Friday, September 07, 2007

பெயரில் என்ன இருக்கிறது ???????????

50 ஆண்டுகளுக்கு முன் தமிழனின் பெயர்கள்...

சுவாமிநாத ஐயர், பிரதாப முதலியார், ராமசாமி படையாச்சி, முத்துராமலிங்க தேவர், ராமசாமி நாயக்கர், அண்ணாமலைச் செட்டியார்.
தமிழனின் பெயரில் அவனது ஜாதி தவிர்க்க முடியாததாயிருந்தது. பெயரைக்கொண்டு ஒருவரின் ஜாதி அடையாளம் தெரிந்தது.

இன்று....

தமிழன் தனதுபெயரில் இருந்த ஜாதி அடையாளங்களை நீக்கி விட்டான்.
அவனது பெயர் ரமேஷ், கணேஷ், உமேஷ், காமேஷ் என்பதாக இருக்கிறது.
ஜாதி அடையாளங்களை துறந்த வகையில் இது உண்மையில் நல்ல முன்னேற்றமே.

ஆயின் இவை தமிழ்ப்பெயரா என்ற கேள்வி எழுகிறது.

இந்த உலகில் நமது பெயரை நமக்கு நாமே வைத்துக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறோம்.
நமக்கு உயிரைத்தந்தவர்கள்... நம்மை தமிழனாய் பிறக்கவைத்தவர்கள்... நமக்கு அளித்த பெயரைத் தாங்கியவர்களாக இருக்கிறோம்.
எனது பெயர் எனது கொள்கைக்கு எதிராக இருக்கிறது.
பெற்றோர் வடமொழிப்பெயர் இட்டுவிட்டனர். எனக்கு தமிழ்ப்பெயர் வேண்டும் என்பதோ...
என்பெற்றோர் தூய தமிழ்பெயர் இட்டனர். எனக்கு வடமொழிப்பெயர் வேண்டும்.... என்பதோ...
ஆயிரம் கனவுகளுடன் நமது பெற்றோர் நமக்கு வைத்த பெயரை மாற்றுவது அவர்களது கனவுகளை குலைப்பதாகும்.

நமது முந்தையதலைமுறை சாதி எதிர்ப்பு உணர்வுகளால் பெயரில் சாதியை தூக்கிஎறிந்துள்ளனர்.
பெயரில் ஜாதி அடையாளத்தை தொலைத்த நாம் உடன் சேர்த்து தமிழ் அடையாளத்தையும் சேர்த்தே தொலைத்துவிட்டோமோ.

தமிழனுக்கு தனது வாயில் நுழையாத "ஷ்' மீது அப்படியொரு மோகம்.
கணேஷ், ரமேஷ் என்று பெயரிட்டு "கணேசு"... "ரமேசு"... என்று கூப்பிடுவதில் ஏதோ ஆனந்தம்.
தன்னையாண்ட ரஜபுதன வீரன் "ராஜா தேஜ்சிங்" கை "ராஜா தேசிங்கு" வாக்கி தமிழ்ப்படுத்தியன் தமிழன்.
ராம் என்ற வடமொழியின் மீது "அன்" என்ற தமிழ் விகுதியை ஏற்று "ராமன்" என்கிறோம். வடமொழியை எடுத்தாண்டாலும் ஒரு காலத்தில் தமிழன் அதை தமிழ்ப்படுத்தியே வந்திருக்கிறான்.
(எ.கா) கந்தன் (ஸ்கந்தா), குமரன்(குமார்), சாமி (ஸ்வாமி).

ஆனால் தற்போதைய பெயர்களில் தமிழ்ப்படுத்துதலும், தமிழக்கான விகுதியும் காணாமல் போவது வியப்பளிக்கிறது.
சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரியான பெயர்களை வைக்கும் பொதுபுத்தி தமிழனுக்கு எப்படி வந்தது....
உற்று நோக்கினால் பெயரிடுதல் என்பது பெரும்பாலும் அந்த அந்த காலகட்டத்தின் ஃபேஷனை பொறுத்து அமைவதும் சமயத்தில் ஒப்பு நோக்கத்தக்கது.
தமிழன் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை துறந்து... தமிழ் அடையாளத்தையும் தூக்கி எறிந்து... வடமொழிப் பெயர் இடுவதன் மூலமாக தமிழன் தனது அடையாளத்தை இந்தியனாக மட்டும் நிறுவி பெருமளவில் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டானோ.
நரேஷ், சுரேஷ் போன்ற பெயர்களில் இந்திய அடையாளம் மட்டும்தான் இருக்கிறது.

பெயரில் அடையாளம் என்பது அத்துணை இன்றியமையாததா.
இனம், மதம், நாடு இந்தஅடையாளங்கள் இல்லாத ஒரு பெயர் இருத்தல் இயலுமா.
அனைத்து அடையாளங்களையும் தூக்கியெறிந்து, கட்டுகளையும் உடைத்து பெயரிலிகளாக உலவுதல் சாத்தியமா.
ரமேஷ், உமேஷ், தமிழரசன், மண்ணாங்கட்டி, பிச்சாண்டி, ஜோசப், அப்துல்லா பெயர் எதுவாக இருந்தால் என்ன.
பெயரைவிட பெரியது பெயரைத்தாங்கியவனின் தமிழ்உணர்வுதான் அல்லவா.
பெயரில் என்ன இருக்கிறது.
சந்தனத்தை என்னபெயர் இட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்.

எனது பெயர் எந்த அடையாளமுமின்று வெறுமனெ "ஓ" என்ற ஓசையாக இருந்தால் அது தமிழ் "ஓ"வா அல்லது ஆங்கில "O"வா என்று கேள்வி எழுப்பப்படுமா.

தமிழ்ப்பெயர்கள் மீது எனக்கு தனியாத தாகமுண்டு.
நிலவன், முகிலன், வளவன், மாறன், எழிலன்.... தமிழின் அன் விகுதியுடன் எத்துணை அழகுப் பெயர்கள்.
அதற்காக பெயர்மாற்றம் என்ற பொலிட்டிக்கல் ஜிம்மிக்சில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெயரிடுவதன் மூலம் நமது அடையாளங்களை நமது பெற்றோர் தேர்ந்தெடுத்தனர்.
நாளைய சமுதாயத்தின் பெயர்களை நமது பிள்ளைகளுக்கு இட்டு நாம்தான் தேர்ந்தெடுக்கிறொம்.
எதிர்கால சமுதாயத்திற்கு நற்தமிழ்ப் பெயர்களிடுவோம்...
ஆயினும் பெயரினும் பெரிது தமிழ் உணர்வு. அவ்வுணர்வோடு பிள்ளைகளை வளர்ப்போம்.
நல்லதோர் தமிழ்ச்சமுதாயம் சமைப்போம்.

24 comments:

said...

இப்போ இன்னா தான் சொல்ல வர்ற எனக்கு மெய்யாலுமே ஒன்னியும் பிரியல!

பேர மாத்தனுமா வோணாமா,அத்த வுட்டு தள்ளு , மாத்தறத விட வைக்கசொல்லவே சுளுவா நல்ல தமில் பேர வையுங்கோனு தானே அல்லாரும் சொல்றாங்க இங்க!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வவ்வால்...

தெளிவா குழப்பிட்டனா.

1 இருக்கும் பெயரை மாற்றல் வேண்டாம்.

2. இனி வைக்கும் பெயரை நற்தமிழில் வைத்தல்.

அம்புட்டே...

அப்புறமா கொஞ்சம் பெயர் ஆராய்ச்சி... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

'பேர்ல என்ன இருக்குன்னு கேக்கறவரே, 0.5 ப்ளேடுன்னு பேர் வெச்சுட்டு 2.0 ப்ளேடு படத்தை எப்படிப் போடலாம்?'னு கேக்கலாம்னு வந்தா இங்க பெர்பக்டா இருக்கு படம்.:-)

(ஏன் தமிழ்மணத்துல அப்படி வருது? )

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக காசி அவர்களே...

தொடக்கத்தில் இருந்த படத்தில் இரண்டு பிளேடுகள்... படத்தை 0.5 வாக மாற்றிய பிறகும் தமிழ்மணத்தில் பழைய படம் தெரிவதேன் என்றுதான் தெரியவில்லை :)

எத்தனை பிளேடு இருந்தாலும் அறுவை என்பது ஒன்றுதானே. பெயரில் என்ன இருக்கிறது :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

1. வடமாநிலங்களில் எவரும் தம் பெயர் குறித்து இவ்வளவு அலட்டிக் கொண்டு பார்த்ததில்லை நான். ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே சிலநூறு பெயர்கள் தான் இருக்கும் என்கிற அளவு சுமாரான பொதுவான பெயர்கள் அதிகம். முழுக்க முழுக்க surname அடையாளத்திலேயே காலம் கழிக்கிறார்கள். காந்தி நேரு உள்ளிட்ட இன்றைக்கு பெயர் தெரிந்த, சரித்திரம் குறித்துக் கொண்டுள்ள எல்லோருமே அப்படி அடையாளம் காணப்பட்டிருப்பவர்களே.

2. குஷ்பூ என்கிற சொல்லுக்கு நறுமணம் என்று பொருள். தனித்தமிழில் எழுதுகிறேன் என்று அதனைக் "குசுப்பூ" என்று எழுதினால் நாறி விடுமே ஐயா.

3. தம் பெயரை அருட்செல்வம் என்றும் (கருணாநிதி) அரங்கராசன் அல்லது சுசாதா (சுஜாதா) என்றெல்லாம் மாற்றிக் கொண்டிராதவர்கள் தமிழைப் பாமரர்களுக்குப் பக்கமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.அவர்கள் செய்த வாழ்நாள் சாதனையில் ஆயிரத்தில் ஒருபங்காவது தனித்தமிழ் இயக்கத்தினர் செய்திருக்கிறார்களா தமக்குள்ளே தனிக்கும்மி அடித்துக் கொண்டதைத் தவிர்த்து.

நன்றி,

RATHNESH
http://rathnesh.blogspot.com

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு என்று பெயர் வைத்துக்கொண்டு தமிழ்ப்பெயர் பற்றியெல்லாம் எழுதுவது கொஞ்சம் அதிகம்தான்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு அவர்க்ளே,

//பெயர் எதுவாக இருந்தால் என்ன.
பெயரைவிட பெரியது பெயரைத்தாங்கியவனின் தமிழ்உணர்வுதான் அல்லவா.
பெயரில் என்ன இருக்கிறது.
சந்தனத்தை என்னபெயர் இட்டு அழைத்தாலும் அது மணக்கத்தான் செய்யும்//

இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன். "பெயரளவில்" தமிழனாக இருப்பதைவிட, "செயலளவில்" தமிழனாக இருப்பதே சிறப்பு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரத்னேஷ்...

1. வட மாநிலங்களில் பெயரோடு குடும்பப்பெயரை இணைப்பதால் பெயரைக்கொண்டு ஜாதியை விளங்க அறியமுடியும். நேரு, காந்தி, பட்டேல் போன்ற குடும்பப் பெயர்கள் கிட்டத்தட்ட தமிழில் பெயருக்கு பின்னர் சாதியை போடுவதற்கு நிகரானவை.
தமிழர் பெயரின் பின் சாதியை சேர்க்கும் வழக்கத்திலிருந்து வெளிவந்துவிட்டனர். இவ்வகையில் வடக்கு இன்னும் வளரவில்லை.

2. பெயரில் என்ன இருக்கின்றது. இருக்கும் பெயரை மாற்றவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
குஷ்பு என்றால் நறுமணம் என்று பொருள். அதை தாங்கள் சொன்னது போல் மணக்கவைக்கத் தேவையில்லை. :)

3. தனித்தமிழ் இயக்கங்கள் சமூகத்தில் ஓரளவுக்கே தாக்கத்தை கொணர்ந்துள்ளன என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதே. பெருமளவிலான பங்களிப்புகள் தேவை. பாரதி சொன்னது போல் "எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வம் யாவும் கொணர்ந்திங்கு தமிழில் சேர்ப்போம்".

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹரன்பிரசன்னா....

பிடிச்சீங்களே பாயிண்டை... அரை"பிளேடு" வும் தமிழ்ப்பெயரும் !!!!

கட்டுரையின் தலைப்பு "பெயரில் என்ன இருக்கிறது என்பதே". சொல்ல வந்த கருத்தும் அஃதே.
தமிழ்ப்பெயர்கள் இனிமையானவை... அதே நேரத்தில் திணித்தல் தவறு என்பதும்....
பெயரில் என்ன இருக்கின்றது... பெயரினும் பெரிது தமிழுணர்வு என்பதுமேவும் ஆகும்.
நான் அரை"பிளேடாக" இருந்தாலும் தாங்கள் "ஹரன்"பிரசன்னாவாக இருந்தாலும் நம்மை இங்கு எழுதவைப்பது தமிழுணர்வே.

அப்புறம் அரை"பிளேடு" எனது அறுவைகளின் குறியீடாக வைக்கப்பட்ட புனைபெயர். :)
ஆமா பிளேடுக்கு என்னங்க தமிழ்ல....

என்னைப்பொறுத்தவரையில் மொழி தன்னைப்பொறுத்தளவில் தனித்துவமான சொற்களைக்கொண்டிருந்தாலும் பிறமொழிசொற்கள் புழங்குதல் காலத்தின் கட்டாயமே.
தமிழ் இலக்கணம் பிறமொழிச் சொற்களை "திசைச்சொற்கள்" என்று வழங்கி ஏற்றுகொள்கிறது.

ஆங்கிலம் பெருமளவு லத்தீன், கிரேக்கத்திலிருந்து சொற்களை கடன் வாங்கியே உலகப்பெரும் மொழியாக உருவெடுத்திருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.

அதே நேரத்தில் மொழிக்கென்று புதிய வழக்குகளையும் கொணருதல் அவசியம். சிலவார்த்தைகளை அவசியம் கருதி தமிழ்ப்படுத்தி கொள்ளலாம்.
"பிளேட்" என்ற ஆங்கில வார்த்தை "பிளேடு" என்று உகரம் பெற்று தமிழாதல் திசைச்சொல்லே.

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பெயரினும் பெரிது தமிழ் உணர்வு. //

அம்புட்டுதாங்க. அதுதான் நம்ம நிலைப்பாடும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல பதிவு. பதிவுக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

John P. Benedict

//இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன். "பெயரளவில்" தமிழனாக இருப்பதைவிட, "செயலளவில்" தமிழனாக இருப்பதே சிறப்பு.
//

கட்டுரையின் மையக்கருத்தை அழகாக சுருக்கி தந்தமைக்கு நன்றி ஜான்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல பதிவு...என் மகளுக்கு நான் தூய தமிழில் பெயர் வைத்திருக்கிறேன்..கேட்பவர்கள் வித்தியாசமான பேர் என்பார்கள்..ஆமாங்க தமிழில் யார் வைக்கிறா அதான் வித்தியாசமா இருக்குன்னு சொல்ல்வேன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார்...

//--பெயரினும் பெரிது தமிழ் உணர்வு.-- //

//அம்புட்டுதாங்க. அதுதான் நம்ம நிலைப்பாடும். //

நன்றி. தங்களுக்காக ஒரு வெண்பா.

செயல்பல செய்வார் செயல்கள் விடுத்து
அயலாம் அவர்தம் பெயரென கொள்வீர்.
உயர்ந்தது ஏதென கண்டே தெளிக
பெயரின் பெரிது தமிழ்

:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜெகதீசன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

முத்துலட்சுமி...

பத்துபெயரோடு பதினோரு பெயராக பெயர் இருப்பதை விட தனித்தன்மையான தமிழ்ப்பெயர் இனியது.

டெலிஃபோன் டைரக்டரியை எடுத்தால் பெயர்ப் பஞ்சம் நன்றாக தெரியும்.
நூற்றுக்கணக்கான சந்திரசேகரன்களும், ராமச்சந்திரன்களும், கிருஷ்ண குமார்களையும், கவிதா, காயத்ரிகளையும் பார்க்கும் போது.

தாங்கள் தங்கள் மகளுக்கு தனித்துவம் தெரிய தமிழ்ப்பெயர் வைத்தது மிக நன்று.

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல தமிழ்ப்பெயர்களுக்கு இங்கு பார்க்கவும்

http://www.thamizhagam.net/thamizhnames.html

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//செயல்பல செய்வார் செயல்கள் விடுத்து
அயலாம் அவர்தம் பெயரென கொள்வீர்.
உயர்ந்தது ஏதென கண்டே தெளிக
பெயரின் பெரிது தமிழ்//

ஐயா சாமி, இன்ஸ்டண்ட் வெண்பாவா? கலக்கறீங்க! அப்புறம் ஏன் இந்தப் பக்கம் வரது இல்லை?

http://payananggal.blogspot.com/2007/09/blog-post.html

வாருமய்யா வாரும்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்புறம் நம்ம பழக்கங்களில் ஒன்று தாத்தா பாட்டி பெயரை பேரன் பேத்திகளுக்கு வைப்பது. இதனை மீற விரும்பாதது கூட பல பேர் அதே பெயர்களை தொடர்ந்து வைப்பதன் காரணமாக இருக்கலாம் இல்லையா?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்தனார்...

தாத்தா பெயரையே பேரனுக்கு வைத்துவிட்டு பெரியவர் பெயரைச்சொல்லி எப்படி அழைப்பது என்று ஒரு செல்லப்பெயர் வைத்து அழைக்கும் பழக்கமும் இருக்கிறது.
பல வீடுகளில் இந்த செல்லப்பெயர்கள் நகைப்பூட்டுவன. பலர் தங்கள் செல்லப்பெயர்களை வெளியுலகுக்கு சொல்லிக் கொள்வதில்லை. :)

நிற்க குலதெய்வத்தின் பெயரை வைக்கும் பழக்கமும் இருக்கிறது..
கன்னியப்பன், முனியாண்டி, காத்தவராயன்.. வீட்டில் இந்தபெயர்கள் இருந்தாலும், பள்ளியில் பெயர் கொடுக்கும் போது இப்பெயர்கள் மாடர்னாக உருப்பெறும்.
கணேஷ், மனீஷ், காமேஷ் என.

ஜாதகம் பார்த்து பெயர் வைப்பவர்கள் இருக்கிறார்கள். ஜாதகப்பெயர் ஒன்றாகவும் பள்ளிப்பெயர் ஒன்றாகவும் இருக்கும்.

திருமணப்பத்திரிகைகளில் இந்த இரண்டு பெயர்களையும் பார்க்கலாம்.
திருநிறைச்செல்வன் கன்னியப்பன் (எ) கணேஷ் என்பது போல... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை ப்ளேட், உங்க பேரைக் கேட்டாலே பக்கம் பக்கமா பதில் சொல்லுவீங்க போலயே. :>

தமிழ்ப்படுத்தி திசைச்சொல்லாக்குவதைவிட ப்ளேட் போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக்கொள்ளுவதுதான் எனக்குப் பிடித்தது. ஜப்பான் சப்பான் என்றும், பஸ் (பேருந்து என்கிற சொல் நல்ல எளிமையான தமிழ் சொல்லே) என்பதை பசு என்றும் விஸ்வநாதனை விச்வநாதன் என்றும் எழுதுவதைவிட பிளேடை பிளேட் என்றே எழுதுவது எனக்கு உவப்பானது. தமிழறிஞர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பும், விளக்கமும் அளிப்பார்கள். நான் சாதாரண, தமிழின் எளிமையையும் அழகையும் விரும்புவன் என்பதால், பிறமொழிச் சொற்கள் எளிமையாக அழகாக ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் அதை அப்படியே தமிழாக ஏற்க விரும்புபவன். பஸ் என்பதற்கு பேருந்து என்பது போன்ற அழகான மாற்றுப் பெயர்கள் கிடைக்கும் வரையிலும் காஃபியை காஃபியாகவே குடிக்க விரும்புவன். அதனால் நீங்க ஏன் பிளேடுன்னு எழுதுறீங்கன்னு கேக்கமாட்டேன். அதுக்காக பிளேடுக்கு என்ன தமிழ்லன்னு என்னை மிரட்டாதீங்க. அதுக்கு தமிழ்ப்பெயர் கண்டுபிச்சு இன்னும் பயமுறுத்திடுவாங்க.

எங்கிட்டகூட பெயர் என்னான்னு கேட்காதீங்க!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹரன் பிரசன்னா...

priya என்பதை ப்ரியா என்று தமிழில் எழுதுவதில்லை. பிரியா என்று எழுதுகிறோம்.
prabhakar என்பதை ப்ரபாகர் என்று இல்லாமல் பிரபாகர் என்று எழுதுகிறோம்.

ஏனெனில் தமிழ் இலக்கணப்படி பெயர்ச்சொல்லின் துவக்கத்தில் வல்லின ஒற்று வராது. அது போல் பெயர் இறுதியிலும் வல்லின ஒற்று வராது.

அதனால் "ப்ளேட்" என்பதை விட "பிளேடு" என்பதுதான் சரி.

மொழி ஒரு சொல்லை பிறமொழியிலிருந்து எடுத்துக்கொள்ளும் போது தனக்கேற்றபடி தகவமைத்துக்கொள்வது இயல்பு.
லத்தீனின் lumos ஆங்கிலத்தின் light ஆனதைப்போல.

இது இலக்கணத்தின் பொருட்டே...

மற்று பஸ் என்பதின் சரியான பிரயோகம் பஸ் என்பதே. அதே பச் என்றோ பசு என்றோ எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை :)
வடமொழி உச்சரிப்பிற்கு ஜ,ஸ,ஷ,ஹ போன்ற எழுத்துக்களை முடிந்தவரை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி.

இருந்தாலும் "மன்மத ராசா... மன்மத ராசா" என்று பாடியதில் கிடைத்த கிக்... "மன்மத ராஜா... மன்மத ராஜா" என்று பாடியிருந்தால் கிடைக்காதல்லவா :)

சொற்களை இடம் பொருள் இலக்கணம் அறிந்தே எடுத்தாள வேண்டும்.

மற்று "ப்ளேட்" என்று எழுதுவது தங்கள் சுதந்திரம். இலக்கணத்தை சொல்லிவிட்டேன் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தூய தமிழில் பெயர் வைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நமது பெயரை, நம்மைவிட மற்றவர்கள் தான் அதிகம் பயன்படுத்த்போகிறார்கள்.

அப்படி இருக்க, தமிழரைத் தவிர உலகில் எவரும் அதை சரியே உச்சரிக்கமல், பெயரைக் கெடுத்து, எரிச்சல் மூட்டுவார்கள்.