Monday, September 24, 2007

ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி

ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது.

செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு.

நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம்.

இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ?
தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும்.
அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா.

இதனால
1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது.
2. ராமர் பிரிட்ஜ் டேமேஜ் ஆவுது.

அதனால மாற்றுத் திட்டம் தேவை.

அதனால நாம சூப்பரா யோசிச்சு புதுசா ஒரு கால்வாய் வெட்ட பிளான் ஒண்ணு கீழே போட்டிருக்கிறோம்.
இதும்படி கால்வாயை கடல்ல வெட்டாம ஊருக்குள்ள வெட்டலாம்.

தூத்துக்குடியில இருந்து கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியா திரும்பி நாகப்பட்டணத்துல ஜாயின் பண்ணலாம்.

இதனால...
1. நாட்டுக்குள்ள வெட்டறதால மீன் எதுவும் சாகாது.
2. ராமர் பிரிட்ஜ், டேமேஜ் பிரிட்ஜ் ஆவாது.
3. லோக்கல் கவர்ன்மெண்ட் கப்பல் டிரான்ஸ்போர்ட். மதுரையில இருந்தும் திருச்சியில இருந்தும் சென்னைக்கு கப்பல்ல போகலாம்.. நினைச்சி பார்த்தாலே சூப்பரா இருக்கு இல்லை.

Friday, September 21, 2007

நாம எதுக்கு திரும்பி வரோம்ணா...

வாழ்க்கை ஒரு வட்டம். நாம எங்க இருந்து வுட்டு போறமோ அங்கேயேதான் திரும்பி வரோம். நானும் வாரேன்னு கிளம்பிட்டு பார்த்தா திரும்பி இங்கயேதான் வந்து நிக்கிறேன்.

நாம எதுக்கு போறோம்னு முதல்ல இங்கதான் சொல்லியிருந்தேன். அரைகுறையா எழுதிக்கிட்டிருக்கோம்னு ஃபீல் பண்ணி கொஞ்ச நாள் பதிவு போடாம ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கறேன்னுதான் அங்க சொல்லியிருந்தேன்.
நிறைய புஸ்தகம் படிச்சு அரைபிளேடு அறிவாளி பிளேடு ஆக போறேன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் வேற விட்டுருந்தேன். அது நம்மால ஆவறது இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.
வலைப்பதிவுல எழுதறதுக்கு தமிழ் படிக்க டைப் அடிக்க தெரிஞ்ச அரைபிளேடே போதும். அரிஸ்டாடில் தேவையில்லைன்ற ஞானோதயம் நமக்கு லேட்டாதான் வந்துச்சு.

நம்ம முற்றும் பதிவுக்கு வந்த அனானி பி்ன்னூட்டம் இந்த "பகுத்தறிவு சிங்கத்தை" பார்த்து "ஆன்மீக ஆனை" ன்னு சொன்னதால இந்த சிங்கம் இங்க சவுண்டு வுட்டுட்டு சைலண்டாயிடுச்சு.
நாம சவுண்டு வுட காரணம் பதிவாளனை அவன் எழுத்தை வச்சு சாதி கண்டுபுடிக்க பார்க்காதீங்கன்றதுதான். ஆனா அந்த சவுண்ட வெச்சே நாம இந்த சாதிதான்னு நிறைய பேரு நினைச்சுக்னதுதான் படா தமாஷ்.


திரும்பி வந்து பார்த்தா அனானி ஒருத்தர் நம்மளை அயிருன்னு சொல்லி திட்டிட்டாருன்னுதான் நான் ஜகா வாங்கிட்டேன்ற மாதிரி இங்க பேச்சு அடிபடறமாதிரி தெரியுது.
இந்த மறத்தமிழனுக்கு இப்படிபட்ட தப்பபிப்ராயத்தோட திரும்பி போக மனசு இல்லை.
பின்னூட்டமொன்றில் அன்பு தம்பி லக்கியார் "அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது" என்று சொல்லியிருந்தார். அருமை அண்ணன் முகமூடி அவர்களும் அரைபிளேடு அயிரா என்று தன்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நமக்கு தெரியாமலேயே "அரைபிளேடு அயிரா?, அயிரை மீனா?" என்ற மாபெரும் கேள்வியை கிளப்பியிருக்கிறோம் என்று தெரிகிறது.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு (!) நமக்கிருப்பதை உணர்கிறோம்.
நாம ஏற்கனவே சொன்ன மாதிரி நாம மனுச சாதிதான் என்பதை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறோம்.

போரடிக்கும் பக்தி பஜனைகளோ, சலித்துப் போன நாத்திக வாதங்களோ இரண்டிலிருந்தும் விலகி நின்று வாழ்க்கையை வாழ்க்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரித் தமிழன் நான்.

யாராச்சும் இரண்டு பேர் கொள்கைன்ற (!!) பேர்ல அடிச்சிக்கிறீங்களா. ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேல்யூக்காக வேடிக்கை பார்க்கலாம். என்கிட்ட வந்தீங்கன்னா எந்த கொள்கையையும் கட்டி காப்பாத்த வேண்டிய தேவை நமக்கு இல்லை.
அப்பாவி பொதுமக்களுக்கு அன்றைய பிழைப்பை பார்ப்பதை தவிர வேறு கொள்கைகளுக்கு நேரமேது.
வீண் வாத விவாதங்களால் பயனில்லை. நேரமுமில்லை. பொழைப்ப பார்க்க போகணும் சாமிங்களா..

மிஞ்சிப் போனா ஐநூறு இன்டலக்சுவல்ஸ் படிக்கிற எடத்துல என்னை மாதிரி அரைவேக்காடு ஆளு எயுதி பெரிய கொள்கை புரட்சியெல்லாம (!!) செய்ய முடியாது அப்படின்னு நமக்கு தெளிவா தெரியும். நாம இங்க சும்மா ஜாலியான பதிவுங்களை படிச்சுக்னு ஜாலியா பதிவு எழுதிக்னு இருக்கலாம்னுதான் இருக்கோம்.

நம்மள மாதிரி அரைவேக்காடுக்கெல்லாம் இது இடமில்லையோன்னு நினைச்சு நாம ஜகா வாங்க... போட்டாரு நம்ம சர்வேசனார் ஒரு சர்வே.

அதுல திரும்பி வரணும்னு மெஜாரிட்டி ஓட்டுக்கள (56.64%) வாங்கி உங்களோட அன்பு கட்டி இழுக்க மீண்டும் வந்து எனது பதிவுலக ஆட்சி பீடத்தில் அமருகிறேன்.

என்னாது. போங்க.. போங்கன்னு 30.09% ஓட்டு போட்டு இருக்காங்களேன்றீங்களா. ஜனநாயகத்துல ஆட்சியமைக்க மெஜாரிட்டிதான் முக்கியம்.. எதிர்த்து விழுந்த ஓட்டெல்லாம் கணக்குல வராதுன்ற அடிப்படை கூட தெரியாமலா இருப்பீங்க.

ஆங்.. அப்ப நிறைய மொக்கை பதிவுகள் வரும் அப்படின்னு எதிர்பார்க்குறீங்களா...

ஆதரித்து அன்பால் என்னை கட்டிப்போட்ட என் வாசக பெருமக்களே.. தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தங்களுக்காக கடமையாற்ற டெல்லி செல்வதால் நேரம் கிடைக்கும் போது மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தொகுதி பக்கம் வந்து பதிவு சேவை ஆற்றுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

தேர்தல் அதிகாரி சர்வேசனார் அவர்களுக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் பின்னூட்டி கடமையாற்ற திரும்பி வா என்று அழைத்த நண்பர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நன்றி.

Tuesday, September 11, 2007

கடைசியாய் சில வார்த்தைகள்

கடைசியாய் சில வார்த்தைகள்


பெரியாரின் சமூக பணிகளுக்காக பெரிதும் கடன்பட்ட தமிழர்களில் ஒருவனான நான் பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார் என்றதும் தமிழுணர்வு மேலோங்கி நான் ஒரு பதிவிட்டதும்

தமிழனுக்கு காலமெல்லாம் பாடுபட்ட பெரியார் தமிழின் உன்னத இலக்கியத்தை ஏனப்படி சொன்னார் என்று கேள்வியெழுப்பியதும்

பெரியார் தமிழ் என்ற இரண்டு குறிச்சொற்களை கொண்டு கூகுளிய போது பெரியார் தமிழுக்கு எதிரான சொன்னவை மட்டுமே கிடைத்தன பாராட்டி சொன்னவை ஒன்றுமே கிடைக்கவில்லையென்பதும்

பெரியாரின் புகழ்பாடும் நூற்றுக்கணக்கானவர்கள் நிறைந்த வலையுலகில் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் பெரியார் தமிழ்ப்பணியே ஆற்றவில்லையா அல்லது பெரியாரின் தமிழ்ப்பணிகளை யாருமே ஆவணப்படுத்தவில்லையா என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது

பெரியாரை விமர்சித்தவுடன் எனது பின்னணியை ஆராய்ந்து கண்டுபிடித்த (!!!!) சில அனானி பின்னூட்டங்கள் இதோ
எனது சாதியை கண்டுபிடித்த அனானி(கள்) வாழ்க

வலையுலகில் எதையும் விமர்சிக்க வேண்டுமெனில் சாதிப்பெயரை சொல்லிவிட்டுதான் விமர்சிக்க வேண்டுமெனில்

எனது சாதி மனித சாதி

மீண்டும் வரலாம் என்று எனக்கு இருந்த கடைசி ஆசையையும் துறந்து

இந்த வலைப்பூவை சாதிக்கு தின்னக்கொடுத்து

குறைந்த பட்சம் பின்னூட்டிய அனானி(கள்)யாவது எனது வெளியேற்றத்தில் மகிழ்வார் என்ற மகிழ்வோடு மொத்தமாய் விடை பெறுகிறேன்

பின்னூட்டப் பெட்டியை மட்டுறுக்காமல் திறந்து விட்டேன்
அனானி(கள்) வந்து ஆசைதீர வேண்டிய சாதி பெயரை சொல்லி திட்டிக்கொள்ளவும்

(எனது கடைசி முற்றுப்புள்ளியை போன முற்றும் பதிவிலேயே போட்டு விட்டதால் இந்த பதிவில் முற்றுப்புள்ளிகள் இல்லை)


நன்றிகளுடன் மொத்தமாய் விடைபெறும்
அரைபிளேடு

Sunday, September 09, 2007

நன்றி. வணக்கம். வலைப்பதிவு முற்றும்

நண்பர்களுக்கு...

பல்வேறு காரணிகளால் வலைப்பதிவு எழுதுவதற்கு விடைகொடுக்க முடிவெடுத்துள்ளேன்.

தொடர்ந்து எனது மொக்கை மற்றும் ஜல்லி பதிவுகளைப் படித்து வந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தனிப்பட்ட முடிவு.. எந்த நிகழ்வும் இதற்கு காரணமல்ல.

எனது வலைப்பூவை நானே சுயமதிப்பீடு செய்ததில்..

1) சிரிக்க வைக்க முயற்சி செய்து சிலசமயங்களில் வெற்றிபெற்றுள்ளேன்.
2) பொது விவாதங்களை பதிவாக்கும் போது மையக்கருத்தை எப்போதாவது தொட்டிருக்கிறேன்.
3) நானும் பதிகிறேன் என்று தொடர்ந்து குப்பைகளை கொட்டி வந்துள்ளேன்.

வாசித்தலையும் பரந்த விரிவான கருத்து ஆழமும் கொண்டு எழுதவேண்டிய தேவையை உணருகிறேன்.
விரிவான கருத்துத் தேடல்களை நோக்கி நகருகிறேன். "அரை"குறையாய் இருப்பதிலிருந்து "முழு"மையாய் மாறும் முயற்சி இது.

ஒரு பார்வையாளாக இங்குதான் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பேன்.
திரும்பி எழுத வருவேனா என்பது தற்போதைக்கு.... "தெரியாது".

அனைவருக்கும் நன்றிகள். இதோ என் கடைசி முற்றுப்புள்ளி "."

அன்பன்
அரைபிளேடு

தொண்ணூற்றி ஏழு சதவீதத்தில் ஒருவனின் குரல்

இவ்வுலகில் தனது மொழியின் இலக்கிய செல்வங்களை தானே இகழ்ந்து பேசும் தமிழினத்தைப் போலொரு இனம் வேறு எங்காணும் இருக்குமா என்பது சந்தேகமே.
இலக்கியங்கள் படிப்பதில் உள்ள உனது சோம்பேறித்தனத்தால் என்னரும் தமிழனே... நீ உன் தாய்மொழியாம் தமிழையல்லவா இகழ்ந்து கொண்டிருக்கிறாய்.

ஆரிய திராவிட மாயைகளை விட்டு வெளியே வா. நீ தமிழன். உன் மொழி தமிழ். இதை மறவாதே.

மதமென்னும் மூர்க்கம் தலைக்கேறி பிதற்றாதே. மதஎதிர்ப்பு என்னும் மயக்கத்தால் உன்கையை நீயே வெட்டிக் கொள்ளாதே.

பகுத்தறிவைக் கைக்கொள். தமிழை தமிழிலக்கியங்களைப் படி. எதையும் ஆராயாமல் இன்னார் சொன்னார் என்னார் என்று ஏற்காதே அல்லது விலக்காதே.

உனக்கென்று சுயஅறிவோ புத்தியோ இல்லையா என்ன. தமிழொன்றும் வெறும் மூட இலக்கியங்களை மட்டும் கொண்ட மொழியன்று. சித்தர் பாடல்களை படி. அவற்றிலும் பகுத்தறிவு சுடர்விடுவதை காண்பாய்.
பண்டைத்தமிழர் வாழ்வியலை காட்டும் சிலம்பை மூடமாதொருத்தி பற்றிய காவியம் என்று புறந்தள்ளினால் பண்டைத்தமிழர் வாழ்வு குறித்த ஒரு காவியத்தை புறந்தள்ளுகிறாய்.
சோழ நாட்டின் சிறப்பை விவரித்து, பாண்டி நாட்டின் தெருக்களில் நடந்து சேரநாட்டில் முடிந்து தமிழகம் முழுவதையும் படம் பிடித்துக் காட்டும் சிலம்பு தனியொரு மன்னனையோ கடவுளையோ பாடியது அல்ல. ஒரு சராசரி தமிழனின் வாழ்வியலை சொன்ன நூல்.

தனது நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்று வகுத்து வாழ்ந்தவன் தமிழன். முருகனும், மாலவனும், இந்திரனும், வருணனும், கொற்றவையும் முறையே இந்நிலத்துக்குரிய கடவுள்கள் என்று காட்டுகிறது தமிழ் இலக்கியங்கள். தமிழன் கடவுளை வணங்காத காட்டுமிராண்டியல்ல, வெளியே இருந்து ஒருவர் வந்தேகி கடவுளை கற்பிப்பதற்கு. கோவில் கட்டுவதிலும் தமிழனுக்கென்று ஒரு தனிப்பாங்கு. அவன் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அவனது கோவில்கள் விளங்குகின்றன. இத்தகு கோவில்களை வடஇந்தியா முழுவதும் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைப்பதில்லை. வடக்கிருந்து வந்த ஆரியர் கட்டுவித்த கோவில்கள் இவையெனில் இத்தகு கோவில்கள் ஏன் வடக்கில் இல்லை.

மூன்று சதவீதம் 97 சதவீதத்தை விழுங்கிவிட்டது என்ற குரல் வரும்போதெல்லாம் 97 சதத்தில் ஒருவனான எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது என்பதை கண்ணெதிரே காண்கிறோம்.

சமூக கலகக்காரராக பெரியார் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டார். அதன் பலன்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், பெரியாரே விரும்பாத பக்கவிளைவுகளாக ஜாதிக்கொரு கட்சி என்று இருந்தபோதிலும்.
இன்னமும் மூன்று சதவீதத்தினர் நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்வோமானால் பெரியார் தோற்றுவிட்டார் என்று சொல்வதாகும். பார்ப்பனீயக் கருத்துக்கள் செத்த பாம்புகள். அதை அடிப்பதற்கு செலவிடும் நேரத்தை தமிழ் வளர்சிக்கு செலவிடலாம்.

97 சதத்தாரான நாம் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக மிக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று நமக்குள் நாமே வர்ணபேதங்களை கட்டியமைத்து எழுப்பியுள்ளோம். மொத்த சாதிக்களையும் பட்டியலிட்டு அரசாங்கம் அட்டவணைப்படுத்த நாம் நமது சாதியமைப்பை கட்டிக் காத்து வருகிறோம்.

உண்மையான சாதியொழிப்பு என்பது அனைவரும் சமம். சாதிகள் இல்லை என்பதாகவல்லவா இருக்க வேண்டும். சுதந்திரத்தின் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி ஒழியாதது யார் குற்றம். தனிப்பட்ட பிரிவாரை மட்டும் காரணம் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து.

ஒட்டுமொத்த 100 சதவீதமும்தான் காரணம். அடிப்படையில் நம் ஒவ்வொருவரிடமும் சாதிஉணர்வு நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

சாதி உணர்வு மனதில் வேண்டாம்... அது உங்கள் சாதிசான்றாக காகிதத்தில் மட்டும் இருந்து போகட்டும். இன்னும் ஒரு தலைமுறை அனைவரும் சமமென்ற சமுதாயத்தை படைப்போம். அந்த சமுதாயத்தில் சாதி சொல்லும் காகித குப்பைகளுக்கு கூட இடம் இருக்க வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரை திராவிடன் ஆரியன் என்று யாருமில்லை. தமிழறிந்தவர் யாவரும் தமிழரே.

ஒவ்வொரு தமிழனுக்கும் தன்னுடைய மதத்தையோ இறைவனையோ தேர்ந்தெடுத்து வழிபடும் உரிமை உண்டு.

நான் நாத்திகன் என்றால் அது என்னோடு மட்டுமே. அதை என் வாழ்க்கைத் துணையிடம் கூட வலியுறுத்த மாட்டேன் என்னும் போது இன்னொரு தமிழனின் எண்ணங்களை உணர்வுகளை சிறுமைப்படுத்த துணியமாட்டேன்.

இந்திய அரசலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளித்துள்ள
சமத்துவ உரிமை
பேச்சு எழுத்து கருத்து சுதந்திரம்
கலாச்சார மற்றும் கல்வி உரிமை
மத உரிமை
ஆகியவற்றை இணையத்திலும் காப்போம்.

உன்னை காயப்படுத்தாத என்னிடமுள்ள எனது கருத்துக்களுக்காகவும்....
என்னை காயப்படுத்தாத உன்னிடமுள்ள உன் கருத்துக்களுக்காகவும்..

கருத்து பேதங்கள் பல இருந்தாலும் மொழியால் நாம் தமிழரென தமிழுணர்வு கொள்வோம்.

Saturday, September 08, 2007

அன்புள்ள தமிழ்விரோதி தந்தை பெரியாருக்கு

அன்புள்ள பகுத்தறிவு பகலவனே...

தங்கள் பகுத்தறிவு கருத்துக்களால் கவரப்பட்டு உணர்வும் பகுத்தறிவும் பெற்ற பலரில் நானும் ஒருவன்.

தங்கள் கருத்துக்களால் சுயமரியாதை ஊட்டப்பட்டவன்.

இந்த சமூகத்தின் கடைநிலை மக்களுக்கு விடுதலை உணர்வை சுயமரியாதையை ஊட்டியவர் தாங்கள் என்பதால் தங்கள் மேல் எனக்கு பேரன்பும் பெருமதிப்பும் என்றும் உண்டு அவர்களில் ஒருவனாக.

எதையும் புத்தியைக்கொண்டு யோசித்து ஏற்பதுதான் பகுத்தறிவு என்ற தங்கள் பகுத்தறிவு வாதம் என்னுள் பகுத்தறிவை ஊட்டியுள்ளது.

அதே பகுத்தறிவு தங்கள் சொன்ன கருத்துக்களையும் ஆராய்ந்து ஏற்பதுதான் அல்லவா.

எனது பகுத்தறிவு தங்களை தமிழ் இனத்தை காக்க வந்த மீட்பராகவோ, மெசையாவகவோ அல்லது இறைத்தூதராகவோ காணவில்லை.
மதங்களை விலக்கியெரிய சொன்ன பகலவனே, தங்கள் கருத்துகள் தொகுக்கப்பட்டு ஒரு புனிதநூலாக்கப்பட்டு "பெரியார்மதம்" ஒன்று நிறுவப்படுவதை தாங்களே ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

எனக்கு உணர்வும் சுயமரியாதையும் ஊட்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதராக கொள்ள என் பகுத்தறிவு இடம் தரவில்லை ஐயனே.

தங்களை இரத்தமும், சதையும் ஆசாபாசங்களும் உள்ள ஒரு சகமனிதராகவே எனது பகுத்தறிவு சொல்கிறது.

ஐயனே, தமிழினத்தை பீடித்த ஆரிய மாயையை கலைந்தெறிந்த தங்களுக்கு தமிழினம் காலத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறது. இந்த இனம் இன்றல்ல தான் இருக்கும் வரை தங்கள் புகழ் பாடும்.

ஆனால் ஐயனே என்னுள் கேள்விகள் இருக்கின்றன...

திராவிட இயக்கம் கண்டீர். திராவிட இனம் என்பது தமிழர் தெலுங்கர் கன்னடர் மற்றும் மலையாளத்தவர் அனைவரையும் உள்ளடக்கியது.

ஆனால் தங்கள் திராவிட இயக்கம் தமிழ்நாட்டுக்குள் மட்டும் சுருங்கிப்போனது ஏன் ஐயனே.

ஆரியமாயையை கலைந்த தாங்கள் திராவிட மாயையை தமிழனுள் விதைத்ததின் பின்னுள்ள அரசியல் என்ன.

சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், ஆரியனிடமிருந்து தமிழனை விடுவித்த தாங்கள், தமிழனிடம் திராவிட உணர்வுகளை விதைத்தீர்கள்.

ஒவ்வொரு தமிழனிடம் நாம் திராவிடர் என்ற உணர்வு இன்று உள்ளது.

இன்று கர்நாடகத்தில் கன்னடன் தமிழனை தமிழன் என்பதற்காக உதைக்கிறான். மலையாளி முல்லையாறை திறக்க மறுக்கிறான். இவர்களிடம் திராவிட உணர்வு இல்லாத போது தமிழனிடம் மட்டும் திராவிட உணர்வு இருந்து என்ன பயன்.

சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், கன்னட நாயக்கர் என்பதினாலேயே தமிழகம் வாழ் கன்னட மொழிபேசும் மக்களின் நலனையும் மனதில் இருத்தி, தமிழர் இயக்கம் காணாமல் திராவிட இயக்கம் கண்டீர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

தமிழ் தங்களுக்கு புனிதமானதாக இல்லாமல் இருக்கலாம்.

பச்சைத் தமிழனான எனக்கு அப்படியல்ல. அது எனது உயிரில் உணர்வில் கலந்த மொழி. எனது சிந்தையில் கருத்தில் இயைந்த மொழி.

அத்தகு என்மொழியை தாங்கள் "காட்டுமிராண்டி" மொழி என விளித்துள்ளீர்கள், எனது பண்டை இலக்கியங்களை எனது முன்னோர் தந்த பொக்கிஷங்களை குப்பைகள் எனக் கூறியுள்ளீர்கள்.

தங்கள் கன்னடம் தோன்றாத காலத்திலேயே தோன்றிய தமிழர் வாழ்வியலை தெரிவிக்கும் நூலான திருக்குறளை "மலம்" என்று கூறியுள்ளீர்.

இது சுயமரியாதை உள்ள எந்த ஒரு தமிழனாலும் ஏற்க முடியாத ஒன்று.

தங்களால் உடைத்தெறியப்பட்ட ஆரிய விலங்குகள் தொலைவில் உள்ளன. தமிழனான எனக்கு தாங்கள் பூட்டிய "திராவிட விலங்குகளால்" என் கை கட்டப்பட்டுள்ளது.

இந்த விலங்குகளை உடைத்தெறிகிறேன்.

நான் ஆரியனுமல்ல... திராவிடனுமல்ல....

சுயமரியாதையுள்ள பச்சைத் தமிழன்.

என் தாய்மொழியைப் பழித்தவனை தலைவன் என்று கொள்ள மாட்டேன்.

இதற்குமேலும் என் தாய்மொழியாம் தமிழை தாங்களும் தங்கள் "திராவிட" உணர்வாளர்களும் பழிப்பீராயின் "போங்கடா வெங்காயங்களா".

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" - அது பெரியாராக இருந்தாலும், திருவள்ளுவனாக இருந்தாலும்.


அன்புடன்...
ஒரு பச்சைத் தமிழன்.

-----------------------------------------------------------

பிற்சேர்க்கை:

பெரியாரின் எழுத்தை பதியும் தமிழச்சி உள்ளிட்ட தோழர்களுக்கு...

தூங்கிக் கொண்டிருந்த தமிழனை எழுப்பியவர் பெரியார். பெரியாரின் காலகட்டம் சுட்டிக்காட்டி தமிழனுக்கு உணர்வூட்டக் கூடிய காலகட்டமல்ல. எனவே தமிழனின் தலையில் குட்டிக்காட்டி உணர்வூட்டத் தலைப்பட்டார். பெரியாரின் குறள், சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியக் கருத்துக்களை அவ்வாறே காண்கின்றேன்.

தோழர்கள் பெரியாரின் புரட்சிகர எழுத்தை பதியும் போது அதுகுறித்த மேலதிக தகவல்களையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது இதுபோன்ற தவறான புரிதல்கள் வாசகர்களிடம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கும்.

பெரியார் பெருமளவில் படிக்கப்படவேண்டும் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். அது நிறைவேறியதாகவே கருதுகிறேன். பின்னூட்டிய ஆக்கபூர்வமாக விவாதத்தை எடுத்துச்சென்று பெரியார் குறித்த புரிதலை முழுமையாக்கிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்பன்
அரைபிளேடு

Friday, September 07, 2007

பெயரில் என்ன இருக்கிறது ???????????

50 ஆண்டுகளுக்கு முன் தமிழனின் பெயர்கள்...

சுவாமிநாத ஐயர், பிரதாப முதலியார், ராமசாமி படையாச்சி, முத்துராமலிங்க தேவர், ராமசாமி நாயக்கர், அண்ணாமலைச் செட்டியார்.
தமிழனின் பெயரில் அவனது ஜாதி தவிர்க்க முடியாததாயிருந்தது. பெயரைக்கொண்டு ஒருவரின் ஜாதி அடையாளம் தெரிந்தது.

இன்று....

தமிழன் தனதுபெயரில் இருந்த ஜாதி அடையாளங்களை நீக்கி விட்டான்.
அவனது பெயர் ரமேஷ், கணேஷ், உமேஷ், காமேஷ் என்பதாக இருக்கிறது.
ஜாதி அடையாளங்களை துறந்த வகையில் இது உண்மையில் நல்ல முன்னேற்றமே.

ஆயின் இவை தமிழ்ப்பெயரா என்ற கேள்வி எழுகிறது.

இந்த உலகில் நமது பெயரை நமக்கு நாமே வைத்துக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறோம்.
நமக்கு உயிரைத்தந்தவர்கள்... நம்மை தமிழனாய் பிறக்கவைத்தவர்கள்... நமக்கு அளித்த பெயரைத் தாங்கியவர்களாக இருக்கிறோம்.
எனது பெயர் எனது கொள்கைக்கு எதிராக இருக்கிறது.
பெற்றோர் வடமொழிப்பெயர் இட்டுவிட்டனர். எனக்கு தமிழ்ப்பெயர் வேண்டும் என்பதோ...
என்பெற்றோர் தூய தமிழ்பெயர் இட்டனர். எனக்கு வடமொழிப்பெயர் வேண்டும்.... என்பதோ...
ஆயிரம் கனவுகளுடன் நமது பெற்றோர் நமக்கு வைத்த பெயரை மாற்றுவது அவர்களது கனவுகளை குலைப்பதாகும்.

நமது முந்தையதலைமுறை சாதி எதிர்ப்பு உணர்வுகளால் பெயரில் சாதியை தூக்கிஎறிந்துள்ளனர்.
பெயரில் ஜாதி அடையாளத்தை தொலைத்த நாம் உடன் சேர்த்து தமிழ் அடையாளத்தையும் சேர்த்தே தொலைத்துவிட்டோமோ.

தமிழனுக்கு தனது வாயில் நுழையாத "ஷ்' மீது அப்படியொரு மோகம்.
கணேஷ், ரமேஷ் என்று பெயரிட்டு "கணேசு"... "ரமேசு"... என்று கூப்பிடுவதில் ஏதோ ஆனந்தம்.
தன்னையாண்ட ரஜபுதன வீரன் "ராஜா தேஜ்சிங்" கை "ராஜா தேசிங்கு" வாக்கி தமிழ்ப்படுத்தியன் தமிழன்.
ராம் என்ற வடமொழியின் மீது "அன்" என்ற தமிழ் விகுதியை ஏற்று "ராமன்" என்கிறோம். வடமொழியை எடுத்தாண்டாலும் ஒரு காலத்தில் தமிழன் அதை தமிழ்ப்படுத்தியே வந்திருக்கிறான்.
(எ.கா) கந்தன் (ஸ்கந்தா), குமரன்(குமார்), சாமி (ஸ்வாமி).

ஆனால் தற்போதைய பெயர்களில் தமிழ்ப்படுத்துதலும், தமிழக்கான விகுதியும் காணாமல் போவது வியப்பளிக்கிறது.
சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரியான பெயர்களை வைக்கும் பொதுபுத்தி தமிழனுக்கு எப்படி வந்தது....
உற்று நோக்கினால் பெயரிடுதல் என்பது பெரும்பாலும் அந்த அந்த காலகட்டத்தின் ஃபேஷனை பொறுத்து அமைவதும் சமயத்தில் ஒப்பு நோக்கத்தக்கது.
தமிழன் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை துறந்து... தமிழ் அடையாளத்தையும் தூக்கி எறிந்து... வடமொழிப் பெயர் இடுவதன் மூலமாக தமிழன் தனது அடையாளத்தை இந்தியனாக மட்டும் நிறுவி பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டானோ.
நரேஷ், சுரேஷ் போன்ற பெயர்களில் இந்திய அடையாளம் மட்டும்தான் இருக்கிறது.


பெயரில் அடையாளம் என்பது அத்துணை இன்றியமையாததா.
இனம், மதம், நாடு இந்தஅடையாளங்கள் இல்லாத ஒரு பெயர் இருத்தல் இயலுமா.
அனைத்து அடையாளங்களையும் தூக்கியெறிந்து, கட்டுகளையும் உடைத்து பெயரிலிகளாக உலவுதல் சாத்தியமா.
ரமேஷ், உமேஷ், தமிழரசன், மண்ணாங்கட்டி, பிச்சாண்டி, ஜோசப், அப்துல்லா பெயர் எதுவாக இருந்தால் என்ன.
பெயரைவிட பெரியது பெயரைத்தாங்கியவனின் தமிழ்உணர்வுதான் அல்லவா.
பெயரில் என்ன இருக்கிறது.
சந்தனத்தை என்னபெயர் இட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்.

எனது பெயர் எந்த அடையாளமுமின்று வெறுமனெ "ஓ" என்ற ஓசையாக இருந்தால் அது தமிழ் "ஓ"வா அல்லது ஆங்கில "O"வா என்று கேள்வி எழுப்பப்படுமா.

தமிழ்ப்பெயர்கள் மீது எனக்கு தனியாத தாகமுண்டு.
நிலவன், முகிலன், வளவன், மாறன், எழிலன்.... தமிழின் அன் விகுதியுடன் எத்துணை அழகுப் பெயர்கள்.
அதற்காக பெயர்மாற்றம் என்ற பொலிட்டிக்கல் ஜிம்மிக்சில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெயரிடுவதன் மூலம் நமது அடையாளங்களை நமது பெற்றோர் தேர்ந்தெடுத்தனர்.
நாளைய சமுதாயத்தின் பெயர்களை நமது பிள்ளைகளுக்கு இட்டு நாம்தான் தேர்ந்தெடுக்கிறொம்.
எதிர்கால சமுதாயத்திற்கு நற்தமிழ்ப் பெயர்களிடுவோம்...
ஆயினும் பெயரினும் பெரிது தமிழ் உணர்வு. அவ்வுணர்வோடு பிள்ளைகளை வளர்ப்போம்.
நல்லதோர் தமிழ்ச்சமுதாயம் சமைப்போம்.

Thursday, September 06, 2007

உறவில் திருமணம்... கன்ஃபியூசன் அன்லிமிடெட்....

உறவுகளில் திருமணத்துல எனக்கு எப்பவும் ஒரு கன்ஃபியூசன் உண்டு...

இன்னான்னு கேக்கறீங்களா...

என்ன என்ன முறையில உறவில் திருமணம் பாஸிபிள்.... அக்கார்டிங் டு அவர் பாரம்பரியம்...

ஓரு ஆணுக்கான ஆப்சன்ஸ்....
1) அக்காள் மகளை திருமணம் செய்தல்.
2) அப்பாவின் தங்கை/அக்காளின் மகள்.
3) அம்மாவின் தம்பி/அண்ணணின் மகள்.

தெளிவாத்தான இருக்கு என்ன கன்பியூசன் அப்படின்றீங்களா...

ஸ்டடி த ஃபாலோயிங் சினாரியோ...

ஓரு ஆண் தன் அக்காள் மகளை கல்யாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான்.

அந்த பையனுக்கு அப்பாவின் அக்கா = அத்தை.
அதே பையனுக்கு அம்மாவின் அம்மா = ஆயா.


அந்த குழந்தை அப்பாவின் அக்காவை அத்தையாக கருதுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அத்தையின் இரண்டாவது மகள் அப்பாவை வைத்து பார்த்தால் அத்தை மகள். கட்டும் முறை.
அம்மாவை வைத்து பார்த்தால் அம்மாவின் தங்கை சின்னம்மா. அச்சச்சோ...


அப்படின்னா....
அப்பா அக்கா மகளென்று கல்யாணம் செய்த பெண் பையனின் அம்மா...
அப்பாவின் அக்காவான அத்தையின் மகள் என்ற முறையில் பையனுக்கும் கல்யாணம் செய்யும் முறை....

அப்பாவுக்கும் பையனுக்கும் ஒரே பெண் முறைப்பெண் !!!!!!!!!!!!!
ஓ... நோ.... கன்பியூசன்...

யாராச்சும் வந்து எனது கன்பியூசனை கிளியர் பண்ணுங்களேன்.

Tuesday, September 04, 2007

வணக்கம் வாத்யாரே - வாத்யார் தினமாமே...

இன்னிக்கு வாத்தியார் தினமாம்பா....

இந்த இனிய நாளில நம்ம பள்ளிக்கூட காலத்தை கொஞ்சூண்டா கொசுவத்தி சுத்தறம்பா....

அது ப்ளஸ் டூ பள்ளியிறுதி....

நமக்கு தமிழ்வாத்தியார் கிளாஸ்தான் ரொம்ப புடிக்கும். அவரது வார்த்தைகளில் சிந்தாமணி சிந்தும். வளையாபதி வளையும். சிலப்பதிகாரம் சிலம்பாடும். அவரை மாதிரி யாராலயும் தாலாட்டு பாட முடியாது...
அவரது தமிழ் கேட்டு தூங்கியவன் நான்.. ஒரு முறை பிடித்து விட்டார். "இரண்டாவது பெஞ்சில மூணாவது எருமை எழுந்திரு".
"சார்"
"சீவக சிந்தாமணியை எழுதியது யார்?"
கொஞ்சம் திருதிருவுக்கு அப்புறம் புத்திசாலித்தனமாய் "சிந்தாமணிப்புலவர். சார்".
"புத்திசாலி எருமையே... கடைசி பெஞ்சில போய் பீரியட் முடியறவரைக்கும் நில்லு"....
அப்புறம் தமிழ் வகுப்பில் எனது விழிப்புணர்வு அதிகமானது. எனக்கு விழிப்புணர்வு ஊட்டிய தமிழாசான் மறக்க முடியாதவர்.


-----

எங்கள் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நேர் வாரிசு..
"ஒன் நரி ஜம்பிங் ஜம்பிங் ஃபார் திராட்சை" என்ற அளவில் இருந்த என் வக்காபுலரியை விரிவு படுத்தியவர்.
தூங்கும் மாணவர்களை குறிபார்த்து சாக்பீஸ் எறிந்து எழுப்புவார் என்பதால் அவரும் எனக்கு விழிப்புணர்வு ஊட்டியவரே.

---------

இயற்பியல் செய்முறைத்தேர்வு.
திரு திரு என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்.
தனிஊசலை ஆட்டி நான் செய்த சோதனையில் புவிஈர்ப்பு விசை 6.13 என்று வந்திருந்தது. சரியானது 9.8.
நமது சோதனை சாலையில் புவிஈர்ப்பு விசை 6 தான் என்று சொல்லி என்னை தூக்கி விட்ட இயற்பியல் ஆசிரியர் என் ஏணி.

--------

விலங்கியல். தவளையை அறுக்க வேண்டும்.
அவரவர்களையே தவளையை கொண்டு வர சொல்லியிருந்தார் ஆசிரியர்.
என்னருகே வந்தார்.
"என்ன இது"
"தவளை சார்"
"இது தேரை. தவளை கொண்டு வர சொன்னா தேரைய கொண்டு வந்திருக்க. தவளைன்னா ராணா ஹெக்சா டாக்டைலா... சரி ஒழிஞ்சி போ".

---

கொடுக்கப்பட்ட உப்பை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே ஐந்து சோதனை குடுவைகளை உடைத்திருந்தேன்.
உப்பு தீர்ந்து விட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் அவன் உப்பை கடன் வாங்கினேன்.
பல சோதனைகளுக்குப் பிறகு எனது சோதனை குடுவையில் பழுப்பு சிவப்பு பச்சை என வானவில்லின் பல நிறங்களில் வளையங்கள் தோன்ற பழுப்பு வளைய சோதனையில் உப்பு தேறியது என்று முடிவு செய்து "மெக்னீசியம் நைட்ரைடு" சார் என்றேன்.
"இல்லையே உனக்கு நான் குளோரைடுதானே கொடுத்தேன்". உப்பை பரிசோதித்தார்.
"இது நான் உனக்கு கொடுத்த உப்பில்லையே."
"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.

--------

"இந்தா உனக்கு சாமந்திப் பூ. இதுக்கு படம் வரையத் தெரியுமில்லை".
"இல்லை சார். நான் செம்பருத்திதான் படிச்சிட்டு வந்திருக்கேன். செம்பருத்தியே கொடுங்க சார்".
"உன்னையெல்லாம் வச்சிகிட்டு... இந்தா. தொலை".
எனது வாழ்க்கை பாதையில் செம்பருத்தியை தூவிய எனது தாவரவியல் ஆசிரியர் வாழ்க.

------

பரவளையம் அதிபரவளையம் நீள்வட்டம் வகையிடுதல் தொகையிடுதல் என வகை தொகையில்லாத ஒரு பாடத்திடம் நான் மாட்டித் திணறிய போது......
எண்ணித் துணிந்து எனக்கும் கணிதம் வரும் என்பதை எனக்கே உணர்த்திய என் கணிதப் பெருந்தகை...

-------

எல்லோரையும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன்.


அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

--------------------------------------

இறைவன் இருக்கின்றானா ???????????????????

எனது அந்திப்பொழுதொன்றில் கடற்கரையோரம் நின்றிருந்தேன்.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்த கடல்.
அதன் விஸ்தீரணத்தின் விந்தையில் மயங்கியிருந்தேன்.
மெல்ல பரிதிசாய வர்ணத்தின் விந்தைகள் கண்முன்.

மாலை வானத்தில் சிவப்பு வண்ணத்தை குழைத்தது யார்.
மேகப்பந்தலை அவனியெங்கும் அலையவைத்தவன் எவன்.
கடலின் அலைகளுக்கு தரைதொட்டு திரும்ப சொன்னது யார்.
கடற்கரையெங்கும் மணல்படுக்கை பரப்பியவன் எவன்.

மெல்ல பொழுது சாய செவ்வண்ணம் மறைய..
இருளென்னும் போர்வையை யாரிங்கு போர்த்துவது.
வானத்து மின்மினி பூச்சிகள் யாரிங்கு தூவியது
வட்டத் தட்டொன்றை யார் நிலவென வீசியது....

தீண்டி செல்லும் கடற்காற்றை வீசச்சொன்னவன் எவன்.
இதமான குளிரொன்று இதயத்தில் இறக்குபவன் எவன்.
காலைத் தொட்டுச் செல்லும் கடல்நீரே...
ககனம் சுற்றும் காற்றே கண்டதுண்டோ அவனை.

கண்முன் தொடர்ந்து மாறிய காட்சிஜாலங்கள்..
இத்தனைக்கும் ஒளிஓவியன் ஒருவன் இருக்கின்றானா...
இறையொருவன் இத்துணையும் அமைத்து ஒளிந்தானா...
இருக்கின்றான் எனில் எங்கிருக்கின்றான் அவன்.

இல்லையெனில் இவ்வையகமும் அண்டப் பேரண்டமும்
அலையும் கடலும் காற்றும் யாவும் தான்தோன்றியோ...
அண்டப் பேரண்டத்தின் சிறுதுளி புவியெனில்..
இதன் புறத்திருப்பானோ இல்லை அகத்திருப்பானோ.

இறைவனவன் இருப்பும் இன்மையும் இவ்வையத்தின்
இயக்கத்தை இயல்பை மாற்றத் தகையதோ.
எண்ணத்தில் விளைந்த விந்தைகள் விடையின்றி
பொங்கு கடலுக்கு விடைகொடுத்து வீடுசேர்ந்தேன்.