் எடுக்கிறாய்.

*****

சில்லறையை சிந்தியது
போல் சிரித்தாய்...
இந்த சிரிப்புக்காக
சிந்தப்பட்ட சில்லறைகளின்
கணக்கெழுதியபடி நான்.

*****

உயிர் பெற்று உலாவும்
சித்திரப்பாவை நீ.
கேலிச்சித்திரங்கள்
எனக்கு பிடித்தமானவை.

*****

நீ சமைத்த உணவு.
சாப்பிடும் போது
சிரித்தேன்.
ஏனென்றாய்.
துன்பம் வரும் வேளையில்
சிரிக்க சொன்ன வள்ளுவரை
நீ அறிய மாட்டாய்.

*****

வருத்தம் வரும்போது
உனது புகைப்படத்தை
பார்த்தால்
என் வருத்தம்
பறந்து ஓடும்.
உன்னை விட பெரிய
வருத்தம் என் வாழ்க்கையில்
வர வாய்ப்பேயில்லை.

*****

Tuesday, January 16, 2007

இன்ஸ்டால்மென்டில் வாங்கிய கவிதைகள்...

உனது இதழ் சிந்தும்
புன்னகையை பார்க்க
இன்ஸ்டால்மென்டில் டீவி
வாங்கினேன் நான்...
என்னை பார்க்காது
டீவியை பார்க்க தொடங்கினாய் நீ...

கணவருக்காக..
தொடர் ஓடிக்கொண்டிருந்தது..
எனக்கான சாப்பாடு
குளிர் சாதனப் பெட்டிக்குள்
நேற்று சமைத்தது.

இன்று முழுவதும் நாம்
பேசிய வார்த்தைகளை
எண்ணி பார்க்கிறேன்.
இருபது கூட தேறவில்லை.
இருவருக்கும் இடையில்
டீவி மட்டும் பேசிக்கொண்டிருந்தது.

மீண்டும் ஆரம்பித்தாய்..
புலம்பல் பெருங்கதைகள்..
மறுஒளிபரப்பு.

தொலைக்காட்சியில் சத்தம்
என்றால் ம்யூட் செய்யலாம்..
மனைவியை என்ன செய்வது.

Saturday, January 13, 2007

போகி.. பழைசு போச்சி.. புதுசு வந்திச்சி...



போகி வந்து சேந்ததுடா
தண்ணா தண்ணானே..

பழைச எல்லாம் தூக்கி போடு
தண்ணா தண்ணான்னே..

பழைய பிளாக்கரத்தான் கடாசிபூட்டேன்..
தண்ணா தண்ணான்னே..

புது பிளாக்கருக்கு மாறிபூட்டேன்
தண்ணா தண்ணான்னே..

டெம்ளேட்டை மாத்திப்புட்டேன்
தண்ணா தண்ணான்னே...

பழைசு போச்சி.. புதுசு வந்திச்சி...
தண்ணா தண்ணான்னே..

இந்த போஸ்ட்டு, டெஸ்ட்டு போஸ்ட்டு...
தண்ணா தண்ணான்னே...

தமிழ்மணத்துல போஸ்ட்டு தெரியுதடா...
தண்ணா தண்ணான்னே..

போட்டோ கூட மாறிபோச்சு..
தண்ணா தண்ணான்னே...

ஒரிஜினல் போட்டோ போட்டு பூட்டேன்..
தண்ணா தண்ணான்னே..

போட்டோவை கீழபாரு
தண்ணா தண்ணான்னே..




தைத்திங்களுக்கு வாழ்த்து சொன்னேன்..
தண்ணா தண்ணான்னே...

புதுப்பானை வெச்சி படைச்சிருக்கேன்..
தண்ணா தண்ணான்னே..

பொங்கலோ... பொங்கல்.

Friday, January 12, 2007

பொங்கி வரும் கவிதை - பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்க வச்சு போறவளே பொன்னம்மா..
என் மனசு கூட பொங்குறது என்னம்மா..

ஏங்க வச்சு போறியே நீ ஏத்தமா..
நீ செய்யுறது உனக்கேதான் நியாயமா..

போகி வந்து போச்சுதடி பொன்னம்மா..
ஆகி வந்த காதலத்தான் சொல்லம்மா..

மீதி வெச்ச மீன்குழம்பு வாசமா..
பாதி உசுர வாங்குறியே.. ஏனம்மா..

மாடுகண்ணு மேய்க்கற என் தங்கம்மா..
தளுக்கி நீநடந்தா எம்மனசு தாங்குமா..

மஞ்சளத்தான் அரைச்சி வச்ச மங்கம்மா..
கொஞ்சி வந்து பாக்குறியே ஏக்கமா..

கதிரடிச்சு குவிச்சு வெச்சேன் கண்ணம்மா..
சதிராடி நீயும் வாடி சின்னம்மா..

தவிக்க விட்டு நீயும் போனா தங்கம்மா..
தனியா கிடந்து என்மனசு தாங்குமா...

தைமாசம் வந்ததடி என்செல்லம்மா..
நாள்குறிக்க நானும் வந்தா வெக்கமா..

நெருங்கி தான் வருவேன் சொந்தமா..
பக்குவமா பாக்குமாத்த வேணாமா.


---------------------------------------



பொங்கல் வாழ்த்துக்கள்.
அரைபிளேடு.

Thursday, January 11, 2007

நான் யூத் இல்லியா ??????????



நண்பர் ஒருவர் நம்மை யூத் இல்லையென்றும் அதனால்தான் காதலையும் காதல் கவிதைகளையும் நம்மால் உணர முடியவில்லை என்று சொல்லி விட்டார்...

அய்யகோ.. நான் இளைஞன் இல்லையா..

காதல் கவிதை எழுதித்தான் நான் இளைஞன் என்று நிரூபிக்க வேண்டுமா...
இதோ இளஞ்சிங்கம் சிலிர்த்து எழுந்து.. காதல் கவிதை படைக்கிறது...
காதல் கவிதைகளில் என் வாசம். சுவாசம். நேசம். பாசம்... எல்லாம்..
இனி இந்த பக்கம் முழுதும் காதல்.. காதல்.. காதல் மட்டும்.....


-------------


அன்பே அங்கே பார் அழகான எருமைகள்..
குதித்தாடும் குரங்குகள்...
அருமையான கழுதைகள்..
சுதந்திரமான காகங்கள்...
இயற்கை எத்துணை அழகானது..
உன்னைப் போலவே.

---------------

உன் கைவளையல்கள்
எத்தணை கெடுத்துவைத்தவை.
உன் கைகளிலேயே இருக்கின்றனவே (! ஆச்சர்யக் குறி..)

-------

உன் முகத்தை பார்க்கும் போது
என் பாட்டியின் நியாபகம்.
எனது பாட்டி போடும் சுண்ணாம்பு...

--------

தமில் படிக்க தெர்யாது..
என்று நீ சொன்ன கணங்கள்..
லண்டன் மகாராணியையே
காதலிப்பதாய் நான் உணர்ந்த கணங்கள்..

-------

மாயாஜாலில் நாம்..
அசினை நானும்..
சூர்யாவை நீயும்..
கண்டு ரசித்த கணங்கள்..
மரணம் வரை மறக்காது கண்மணியே...

--------

அழகான ராட்சசியே...
இதில் பாதி பொய்..
பாதி மெய்...
எந்த பாதி நீ என்று நான் சொல்ல வேண்டுமா?

--------

உனது குறும்புகள் எனக்கு
மிகப் பிடிக்கும்..
குறிப்பாக சர்வர்
பில் கொண்டு வரும்போதெல்லாம்
நீ காணாமல் போவது..

--------

உனக்காக எத்தனை முறை
வேண்டுமானாலும் இறப்பேன்..
மலைகளை நகர்த்துவேன்..
கடல்களை குடிப்பேன்...


ஹி..ஹி.....
பில் கட்டிய பிறகு
என்னிடம்வேறு காசு இல்லை..
பஸ்ஸிற்கு மூன்று ரூபாய் மட்டும்...
ஹி..ஹி.....

-----



(காதல் பெருகி பண்டல்களாக நான் எழுதிய கவிதைகள் குவிந்து கிடக்கின்றன.. அந்த கவிதைகளை இனி அவ்வப்போது வலையேற்ற உள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.)..
நாமளும் கவிஞ்சர் ஆயிட்டமுல்ல.... :)))))



ஆ. ஏ. அ. ஆனான் 7. - காதலாவது கருவாடாவது......


காதலாவது கருவாடாவது...

(கத்திரிக்காவுடன் காதலை கம்பேர் பண்ணி கத்திரிக்காவ கேவல படுத்த விரும்பல. எனக்கு கத்திரிக்கா ரொம்ப புடிக்கும்.)

தெரியாமதான் கேக்குறேன் இந்த காதல்ன்றது இன்னாபா ?

ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை புட்சி போச்சி.. இல்லை பொண்ணுக்கு பையனை புட்சி போச்சி (!!!).. அதுதான் காதல் ??????

காலேஜில பார்த்தா பொண்ணுக்காக, காதலுக்காக இன்னான்னா பண்றாங்கப்பா நம்ம பயலுவ....
கிஃப்டு வாங்குறது இன்னா... கார்டு வாங்குறது இன்னா..
உதவாத கண்ணாடி பொம்மைங்கள்ள ஐ லவ் யூ ன்னு எயுதிக்கீதுன்றதுக்காக காசு கொடுத்து வாங்குறது இன்னா..

சரி.. அத்த விடு...
பொண்ணுக்கு பர்த்டேயின்னா போன் பண்றீங்க சரி...
அதோட நாய்க்குட்டியோட பர்த்டேக்கு நடுராத்தரி பனிரெண்டு மணிக்கு போன் போட்டு "ஹாப்பி பர்த்டே டு பப்பி".. இன்னாங்கடா இது...?
போனோட அந்த பக்கம் வேற "சோ.. ச்வீட் ஆஃப் யூ..".
அப்புறம் கொஞ்சம் "லொள்.. லொள்"... நாய்க்குட்டியோட பேசற அளவுக்கு ஆயிடுது நிலைம...

இப்படித்தான் நம்மாளு ஒருத்தன்..

அந்த பொண்ணு கூட சேர்ந்து சுத்துறது இன்னா.. சினிமா போறது இன்னா..
காலேஜில அத்தனை பய பைக்கையும் கடன் வாங்கி உட்கார வச்சி சுத்துனது இன்னா..
தலை கோதுவாங்களாம்... மடியில படுத்துப்பாங்களாம்.
ஒரே ஐஸ்கிரீம ஒரே குச்சிய வெச்சு மாத்தி மாத்தி சாப்பிடுவாங்களாம்...

கேட்டா ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப் அப்படிம்பாங்களாம்.

கடசில இன்னா ஆச்சு அந்த பொண்ணு ஒழுங்கா படிச்சிருச்சி.. நம்ப ஆளு நல்லா படிக்கறவந்தான்னாலும் கொஞ்சம் கோட்டை வுட்டுட்டான்.

அந்த பொண்ணு நல்ல கம்பெனியில காம்பஸ்லயே பிளேஸ் ஆயிருச்சி.. நம்ப ஆளு கடைசி வரிக்கும் பிளேஸ் ஆகலை.
இவன இதுக்கு மேலயும் புடிச்சி தொங்குனா நம்ம ஃப்யூச்சர் அவ்வளவுதான் கால்குலேட் பண்ண அந்த ஃபிகர் இவனை கழட்டி விட்டுடுச்சி..

அவனோட நாலு வருட கனவு.. நாயா பேயா அலைஞ்சது.. உழைப்பு... உணர்வு எல்லாம் உடைஞ்சி நொறுங்கி போச்சி...

அவனால இத தாங்க முடியல... கடைசியில தொங்கிட்டான்...
போலீஸ் வந்துச்சி.. விசாரணை பண்ணிச்சு...

கடைசியல அடுத்த நாள் பேப்பருல... "வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை" அப்படின்னு வந்துச்சு...
இந்த பய எதுக்கு தொங்குனான்றது நமக்குதான் தெரியுமே...

நமக்குதான் மனசே ஒரு மாசத்துக்கு சரியில்லை...

அதனாலதான் சொல்லுறதே. படிக்கிற காலத்துல ஆண் சிங்கங்களே... காதல் தேவையா ?

இந்த பெண்களோட வலையில விழுந்து உங்க படிப்பையும் எதிர் காலத்தையும் தொலைக்கிறது சரியா?

நீ சிகரெட் தண்ணி அடிக்கிற. அது தப்புதான். போதைதான்.
ஆனா காதல் அதை விட மோசமான போதை.
அதனால மாறிடும் உன் வாழ்க்கை பாதை.

இன்னும் இன்னான்னமோ எயுதனும்னு நினைச்சேன்.. நம்ம தொங்கிய நண்பரோட நியாபகம் வந்திருச்சி...
மேற்கொண்டு எயுத முடியாம துக்கம் கைய கட்டிப் போடுது...
அப்பாலிக்கா பொறுமையா வந்து சொல்றேன்.



---------------------------------------------

பிற்சேர்க்கை:

காதலிக்கறப்ப பொண்ணுங்க மெக்கானிக் முருகனா (காதல்) இருந்தாலும் பரவாயில்லை அப்படின்னு சொல்வாங்க.
கல்யாணம்னு வந்துட்டா சஞ்சய் ராமசாமியா(கஜினி) தேடுவாங்க.


***********

நமக்கு இந்த காதல் தெய்வீகமானது... மனசை பார்த்து வர்றது.. இதுல எல்லாம் நம்பிக்கை இல்லீங்க..
காதல் முழுக்க முழுக்க அழகையோ பணத்தையோ பார்த்து மட்டும்தான் வர்றது.
மனசை பார்த்து (!!!!!) வர்ற காதல் நூத்துல ஒண்ணு இருக்குமா ?

*************

Wednesday, January 10, 2007

மெகாஆஆஆஆ லட்சுமி - இரண்டாவது வருட கதை....

மெகாலட்சுமி மொத்த குடும்பத்தோட மெட்றாஸ் வந்துட்டாங்க...

ஓட்டு வீடு ஒண்ணுல ஒட்டு மொத்த குடும்பமும் தங்குது..
விறகு அடுப்புல சமைச்சு மண்ணெண்ணை கூட இல்லாம கஷ்டப்படுறாங்க...
ஏற்கனவே ஸ்டாக் இருந்த பட்டு புடவைங்கள தெருத் தெருவா விக்கிறாங்க.. மெகா லட்சுமி...

ஒரு நாள் கார் ஒண்ணு பக்கத்துல வந்து நிக்குது...
"செல்வ லட்சுமி"..
"கனகாம்பரம்"..

ஆமா அது கனகாம்பரமேதான். பத்தாவது வரிக்கும் லட்சுமி கூட பர்மாவுல படிச்ச அதே கனகாம்பரம்.
ஸ்கூல் ரெக்கார்டுல லட்சுமி பேரு செல்வலட்சுமி. அப்போ எல்லோரும் செல்வின்னுதான் கூப்பிடுவாங்க.

கனகாம்பரம் செல்வலட்சுமிக்கு வேலை போட்டு தர்றாங்க..
குடும்பம் கொஞ்சம் நிமிருது...

கனகாம்பரம் புருஷன்தான் கே.கே. ஹோட்டல் பிஸினஸ். அவன் நல்லவனா கெட்டவனான்னு யாருக்குமே தெரியாது.

பர்மாவுல பத்தாவது படிக்கறப்ப லீவுக்கு இந்தியா வந்த செல்வலட்சுமி எக்சிபிஷன்ல தொலைஞ்சி போயிட்டாங்க...
அவங்களேதான் பதினைஞ்சி வருசம் கழிச்சி குணசேகர் கையில ராமேஸ்வரத்துல கிடைச்சாங்க...

நடுவுல பதினைஞ்சி வருஷம் எங்க இருந்தாங்க...

(இந்த கேள்விக்கு ப்ளாக் அண்டு வொயிட் நெகடிவ்ல.. டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... சல்யூட் வெச்சிக்னு மார்ச் பண்ற ஆர்மி... மெகா/செல்வ லட்சுமியும் சல்யூட் பண்றாங்க. !!!!)

இதுல லட்சுமிய தொலைச்சிட்ட லட்சுமியோட பர்மா அப்பா லட்சுமிய தேடி வர்றாரு.
பர்மால பெரிய தேக்கு வியாபாரி...
இப்ப பாக்குக்கு கூட வழியில்லை...

அவரோட விரோதி சந்தன கருப்பன் அவரோட தேக்கு கொடெளன்ல ஒரு டப்பா முழுக்க செல் பூச்சிங்களை போட்டு மொத்த தேக்கும் செல்லரிச்சி போச்சி....
வேற வழியில்லாம தப்பிச்சு இந்தியா வர்றாரு...

அவரோட இரண்டாவது சம்சாரம் அதாவது லட்சுமியோட சின்னம்மாவும் தன்னோட இரண்டு பொண்ணு ஒரு மாப்பிள்ளை ஒரு புள்ளையோட லட்சுமியோட வீட்டுக்கு வந்துடறாங்க.
நல்ல வேளை கனகாம்பரம் புண்ணியத்துல லட்சுமி இப்ப கொஞ்சம் பெரிய பங்களா சைஸ் வீட்ல இருக்காங்க...


இப்ப அந்த வீட்ல குணசேகர் அப்புறம் அவரோட குழந்தைங்க... வித் லட்சுமியோட குழந்தை..
வில்லி மாயா அவங்க அம்மா தனசேகர்.. அப்புறம் அவங்க குழந்தை..
லட்சுமியோட பர்மா அப்பா.. சின்னம்மா அவங்க பசங்க...
மொத்தம் எத்தினி பேரு இருக்காங்க அப்படின்ற கணக்கு எனக்கே தெரியாது..
(யாராவது கதைய முழுசா படிச்சி எனக்கு எண்ணி சொன்னா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்... நான கணக்குல வீக்கு.. ஹி.. ஹி..).

கனகாம்பரம் புருசன் கே.கே. க்கு இரண்டு தங்கச்சிங்க... (அப்படின்னா அவங்க வில்லிங்கன்னு நான் தனியா சொல்லணுமா என்ன).
கனகாம்பரத்துக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இவங்க இரண்டு பேருக்கும் அத்தைங்கள பிடிக்காது. செல்வலட்சுமியம்மாவதான் பிடிக்கும்.

இப்படி இருக்க சொல்ல ஒரு நாள் கோவில்ல கொடுத்த வாழைப்பழத்தை முழுங்க முடியாம கனகாம்பரம் கோமாவுக்கு போயிடறாங்க.

கனகாம்பரத்தோட அப்பா இருக்காரே.. (இவருக்கு இரண்டு பொண்டாட்டி... கனகாம்பரம் முதல் பொண்டாட்டியோட பொண்ணு.. இரண்டாவது பொண்டாட்டிக்கு இரண்டு பையனுங்க..)
அவரு இன்னா பண்றாருன்னா.. பேரன் பேத்திங்களுக்காக லட்சுமிய கே.கே. வுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாரு.

இத கேள்விப்பட்ட குணசேகர் தாங்க முடியாம இமய மலைக்கு போயிடறாரு...
லட்சுமி கே.கே. கல்யாணம் நடக்குது...

வில்லி மாயாவால இத பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல. அவங்க தனசேகருக்கு விஷத்தை கொடுத்து சாகடிச்சிடுறாங்க.
கே.கே. வுக்கு ஹோட்டல்ல வந்த நஷ்டத்துக்கு காசு கொடுத்து வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கிடறாங்க... அப்புறம் கே.கே. வை என்னை கல்யாணம் பண்ணிக்கன்னு மிரட்டறாங்க...

கோமாவுல இருக்கற கனகாம்பரம்... குடும்பம் பிஸினஸ் அப்படின்னு மட்டும் இருக்கற லட்சுமி.. தன்னை கவனிச்சுக்கவும் யாராவது வேணும்னு கே.கே. வும் லட்சுமிக்கு தெரியாம மாயாவை கல்யாணம் பண்ணிக்கறாரு...

அப்பாலிக்கா கஞ்சாவுக்கு அடிமையான கங்காவோட பையன லட்சுமி காப்பாத்தறாங்க...
கங்கா பொண்ணை கையப்புடிச்சி இழுத்தவன தூக்கி போட்டு மிதிச்சு ஜெயில்ல தள்றாங்க..
பக்கத்து வீட்டு பொண்ணை பஞ்சர் ஒட்டுற பய ஏமாத்தி குழந்தை கொடுத்துட்டு ஓடி போக.. எப்பவுமே தன்னோட வீட்டை சுத்தி வர்ற சதுர வட்டை சதீஷ்க்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வெக்கறாங்க..
(இந்த சதுர வட்டை சதீஷ்.. யார்... யார்.....)

மாயா கே.கே. வோட இரண்டு தங்கச்சிங்க கூடவும் கூட்டு வைக்கிறாங்க... அதுவும் இல்லாம தன்னோட பையனை சின்னம்மாவுக்கு எதிரா வளர்க்கறாங்க..

குணசேகரோட முதல் மனைவி காவேரி பையன் காமேசு கொலைவெறியோட தீவிரவாதியா திரும்பி வர்றான்..

சந்தன கருப்பன் இப்ப இந்தியா வந்து இங்க சந்தன கட்டை கடத்துறான். சின்ன வயசுல அவன் தூக்கனப்ப எட்டி உதச்ச செல்வ லட்சுமிய பழி வாங்க அவனும் துடிச்சிக்னு இருக்கான்.
பஞ்சர் ஒட்டுற பய வேற ஆசிட் பாட்டிலோட அலையறான்...

ஒன்பதாவது படிக்கறப்ப செல்வலட்சுமி என்னைத்தான் லவ்வு பண்ணிச்சின்னு ஒருத்தன் கிளம்பி வர கே.கே. வுக்கும் லட்சுமி மேல பொறாமை.. என்ன பண்றதுன்னு பயங்கரமா யோசிக்கிறான்.

கனகாம்பரத்தோட இரண்டு சதிகார அண்ணனுங்க தனியா பிளான் பண்றாங்க..

சொந்த பர்மா சின்னம்மாவும் அவங்க மாப்பிள்ளையுமா சேர்ந்து வேற சொத்துங்கள அமுக்க சதி பின்றாங்க...

இவ்ளோ சதியிலிருந்தும் மெகா செல்வ லட்சுமி எப்படி தப்பிக்கறாங்க... அது மூணாவது வருஷ கதைங்கோ...

இரண்டு வருடமா இந்த கதைய தொடர்ந்து பார்த்துக்கிட்டு வர்ற கேணையர்கள்... சாரி.. நேயர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

உங்களுக்கு ஒரு போட்டி...

இன்னிக்கு எபிசோட்ல மெகா செல்வ லட்சுமி போட்டிருந்த பச்சை கலர் ஜாக்கெட்டோட கலர் என்ன ?

நாலு ரூபா கார்டுல நீங்க உங்க விடைய அனுப்ப வேண்டிய முகவரி:
மெகாஆஆஆ லட்சுமி....
போஸ்ட் பாக்ஸ்: மைனஸ் 12..
செல்வ லட்சுமி தெரு.
பர்மா.

Monday, January 08, 2007

மெகாஆஆஆ லட்சுமி.....



நாமளும் எவ்ளோ நாளா மெகா சீரியல் பாக்குறோம். இந்த மாதிரி மெகா சீரியலுக்கு நம்மளால கத எயுத முடியாதா இன்னா...
நம்ம கிட்ட ஒரு சூப்பர் கத இருக்குதுப்பா... ஆல் காப்பி ரைட்ஸ் டு அரைபிளேடு...கத வேணும்ன்ற தயாரிப்பாளருங்க நம்மள கான்டாக்ட் பண்ண வேண்டியது..
இதோ கதைக்கான ட்ரயிலரு...

-------------------------------------------------


மெகாலட்சுமி தான் ஹீரோயின் பேரு...

டைட்டிலு சாங்கு...

ஓ... ஓஓஓ...
வீர லட்சுமி.. தைர்ய லட்சுமி..
தன லட்சுமி.. விஜய லட்சுமி..
........................(உட்காந்து லட்சுமிங்கள லிஸ்ட் போடுங்கப்பா).
நாட்டுல பல லட்சுமி..
எல்லா லட்சுமியும் சேர்ந்தவதான் இந்த லட்சுமி..
லட்சுமி.. லட்சுமி..
மெகா லட்சுமி...

பொறுமையின் மறுபெயர்
அன்பின் வடிவம்..
அவள்தான் லட்சுமி...
மெகா லட்சுமி..

ஓ... ஓஓஓ... (யானை புலி பூனை சிங்கம் சிறுத்தை எல்லாம் பாட்டுல குறுக்கால வுட்டுக்கோங்க..)

மெகா லட்சுமி... (இத ஒரு சின்ன குழந்தை அடித் தொண்டையில கத்தணும்).

---------------------------------

கதைய முதல் எபிசோட்ல ஆரம்பிக்கறப்ப ராமேசுவரம் கடல்ல ஆரம்பிக்றோம்.
கத கடல் மாதிரி பெருசுன்னு சிம்பாலிக்கா சொல்றோம்.

அங்கதான் நம்ம ஹீரோ குணசேகர் காசியில கங்கையில விழுந்துட்ட தன்னோட முதல் பொண்டாட்டி கங்காவுக்காக காரியமும், ஸ்ரீரங்கம் கோவில் குளத்துல வழுக்கி விழுந்து கோமாவுல இருக்கற இரண்டாவது பொண்டாட்டி காவேரிக்காக பிரார்த்தனையும் பண்ண வர்றாரு.

அவரு அங்க இருக்கறப்ப கடல்ல அடிச்சுக்னு வந்து கரை ஒதுங்கற ஒரு பொண்ணை காப்பாத்தறாரு...

அதுதான் நம்ம மெகாலட்சுமி..

கங்காவோட ஒரு பொண்ணு இரண்டு பையனுக்கும் காவேரியோட இரண்டு பொண்ணு ஒரு பையனுக்கும் லட்சுமிய புடிச்சுடுது.

எல்லாமா சேர்ந்து "சின்னம்மா" அப்பிடின்னு சொல்லி லட்சுமிய புடிச்சிக்கிறாங்க..

வேற வழியில்லாம குணசேகர் சின்னம்மா லட்சுமிய வீட்டுக்கு கூட்டிக்னு வர்றாரு. (இரண்டு வார கதை ஓவர்).

மதுரையில குணசேகர் பட்டுத்தறி ஓட்டி பட்டுப் புடவையா நெஞ்சி குடும்பத்தை காப்பாத்தறாரு...
சின்னம்மா புள்ளைங்கள நல்லா பார்த்துக்கறாங்க..

கங்காவோட பொண்ணுக்கு தலைவாரி விடறாங்க (ஒரு நாள் எபிசோட் ஓவர்)..

காவேரியோட இரண்டு பொண்ணுங்களுக்கு தலைவாரி விடறாங்க (இரண்டு நாள் எபிசோட் ஓவர்)..

கங்காவோட இரண்டு பையனுங்களுக்கு பாடம் சொல்றாங்க.. (இரண்டு நாள் ஓவர்..)

காவேரியோட பையன் காமேசு பாடம் கத்துக்க மாட்டேங்கறான்... "நீ சின்னம்மா... எங்கம்மா இல்லை..."..
"நானும் உன்னோட அம்மாதாண்டா..."....
"இல்லை... இல்லை"... இந்த பாசப்போராட்டம் இரண்டு வாரம் நடக்குது....
கடைசில காவேரியோட பையன் ஓடிப்போயிடறான்....
எல்லோரும் சோகமாயிடறாங்க... (இன்னொரு வாரம் ஓவர்).

இதுல பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு. அது பக்கத்து தெருல சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டற பையன காதலிக்குது. (இரண்டு வாரம் கேரண்டி)

எதிர் வீட்ல மாயா அப்படின்னு ஒரு பணக்கார பொண்ணு. அதுக்கு குணசேகர் மேல கண்ணு.
மெகாலட்சுமி வந்ததுனால அதோட லவ்வு நடக்காம போயிடுச்சி..

ஓரு கட்டத்துல பிள்ளைங்களுக்காக குணசேகர் மெகாலட்சுமிய கல்யாணம் பண்ணிடறாரு.

மாயா குணசேகர மடக்கி என்னையும் கல்யாணம் பண்ணு அப்படின்னு சொல்றா. குணசேகர் முடியாது அப்படின்னு சொல்லிடறாரு.
மாயா உடனே குணசேகரோட தம்பிய கல்யாணம் பண்ணி அதே வீட்டுக்கு வந்துடறா.
கூடவே மாயாவோட அம்மாவும்.
குணசேகர் தம்பி தனசேகர் அப்பாவி. அவன் மாயா கையில மாட்டிக்கிட்டு பயப்படறான். (நாலு மாச கதை ஓடிருச்சிப்பா..)

குணசேகருக்கு ஒரு அக்கா குமுதவல்லி...
அவங்களுக்கு பாவம் ஒரே ஒரு புருசன். ஆனா அவருக்கு மட்டும் இவங்களோட சேர்த்து இரண்டு பொண்டாட்டி.
சக்காளத்தி கொடும தாங்காம அக்கா தம்பி வீட்டுக்கு திரும்பி வர...
கொதித்து எழுந்த மெகாலட்சுமி சிங்கம் மாதிரி அவங்க புருஷன் செவுள்ளயே ஒண்ணு விட்டு அவங்கள சேர்த்து வைக்கறாங்க.
(ஒரு மாச கதை ஓடிருச்சிப்பா)..

(அப்பப்ப திடீர் திடீர்னு ப்ளாக் அண்டு வொயிட் நெகடிவ்ல.. டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... சல்யூட் வெச்சிக்னு மார்ச் பண்ற ஆர்மி... மெகா லட்சுமியும் சல்யூட் பண்றாங்க. !!!!)

மாயா சதிமேல சதி பண்றாங்க. எல்லாத்தையும் மெகாலட்சுமி முறியடிக்கிறாங்க..

மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)

அக்கா குமுதவல்லிக்கு இரண்டு பசங்க..
குமரன். இவன் காலேஜ் படிக்கிறான். காலேஜ்ல ஒரு பொண்ணை லவ் பண்றான். (ஒரு வாரம் சீரியல்ல கடலை போடலாம்)
புனிதன் +2... இவன் கங்கா பொண்ணு புஷ்பா (பத்தாங் கிளாஸ்) லவ் பண்றான். (இரண்டு வாரம்பா..)

இந்த டைம்ல மதுரையில பட்டு நூல் கிடைக்காம தொழில் டல்லாயிடுது....
(நூல் கிடைக்காம சதி பண்றது மாயா... பட்டு நூல் வந்த பத்து லாரியையும் மடக்கி மொத்த நூலையும் தெப்ப குளத்துல கொட்டிடறாங்க..)
எல்லாருமா சேர்ந்து மதுரைய காலி பண்ணிட்டு மெட்றாஸ்க்கு கிளம்பறாங்க.....

ஒரு வருசத்துக்கான கத முடிஞ்சி போச்சிப்பா...
அடுத்த வருசத்துக்கான கதைய அப்பாலிக்கா மெட்றாஸ்ல வச்சி சொல்றேன்..... சரியா....

எங்க எல்லாருமா என் கூட சேர்ந்து அது வரிக்கும் ஒருக்கா கூவுங்க.... "மெகாஆஆ லட்சுமி...".

(கதையோட டி.ஆர்.பி. ரேட்டிங்க வச்சு (அதாவது உங்க ரெஸ்பான்ச வச்சு) இன்னம் ஒரு வருச கதை பாக்கியிருக்கா இல்ல இரண்டு வருச கதை பாக்கியிருக்கான்னு முடிவு செய்வோமுங்க.)

---------------------------------------------------

Sunday, January 07, 2007

பெண் புலிகளும் ஆண் பூனையும்



அது ஒரு காடு. அதில் ஏகப்பட்ட மிருகங்கள் இருந்தன.

நிறைய ஆண் பூனைகள் மற்றும் பெண் பூனைகள். மற்றும் பரவலான அளவில் பெண் புலிகள் மற்றும் ஆண் புலிகள்.

நமது கதை ஒரு ஆண் பூனையை பற்றியது.

அந்தக் காட்டில் ஒரு பெண் புலி. அந்த பெண் புலி தேடி பிடித்து இந்த ஆண் பூனையை திருமணம் செய்தது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தெரிந்தது.

ஆனால் காலப்போக்கில் பெண் புலிக்கு ஆண் பூனையை பிடிக்காமல் போயிற்று.
ஆண் பூனையின் வாழ்க்கை முறை எளிமையாக இருந்தது. பாலுடன் இந்த பூனை திருப்தியடைந்தது. பெண் புலியையும் தன்னைப்போல் பால் மட்டும் குடிக்க சொல்லி ஆண் பூனை சொன்னது.

திருமணமான புது ஜோரில் மாமிசமாக வாங்கி கொடுத்த ஆண் பூனை இனி வாங்கி கொடுக்காது என்று அந்த பெண் புலிக்கு தெரிந்துவிட்டது. இது வெறும் பூனை மட்டுமே. இது தன்னைப் போல் எந்த காலத்திலும் புலியாக முடியாது என்பதையும் புரிந்து கொண்டது. பூனைக்கு கட்டுப்பட்டு காலமெல்லாம் புலியாகிய தன்னால் பால் குடித்துக் கொண்டிருக்க முடியாது என்று அது முடிவெடுத்தது.

புலி மெல்ல மெல்ல பூனையின் இயலாமையை குத்திக்காட்ட துவங்கியது.
பூனை ஆரம்பத்தில் கவலைப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஒரு கட்டத்தில் புலியின் தொடர்ந்த தொல்லை தாங்காமல் சத்தமிட்டது.
புலி பதிலுக்கு உறுமியது. புலியின் உறுமலுக்கு முன் தனது சத்தம் எடுபடாததை பார்த்த பூனை ஆத்திரம் அதிகமாகி புலியை தன் முன்னங்கால்களால் ஒரு முறை பிராண்டியது.

அவ்வளவுதான் இதற்கெனவே காத்திருந்தது போல் பெண் பூனை தன் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு தன் தாயார் வீட்டுக்கு கிளம்பியது.

தாயாராகிய பெண் புலி "பெண் பூனைகளின் உரிமைகளுக்காக" குரல் கொடுக்கும் "பெண்பூனைவாதி".

தன் மகளுக்கே இப்படி ஆனதும் அந்த புலியும் உறும ஆரம்பித்தது.

"எனக்கு அப்பவே தெரியும். ஆண் பூனை என்ற ஒன்று கிடையவே கிடையாது. கொடுமைக்கார ஆண் புலிகள் மட்டும்தான் இந்தக் காட்டில் இருக்கிறது. இந்த ஆண் புலி என் மகளை என்ன பாடு படுத்தியிருக்கிறது.".

காட்டின் பத்திரிகைகள் கொடுமைக்கார ஆண் புலியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதின.

"பெண்பூனைவாதிகள்" ஆன பெண் புலிகள் ஒன்றாக சேர்ந்து "ஆண் புலிக்கு" எதிராக குரல் கொடுத்தன.

"ஆண்புலி" செய்த கொடுமை காடு முழுதும் பரவ துவங்கியது.

காட்டில் இருந்த சில ஆண்புலிகள் நமது ஆண்பூனையை இழுத்து வந்து மன்றத்தில் நிறுத்தின.

"பெண்பூனைவாதிகள்" நிறைந்த சபையில் "ஆண் புலி" செய்த கொடுமைகளை பெண்புலி எடுத்து சொல்லியது.

"இந்த ஆண்புலி எவ்வளவு கொடுமையானது தெரியுமா. எனக்கு வேண்டியதை வேண்டியவாறு செய்யும் துப்பில்லாத புலி இது. தினமும் வீட்டுக்கு வந்து இந்த ஆண்புலி என்னை போட்டு அடிக்கும். இதன் நகங்கள் மிக கூரானவை. அதன் நகங்களை பாருங்கள்."

"ஆமாம். ஆமாம். கூரானவைதான்"

"அதன் கூரிய நகங்களால் என்னை தினமும் கிழித்து குதறும் இந்த ஆண் புலி."

"த்சொ. த்சொ.."
"ஐயோ பாவம் இந்த பெண் பூனை."
"அந்த ஆண்புலி நாசமாக போக.." பெண்பூனைவாதிகளான பெண்புலிகள் மற்றும் ஆண்புலிகளின் குரல்கள் ஒலித்தன.

நமது ஆண்பூனை குரலெழுப்பியது.

"பார்த்தீர்களா உங்கள் எதிரிலேயே எப்படி உறுமுகிறது இந்த ஆண்புலி".

"ஆமாம். ஆமாம். பார்த்தோம். இப்போதே இப்படி உறுமுகிறதே. தினமும் இதேபோல்தானே உறுமியிருக்கும்."

"நீங்களே பார்த்தீர்களல்லவா. இந்த ஆண்புலியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள். இந்த ஆண்புலிக்கு தக்க தண்டனை கொடுங்கள்."

ஆண்புலிகள் தீர்ப்பை வாசித்தன "பெண் பூனைக்கு ஆண்புலியிடம் இருந்து விடுதலை. பெண் பூனைக்கு வேண்டிய மாமிசத்தை ஆண்புலி ஆயுசுக்கும் தரவேண்டியது."

பெண்புலி உறுமியது. "அது பத்தாது. இந்த புலி எனக்கு செய்த கொடுமைக்கு இதை கூண்டில் அடைக்க வேண்டும்".

பெண்பூனைவாதிகள் "ஆமாம். அடைக்க வேண்டும்"

பெண்புலி "அது மட்டுமல்ல. இந்த புலியின் தோலை உரிக்க வேண்டும். அப்போதுதான் வேறு எந்த ஆண்புலியும் என்னைப் போன்ற பெண்பூனைகளிடம் வாலாட்டாது."

பெண்பூனைவாதிகள் "ஆமாம். ஆமாம். ஆண்புலியின் தோலை உரிக்க வேண்டும்."

கூண்டில் அடைபட்ட "ஆண்புலி" கடைசியாக ஒருமுறை உறுமியது.

"மியாவ்."


--------------------------------------------------------------------------------


Friday, January 05, 2007

ஆ. ஏ. அ. ஆனான் 6 - பியூட்டி பார்லர்கள்

பியூட்டி பார்லர்கள் - அடிமடையனாக்கும் தொழிற்சாலைகள்

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு.
பெண்கள்தான் ஆண்களைவிட அழகு அப்படின்னு சொல்லிக்கறாங்களே.
அப்புறம் நாட்டுல எதுக்கு பெண்களுக்கு மட்டும் இத்தினி பியூட்டி பார்லர் அப்பிடின்னு.

இன்னா இன்னா பண்றாங்கப்பா இதுல...
ஃபேசியல்.. அதுலயே ஏகப்பட்ட டைப்பு...

ஹெர்பல்.. ஆயூர்வேதிக் அது இதுன்னு போயி.. மட் பேக்கு.. இப்ப சாக்கலேட் ஃபேசியல் வரிக்கும் வந்துருக்குது.
சாக்கலேட்டு தின்பாங்க சரி. அதையுமா தூக்கி மூஞ்சில பூசிப்பாங்க.

அப்புறம் ஹேர் கலரிங் இன்னா ஹேர் ஸ்டைலிங் இன்னா... இன்னும் நமக்கு தெரியாத இன்னான்னமோ சமாச்சாரம் எல்லாம் இருக்கு இந்த பியூட்டி பார்லர்ல.

பெண்களோட லட்சியமே ஆணை அடிமையாக்கி வேலை வாங்கணும்ன்றதுதான்.

ஆண அடிமையாக்கி அடிமடையனாக்கணும்னா அதுக்கு ரொம்ப முக்கியமான ஆயுதம் அப்பிடின்னு அவங்க நினைக்கறது அவங்க அழகை (!!).

இப்படி இல்லாத ஒண்ண இருக்கறதா காட்டறதுக்கு அவங்க இன்னா இன்னா பண்றாங்க.

ஆரம்ப காலத்துல இருந்தே மஞ்சளு மருதாணி வெள்ளரிக்காய் அப்படின்னு இன்னா இன்னாத்தையோ பூசிக்கினு கீறாங்கோ.
கழுதை பாலுல குளிச்சவங்கள பத்தியெல்லாம் நாமதான் படிச்சி கீறமே.
இப்ப பெண்கள் ரொம்ப முன்னேறி தெருக்கு இரண்டு பியூட்டி பார்லரு.

சரி இத எல்லாம் ஒரு ஆணை கல்யாணம் பண்றதுக்காக மட்டும்தான் பண்றாங்களான்னு பார்த்தா இல்ல.

கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் ப்யூட்டி பார்லர் போறாங்க.

இத்தையெல்லாம் இன்னாமோ ஆண்கள் செய்யி அப்பிடின்னு சொல்ற மாதிரியும் அதனாலதான் செய்யற மாதிரியும் ஃபிலிம் காட்டுவாங்கோ.

இரண்டு வாரத்துக்கு ஒரு தபா இது தேவையான்னு புலம்பிக்கினே 1000 ரூபா தர்ற ஆண்கள் எத்தினி பேர நாம பார்த்துக்கீறோம்.

இத்தோட முடிஞ்சிடுதான்னு பார்த்தா முடிஞ்சிடுதா. லிப்ஸ்டிக், ஃபேஸ்க்கு போடுற பேஸ், ஐ புரோ, ஸ்னோ, ஃபேர் அண்டு லவ்லி, வெரைட்டி வெரைட்டியா பெளடரு, நெயில் பாலீஷ், மருதாணி, ஹேர் கலரிங்கு இன்னும் நம்ம வாயில கூட நுழையாத ஐட்டம் எத்தினியோ.

டிரஸ்ஸ எடுத்துக்கங்க எத்தினி வெரைட்டி. புட்டு புடவையா வாங்கி அடுக்கறதுல இருந்து சல்வார்ல இருந்து... இப்ப ஜீன்ஸ் பேண்டுல இருந்து டீஷர்ட் வரிக்கும். வாங்கி கொடுத்தே ஓட்டாண்டியா போற ஆம்பிளைங்க எத்தினி பேரு.

நாம இப்படியெல்லாம் சொன்னம்னா எங்களை படிக்க வைங்க. வேலைக்கு அனுப்புங்க. நீ ஒண்ணும் வாங்கி தரவேணா நாங்களே வாங்கிக்குவோம் அப்பிடின்னு யாராச்சும் வந்து பெண்ணுரிம குரல்ல சொன்னாலும் சொல்வாங்க. நமக்கு எதுக்கு வம்பு.

நம்ப கவலையெல்லாம் இதனால பாதிக்கப்படுற அப்பாவி ஆண்களை பத்திதான்.

பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்குற ஒருத்தன் ப்யூட்டிக்கே இரண்டாயிரம் ரூபா செலவு பண்ணி தேயறானே. அவன நினைச்சா நமக்கு பரிதாபமா இருக்கு.

ஏன்னு கேட்டுடக் கூடாது. வாங்கி கொடுக்க உனக்கு துப்பில்லை. எங்க அப்பாவ சொல்லணும் தேடி புடிச்சி உன்கிட்ட போய் என்னை கொடுத்தாரு பாருன்னு டயலாக்கு வேற. நம்பாளு பரிதாபமா முழிப்பான்.

அவனும் நல்ல விதமா சொல்லி பார்ப்பமேன்னு "நீ எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகா தெரியற. நீ மேக்கப் போடாம நின்னினாலே உலக அழகியெல்லாம் உங்கிட்ட பிச்சை வாங்கணும்". அப்படின்னு டயலாக்கா விட்டு பார்க்கறான். கேக்கறாங்களா இன்னா. அப்படியும் பியூட்டி பார்லரு போறாங்களே. அவனும் தன்னோட தேவையெல்லாம் விட்டுக் கொடுத்து கஸ்டப்பட்டு சம்பாரிச்ச காசு எல்லாம் முகத்துல மட் பேக்கா (மண் பூச்சு) மாறி மக்கி போறத பார்த்துக்கிட்டு சும்மா இருக்கான்.

இவனையெல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலியா. இந்த ஆண் அடிமடையனாகி அடிமையானது உங்க யார் கண்ணுக்கும் தெரியலியா.

இந்த மாதிரி அப்பாவிங்களுக்கு குரல் கொடுக்க நாட்டுல ஒரு ஆணுரிமை அமைப்பு கூட இல்லியே.

அவன பாருங்க. மிஞ்சி போனா ஒரு பேண்ட் சட்டை. ஒரு சீப்பு பெளடரு. அவ்வளவுதான். அந்த அம்மணி குறைந்த பட்சம் அரைமணி நேரம் அலங்காரம் பண்ணி அழகாகுது. இவன் சிம்பிளா இரண்டு நிமிஷத்துல அழகாகுறான்.

இந்த ஆணை இப்படி அடிமடையனாக்கி வெச்சுட்டு எனக்கு சுதந்திரமே இல்ல. ஒரு மாயாஜால் உண்டா ஒரு கேண்டில் லைட்டு டின்னர் உண்டா அப்படின்னு சுதந்திரம் இல்லாம கஷ்டப்படுற பெண்கள என்ன சொல்றது.

யோசிச்சு பாருங்க. நாட்டுல யார் சுதந்திரம் இல்லாம இருக்காங்க. வேண்டியது பெண் விடுதலையா. ஆண் விடுதலையா.


Thursday, January 04, 2007

ஆண்கள் மிருகங்களா ?


தோழி கவிதா அவர்களின் ஆண்கள் என்ற மிருகங்கள்......... பதிவுக்கு எனது எதிர் வினை.

முதலில் "ஆண்கள் என்ற மிருகங்கள்....." என்ற தங்கள் தலைப்பிற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

"சில ஆண் மிருகங்கள்.." என்ற தலைப்பு மட்டுமே சரியானதாக இருக்க முடியும்.

ஆயிரத்தில் ஒரு ஆண் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த ஆண் குலத்தையே தாக்கும் தலைப்பு தங்களுடையது.

இப்படிப்பட்ட மிருகங்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் புலம்புவதாகவே உள்ளது உங்கள் கட்டுரை.

இந்த கேவலமானவர்களுக்கு மனதில் சுத்தமாக தைரியமே கிடையாது.

நீங்கள் திரும்பி "என்ன" என்று ஒரு கேள்வி கேட்டாலே தப்பான எண்ணம் கொண்டவனாக இருந்தால் ஓடி விடுவான்.
அதையும் மீறி நின்றால் அறையுங்கள்.

இத்தகு தைரியத்தை பெண்களுக்கு ஊட்ட தவறிய நமது சமூகமே குற்றவாளி.

ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து பேதம் வளர்த்த நமது சமூகம் குற்றவாளி.

ஆணும் பெண்ணும் இயல்பாக நட்பாக பேசி பழக முடிந்தால் இது எல்லாம் நடக்காது.

மும்பை போன்ற பெருநகரங்களில் ஆண் பெண் வித்தியாசம் பார்த்து பழகுவதில்லை. அதனால் மனித மனங்கள் இயல்பானவையாக இருக்கின்றன.
அங்கு பேருந்தில் நீங்கள் சொல்வது போல் எதுவும் நடப்பதுமில்லை.

நாம் என்ன செய்கிறோம் குடும்பங்களில் ஆண் பெண் நட்போடு பழகவே விடுவதில்லை. இது மாற்றுப் பாலரை குறித்த ஆசைகளை மனதில் வளர்க்கிறது. ஆண்/பெண்ணை அவ்வாறு வளர்த்த பெண்ணாகிய தாயும்/ஆணாகிய தந்தையும் ஒரு குற்றவாளியே.

இதனால்தான் ஆண்/பெண் இருவருக்குள்ளும் சில மிருகங்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு உருமிக்கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் இந்த மிருகங்கள் பெண்களிடமிருந்தும் உறுமுவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு பேருந்தில் அமைதியாக ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த என்னை "இங்க பாருடி சாமியாரு" என்று கை கொட்டி சிரித்த பத்து பெண்களின் சிரிப்பு எனது ஆயுளில் மறக்காது.

மற்றுமொரு முறை தொடர்ந்து என் தோளில் சாய்ந்த பெண்ணை "தயவு செய்து தள்ளி போகிறீர்களா." என்று நான் சொன்ன போது அவள் முறைத்த முறைப்பு இருக்கிறதே.

ஆணோ பெண்ணோ தவறு தவறுதான்.

ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் பழகும் நாள் நம் சமுதாயத்தில் என்று வரும்.

சென்னையில் மும்பை போல் பேருந்துகளில் பெண்களுக்கு என்று தனியிருக்கைகள் ஒதுக்கப்படாமல் ஆணும் பெண்ணும் சரிசமமாய் அமரும் காலம் என்று வரும் ?


----------------------------------------------------------------



பிற்சேர்க்கை:

நான்காண்டுகள் சென்னை பேருந்துகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தவன் நான்.

12B, 13, 1B, 18A, 18G, 5E, 23C, 21G, 49D, 70, 19B,C போன்றவற்றில் அதிக அளவில் பயணித்திருக்கிறேன்.

கூட்டம் மிகுதியான நேரம் கூட்டம் குறைவான நேரம் அனைத்திலும் பயணித்திருக்கிறேன்.
பீக் அவர்ஸ்ஸில் அனைத்து பகுதிகளிலும் பஸ்களில் புளிமூட்டைகள் போல் அடைபட்டு மக்கள் பயணிக்கிறார்கள்.

என்னை பொறுத்த அளவில் இது போன்ற நிகழ்வுகள் மிகக் மிக குறைவு. நான் கண்டது இல்லை. (பெண்கள் பகுதியில் அதிகம் நோக்காத என் தொலைநோக்கு குறைந்த பார்வையால் இதையெல்லாம் நான் பார்க்கவில்லையோ என்னவோ)


சென்னைக்கு வந்த புதிதில் 12B பேருந்தில் என் அனுபவம் ஒன்றை கூறி விடுகிறேன். கூட்டம் நிறைந்த பேருந்து.
நானும் என் நண்பனும் உள்ளே ஏறி சென்று விட்டோம்.

நிற்க முடியாத படி கூட்டம். 50 பேர் மட்டும் செல்ல வேண்டிய பேருந்தில் 120க்கும் மேற்பட்டோர் இருப்பர். ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கிறேன். உடன் எனது நண்பனும்.
அருகில் ஒரு பெண். அவள் மீது சாயக் கூடாது என்று என் நண்பன் கிட்டத்தட்ட என் மீது சாய்ந்து நின்றிருந்தான்.

வந்தது ஒரு வளைவு. வேகமாக பேருந்து திரும்பியதில் எனக்கு பின்னிருந்தவர் என் மீது சாய நான் நண்பன் மீத சாய நண்பன் எதிர் பாராத கணத்தில் அந்த பெண்மீது இடித்து விட்டான்.
அடுத்த கணமே சுதாரித்து கொண்டு... "சாரி" என்றான்.

"சாரியாம்.. சாரி.. வேணும்னே இடிக்கறதுக்கு வந்துட்டு.. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல.".

நண்பனுக்கு அவமானமாகி விட்டது. கூட்டத்தை கிழித்துக் கொண்டு அடுத்த பேருந்து நிலையத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்பே அவன் இறங்க நானும் உடன் இறங்கினேன். அதற்குப்பிறகு செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் சென்றோம்.

அதற்கு பிறகு பஸ் கூட்டமாக இருந்தால் நானும் சரி நண்பனும் சரி ஃபுட் போர்டு மட்டுமே.

ஒரு முறை ஃபுட் போர்டில் தொங்கு பவர்களை பிடிக்கும் காவலர்களிடமிருந்து தப்பித்தது தனிக் கதை.


------------------------------------------------------------------------

Wednesday, January 03, 2007

கல்யாணம் அனுபவஸ்தர்கள் வார்த்தையில்..

கல்யாணம் அனுபவஸ்தர்கள் வார்த்தையில்..

1. கல்யாணம் அப்படின்றது தவணமுறைத்திட்டம் மாதிரி. ஒரு தடவ மாட்டிக்கிட்டா காலம் முழுசும் கடன கட்டிக்கிட்டே இருக்கணும்.

2. கல்யாணம் என்பது ஆணுடைய பேச்சுரிமையை சட்டப்படி முடக்கும் சதி.

3. கல்யாணம்ன்றது கூண்டு மாதிரி. வெளிய இருக்க பறவைங்க எப்படி உள்ள போறது அப்படின்னு பார்க்கும். உள்ள இருக்க பறவைங்க எப்படிடா வெளிய போவோம்னு பார்க்கும்.

4. கல்யாணம்ன்றது நாம எப்படி இருந்தம்னா பொண்டாட்டிக்கு புடிக்கும் அப்படின்னு காலமெல்லாம் தெரிஞ்சிக்கிற முயற்சி.

5. கல்யாணம்ன்றது சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுது. அதே மாதிரிதான் புயல் இடி மழை எல்லாமே.

6. கல்யாணம்ன்றது இரண்டு பேரு ஒருத்தர் இன்னொருத்தரை எப்படி ஏமாத்தறதுன்னு காலமெல்லாம் கண்டுபுடிக்கிற முயற்சி. - Vicki Baum

7. கல்யாணம்ன்றது சிறந்த கண்டுபிடிப்பு. சைக்கிள் ரிப்பேர் கிட் மாதிரியே. - Billy Connolly

8. கல்யாணம்ன்றது சராசரி மனுசனுக்கு அதிக செலவு செஞ்சி அவனோட துணிய துவைச்சு வாங்கற விஷயம். - Burt Reynolds

9. கல்யாண மோதிரம்ன்றது சின்ன சைஸ் கைவிலங்கு.

10. கல்யாணம் பண்ணிக்கங்க. நல்ல பெண்ணா கிடைச்சா நீங்க சந்தோஷமா இருப்பீங்க. இல்லாட்டி உலகத்துக்கு ஒரு தத்துவ ஞானி கிடைப்பார். - சாக்ரடீஸ்.

-----------------------------------------------------------

Tuesday, January 02, 2007

ஈ-மெயிலில் வந்த உருக்கமான கதை



ஈ-மெயிலில் வந்த உருக்கமான கதை

மொழி பெயர்ப்பு மட்டுமே நமது... இனி மின்னஞ்சல்...


பெண்கள் மிக அருமையானவர்கள். அதே நேரத்தில் ஆண்களும் அவர்களுக்கு நிகராக அருமையானவர்களே. இந்த கதை சற்று பெரியதாக இருந்தாலும் படிக்க வேண்டுகிறேன். மேலும் இதை தாங்கள் அறிந்த அருமையான ஆண்களுக்கு அனுப்ப வேண்டுகிறேன். இனி கதை...
--------------------------------------------------

எங்களுடையது நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாரம்பரிய முறைப்படி நடந்தது. எங்கள் பெற்றோரே அனைத்தையும் முடிவு செய்தார்கள். எனது ஒரே விருப்பம் பெண் அவளும் வேலைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பதே. எங்கள் புகைப்படங்கள் பரிமாறப்பட்டு ஜாதகங்கள் பரிமாறப்பட்டு பொருந்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாங்கள் தொலைபேசியில் அறிமுகமில்லாத இருவர் என்ன பேசுவார்களோ அது போல குறைந்த அளவே பேசினோம்.

அவள் பெங்களூரில் ஒரு கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளர். திரைப்படங்களை விட கெமிஸ்ட்ரி பாடங்களை பெரிதும் விரும்பக்கூடியவள். எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. எனக்கு விடுமுறை கிடைக்காது என்பதால் விரைவிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பத்தே நாள் விடுமுறை. அனைத்தும் வீட்டினரால் செய்யப்பட்டது. எனக்கு குறுகிய காலமே இருந்தது. கல்யாணம் ஆன இரண்டே நாட்களில் நாங்கள் இந்தியாவை விட்டு பறக்க வேண்டியிருந்தது. நாளை என்ற ஒன்றே இல்லாதது போல் அவள் அழுது கொண்டிருந்தாள். விமானத்தில் அவள் என்னிடம் எதுவும் பேசவில்லை.

ஒரு பாரம்பரியமான இந்தியப்பெண் இப்படித்தான் இருப்பாள் என்று அமைதியாக இருந்தேன்.
சீக்கிரம் இது சரியாகி விடும் என்று நம்பினேன். வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அதிகம் பேசவில்லை. மூலையில் அமர்ந்து தொலைக்காட்சியை வெரித்தபடி இருந்தாள். முதல் இரண்டு நாட்கள் எனக்கு குவிந்து இருந்த வேலைப்பளுவினால் அவளை சற்று கவனிக்க முடியவில்லை.

ஒரு வாரம் இப்படியே கடந்தது. ஒரு நாள் அமைதியாக அவளருகே அமர்ந்து என்ன பிரச்சனை என்று கேட்டேன்.


"என்னை ஏன் இங்க கொண்டு வந்தீங்க?"


"வாட் டூ யூ மீன். என்ன ஆச்சு".

"நான் வீட்டுக்கு போகணும்."

"இதுதான் நம்ப வீடு."

"இல்லை. நான் வீட்டுக்கு போகணும். என்னை திருப்பி அனுப்பிடுங்க."

"இங்க பாரு. எல்லோருக்கும் முதல் தடவை வீட்டை விட்டு வர்றப்ப அப்படித்தான் இருக்கும். எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது. இது சகஜம்தான். தானா சரியாயிடும். நான் என் வேலையில கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். சாரி. நாம இந்த வார கடைசியில வெளிய போகலாம். இங்க இருக்கற என்னோட நண்பர்களையெல்லாம் பார்ப்போம். எல்லாம் சரியாயிடும். என்ன."

"எனக்கு இந்த இடம் பிடிக்கல. என்னோட ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ், காலேஜ் எல்லாத்தையும் நான் மிஸ் பண்றேன். நான் வீட்டுக்கு போகணும்."

"ஒரு நிமிஷம் யோசிச்சி பாரு. நீ என்ன நினைச்சிருக்க. அப்ப நீ போயிட்டு திரும்ப வரவே போறதில்லையா?"

"ஆமா"

"இது பைத்தியக்காரத்தனமா இருக்கு".

"நீங்க அப்படி நினைச்சீங்கன்னா அப்படித்தான்".

"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத. உன் வாழ்க்கையில வேற யாராச்சும் இருக்காங்களா?. பதில் சொல்ல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லலாம்"

"இல்லை. நான் வீட்டுக்கு போகணும். இப்ப நீங்க என்ன அனுப்பல 911 போட்டு போலீஸை கூப்பிடுவேன்."

"கொஞ்சம் அமைதி. யோசிச்சி பாரு. நம்ம அப்பா அம்மாவை நினைச்சு பாரு. நமக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கூட ஆகலை. அதுக்குள்ள வீட்டுக்கு போகணும்னு சொல்ற.
கல்யாணம் ஆனா இங்கதான் வரணும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா. என்ன நினைச்சிருக்க. இப்ப நீ திரும்ப போனா நம்ம கல்யாணம் என்ன ஆகறது?"

"நான் உங்கள குறை சொல்லலை. பழி என் மேலயே இருக்கட்டும். இது என்னோட தப்பு. இவ்வளவு நாள் நான் எங்க வீட்டை விட்டு இருந்ததில்லை. நீங்க வேணும்னா இந்தியா வந்துடுங்க".

"எனக்கும் தான் அப்பா அம்மா இருக்காங்க. நீ கேக்கறது ரிடிகுலஸ்."

அவள் மனம் மாறுவதாய் தெரியவில்லை. நான் வீட்டினரை தொலைபேசினேன்.
எனது முடிவு என்று அவர்கள் சொல்லி விட்டார்கள். நான் அவளுக்கு விமானச்சீட்டு வாங்கி அடுத்த நாளே அவள் கைகளில் கொடுத்தேன். இரண்டு நாட்களில் அவள் கிளம்ப வேண்டியிருந்தது. எதுவும் அவளை சமாதானப்படுத்தவில்லை. குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்னை விட்டு பறந்து சென்றாள். என் மனதை தொடுமளவு அவளுடைய அருகாமை இது வரை இருந்ததில்லை என்பதால் எனக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் நான் தவறு செய்து விட்டதாக என் மனசாட்சி சொல்லிக் கொண்டிருந்தது. எனக்குள்ளே நான் இல்லையென்று மறுத்துக் கொண்டிருந்த போதும் குற்ற உணர்வில் குறுகிக் கிடந்தேன்.

அவளை தொலைபேசியில் அழைத்தேன். அதிகம் பேசவில்லை. தனது பெற்றோரை விட்டு தன்னால் வர இயலாது என்பதை அவள் மீண்டும் தெளிவாக்கினாள்.

அவளது பெற்றோர் என்னிடம் மிக வருந்தினார்கள். ஆனால் அவர்களும் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தார்கள்.

எனக்கும் என் வாழ்வில் சில விருப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் எவையும் ஆழமானவை அல்ல. நான் பள்ளியில் படிக்கும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு பெண்ணின் வீட்டு தொலைபேசி எண்ணை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறேன். பிறகு கல்லூரியில் எல்லோரையும் கவர்ந்த ஒரு பெண் என்னிடம் பேசியபோது மிகவே மகிழ்ந்திருக்கிறேன். பிறகு அமெரிக்க கல்லூரி காலத்தின் போது எனது நகரத்தை சேர்ந்த ஒரு பெண். அவளிடம் பேசும்போது வீட்டிலிருப்பதாய் உணர்வேன். அவர்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் மறந்திருக்கிறேன். விலகியிருக்கிறேன். ஆனால் அவர்கள் வேறு. இவள் வேறு. இவள் என் மனைவி. இவளை விட்டு நான் எவ்வாறு விலக முடியும்.

நான் எனது வேலையை விடுவதென முடிவு செய்தேன். வீட்டிற்கு திரும்பினேன். நான் திரும்புகிறேன் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். நான் எனது வீட்டில் மூட்டை முடிச்சுகளை வீசியெறிந்து விட்டு முதல் வேளையாக அவளது கல்லூரிக்கு சென்றேன்.
வாயில் காவலன் விடாத காரணத்தால் வெளியே காத்திருந்தேன். அவளது வகுப்புகள் முடியட்டும் என்று.

தனியே வெளியே வந்தாள். தூக்க முடியாமல் ஒரு பையை தூக்கியபடி பேருந்து நிலையத்தை நோக்கி சென்றபடி.

நான் அவளை பின்தொடர்ந்து மெல்லிய குரலில் கேட்டேன் "உதவலாமா ?"

திரும்பியவள் என்னை பார்த்தாள். அவள் கண்கள் மலர்ந்தன. கட்டியணைக்கும் உரிமையில்லாமல் விலகியே நான் புன்னகைத்தபடி.

அவள் பார்வையில் பல நூறு கேள்விகள்.

"உனக்காகத்தான் உன்னுடைய நகரத்திற்கு வந்திருக்கிறேன். நீ எதையெல்லாம் இழக்க விரும்பவில்லை என்பதை எனக்கு காட்டுவாயா?"

ஒரு வாரம் பறந்தோடியது.

அனைத்து வசதிகளுடன் வீட்டில் ஒரு குழந்தையைப் போல் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.

காலை அவள் எழுந்திருப்பதற்காக அவளது காப்பி காத்திருந்தது.
அவள் அணிவதற்கான உடைகள் அழகாக தயாராய் வைக்கப்பட்டிருந்தது.

காலை உணவருந்தி கிளம்புவாள். பேருந்தில் ஒரு மணி நேர பயணம். சன்னலோர இருக்கையில் அமர்ந்து புத்தகம் படித்தபடி. பிறகு கல்லூரி. வகுப்புகள். பாடங்கள். மாலையில் அயர்ச்சியாக வீடு திரும்பல். மாலை பேருந்து பயணம் சில சமயம் நின்றபடி கூட தனது பையை தூக்க முடியாமல் தூக்கியபடி. மாலை வீடு திரும்பி ஏதாவது சாப்பிட்டு விட்டு தனது தோழியை பார்க்க கிளம்புவாள். சில நாள் வீட்டில் தொலைக்காட்சியில் பாடல்கள் கேட்டபடி இருப்பாள். தனது தந்தை வந்ததும் அவரோடு சேர்ந்து இரவு உணவு. பிறகு தாயால் தட்டிப் போடப்பட்ட படுக்கை.

வாரக் கடைசி நாட்களும் வித்தியாசமாக இல்லை. வெகு நேரம் கண்விழித்து பின் தூங்கி காலை தாமதமாக எழுந்து சாப்பிட்டு பிறகு தொலைபேசத்தொடங்குவாள். பிறகு மாலை கோவில் மற்றும் அவளது பாட்டு டியூசன். பிறகு இரவு நேர உணவு வெளியில். பின்னர் தாமதித்து வீடு திரும்பல். இதுதான் அவள் வாழ்க்கை முறை. அனைவரும் விரும்பக்கூடியது. மகிழ்வானது. தேவைகள் அதிகம் இல்லாதது.

எனவே நான் அவளது வாழ்க்கையில் ஒரு வில்லனாகத்தான் நுழைந்து இருக்கிறேன்.

நான் அவளை புரிந்து கொண்டதாக சொன்னேன். இதே நகரில் அவளது பெற்றோர்களை விட்டு வேறு ஒரு வீட்டில் இருக்கலாம் என்று தெரிவித்தேன். எனது பெற்றோரோடு இருக்கக் கூடாது என்று அவள் சொன்னதை ஒத்துக் கொண்டேன்.

நாங்கள் ஒரு சிறிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம். அவள் எதையும் அறிந்தவளாயில்லை. அனைத்தும் அவளுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. கற்றுக் கொள்ள துவங்கினாள்.
அவளது பொறுப்புகளையும் எனது நிலையையும் அவளுக்கு புரியவைக்க வேண்டி இருந்தது. காலை எழுந்ததும் அவளுக்கு காப்பி தர வேண்டியிருந்தது. சில விதிகளை அவளே ஏற்படுத்தினாள். பிறகு அவற்றை அவளே முறித்தாள்.

என்னைப் பற்றி அவள் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. சில நேரம் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரிடம் சென்று விடுவாள். பிறகு நான் சென்று அழைத்து வர வேண்டியிருக்கும். மெல்ல மெல்ல அவள் திருமண வாழ்வை புரிந்து கொள்ள துவங்கினாள். எனக்கு முன்னெழுந்தாள். சமையலுக்கு முயற்சித்தாள். மெல்ல திரைப்படங்களுக்கு வர, எனது நண்பர்களை சந்திக்க, அவளது கல்லூரிக்கு என்னை அழைக்க, அவளுக்கு நான் சேலையுடுத்தி விட, என்னுடன் நடனமிட, எனக்கு கெமிஸ்ட்ரி சொல்லி தர, அவளது விருப்புகளை பகிர, என்னுடன் கிரிக்கட் விளையாட, என்னை சமயங்களில் அழ விட. வாழ்க்கை மகிழ்ச்சியானது. அவளும் மாறலானாள். ஒரு நாள் அவள் மன்னிப்பு கேட்க.. அது தேவையற்றது என்று நான் சொல்ல.. மெல்லவே அவள் நான் விரும்பும் மனைவியாய் மாறி அமைந்தாள்.

இன்று எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும். இப்போதும் சிலநேரம் குழந்தையாய் அடம் பிடிப்பாள் ஆனால் உரிமையோடு. சில சமயம் அவள் போலீசை கூப்பிட இருந்த தருணங்களை நினைவு கூர்ந்து சிரிப்போம்.

நான் மட்டும் எனது வேலையை விட்டு திரும்பாது இருந்தால் எத்துணை மகிழ்ச்சியான வாழ்க்கையை இழந்திருப்பேன்.

வாழ்க்கை எப்போதும் இது போன்ற கஷ்டங்களை கொண்டதே.

ஒன்று நாம் அதை மாற்ற முயல வேண்டும். அல்லது நாமே மாறி விட வேண்டும்.