அன்புள்ள பகுத்தறிவு பகலவனே...
தங்கள் பகுத்தறிவு கருத்துக்களால் கவரப்பட்டு உணர்வும் பகுத்தறிவும் பெற்ற பலரில் நானும் ஒருவன்.
தங்கள் கருத்துக்களால் சுயமரியாதை ஊட்டப்பட்டவன்.
இந்த சமூகத்தின் கடைநிலை மக்களுக்கு விடுதலை உணர்வை சுயமரியாதையை ஊட்டியவர் தாங்கள் என்பதால் தங்கள் மேல் எனக்கு பேரன்பும் பெருமதிப்பும் என்றும் உண்டு அவர்களில் ஒருவனாக.
எதையும் புத்தியைக்கொண்டு யோசித்து ஏற்பதுதான் பகுத்தறிவு என்ற தங்கள் பகுத்தறிவு வாதம் என்னுள் பகுத்தறிவை ஊட்டியுள்ளது.
அதே பகுத்தறிவு தங்கள் சொன்ன கருத்துக்களையும் ஆராய்ந்து ஏற்பதுதான் அல்லவா.
எனது பகுத்தறிவு தங்களை தமிழ் இனத்தை காக்க வந்த மீட்பராகவோ, மெசையாவகவோ அல்லது இறைத்தூதராகவோ காணவில்லை.
மதங்களை விலக்கியெரிய சொன்ன பகலவனே, தங்கள் கருத்துகள் தொகுக்கப்பட்டு ஒரு புனிதநூலாக்கப்பட்டு "பெரியார்மதம்" ஒன்று நிறுவப்படுவதை தாங்களே ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.
எனக்கு உணர்வும் சுயமரியாதையும் ஊட்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதராக கொள்ள என் பகுத்தறிவு இடம் தரவில்லை ஐயனே.
தங்களை இரத்தமும், சதையும் ஆசாபாசங்களும் உள்ள ஒரு சகமனிதராகவே எனது பகுத்தறிவு சொல்கிறது.
ஐயனே, தமிழினத்தை பீடித்த ஆரிய மாயையை கலைந்தெறிந்த தங்களுக்கு தமிழினம் காலத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறது. இந்த இனம் இன்றல்ல தான் இருக்கும் வரை தங்கள் புகழ் பாடும்.
ஆனால் ஐயனே என்னுள் கேள்விகள் இருக்கின்றன...
திராவிட இயக்கம் கண்டீர். திராவிட இனம் என்பது தமிழர் தெலுங்கர் கன்னடர் மற்றும் மலையாளத்தவர் அனைவரையும் உள்ளடக்கியது.
ஆனால் தங்கள் திராவிட இயக்கம் தமிழ்நாட்டுக்குள் மட்டும் சுருங்கிப்போனது ஏன் ஐயனே.
ஆரியமாயையை கலைந்த தாங்கள் திராவிட மாயையை தமிழனுள் விதைத்ததின் பின்னுள்ள அரசியல் என்ன.
சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், ஆரியனிடமிருந்து தமிழனை விடுவித்த தாங்கள், தமிழனிடம் திராவிட உணர்வுகளை விதைத்தீர்கள்.
ஒவ்வொரு தமிழனிடம் நாம் திராவிடர் என்ற உணர்வு இன்று உள்ளது.
இன்று கர்நாடகத்தில் கன்னடன் தமிழனை தமிழன் என்பதற்காக உதைக்கிறான். மலையாளி முல்லையாறை திறக்க மறுக்கிறான். இவர்களிடம் திராவிட உணர்வு இல்லாத போது தமிழனிடம் மட்டும் திராவிட உணர்வு இருந்து என்ன பயன்.
சமஸ்கிருதம் பேசும் ஆரியனை எதிர்த்த தாங்கள், கன்னட நாயக்கர் என்பதினாலேயே தமிழகம் வாழ் கன்னட மொழிபேசும் மக்களின் நலனையும் மனதில் இருத்தி, தமிழர் இயக்கம் காணாமல் திராவிட இயக்கம் கண்டீர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.
தமிழ் தங்களுக்கு புனிதமானதாக இல்லாமல் இருக்கலாம்.
பச்சைத் தமிழனான எனக்கு அப்படியல்ல. அது எனது உயிரில் உணர்வில் கலந்த மொழி. எனது சிந்தையில் கருத்தில் இயைந்த மொழி.
அத்தகு என்மொழியை தாங்கள் "காட்டுமிராண்டி" மொழி என விளித்துள்ளீர்கள், எனது பண்டை இலக்கியங்களை எனது முன்னோர் தந்த பொக்கிஷங்களை குப்பைகள் எனக் கூறியுள்ளீர்கள்.
தங்கள் கன்னடம் தோன்றாத காலத்திலேயே தோன்றிய தமிழர் வாழ்வியலை தெரிவிக்கும் நூலான திருக்குறளை "மலம்" என்று கூறியுள்ளீர்.
இது சுயமரியாதை உள்ள எந்த ஒரு தமிழனாலும் ஏற்க முடியாத ஒன்று.
தங்களால் உடைத்தெறியப்பட்ட ஆரிய விலங்குகள் தொலைவில் உள்ளன. தமிழனான எனக்கு தாங்கள் பூட்டிய "திராவிட விலங்குகளால்" என் கை கட்டப்பட்டுள்ளது.
இந்த விலங்குகளை உடைத்தெறிகிறேன்.
நான் ஆரியனுமல்ல... திராவிடனுமல்ல....
சுயமரியாதையுள்ள பச்சைத் தமிழன்.
என் தாய்மொழியைப் பழித்தவனை தலைவன் என்று கொள்ள மாட்டேன்.
இதற்குமேலும் என் தாய்மொழியாம் தமிழை தாங்களும் தங்கள் "திராவிட" உணர்வாளர்களும் பழிப்பீராயின் "போங்கடா வெங்காயங்களா".
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" - அது பெரியாராக இருந்தாலும், திருவள்ளுவனாக இருந்தாலும்.
அன்புடன்...
ஒரு பச்சைத் தமிழன்.
-----------------------------------------------------------
பிற்சேர்க்கை:
பெரியாரின் எழுத்தை பதியும் தமிழச்சி உள்ளிட்ட தோழர்களுக்கு...
தூங்கிக் கொண்டிருந்த தமிழனை எழுப்பியவர் பெரியார். பெரியாரின் காலகட்டம் சுட்டிக்காட்டி தமிழனுக்கு உணர்வூட்டக் கூடிய காலகட்டமல்ல. எனவே தமிழனின் தலையில் குட்டிக்காட்டி உணர்வூட்டத் தலைப்பட்டார். பெரியாரின் குறள், சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியக் கருத்துக்களை அவ்வாறே காண்கின்றேன்.
தோழர்கள் பெரியாரின் புரட்சிகர எழுத்தை பதியும் போது அதுகுறித்த மேலதிக தகவல்களையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது இதுபோன்ற தவறான புரிதல்கள் வாசகர்களிடம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கும்.
பெரியார் பெருமளவில் படிக்கப்படவேண்டும் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். அது நிறைவேறியதாகவே கருதுகிறேன். பின்னூட்டிய ஆக்கபூர்வமாக விவாதத்தை எடுத்துச்சென்று பெரியார் குறித்த புரிதலை முழுமையாக்கிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
அன்பன்
அரைபிளேடு
Saturday, September 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
என்னை இப்பதிவு எழுத தூண்டிய பதிவு...
http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_5727.html
-------------------------------------------------------------------------------------------------------------
அப்படி போடு அரை பிளேட... அருவாள போட்டா கிடைக்கிற எபெக்ட் விட இது அதிகமாகவே இருக்கு!
பெரியார், அவர் பேர சொல்லி சிலர் தமிழை நாறடிப்பதை சரியாக சொல்லிட்டிங்க!
-------------------------------------------------------------------------------------------------------------
//அப்படி போடு அரை பிளேட... அருவாள போட்டா கிடைக்கிற எபெக்ட் விட இது அதிகமாகவே இருக்கு!
பெரியார், அவர் பேர சொல்லி சிலர் தமிழை நாறடிப்பதை சரியாக சொல்லிட்டிங்க!//
ரிப்பீட்டு.
//தங்கள் திராவிட இயக்கம் தமிழ்நாட்டுக்குள் மட்டும் சுருங்கிப்போனது ஏன் ஐயனே.//
தி.க மட்டுமேயன சுருங்கிப்போனதுன்னு மாத்திக்குங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
எப்பா அரை
தாங்கள் மொக்கை பிளேடோ என்னவோ தெரியாது ஆனால் அரை என்பது நிச்சயம்.
பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்ற காலகட்டம் தெரிந்து கொள்.தமிழில் முடை நாற்றமடித்த காலம்.சினிமாவில்,பத்திரிக்கைகளில்,
படித்தவர்கள் பேச்சில் எழுத்தில் எல்லாம் புராணக் கதைகள்.கணவனே கண் கண்ட தெய்வம்,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் இவைதான் தமிழ்.மற்றதெல்லாம் புராணம். ராமாயணமும்,பாரதமுந்தான்
செல்வந்தர் வீடுகளிலே பாட்டுக் கச்சேரிகள்.
தமிழ்ப் புலவர்கள் பட்டி மன்றமே
"கற்பில் சிறந்தவள் கண்ணகியா,மாதவியா?"
அப்போதுதான் பெரியார் சொன்னார்,தமிழில் இந்தக் காலகட்டத்திற்கு என்ன எழுதுகிறீர்கள்,இன்னும் காட்டுமிராண்டி காலத்திலிருந்து அறிவுலகத்திற்கு வர வேண்டாமா?
என்றார்.சொன்னது மட்டு மல்லாமல்
பல அறிவியல் கண்டு பிடிப்புக்களைக்
குடியரசில் வெளியிட்டார்.பல அறிஞர்களின் கருத்துக்களைத் தமிழில்
நூல்களாக வெளியிட்டுக் குறைந்த விலையில் ஒவ்வொரு கூட்டத்திலும்
விற்றார்.
புலவர்களிடம் ஒளிந்திருந்த திருக்க்குறளை அவர்தான் திருக்குறள்
மாநாடுகள் நடத்தி மக்களிடம் கொண்டு வந்தார்.
தனித் தமிழ் இயக்கத்தை ஆதரித்துத்
தமிழ் வளர்ச்சிக்கு உழைத்தார்.பெரிய மனிதர்களையெல்லாம் அப்போதிருந்த்
வடமொழி கலந்து பேசும் "உயர்ந்த பண் பாட்டிலிருந்து"தமிழ் பேச வைத்தார்(ஆர்.கே.சண்முகம் போன்றோரை).
அவர் குடும்பம் கன்னடிய பலிஜா என்பதைச் சொல்லி வந்தார் மறைக்கவில்லை.வேறு யாருமே இந்தப் பணி செய்ய வில்லை என்பது ஒன்றுதான் என்னுடைய தகுதி என்றார்.
மற்ற திராவிடர்கள் பெரிய ஆரிய மாயையில் இருந்தார்கள்.அவர்களைத் திருத்தும் முயற்சி அவ்வளவாகப் பயனடைய வில்லை.அதனால் தான்
தமிழ்நாட்டோடு நிறுத்திக் கொண்டார்.அது பற்றி அவர் திறந்த புத்தகமாக எழுதியுள்ளார்.பேசியுள்ளார்.
நீங்கள் பச்சைத் தமிழராக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஆனால் பச்சோந்தி தமிழராகி விடாதீர்கள்.பச்சோந்திகள்தான்
நமது இழிவிற்கேக் காரணம்.
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழன், பார்த்தீங்களா இவ்வளவு பெரிய விளக்கத்தை தமிழச்சியின் பதிவில் போடமால் பெரியார் இந்த தேதியில் சொன்னதாக மட்டுமே வந்துள்ளது.
பெரியார் அன்று சொன்னார் என்பதற்காக இன்னமும் அது "வேத" வாக்கு என திரும்ப மீள் பதிவு செய்யும் போது இதெல்லாம் வரத்தான் செய்யும்.
அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள் தமிழன்!!!
-------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தோழர் தமிழன்...
பெரியாரின் சமூகசீர்திருத்தங்களுக்காக அவரை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அவர் தமிழைப் பழிப்பதை தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.
பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்பது எனக்கு புதிய செய்தி... மேலதிக தகவல்கள் தந்தால் மகிழ்ந்து அவரை போற்றுவேன்.
பெரியார் திருக்குறளை தூற்றியமைக்கு ஆதாரம் இங்கிருக்கிறது.
http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_5727.html படிக்கவில்லையா? திருக்குறளை மலம் என்றவரா அதை வளர்த்திருக்கப்போகிறார்.
"தமிழன்" என்று பெயர் தாங்கிய தங்களுக்காக.. பெரியாரின் கருத்தொன்று....
தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். - தந்தை பெரியார் விடுதலை(27.11.43)
-------------------------------------------------------------------------------------------------------------
தொல்காப்பியன் மாபெரும் துரோகி
தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்
-------------------------------------------------------------------------------------------------------------
திராவிட, பகுத்தறிவு மதம் ஒருபுறம் இருக்கட்டும்.
தமிழ் உணர்வு என்கிற மதத்திலிருந்து நீங்கள் எப்போது வெளியே வரப்போகிறீர்கள்?
-------------------------------------------------------------------------------------------------------------
மயூரன்...
தமிழ்உணர்வு மதமல்ல. உணர்வு.
உலகின் ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியை எந்த அளவுக்கு நேசிக்ககிறானோ... அதே அளவுக்கு நான் என் தாய்மொழியாம் தமிழை நேசிக்கிறேன்.
தாயையும், தாய்மொழியையும், தாய்நாட்டையும் நேசிப்பது எவ்வாறு தவறாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழனுக்கு...
//தனித் தமிழ் இயக்கத்தை ஆதரித்துத்
தமிழ் வளர்ச்சிக்கு உழைத்தார்//
பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?
சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். - தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்
இதுதான் தனித்தமிழுக்கான பெரியாரின் பங்களிப்பு.
மேலும் பல பெரியாரின் தமிழ் விரோத கருத்துக்கள் தங்களுக்காக....
முட்டாள்தனம்
இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?- 'விடுதலை'(14.11.1972)யில் பெரியார்
ஹிந்தி இருக்கட்டும்
இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- 'விடுதலை'(07.10.1948)யில் பெரியார்
திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம்
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்
சிலப்பதிகாரம் ஒரு புளுகு
....அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? ... இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? - விடுதலை(28.3.60)யில் பெரியார்
சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி
இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக - அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்
முக்கொலை
போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும்கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்குகிறோம் என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? - விடுதலை (5.4.67)யில் பெரியார்
இன்றைய தேவை ஆங்கிலம்
நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். - ‘மொழியும் அறிவும்’ நூலில் பெரியார்
தமிழின் பெயரால் பிழைப்பு
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு - காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை - ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே - என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்
வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா? சர்வத்தையும், விஞ்ஞான மயமாக வெளிநாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல் நாட்டானை(புதிய முறைகளை)ப் பின்பற்றி வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர்-முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்துவிட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார்
தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். - தந்தை பெரியார்
வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்
பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்
அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்
தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம்
தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.
தமிழால் என்ன நன்மை?
தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.
தமிழ் காட்டுமிராண்டி பாஷை
இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?
-----------------------------------------------------------------------------------------
தமிழன்
தாங்கள் தங்கள் பெயர் கூறும்படி "தமிழனாக" இருப்பின் இக்கருத்துக்களை ஆதரிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.
வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் கண்ட அண்ணாவின் அவரைசார்ந்தவர்களின் தமிழார்வத்தை பெரியார் பல காலகட்டங்களில் திட்டியே வந்திருக்கிறார் என்பதை மேலுள்ள வரிகளை படித்தால் தெள்ளென விளங்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------
அரைபிளேடு, உங்கள் பதிவில் எழுந்த கேள்விதான் என் மனதில் எழுந்தது. எனக்குப் பெரியாரைப் பற்றியும் திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதிகமாகத் தெரியாது. ஆனால் அந்தப் பதிவைப் படித்த பொழுது நான் மதிக்கும் திருக்குறள் இப்படி விமர்சிக்கப் படுகிறதே என்ற ஆற்றாமை எழுந்தது உண்மை. தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று எல்லாம் பதிவிட்ட மக்கள் இது குறித்து வாயே திறக்கவில்லையே என ஆச்சரியமும் அடைந்தேன்.
இப்பதிவில் தமிழன் கூறி இருப்பது போல் திருக்குறளை வெளிக்கொணர்வதுக்கு அவரின் முயற்சிகள் எனக்குத் தெரியாது. அப்படி எல்லாம் செய்தவர் இவ்வளவு மோசமாக ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்? பெரும் முரணாக இருக்கிறதே! அதுதான் புரியவில்லை.
நல்ல முறையில் இது குறித்து விவாதம் நடந்தால் நான் ஆச்சரியம் அடைவேன். ஆனால் அப்படி ஒரு ஆச்சரியம் எனக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறேன். (பெரியார் பற்றிய விவாதத்திற்கு பிரார்த்தனை செய்வது முரண்தான், இல்லையா?!)
அப்படியே அவர் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற மாதிரி பேசி இருந்தால், அதனை பதிவு செய்யும் பொழுது அது குறித்த விளக்கம் தந்திருக்க வேண்டாமா? அப்பதிவை இட்டவர் அதனைச் செய்யாத பொழுது அது குறித்து விஷயஞானம் உள்ள மற்றவர்களாவது சொல்லி இருக்கலாமே!
-------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சையில் ஒரு தமிழன்பர் பெரியார் ராமாயணத்தைக் குறை கூறுவது தவறு,கலையுணர்ச்சிக்காக அதைப் போற்ற வேண்டும் என்றார்.
அப்போதுதான் பெரியார்
"நான் கலையுணர்ச்சியையும்,தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று சொல்ல வில்லை.தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம்(மலம்)இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அதைப் புசிக்க முடியுமா?அது போல கம்பராமாயணப் பாட்டுக்கள் சிறந்தவைதான்.அவற் றில் உள்ள மூடநம்பிக்கைக்கும்,தமிழர் இழிவுக்கும்,ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?" என்றார்.
சிறந்த எழுத்தாளர்,ஜீவா மற்றும் பல அறிஞர்களால் புகழப்பட்ட சாமி.சிதம்பரனார் எழுதுகிறார்.
"ஈ.வெ.ரா. வீட்டு மொழி கன்னடமாயினும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்.அளவு கடந்த தமிழ்ப் பற்றுள்ளவர்.தமிழ் மொழியைப் பேண வேண்டுமென்பதில் அவ்ருக்கிணை வேறு எவருமிலர்".
டிசம்பர் 1924ல் திருவண்ணாமலை 30வது காங்கிரசு மாநாட்டிலே ஈ.வெ.ரா. பேசுகிறார்.
"ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயப் பற்று மொழிப்பற்றேயாகும்.மொழிப் பற்றில்லாதோரிடம் தேசப்பற்று இராது என்பது நிச்சயம்.தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டியங்குவது.ஆதலால்,தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்று பெருக வேண்டுமென்பது என் பி்ரார்த்தனை.
தமிழ் மொழியின் பழமையும்,தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களில் காண்லாம்....
அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது.
தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்குத் தமிழ் மொழிப்பற்று அவசியம்!அவசியம்!"
பெரிய தமிழறிஞர்கள் திரு.வி.க.,மறைமலை அடிகள்,நாவலர் சோமசுந்தர பாரதியார் எல்லோரும் பெரியாரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டியவர்கள்,பங்கேற்றவர்கள்.
நண்பர்களே தயை செய்து பெரியாரை இங்கொன்றும்,அங்கொன்றுமாகச் சொல்பவர்களை ஆராய்ந்து பாருங்கள்.
அதை முழுவதுமாகப் பாருங்கள்.பின் உங்கள் எண்ணங்கள் உருவாகட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
I accept your view. Tamilnadu was socially supressed by aryans for 1500 years.But Tamils are economically supressed by dravidians for last 600 years. Periyar used the term "dravidian" to supress the tamils. Arya mayai as well as dravida mayai, both needs to be exposed
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் சில நல்ல கேள்விகள் கேட்டுள்ளார்கள்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறிவியல் தமிழ் வளர்த்து வரும் அய்யா மணவை முசுதபாவை அறிந்திருப்பீர்கள்.அவர் தந்தை பெரியாரும் தமிழ் மொழியும் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதில் அவர் சொல்கிற சில கருத்துக்களைச் சொல்கிறேன்.
நமக்காகத் தமிழ் மொழியா?அல்லது தமிழ் மொழிக்காக நாமா?
வேறு யாரும் அவரது மொழியைத் தெய்வமாகக் கருதி,வணங்கிப் பாடி மகிழ்வதில்லை.இது சங்க காலத்தில் இருந்தது கிடையாது.லத்தீன் மாதிரி இறை மொழியாக்கித் தமிழை சாகடிக்கக் கூடாது.மொழியை ஒரு கருவியாக்கி வளர்த்திட வேண்டும்,இல்லாவிடில் அழிந்து போகும்.
இதைத் தனக்கே உரிய முறையில் தந்தை பெரியார் பல நேரங்களிலே பல வேறு வழிகளிலே தமிழர்க்கு உரைக்குமாறு சொல்லி வந்திருக்கிறார்.தமிழைப் புராண்,இதிகாசக் கடவுளர்களோடு இணைத்து அதன் பெருமையைப் பேச தமிழைக்கையாளும் போக்கைச் சாடினார்.அறிவியலில் தமிழ் வளராவிட்டால் காட்டிமிராண்டி மொழியாகத்தான் இருக்கும் என்றார்.
இன்றும் வா.செ.குழந்தைசாமி போன்றோர் தமிழை நாம் அறிவியல் மூலமான வளர்ச்சியில் இணைத்து வளர்க்காவிட்டால் தமிழ் அழிந்து போகும் மொழிகளில் ஒன்றாகிவிடும் சாத்தியம் உள்ளது என்கின்றனர்.
தி.மு.க.வினரைக் கண்ணீர் துளிகள் என்றார்,கூத்தாடிகள் என்றார்.பல தமிழ் பேச்சாளர்களை தமிழால் வயிறு வளர்ப்பவர்கள்,தமிழை வளர்ப்பவர்கள் இல்லை யென்றார்.
இப்படி உங்கள் கருத்துக்களை மாற்றிச் சொல்கிறீர்களே என்று கேட்டதற்கு
"நான் என்ன கல்லா?மாறாமல் இருப்பதற்கு?காலத்திற்கேற்றார் போல அறிவு வளர வேண்டும்.அறிவு வளரும் போது நாம் நம் கருத்துக்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் "என்றார்.
சினிமாவை நோய் என்றார்.ஆனால் எம்.ஆர்.ராதாவையும்,என்.எஸ்.
கிருஷ்ணனையும் பாராட்டினார்,கருத்துக்கள் சொல்வதற்காக.அவரை சினிமா எதிரி என்றும் சொல்லலம்,நடிகவேள் நண்பர் என்றும் சொல்லலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இலக்கியங்களை அதன் வனப்பிற்காக விரும்புகிறீர்கள். பெரியார் அதன் கருத்துக்களுக்காக எதிர்த்தார்.
இங்க இலக்கியம் போற்றும் கலவி வாழ்வு வாழ முடியுமா அல்லது மூட கோவலனை ஏத்து உரைப்பதை, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் எனபதை ஒப்ப முடியுமா?
காப்பியம் சுவை செரிந்தது ஆனால் கண்ணகி பெண்களுக்கு முன் எடுத்துக்காட்டாக இருக்க முடியுமா? பெரியார் விமர்சனத்திற்கு உட்பட்டவர் என்பதில் எனக்கு ஒப்புதலே. ஆனால் ஒரு மாபெரும் குமுதாய சீர்திருத்தவாதியை பொருந்தாத கோணத்தில் பார்ப்பது விளங்கக் கூடியதாக இல்லை.
இத்தனைக்கும் தமிழ் எழுத்துக்களை திருத்தித் தந்தவர் பெரியார். இல்லையெனில் ஐகார உயிர் மெய் குழப்பத்தை தொடர்ந்திருக்கும். (அவற்றுக்கு அரசு அங்கீகாரம் ஏற்படுத்தி தந்தவர் MGR.) இன்று 90 விழுக்காட்டுத் தமிழில் கதைப்பதற்கு அவர் பெற்றுத் தந்த இன, மொழி விடுதலை ஒரு காரணம். அதற்காக மட்டும் அவரை வாழ்த்துங்கள் போதும்.
நீங்கள் கொட்டை எழுத்துக்களில் தந்த பெரியாரின் கருத்துக்கள் நூறு விழுக்காடும் இன்றைக்கும் பொருந்தக் கூடியவை.
திராவிடர் கழகம் தமிழகத்தோடு நின்று போனதற்கு காரணம் தேடுகிறீர், வைகையில் பார்த்திபனூர் அணை தாண்டி நீர் வராது தெரியுமா? முத்துராமலிங்கத் தேவர் இறந்த பின் நடந்த அருப்புக்கோட்டை இடைத் தேர்தலில் ஃபார்வர்ட் பிளாக் தோற்றது ஏன் என யோசியுங்கள். பின் இப்படி குழப்பிக் கொள்ள மாட்டீர்கள்.
இந்த பதிவில் கருத்துக்களை மென்மையாக முன் வைக்கும் அனைவருக்கும் நன்றி. தமிழன்பர்கள் தில்லையில் ஏன் தேவாரம் பாடமுடியவில்லை என யோசித்தால் நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் கொஞ்சம் தடவிப் பார்த்துட்டு, யானை எப்படி இருக்கும்னு ரெண்டு பேரும் சொன்னா நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி கேட்பவரே, கேள்வி கேட்பது எளிது. அவ்விடயம் பற்றி பலரும் எழுதி விட்டனர். முகமூடி நல்ல விளக்கமாகவே எழுதி இருக்கிறார்.
அது இருக்கட்டும். ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல் வேறு ஒரு கேள்வி கேட்பதே ஒரு கலையாகவே செய்துவிட்டீர்களே. அது எப்படி? :))
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டைப்போன்றே அதே விதமான அனைத்து சமூக சூழல் இருந்த கேரளாவின் ஈழவர் மற்றும் இன்னபிற ஒடுக்கப்பட்டவர்களை நாராயணகுரு போன்ற பெரியோர்கள் தோன்றி அவர்கள் வாழ்வில் மேம்படுத்தினார்கள்!
தமிழகத்தின் ஈவெரா போன்று சண்டியர்த்தனம், வெறுப்பு என்று ஒரு சமூகத்தின் மனதில் வெறுப்பியலை நிலைநிறுத்தவில்லை.
தமிழ்பேசுவோர் எங்கு வசித்தாலும் உள்ளுக்குள்ளே ஈவெரா சொல்லித்தந்த வெறுப்பியல் முன்னெடுத்துச்செல்ல ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு எங்கிருந்தாலும் ஒற்றுமையின்றி ஒன்பது சங்கங்கள் வைத்துக்கொண்டு தமிழர் பாரம்பரியம் என்பதே ஒற்றுமையின்றி இருப்பதே என்பதை நிறுவப்பட்டு இருக்கும் உண்மை.
கடந்த சில நூற்றாண்டுகளில் உலக வரலாற்றை உற்று நோக்கினால் எளியவனை வலியவன் சமூகத்தில் இன, தேச பேதமின்றி எல்லா பிரதேசங்களிலும் நடந்தேறி இருக்கிறது.
உலகில் எல்லோரும் தத்தம் சமூக வரலாற்றில் நிகழ்ந்த புண்ணைச் சொறியாமல் ஆறவிட்டு ஒட்டுமொத்தமாக முன்னேறி வளர்ந்து ஆக்கமாக இருக்கிறார்கள்.
பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுப் புண்ணைச் சொறிந்து சொறிந்து இன்னமும் ஆறவிடாமல் சமூகத்தையே இன்னமும் இன்பெக்டட் சமூகமாகவே மனதளவில் வைத்திருக்கும் சித்தாந்தம் ஈவெரா சொன்னது.
திருக்குறள் போன்ற பல்வேறு இலக்கியங்களை மலம் என்று பழித்திடமுனைந்தது காட்டுமிராண்டித்தனம்.
மொழிசார் உடனடிப் பொருளாதாரப் பயன்பாடு என்கிற அளவில் 100% தமிழ்மொழி மட்டுமே அறிந்திருந்தால் பொருளீட்டுவதில் உயரம் தொடமுடியாதுதான்!
ஆனால் இன்றைக்கும் திருக்குறள் படிப்பதால் பயனடைகிறேன். தமிழிலக்கியமான திருக்குறளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனிதனாக என்னைச் செம்மையாக்குகிறது.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை 100% படித்து புரிந்து பயனடைவதில் பெருமை மட்டுமே கொள்கிறேன்.
ஈவெரா தெளிவு ஏதும் இன்றிச் செய்த பிராமண எதிர்ப்பு, இந்துக்கடவுள் எதிர்ப்பு, இந்துமத இதிகாச இலக்கிய எதிர்ப்பு, தமிழ் மொழி, தமிழிலக்கிய குறைகூறல் என்பதில் எதனால் ஓரளவு மாற்றம் வந்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியாததால் ஈவெராவின் ஆதரவாளர்கள் அப்படியே கதம்பமாக ஈவெரா செய்தவற்றைச் செய்யத் தலைப்படுகிறார்கள்.
உண்மையாக 1940களுக்குப்பின் உலக, இந்திய, தமிழ்ச்சமூகத்தில் ஆளாதிக்கச் சிந்தனையில் சரிவு ஏற்படக் காரணம் உலகப் போர்களுக்குப் பின் ஆளாதிக்கம் செய்வதை உலகம் முழுவதும் பரப்பிய இங்கிலாந்து, ஐரோப்பியர்கள் ஜெர்மெனி, ஜப்பான் போன்ற நாடுகள் மிகக் கடுமையாக இரண்டாம் உலகபோரினால் பாதிப்புக்கு உட்பட்டு செயல் குறுக்கம் அடைந்ததே!
ஈவெராவின் செயல்களால் ஒருசில பயன்பாடுகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிட்டியிருக்கின்றன என்ற அளவில் ஈவெராவுக்கு மரியாதை காட்டினால் உண்மையாகவும்,வெகுதியானோர்க்கு ஏற்புடையதாகவும் இருக்கும். அதைவிடுத்து ஈவெரா வாயில் இருந்து உதிர்த்தது எல்லாமே புனிதம் என்று தலைப்படுவதும் அப்படி அவுட் ரைட்டாக ஈவெராவின் கருத்துக்கள் அனைத்தையும் புனிதமாக ஏற்க யாரும் மறுத்தால் அவரது தமிழர் ஐடெண்டிடியில் குறைகாணும் போக்கு என்பது போங்குத்தனமான பகுத்தறிவு!
-------------------------------------------------------------------------------------------------------------
கொதிப்படைஞ்சிருக்கீங்க? நிதானத்துக்கு வருவோம்!
நான்கூட கடைசியா தோழியர் தமிழச்சி பதிவுல குறல் பற்றி பெரியார் கருத்தை பார்த்து அதிர்ச்சியாயிருந்தேன். உண்மைதான். பிறகு நல்லா யோசித்து பார்த்தேன்.
ஏன் இவரு இப்படி சொல்லி இருப்பாருன்னு!
என்னை பொருத்தவரை அவர் மதம் மொழி என்கிற எல்லை, வலை, சுவர்களை உடைத்தெறியனும்னு நெனைச்சிருப்பாரோன்னு தோனுது.
இன்றைக்கும் தமிழ வெச்சி நெறைய வியாபாரம் நடக்குது மேன். பாப்பான் மொத கொண்டு நம்ப மொழிய வெச்சி நம்மளையே அழிச்சினு வர்ரான். பல ஆயிரம் ஆண்டுகளா அத பேசற பறையன் பள்ளனுக்கு இத்யாதிக்கு எதுவும் கிடைக்கல.
பாப்பார பன்னாட தான் கொண்டு வந்த மொழியான சாக்கட கிருதத்தை அந்த உணர்வு, ஆட்டுக்குட்டி உணர்வுன்னு நெனச்சி இருந்தான்னா, இன்னிக்கு சோமாறி அடியோட ஒழிஞ்சி போய் இருப்பான். அதுக்கு பதிலா, சாமர்த்தியமா நம்ம மொழிய அவன் கத்துனு நம்மளையே ஏமாத்தினு பொழைச்சினு வர்ரான். நம்மளும் அவனுக மொழிய கத்து அவனுகள திருப்பி அடிச்சி இருந்திருக்க முடியும்.
பரந்த எல்லையில்லாத சுவர்கள் இல்லாத சுதந்திர அறிவு கிடைக்கனும்னு இப்படி சொல்லி இருப்பாரோன்னு தோனுது.
எல்லா தோழர்களும் இவ்ளோ எழுதறாங்களே! படிப்பறிவு இல்லாத மிக கடின அசிங்க வேலைகள் செய்யும் ஒதுக்கப்பட்ட மக்கள்களும் நீங்களும் நானும் பழுகுற தமிழத்தான் பழகுறாங்க. அவங்க கிட்ட போய் தமிழால உங்களுக்கு என்ன பெருமை, நன்மை, இலாபம் அப்டீன்னு கேளுங்க. அடி வாங்காம திரும்பி வந்தா உங்க சாமர்த்தியம்தான். இல்லைன்னா, என்ன பதில் சொல்லுவாங்க?
தமிழுல டி.வி.ல நாடகங்கள், பாக்றோம், சினிமா பாக்கறோம்னு சொல்லுவாங்க.
மற்றுமொரு இந்திய தத்துவ ஞானி ஆன ஜெ.கே வும் மொழி, கொள்கை, நாடு, எல்லைகள், கொடி, தலைவன் போன்ற சமுதாய, மற்றும் தனி மனித சுதந்திரத்தை அழிக்கும் போலி வேசங்களுக்கு ஆளாக கூடாதுன்னு சொல்லி இருக்காரு.
மொழிய நேசிக்கிற அளவுக்கு சக மக்களை நேசிக்க தவறிய சமுதாயத்தை பார்த்தும் இப்படி சொல்லி இருப்பாரு.
என்னை பொருத்தவரை
பெரியார் ஒரு பெரும் ஞானி. அற்புத தீர்க்க தரிசி. மிகுந்த தொலை நோக்குடைய தத்துவ மேதை.
நன்றி.
வணக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------------
அரைபிளேடு சார்,
பெரியாரை முழுமையான தலைவர் என்று யார் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள்? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அவர் என்பதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாமபை விடுத்துப் பார்ப்பானை அடி என்று சொன்னவர் ஏன் ராஜாஜியுடன் ஆயுள்காலத் தொடர்பு வைத்திருந்தாராம்? (ராஜாஜியின் நினைவாலயத்தை கிண்டியில் பாம்புப் பண்ணை அருகில் வைத்தது கருணாநிதி செய்த கேலியா என்று தெரியவில்லை). மூடநம்பிக்கைகளைச் சாடி வந்த அவர் ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வாய்க்கரிசி போட்டாராமே, அதை எந்த வகையில் சேர்ப்பது? பெண்ணுரிமை பேசியவரின் வயதுப் பொருத்தமற்ற இரண்டாவது திருமணம் ஜீரணிக்க முடிகிற விஷயமா? இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் தமிழைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தால் நமக்கென்ன? அந்தக் கருத்துக்களின் முரண் காரணமாகத் தானே தமிழறிஞர்களோ தமிழ் விரோதிகளோ இருவருமே அவற்றை மேற்கோளாக்குவதில்லை? திராவிடம் என்ற சொல்லை நீர்த்துப் போகச் செய்தார்களா அல்லது அந்தச் சொல்லே ஒரு மாயையா அல்லது ஆரியம் போல் ஒற்றுமையின்றிப் பிளவுபட்டுக் குத்திக் கொள்வது தான் திராவிட இயல்பா என்பதெல்லாம் ஆந்த்ரபோலஜி ஆராய்ச்சி விஷயமாக இருந்து விட்டுப் போகட்டும். தாங்கள் சொல்லி இருப்பது போல், மனித சமூகத்தில் அடிமைப்படுத்தப் பட்டிருந்த ஒரு பெரிய கூட்டத்தைத் தலை நிமிர வைத்ததும் அங்கீகாரம் வாங்கித் தந்ததும் அவருடைய சாதனைகள் தானே, அவற்றை மட்டும் போற்றி விட்டு சொந்த சிந்தனையில் வாழ்க்கையைத் தொடருவோம். இந்த நாட்டில், தத்துவங்களை விட்டு விட்டு தலைவனைப் போற்றி மதமாக்கி வாழ்வது புதிய விஷயம் இல்லை. சிலருக்கு ஆதிபராசக்தி, சிலருக்கு பெரியார். எல்லை அறிந்து விலகிக் கொள்வது நம் புத்திசாலித் தனம்.
RATHNESH
-------------------------------------------------------------------------------------------------------------
இதுல பிரச்சனை என்னன்னா....ஒருத்தர் ஒன்னு சொன்னா...அத எப்பச் சொன்னாரு...எதுக்குச் சொன்னாருன்னு தெரிஞ்சிக்காம புரிஞ்சிக்கிறதுதான். அது பெரியாரா இருந்தாலும் வள்ளுவரா இருந்தாலும் சரிதான்.
இப்ப அநுபூதி, திருப்புகழு, திருப்பாவைகள் நமக்குச் செய்யுளாச் சொன்னா புரியிறதில்லை. அதுக்கு விளக்கம் சொல்ற மாதிரி....பெரியார் என்ன சொன்னார்...எதுக்குச் சொன்னார்னும் விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும்.
இல்லைன்னா....பெரியார் சொன்னதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக்கிட்டோம்னா...அவ்வளவுதான். இத்தனைக்கும் பெண் ஏன் அடிமையானாள் படிச்சான்னா...குஷ்பூவுக்கு வெளக்கமாறு தூக்குனவங்க வெக்கப்பட வேண்டியிருக்கும். மொத்தத்துல பெரியார் சொன்னதப் புரிஞ்சிக்கிட்டு...அதுல நல்லது கெட்டத மட்டும் எடுத்துக்கிறது நல்லது. இல்லைன்னா..அவரோடு பேச்சு வேதமாகி அவரும் இறைத்தூதர் ஆயிருவாரு.
சிலப்பதிகாரம் பத்திய பெரியார் கருத்தில் நான் உடன்படவில்லை. சிலப்பதிகாரம்னு இன்னைக்கு நெறையப் பேரு நெனைச்சிக்கிட்டிருக்குற கதையத்தான் பெரியாரும் தெரிஞ்சி வெச்சிருந்தாருன்னு நெனைக்கிறேன். கற்புங்குறத எதிர்க்க வேண்டி அவர் கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும் அவர் எதிர்த்திருக்காரு. ஆனா சிலப்பதிகாரம் சொல்ற கற்பே வேற. கணவனோட இருந்ததுக்காக சிலப்பதிகாரமோ...அந்த நூலின் பாத்திரங்களோ கண்ணகியைப் போற்றலை. கண்ணகியின் கற்பு என்று விளக்கப்படுவது அவளது அறச்சீற்றம். அதுதான் மையக்கருத்து. அரசியல் பிழைத்தார்க்கு அறமே கூற்றம். இதுதான் சிலப்பதிகாரத்தின் மையக்கருத்து. இங்க அறம் என்பது கண்ணகி. அரசியல் பிழைத்தது பாண்டியன் நெடுஞ்செழியன். அத விட்டுட்டு...எல்லாரும் கண்ணகி கோவலன் கூடவே போனா வந்தான்னு எழுதுறதும் சினிமா எடுக்குறதும் சிரிப்பா இருக்குங்க. :)))))))))))))))) கதைல இளங்கோவடிகள் அன்றைய காலகட்டத்தை அப்படியே பிரபலசிச்சிருக்காரு. அவ்வளவுதான். அத வெச்சுக்கிட்டு...அத இளங்கோவோட கருத்தா எடுத்தக் கூடாது. இன்னும் சொல்லப்போனா...சிலப்பதிகாரத்த முழுசா ஆழப்படிக்காம யாரும் பேசுறது.....என்னைப் பொருத்தவரையில் மூடத்தனம்.
-------------------------------------------------------------------------------------------------------------
// மாசிலா said...
நான்கூட கடைசியா தோழியர் தமிழச்சி பதிவுல குறல் பற்றி பெரியார் கருத்தை பார்த்து அதிர்ச்சியாயிருந்தேன். உண்மைதான். பிறகு நல்லா யோசித்து பார்த்தேன்.
ஏன் இவரு இப்படி சொல்லி இருப்பாருன்னு!
என்னை பொருத்தவரை அவர் மதம் மொழி என்கிற எல்லை, வலை, சுவர்களை உடைத்தெறியனும்னு நெனைச்சிருப்பாரோன்னு தோனுது. //
அதே அதே. நீ நீயாயிரு. அதே நேரத்துல அடுத்தவன அடுத்தவனா இருக்க விடு. இதுதாங்க மையக்கருத்து. இத எல்லாரும் பின்பற்றுனா போதும்.
// இன்றைக்கும் தமிழ வெச்சி நெறைய வியாபாரம் நடக்குது மேன். பாப்பான் மொத கொண்டு நம்ப மொழிய வெச்சி நம்மளையே அழிச்சினு வர்ரான். பல ஆயிரம் ஆண்டுகளா அத பேசற பறையன் பள்ளனுக்கு இத்யாதிக்கு எதுவும் கிடைக்கல.
பாப்பார பன்னாட தான் கொண்டு வந்த மொழியான சாக்கட கிருதத்தை அந்த உணர்வு, ஆட்டுக்குட்டி உணர்வுன்னு நெனச்சி இருந்தான்னா, இன்னிக்கு சோமாறி அடியோட ஒழிஞ்சி போய் இருப்பான். அதுக்கு பதிலா, சாமர்த்தியமா நம்ம மொழிய அவன் கத்துனு நம்மளையே ஏமாத்தினு பொழைச்சினு வர்ரான். நம்மளும் அவனுக மொழிய கத்து அவனுகள திருப்பி அடிச்சி இருந்திருக்க முடியும். //
கண்டிப்பா முடியும். அதையும் செஞ்சாரு அருணகிரி. கடவுள் வணக்கம் தொடர்புங்குறதால நீங்க கண்டுக்காம இருக்கலாம். ஆனா நடந்தது உண்மை. தமிழ் மொழியும் முருகன் வழிபாடும் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போன காலத்துல... தமிழும் வடமொழியும் கலந்து...அப்ப பிரபலமா இருந்த கடவுள்களோட இணைச்சு திருப்புகழ எழுதத் தொடங்கி....அலங்காரத்துக்கு வர்ரப்போ "சிகராத்ரி கூரிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ"ன்னு மாறி...பின்னாடி அநுபூதில பெரும்பாலும் தமிழ்லயும் முருகனை மட்டும் முன்னிறுத்தியும் எழுதுனாரு. அவருக்குப் பின்னாடி நம்மளே அதச் சரியா எடுத்துக்கலை.
//மற்றுமொரு இந்திய தத்துவ ஞானி ஆன ஜெ.கே வும் மொழி, கொள்கை, நாடு, எல்லைகள், கொடி, தலைவன் போன்ற சமுதாய, மற்றும் தனி மனித சுதந்திரத்தை அழிக்கும் போலி வேசங்களுக்கு ஆளாக கூடாதுன்னு சொல்லி இருக்காரு. //
வள்ளலாரையும் சேத்துக்கோங்க. தாயுமானவரையும் சேத்துக்கோங்க. அருணகிரி கொஞ்சம் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவரு. அவரும் அந்தக் காலத்துக்குத் தக்கச் சொல்லீட்டுத்தான் போயிருக்காரு.
// மொழிய நேசிக்கிற அளவுக்கு சக மக்களை நேசிக்க தவறிய சமுதாயத்தை பார்த்தும் இப்படி சொல்லி இருப்பாரு.
என்னை பொருத்தவரை
பெரியார் ஒரு பெரும் ஞானி. அற்புத தீர்க்க தரிசி. மிகுந்த தொலை நோக்குடைய தத்துவ மேதை. //
ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து. ஆனா இன்னைக்குப் பெரியார் அப்படீங்குறது திகவின் சொத்துங்குற மாதிரி ஆகிப் போனது வருத்தத்திற்குரியது. அதுவுமில்லாம பெரியார் கருத்தை நேர்மையா பலர் விமர்சனம் செய்யலைங்குறது உண்மைன்னாலும்....விமர்சனம் செஞ்சாலே அவனைத் துரோகி பச்சோந்தீங்குறதும் நடக்குது. பெரியார் என்ன சொன்னாருன்னு எல்லாரும் படிக்கனும். படிச்சிச் சிந்திச்சி அதுல இருக்குற நல்லதுகள எடுத்துக்கனும். தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்கெல்லாம் நான் பரிந்துரைக்கிறது..."பெண் ஏன் அடிமையானாள்" எல்லா மதத்து ஆண்களுக்கும்தான். அதுல குறிப்பிட்ட்ட மதத்தை வைச்சு எழுதீருந்தாலும் எல்லாருக்கும் பொருந்த வேண்டிய கருத்துகள் அவை.
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு அனானி என்னைய குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில அசிங்க அசிங்கமா திட்டிட்டு போய் இருக்குது.
அரை பிளேடு அதை வெளிய விட்டுருக்காரு.
மூஞ்சியும் மொகர கட்டையையும் காட்ட தைரியமில்லாத கோழைங்க எல்லாம் பேசவும் எழுதவும் கூடாது.
இதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பல.
என்னைப் பற்றி தனிப்பட்ட விதமா விமரிசித்து எழுதியதை கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் அப்படியே வெளிவிட்டு எனக்கு அவமாரியாதை வாங்கித்தந்த இந்த பதிவின் உரிமையாளருக்கு என் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இது சம்பந்தமான பகுதிகளை நீக்க கேட்கிறேன்.
மாசிலா.
-------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள மாசிலா,
அனானியாக வந்து தங்களை தாக்கிய பின்னூட்டம் நீக்கப்பட்டது.
அனானியாக வந்து தனிநபர் தாக்குதல்கள் நிகழ்த்துவது கண்டனத்திற்கு உரியதே என்பதை வழிமொழிகிறேன். வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவை பொறுத்த அளவில் அனானி பின்னூட்டங்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.
இங்கு பின்னூட்டிய பதிவர்களின் கருத்துக்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு.
தமிழ், தமிழர் நலன் மட்டுமே இப்பதிவரின் குறிக்கோள் என்பதை இங்கு தெளிவு படுத்துகிறேன்.
மாற்றுக் கருத்துக்களை விவாதம் ஆரோக்கியமான தளத்தில் செல்ல வரவேற்கிறேன்.
நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
பெரியாரின் எப்போதும் லைம்லைட்டில் இருக்க பயன்படுத்திய உத்திதான் இது. அதாவது எதையாவது மக்கள் மிகவும் மதித்தால் அதை எதிர்த்து பிரபல்யம் ஆவது.எப்போதுமே சமுதாயத்தின் ஓரு பகுதி பொதுவாக பயன்படுத்தப்படும் சிஸ்டத்தில் அதிருப்தியுற்று இருக்கும். அம்மக்கள் உடனடியாக இந்த எதிர்ப்பு உத்தியினால் கவரப்படுவர்.இதனால் சச்சரவு அதிகமாய், ஆளும் அவரது கருத்துகளும் பிரபல்யமாகும்.
பெரியார் ஒரு நவீன சிந்தனாவாதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என நம்பகிறேன்.ஆனால் பிரச்சனை என்னவெனில் கடவுளை அழித்து (?) உண்டான வெற்றிடத்தில் பெரியாரை இட்டு நிரப்ப முயலும் பல பெரியாரிஸ்டுகளின் போக்கு!
பெரியாரும் மனிதர்தான் ஆதலின் மனிதர்க்குரிய பலவீனங்கள் அவருக்கும் உண்டு.பெரியாரும் எல்லா சிந்தனாவாதிகள் போல் சில ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களும் சொன்னவர்தான்,பல தமிழ் சமுதாயத்தினை புரட்டிப்போட்ட நல்ல கருத்துக்களோடு! அவர் சொன்ன எல்லாக் கருத்துக்களையும் சப்பை கட்டுக்கட்டி கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளுவது தமிழச்சியக்கா சொன்னற்போல் மந்தை கூட்டத்தின் வழிமுறையாகும்.
-------------------------------------------------------------------------------------------------------------
எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு மிக்க நன்றி அரை பிளேடு அய்யா.
-------------------------------------------------------------------------------------------------------------
One thing all the Periyar followers did is.....scolding religions which given a huge pushup for Religions. Example how many people (Young) in each temples/Mosques/Churches you can see in India....
All Periyar followers barking in roads like in paris they have done.....
Year by year they are barking and the words going to worst even worst.....The people crowd in temples/Mosques/Churches increasing like anything.....
Just see how many Astrology books coming as weekly (no one famous daily/weekly news paper comes without that).
These all b'cos Periyar guide how to take his policies.....
Periyar followers , Periyar was talking about his policies till his death day....Yes I know a person who worked till 96 next day after his work he died.....
He worked for his food. He did not have children and worked for 72 years in same owner (Farm then Store). Can we see here he also lived for his policy not to beg.....
He lived with young and beautiful wife(?????) till his life....
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் அரைபிளேடிற்கு..
ஆரொக்கியமான விவாதத்திற்காக எனது பின்னோட்டததை எனது பதிவில் இட்டிருக்கிறேன் அதன் நீளம் கருதி.. இணைப்பு கீழே..
http://jamalantamil.blogspot.com/2007/09/blog-post_09.html#links
அது என்ன உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு பேருமட்டும் அரைபிளேடு .. பதிவின் உப தலைப்பில் அது என்ன பாஷை..
விவாதத்தை துவக்கியமைக்கு நன்றி.. இன்னும் கொஞ்சம் பூனைகளை வெளியே கிளப்பி விடுங்கள் பின்னோட்டத்தில்..
-------------------------------------------------------------------------------------------------------------
ஜமாலன் அவர்கள் பதிவில் என் எதிர்வினை.
-------------
அன்புள்ள ஜமாலன்...
தங்கள் பதிவுக்கும் ஆராக்கியமான விவாதத்திற்கும் நன்றி.
///அவரை தமிழ் விரோதி என்று சொல்வது அதுவும் அவரது பக்தனாகவும் அவரது கொள்கைப் பற்றாளனாகவும் காட்டிக் கொண்டு கொஞ்சம் விஷமத்தனமானதுதான்///
இந்த நூற்றாண்டில் தமிழகம் கண்ட, தமிழனின் வரலாற்றையே திருப்பி போட்ட தலைவர் பெரியார் என்பதிலும் அதற்காக நன்றிக்கடன் பட்ட தமிழர்களின் நான் ஒருவன் என்பதும் எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் பெரியாரின் மற்ற கொள்கைகளோடு ஒப்பும் என்னால் தமிழனாக பெரியாரின் தமிழ் எதிர்க்கருத்துக்களை ஒப்ப முடியாது என்பதையே பதிவு செய்திருக்கிறேன்.
மொழி அபிமானம் என்பது எவ்வண்ணம் பகுத்தறிவிற்கு புறம்பானதாக இருக்க முடியும்.
//இத்தமிழ் கருத்துருவம் ஆங்கிலேய காலணீய காலத்தில் தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கங்கள்மூலமாக கட்டப்பட்டது. இக்கட்டமைப்பு இனவாததனமையுடன்தான் கட்டப்பட்டது.//
ஆங்கிலேயனுக்கு தனித்தமிழை கட்டமைப்பதால் என்ன லாபம் ஐயா :).
தமிழ் என்று சொல்வது இனவாதம் எனில் திராவிடன் என்று சொல்வது இனவாதம் இல்லையா ? சமூக அவலங்கள் கலைவதற்காக பெரியார் திராவிடம் என்பதை ஆரியத்திற்கு மாற்றாக நிறுவினார். ஒரு இனமோ மொழியோ தன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போது தன் அடையாளங்களை இழந்து எவ்வாறு குரல் கொடுக்க முடியும்.
பெரியாரின் பிறகொள்கைகளை மேற்கொண்ட திராவிட கழகத்தார் தமிழ் குறித்த அவரது கொள்கைகளை பெருமளவு ஏற்கவில்லை.
அண்ணாவால் முன்னெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தமிழை பெருமளவு முன்னிறுத்தியது.
கண்ணகிக்கு தமிழின் அடையாளமாய் சிலை வைத்தது. கலைஞர் அவர்கள் குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும் தீட்டி திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் அழகு பார்த்தார்.
மொழியின் மீது பற்று என்பது பாசிசத்தன்மையன்று. பாசத்தன்மையே என்பதை உணருங்கள்.
"பெரியார் தமிழின துரோகியா ?" என்பது தங்கள் தலைப்பெனில் கண்டனங்கள்... தமிழினத்திற்கு பெருந்தொண்டாற்றிய பெரியார் சிறிதளவிலேயே தமிழ் விரோதத்தை கடைப்பிடித்தார் என்பதும்.. (அவரது மொத்ததமிழ் விரோத கருத்தும் என்பதிவிலேயே அடங்கிவிட்டது என்று கருதுகிறேன்) பின் நாளில் தாமே அதிலிருந்து பெரிதும் மாறுபட்டு தமிழ் எழுத்துருக்களுக்காக பாடுபட்டார் என்பதும் வரலாறு.
பெரியாரின் கருத்துருவாக்கங்கள் மெல்ல மெல் உருப்பெற்று தகவமைந்தவையே. தமிழ் சார்ந்த அவரது சிந்தைகள் பிற்காலத்தில் மாறியமைந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் அவரது சித்தாந்தங்களை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்து ஏற்பதே சரியானதாக இருக்கும்.
பெரியாரின் தமிழ்விரோதக் கருத்துக்களை அவை வெளியான காலகட்டத்தோடு பொருத்தி பார்த்தே நீக்கி விட வேண்டியிருக்கின்றது என்பதை தொடர்விவாதங்களினாலும் தொடர்வாசிப்பாலும் அறிகிறேன்.
மற்று எனக்கு தமிழ்ப்பற்றுதான் இருக்கிறதேயன்றி தமிழ் வழிபாட்டு மனோநிலையன்று. தாங்களுடையது எவ்வாறு பெரியார் வழிபாட்டு மனோநிலையன்றி பற்று மட்டுமோ அதே போல்தான் என் தமிழ்ப்பற்றும்.
"எல்லாவற்றையும் சந்தேகி - கார்ல் மார்க்ஸ்" தங்கள் பதிவிலுள்ள நல்ல வரிகள். அதைத்தான் நான் செய்தேன்.
எனது பதிவின் நோக்கம் பெரியார் உணர்வாளர்களிடம் தவறான தமிழ் விரோதப்போக்கு வேண்டாம் என்று முன்னெடுத்துச்செல்லவே.
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் அரைபிளேடு.
-----------------------------
மற்று "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"... இவ்வாறு எங்கும் நான் சொல்லவில்லை ஐயா...
தமிழுணர்வு மட்டுமே. உயிர் தர என் பகுத்தறிவு இடம் தராது. :)
-------------------------------------------------------------------------------------------------------------
கோவி.கண்ணன் அவர்கள் பதிவில் வெளியிடப்பட்ட என் பின்னூட்டம்..
http://govikannan.blogspot.com/2007/09/blog-post_10.html
---------------------------
அன்புள்ள கோவியாருக்கு...
//தமிழ் > த்ரமிள > த்ரமிட > திராவிட//
தமிழ்தான் திராவிட மொழிகள் யாவுக்கும் மூலமும் முதலுமான மொழி என்பதும்.. "திராவிட" என் சொல்லே தமிழ் என்பதிலிருந்து தோன்றியது என்பதுமான தங்கள் விளக்கங்கள் அருமை.
தூங்குபவனை தட்டித்தான் எழுப்பமுடியும். பெரியாரின் காலகட்டம் வெறுமனே சுட்டி காட்டுவதால் பலனில்லாத காலகட்டம். அதனால் பெரியார் தமிழனை அவன் தமிழ்த் தலையில் குட்டியே உணர்வு கொள்ளச் செய்தார்.
பெரியாரின் கருத்துக்களை அக்கருத்துக்களின் பின்னணியை அறியாது படித்தலினால் சற்று குழப்பம் வரலாம். பெரியார் விரிவாக படிக்கப்பட வேண்டும் என்ற சிறு முயற்சியாகவே எனது பதிவு இடப்பட்டது.
தமிழர் தம் இன உணர்வும் மொழியுணர்வும் கொள்ளுதல் அவசியமாகும்.
விளக்கங்களுக்கு நன்றி.
அன்பன்
அரைபிளேடு.
-----------
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் அரைபிளேடு,
இங்கேயே பின்னூட்டமாக இடலாம் என்று எழுதினேன். நீண்ட விளக்கமாக போய்விட்டதால் தனி இடுகையாக இட்டேன். அதுஒரு மாற்றுக்கருத்து மாட்டுமே , உங்கள் கட்டுரைக்கான எதிர்மறை விமர்சனம் இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் மறுமொழி காட்டியது.
மிக்க நன்றி !
-------------------------------------------------------------------------------------------------------------
பிளேடு மட்டுமே அரை இல்லை! மூளையும் அரைதான் என்பதை இந்த பதிவு தெளிவு படுத்தி இருக்கிறது.
இந்த பதிவின்மூலம் அரைபிளேடு என்ற புனைபெயருக்கு பின்னாலலிருப்பது ஒரு பார்ப்பன மிருகம் என்பது தெள்ளத்தெளிவாக வலைமக்களுக்கு விளங்கி இருக்கிறது.
பெரியாரைப் படித்து முழுமையாக உள்வாங்காமல் அரைகுறையாக எழுதும் நாய்களுக்கு வேறு என்ன வேலை! இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கும்!
ராஜாஜிகூட ஏன் பெரியார் சேர்ந்தார் என்று கேட்கும் மிருகமே. முதலில் நீயே பதில் சொல். பெரியார் கெட்டவராக இருந்தால் உம் ஜாதி ராஜாஜி போய் கூட்டு சேர்வானா?
விக்கிரமாதித்தன்.
-------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் அரைபிளேடு,
இந்த விடயத்தில் பெரியார் பற்றிய தவறான புரிதலாகவே அமைகிறதாக கருதுகிறேன். உங்களுக்கு பதில் எழுத குறிப்புகள் எடுத்த பின்னர் நண்பர்கள் பலர் பதிவு எழுதி விளக்கியுள்ளதை கவனித்தேன். இந்த விடயம் பற்றி பொறுமையாக பெரியார் பற்றிய கூட்டுவலைப்பதிவில் பின்னர் எழுதலாம்.
பெரியாரையும், அவரது சிந்தனைகளையும் கேள்வி எழுப்புவது பகுத்தறிவிற்கு அவசியம். இதை பெரியாரே குறிப்பிட்டுள்ளார். பெரியார் பற்றிய விவாதங்களில் சில பின்னூட்டங்களை படிக்கும் போது அறியும் நோக்கில் எழுதப்பட்டவை தானா என கேள்வி எழுகிறது. சில பின்னூட்டங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலும், கற்பனைகளிலும் முடிகிறது. பெரியார் பற்றிய கேள்விகள், விவாதம் நேர்மையுடன் நடத்துவது பெரியாரது சிந்தனையை புரிய உதவும்.
பதிவிம் கருத்துக்கள் மர்றும் பின்னூட்டங்களுக்கும் விவாதிக்க ஆவல் இருந்தாலும், இப்போதைக்கு பெரியார் பற்றி ஒருவர் இங்கே பின்னூட்டத்தில் எழுப்பிய கருத்து ஒன்றை இன்னும் அறிய ஆவல். நண்பர்கள் யாராவது ஆதாரத்துடன் பதில் தந்தால் எல்லோரும் அறிய உதவியாக அமையும்.
//PN said...
அரைபிளேடு சார்,
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாமபை விடுத்துப் பார்ப்பானை அடி என்று சொன்னவர் ஏன் ராஜாஜியுடன் ஆயுள்காலத் தொடர்பு வைத்திருந்தாராம்?//
பெரியார் எந்த கூட்டத்தில் அல்லது எந்த பத்திரிக்கையில் பாம்பை விட்டு விட்டு பார்ப்பானை அடிக்க சொன்னார்?
அறியும் ஆவலுடன்
திரு
-------------------------------------------------------------------------------------------------------------
Good work Arai Blade...
Keep it up...
-------------------------------------------------------------------------------------------------------------
//மற்று "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"... இவ்வாறு எங்கும் நான் சொல்லவில்லை ஐயா...//
இதை நீங்கள் சொல்லவில்லை உங்கள் எழுத்த சொல்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------
அடேங்கப்பா,அருமையான பதிவும், பின்னூட்டங்களும்.
நம்முள் இவ்வளவு விஷயம் ஞானம் இருப்பவர்கள் கண்டு வியப்படைகிறேன்.
அருமை.
-மெய்ப்பொருள் காண்ப தறிவு-
:)
-------------------------------------------------------------------------------------------------------------
We must understand one thing. Periyar not only opposed Tamil literatures. He had a firm beleif that literatures did not help the downtrodden people any way.How Periyar could appreciate Silapathigaram? Silapathigaram try to establish that a good wife should be sincere and obedient to his husband eventhough he was characterless. Almost all the Tamil literatures , including Thirukural are based only with relegious sentiments and they are definitely against the views of Periyar.Hence he was against them. There was another reason also.He firmly beleived that Mr. Annadurai and his followers were misleading the people by encouraging lingual fanaticism. Thats why he used such harsh words against Tamil language and the leaders who try to hoodwink the people in the name of language.Some of his words were very harsh,but no body should degrade him because of the great upliftment he had given to the non bhramins in Tamilnadu.
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment