Tuesday, September 04, 2007

வணக்கம் வாத்யாரே - வாத்யார் தினமாமே...

இன்னிக்கு வாத்தியார் தினமாம்பா....

இந்த இனிய நாளில நம்ம பள்ளிக்கூட காலத்தை கொஞ்சூண்டா கொசுவத்தி சுத்தறம்பா....

அது ப்ளஸ் டூ பள்ளியிறுதி....

நமக்கு தமிழ்வாத்தியார் கிளாஸ்தான் ரொம்ப புடிக்கும். அவரது வார்த்தைகளில் சிந்தாமணி சிந்தும். வளையாபதி வளையும். சிலப்பதிகாரம் சிலம்பாடும். அவரை மாதிரி யாராலயும் தாலாட்டு பாட முடியாது...
அவரது தமிழ் கேட்டு தூங்கியவன் நான்.. ஒரு முறை பிடித்து விட்டார். "இரண்டாவது பெஞ்சில மூணாவது எருமை எழுந்திரு".
"சார்"
"சீவக சிந்தாமணியை எழுதியது யார்?"
கொஞ்சம் திருதிருவுக்கு அப்புறம் புத்திசாலித்தனமாய் "சிந்தாமணிப்புலவர். சார்".
"புத்திசாலி எருமையே... கடைசி பெஞ்சில போய் பீரியட் முடியறவரைக்கும் நில்லு"....
அப்புறம் தமிழ் வகுப்பில் எனது விழிப்புணர்வு அதிகமானது. எனக்கு விழிப்புணர்வு ஊட்டிய தமிழாசான் மறக்க முடியாதவர்.

-----

எங்கள் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நேர் வாரிசு..
"ஒன் நரி ஜம்பிங் ஜம்பிங் ஃபார் திராட்சை" என்ற அளவில் இருந்த என் வக்காபுலரியை விரிவு படுத்தியவர்.
தூங்கும் மாணவர்களை குறிபார்த்து சாக்பீஸ் எறிந்து எழுப்புவார் என்பதால் அவரும் எனக்கு விழிப்புணர்வு ஊட்டியவரே.

---------

இயற்பியல் செய்முறைத்தேர்வு.
திரு திரு என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்.
தனிஊசலை ஆட்டி நான் செய்த சோதனையில் புவிஈர்ப்பு விசை 6.13 என்று வந்திருந்தது. சரியானது 9.8.
நமது சோதனை சாலையில் புவிஈர்ப்பு விசை 6 தான் என்று சொல்லி என்னை தூக்கி விட்ட இயற்பியல் ஆசிரியர் என் ஏணி.

--------

விலங்கியல். தவளையை அறுக்க வேண்டும்.
அவரவர்களையே தவளையை கொண்டு வர சொல்லியிருந்தார் ஆசிரியர்.
என்னருகே வந்தார்.
"என்ன இது"
"தவளை சார்"
"இது தேரை. தவளை கொண்டு வர சொன்னா தேரைய கொண்டு வந்திருக்க. தவளைன்னா ராணா ஹெக்சா டாக்டைலா... சரி ஒழிஞ்சி போ".

---

கொடுக்கப்பட்ட உப்பை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே ஐந்து சோதனை குடுவைகளை உடைத்திருந்தேன்.
உப்பு தீர்ந்து விட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் அவன் உப்பை கடன் வாங்கினேன்.
பல சோதனைகளுக்குப் பிறகு எனது சோதனை குடுவையில் பழுப்பு சிவப்பு பச்சை என வானவில்லின் பல நிறங்களில் வளையங்கள் தோன்ற பழுப்பு வளைய சோதனையில் உப்பு தேறியது என்று முடிவு செய்து "மெக்னீசியம் நைட்ரைடு" சார் என்றேன்.
"இல்லையே உனக்கு நான் குளோரைடுதானே கொடுத்தேன்". உப்பை பரிசோதித்தார்.
"இது நான் உனக்கு கொடுத்த உப்பில்லையே."
"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.

--------

"இந்தா உனக்கு சாமந்திப் பூ. இதுக்கு படம் வரையத் தெரியுமில்லை".
"இல்லை சார். நான் செம்பருத்திதான் படிச்சிட்டு வந்திருக்கேன். செம்பருத்தியே கொடுங்க சார்".
"உன்னையெல்லாம் வச்சிகிட்டு... இந்தா. தொலை".
எனது வாழ்க்கை பாதையில் செம்பருத்தியை தூவிய எனது தாவரவியல் ஆசிரியர் வாழ்க.

------

பரவளையம் அதிபரவளையம் நீள்வட்டம் வகையிடுதல் தொகையிடுதல் என வகை தொகையில்லாத ஒரு பாடத்திடம் நான் மாட்டித் திணறிய போது......
எண்ணித் துணிந்து எனக்கும் கணிதம் வரும் என்பதை எனக்கே உணர்த்திய என் கணிதப் பெருந்தகை...

-------

எல்லோரையும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன்.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

--------------------------------------

16 comments:

said...

வாத்தியாருக்கு இப்படி கூட நன்றி தெரிவிக்கலாம், இல்லையா?, நல்லா இருக்கு சிந்தாமணிபுலவரே! - நாகூர் இஸ்மாயில்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

anaivarukum asiriyar dina vaazhthukal

-------------------------------------------------------------------------------------------------------------
said...

யோவ் செப்தம்பர் 14 தானே வாத்தியாரு தெனம்?

எனக்கு நாபகம் இல்ல...யார்க்கிட்டயாவது கேட்டு சொல்லுங்க

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :)

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ;)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாகூர் இஸ்மாயில்..

வருடம் ஒருநாளாவது நமது ஆசிரியப் பெருந்தகைகளை நினைக்கும் நாளாய் ஆசிரியர் தினம்.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி டுபுக்கு டிசிப்பிள்..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொட்"டீ"கடையாரே...

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்.
நவம்பர் 14 குழந்தைகள் தினம்.

கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆயிட்டீங்களோ.
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத்...

ஏறிவந்த ஏணிகளை எண்ணி பார்க்கிறோம். :)

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆயிட்டீங்களோ.
:)//

நாமலும் கொழந்தைங்க தானே...
:))

//"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.
///

அரைபிளேடு,

சூப்பரப்பு...... இதே மாதிரி எனக்கும் சேம் பிளட் இருக்கு.... ஹி ஹி

ஒரே குட்டை தான் போலே நாமெல்லாம்.... :)

// Pot"tea" kadai said...

//கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆயிட்டீங்களோ.
:)//

நாமலும் கொழந்தைங்க தானே...
:)) //

இது அல்டிமேட் ஜோக்..... பொட்டீ கலக்கீறிங்க... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இராம்....

வாங்க... பருமனறி பகுப்பாய்வுன்னு இன்னொரு சோதனை... பியூரெட்டுல ஊத்த வேண்டியத பிப்பெட்டுல ஊத்தி, பிப்பெட்ல ஊத்த வேண்டியத பியூரட்ல ஊத்தி அதெல்லாம் ஒரு காலம்... எல்லா வாத்தியார்ங்களும் சேம் பிளட்தான் போல... ஒரே மாதிரி அனுபவிக்கிறாங்க இல்லை...

அப்புறம் பொட்டீ குழந்தைன்னு சொன்னத ஜோக்குன்னு சொல்லிட்டீங்களே.... குழந்தை மனசு இருக்கறவங்க எல்லாமே குழந்தைதான். நாம எல்லாருமே குழந்தைங்கதான்.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கொடுக்கப்பட்ட உப்பை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே ஐந்து சோதனை குடுவைகளை உடைத்திருந்தேன்.
உப்பு தீர்ந்து விட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் அவன் உப்பை கடன் வாங்கினேன்.
பல சோதனைகளுக்குப் பிறகு எனது சோதனை குடுவையில் பழுப்பு சிவப்பு பச்சை என வானவில்லின் பல நிறங்களில் வளையங்கள் தோன்ற பழுப்பு வளைய சோதனையில் உப்பு தேறியது என்று முடிவு செய்து "மெக்னீசியம் நைட்ரைடு" சார் என்றேன்.
"இல்லையே உனக்கு நான் குளோரைடுதானே கொடுத்தேன்". உப்பை பரிசோதித்தார்.
"இது நான் உனக்கு கொடுத்த உப்பில்லையே."
"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.
//

இந்த நிகழ்வு எனது வாழ்க்கையிலும் நடந்திருக்கு. ஆனா எனக்கு கொடுத்தது பொட்டாசியம் குளொரைடு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஆனந்த லோகநாதன்..

நீங்க பொட்டாசியம் குளேரைடா...
ஆமா குளோரைடை எப்படி கண்டு பிடிப்பாங்க... மறந்து போச்சி :)

இப்ப நமக்கு தெரிஞ்ச ஒரே உப்பு சோடியம் குளோரைடு... அட... சமையல் உப்புங்க .. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அருமையான நடை; அழகான சித்தரிப்புகள். இந்தப் படைப்பினை நகல் எடுத்து தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பி வையுங்கள்; அல்லது அவர்களுக்குத் தெரிவித்து இந்தப் பதிவினைப் பார்க்க வையுங்கள். இவற்றை விட நிஜ சந்தோஷத்தை எந்த "நல்லாசிரியர்" விருதும்(!) எந்த ஆசிரியருக்கும் தந்து விட வாய்ப்பு இல்லை.

RATHNESH
http://rathnesh.blogspot.com

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ரத்னேஷ்...

அடுத்தமுறை ஊருக்கு செல்லும்போது பள்ளிக்கு ஒரு விசிட்..

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

SothanaikaLaik kadanthu saadhanai purinthu vitteerkaL ....

Araiblade
adhanaal unggaLukkum vaazhthukkaL.:))