Tuesday, September 04, 2007

இறைவன் இருக்கின்றானா ???????????????????

எனது அந்திப்பொழுதொன்றில் கடற்கரையோரம் நின்றிருந்தேன்.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்த கடல்.
அதன் விஸ்தீரணத்தின் விந்தையில் மயங்கியிருந்தேன்.
மெல்ல பரிதிசாய வர்ணத்தின் விந்தைகள் கண்முன்.

மாலை வானத்தில் சிவப்பு வண்ணத்தை குழைத்தது யார்.
மேகப்பந்தலை அவனியெங்கும் அலையவைத்தவன் எவன்.
கடலின் அலைகளுக்கு தரைதொட்டு திரும்ப சொன்னது யார்.
கடற்கரையெங்கும் மணல்படுக்கை பரப்பியவன் எவன்.

மெல்ல பொழுது சாய செவ்வண்ணம் மறைய..
இருளென்னும் போர்வையை யாரிங்கு போர்த்துவது.
வானத்து மின்மினி பூச்சிகள் யாரிங்கு தூவியது
வட்டத் தட்டொன்றை யார் நிலவென வீசியது....

தீண்டி செல்லும் கடற்காற்றை வீசச்சொன்னவன் எவன்.
இதமான குளிரொன்று இதயத்தில் இறக்குபவன் எவன்.
காலைத் தொட்டுச் செல்லும் கடல்நீரே...
ககனம் சுற்றும் காற்றே கண்டதுண்டோ அவனை.

கண்முன் தொடர்ந்து மாறிய காட்சிஜாலங்கள்..
இத்தனைக்கும் ஒளிஓவியன் ஒருவன் இருக்கின்றானா...
இறையொருவன் இத்துணையும் அமைத்து ஒளிந்தானா...
இருக்கின்றான் எனில் எங்கிருக்கின்றான் அவன்.

இல்லையெனில் இவ்வையகமும் அண்டப் பேரண்டமும்
அலையும் கடலும் காற்றும் யாவும் தான்தோன்றியோ...
அண்டப் பேரண்டத்தின் சிறுதுளி புவியெனில்..
இதன் புறத்திருப்பானோ இல்லை அகத்திருப்பானோ.

இறைவனவன் இருப்பும் இன்மையும் இவ்வையத்தின்
இயக்கத்தை இயல்பை மாற்றத் தகையதோ.
எண்ணத்தில் விளைந்த விந்தைகள் விடையின்றி
பொங்கு கடலுக்கு விடைகொடுத்து வீடுசேர்ந்தேன்.

2 comments:

said...

//இல்லையெனில் இவ்வையகமும் அண்டப் பேரண்டமும்
அலையும் கடலும் காற்றும் யாவும் தான்தோன்றியோ...
அண்டப் பேரண்டத்தின் சிறுதுளி புவியெனில்..
இதன் புறத்திருப்பானோ இல்லை அகத்திருப்பானோ//

டாக்டர் அரைபிளேடுண்ணா...எப்படிண்ணா இப்படியெல்லாம்...பின்னறீங்ணா.

மெட்ராஸ் பாஷையும் கவிதை தரும் செந்தமிழும் அரை பிளேடின் இரு கண்கள்னு சொல்லலாம் போலக்கீதே?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கைப்புள்ள...

கொஞ்சம் காலாற பீச் பக்கமா நடந்தா கவிதை வந்து கொட்டுது...

தலைவர் பாடின மாதிரிதான்...

"காற்று வாங்க போனேன்..
ஒரு கவிதை வாங்கி வந்தேன்"...

இயற்கையின் அழகை பார்த்தா அரைபிளேடுக்கும் கவிதை வரும்.

அம்புட்டுதாங்க..

கவிதைய பாராட்டுனதுக்கு ரொம்ப நன்றிங்க. :)



-------------------------------------------------------------------------------------------------------------