Sunday, September 09, 2007

தொண்ணூற்றி ஏழு சதவீதத்தில் ஒருவனின் குரல்

இவ்வுலகில் தனது மொழியின் இலக்கிய செல்வங்களை தானே இகழ்ந்து பேசும் தமிழினத்தைப் போலொரு இனம் வேறு எங்காணும் இருக்குமா என்பது சந்தேகமே.
இலக்கியங்கள் படிப்பதில் உள்ள உனது சோம்பேறித்தனத்தால் என்னரும் தமிழனே... நீ உன் தாய்மொழியாம் தமிழையல்லவா இகழ்ந்து கொண்டிருக்கிறாய்.

ஆரிய திராவிட மாயைகளை விட்டு வெளியே வா. நீ தமிழன். உன் மொழி தமிழ். இதை மறவாதே.

மதமென்னும் மூர்க்கம் தலைக்கேறி பிதற்றாதே. மதஎதிர்ப்பு என்னும் மயக்கத்தால் உன்கையை நீயே வெட்டிக் கொள்ளாதே.

பகுத்தறிவைக் கைக்கொள். தமிழை தமிழிலக்கியங்களைப் படி. எதையும் ஆராயாமல் இன்னார் சொன்னார் என்னார் என்று ஏற்காதே அல்லது விலக்காதே.

உனக்கென்று சுயஅறிவோ புத்தியோ இல்லையா என்ன. தமிழொன்றும் வெறும் மூட இலக்கியங்களை மட்டும் கொண்ட மொழியன்று. சித்தர் பாடல்களை படி. அவற்றிலும் பகுத்தறிவு சுடர்விடுவதை காண்பாய்.
பண்டைத்தமிழர் வாழ்வியலை காட்டும் சிலம்பை மூடமாதொருத்தி பற்றிய காவியம் என்று புறந்தள்ளினால் பண்டைத்தமிழர் வாழ்வு குறித்த ஒரு காவியத்தை புறந்தள்ளுகிறாய்.
சோழ நாட்டின் சிறப்பை விவரித்து, பாண்டி நாட்டின் தெருக்களில் நடந்து சேரநாட்டில் முடிந்து தமிழகம் முழுவதையும் படம் பிடித்துக் காட்டும் சிலம்பு தனியொரு மன்னனையோ கடவுளையோ பாடியது அல்ல. ஒரு சராசரி தமிழனின் வாழ்வியலை சொன்ன நூல்.

தனது நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்று வகுத்து வாழ்ந்தவன் தமிழன். முருகனும், மாலவனும், இந்திரனும், வருணனும், கொற்றவையும் முறையே இந்நிலத்துக்குரிய கடவுள்கள் என்று காட்டுகிறது தமிழ் இலக்கியங்கள். தமிழன் கடவுளை வணங்காத காட்டுமிராண்டியல்ல, வெளியே இருந்து ஒருவர் வந்தேகி கடவுளை கற்பிப்பதற்கு. கோவில் கட்டுவதிலும் தமிழனுக்கென்று ஒரு தனிப்பாங்கு. அவன் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அவனது கோவில்கள் விளங்குகின்றன. இத்தகு கோவில்களை வடஇந்தியா முழுவதும் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைப்பதில்லை. வடக்கிருந்து வந்த ஆரியர் கட்டுவித்த கோவில்கள் இவையெனில் இத்தகு கோவில்கள் ஏன் வடக்கில் இல்லை.

மூன்று சதவீதம் 97 சதவீதத்தை விழுங்கிவிட்டது என்ற குரல் வரும்போதெல்லாம் 97 சதத்தில் ஒருவனான எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது என்பதை கண்ணெதிரே காண்கிறோம்.

சமூக கலகக்காரராக பெரியார் பெருமளவு வெற்றி பெற்றுவிட்டார். அதன் பலன்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், பெரியாரே விரும்பாத பக்கவிளைவுகளாக ஜாதிக்கொரு கட்சி என்று இருந்தபோதிலும்.
இன்னமும் மூன்று சதவீதத்தினர் நம்மை ஆட்கொண்டு அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்வோமானால் பெரியார் தோற்றுவிட்டார் என்று சொல்வதாகும். பார்ப்பனீயக் கருத்துக்கள் செத்த பாம்புகள். அதை அடிப்பதற்கு செலவிடும் நேரத்தை தமிழ் வளர்சிக்கு செலவிடலாம்.

97 சதத்தாரான நாம் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக மிக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று நமக்குள் நாமே வர்ணபேதங்களை கட்டியமைத்து எழுப்பியுள்ளோம். மொத்த சாதிக்களையும் பட்டியலிட்டு அரசாங்கம் அட்டவணைப்படுத்த நாம் நமது சாதியமைப்பை கட்டிக் காத்து வருகிறோம்.

உண்மையான சாதியொழிப்பு என்பது அனைவரும் சமம். சாதிகள் இல்லை என்பதாகவல்லவா இருக்க வேண்டும். சுதந்திரத்தின் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி ஒழியாதது யார் குற்றம். தனிப்பட்ட பிரிவாரை மட்டும் காரணம் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து.

ஒட்டுமொத்த 100 சதவீதமும்தான் காரணம். அடிப்படையில் நம் ஒவ்வொருவரிடமும் சாதிஉணர்வு நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.

சாதி உணர்வு மனதில் வேண்டாம்... அது உங்கள் சாதிசான்றாக காகிதத்தில் மட்டும் இருந்து போகட்டும். இன்னும் ஒரு தலைமுறை அனைவரும் சமமென்ற சமுதாயத்தை படைப்போம். அந்த சமுதாயத்தில் சாதி சொல்லும் காகித குப்பைகளுக்கு கூட இடம் இருக்க வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரை திராவிடன் ஆரியன் என்று யாருமில்லை. தமிழறிந்தவர் யாவரும் தமிழரே.

ஒவ்வொரு தமிழனுக்கும் தன்னுடைய மதத்தையோ இறைவனையோ தேர்ந்தெடுத்து வழிபடும் உரிமை உண்டு.

நான் நாத்திகன் என்றால் அது என்னோடு மட்டுமே. அதை என் வாழ்க்கைத் துணையிடம் கூட வலியுறுத்த மாட்டேன் என்னும் போது இன்னொரு தமிழனின் எண்ணங்களை உணர்வுகளை சிறுமைப்படுத்த துணியமாட்டேன்.

இந்திய அரசலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளித்துள்ள
சமத்துவ உரிமை
பேச்சு எழுத்து கருத்து சுதந்திரம்
கலாச்சார மற்றும் கல்வி உரிமை
மத உரிமை
ஆகியவற்றை இணையத்திலும் காப்போம்.

உன்னை காயப்படுத்தாத என்னிடமுள்ள எனது கருத்துக்களுக்காகவும்....
என்னை காயப்படுத்தாத உன்னிடமுள்ள உன் கருத்துக்களுக்காகவும்..

கருத்து பேதங்கள் பல இருந்தாலும் மொழியால் நாம் தமிழரென தமிழுணர்வு கொள்வோம்.

6 comments:

said...

ஒரு நல்ல பதிவு பாரட்டுக்கள் அரை பிளேடு. ஒவ்வொரு தமிழனும் முன்னேற்றத்திற்கு முக்கியதுவம் கொடுத்தாலே போதும். சாதி மத பேதம் நீங்கி மொத்த தமிழ் இனமும் முன்னேறும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்பாவித் தமிழினத்தை எல்லோரும் தமது சுயநலத்திற்கே

பயன்படுத்தினார்கள், பயன் படுத்துகிறார்கள், பயன் படுத்தவும் போகிறார்களோ!?

யாது நமது தலைவிதியோ??????-------------------------------------------------------------------------------------------------------------
said...

தங்கள் எழுத்துக்கள் படிப்பதற்கு அருமையாகவும்,கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.நடைமுறையில் தான் இடிக்கிறது.

வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இன்றும்,2007லும்,நாடு விடுதலை அடைந்துவிட்ட 60வது ஆண்டிலும் இடிப்பது வெட்கமும் வேதனையும் ஆகும்.

தமிழ்பேசுகிறவன் அனைவரும் தமிழனாக நினைத்து நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லையே!

பிழைப்புக்குத் தமிழ் ஆனால் தமிழையும்,தமிழினத் தலைவர்களை மட்டும் கிண்டலடிப்பேன்.கொலைகாராக் குற்றம் சாட்டப் பட்டாலும் அவரைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னும் சோமாரி தமிழனா?
எந்த விதத்திலும் தமிழ்,தமிழர்கள் முன்னேறக் கூடாது என்பதுதானே அவர்களின் கோட்பாடு.

அறிஞர் அண்ணா அவர்கள் தங்கள் கருத்தைத்தான் சொல்லி திராவிட்ர் என்பதிலிருந்த "ர்"ஐ எடுத்துத் திராவிட என்று இனத்துக்குப் பதிலாக நாட்டில் வாழ்பவர்களை ஒன்று சேர்க்க முயன்றார்.பார்ப்பனீயம் மாறியதா?
இன்று மாறியது போல ந்டிப்பவர்களைக் கவனித்துப் பாருங்கள்.விஷமாகத் தானே இருக்கிறார்கள்.

பெரியார் சொன்னார்"ராஜகோபாலாச்சாரியார் இறந்த் அடுத்த நாளே நான் இறக்கலாம்,ஆனால் நான் இறந்து அவர் ஒரு நாள் கூட இருக்கக்கூடாது.அவ்வளவு கோலங்கள் செய்து விடுவார்" என்றார்.அவரை நன்கு தெரிந்ததால் தான் அப்படிச் சொன்னார்.
இப்போது பார்ப்பனர்களுக்கு என்ன குறை?பெரியார் இறந்து 34 ஆண்டுகள் ஆகப் போகிறது.கோவில்,கும்பாபிஷேகம் பிரமாதமாக நட்க்கின்றது.ஆனால் பெரியார் என்ற வார்த்தையைக் கேட்டாலே பார்ப்பனர்கள் துடிக்கிறார்களே அது எதனால் என்று யோசித்துப் பாருங்கள்.அப்போது தெரியும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு.விஷ்ம் இன்னும் உயிருடனே தான் இருக்கிறது,பூணூல் மகிமை,மந்திரம்,கடவுளின் ஏஜண்டுகள் அப்படியேதானே!
முப்பது ஆண்டுகட்கு முன்னே போட்ட அனைவரும் அர்ச்சகராலாம் சட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இன்று வெளியே ஆதரிக்கிறார்களே என்ன மன மாற்றம் அடைந்து விட்டார்களா?
இந்திய அரசியல் சட்டத்திலே இன்றும் இந்து லா உள்ளதே!சாதி இருக்கிறதே!நாம் சூத்திரர்கள் தானே!

ஆசிரியர் வீரமணி அவர்களின் மாமனார் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டார்,சுய மரியாதைப் படி.இந்து முறையில் செய்து கொள்ளாததால் அந்த திருமணம் செல்லாது என்று இந்து மந்திரங்களைச் சென்னை உயர்நீதி மன்றத்திலே இரண்டு பார்ப்பன நீதி பதிகள் படித்துச் சொன்னார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்கு அவர்கள் அவருடைய வைப்பாட்டி பிள்ளைகள் என்ற முறையில் சொத்துரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இன்றைய உச்ச நீதி மன்றத்தைப் பாருங்கள்.ஒருகுலத்துக் கொரு நீதி!

97ம் மூன்றும் எண்ணிக்கையில் இல்லை,ந்ண்பரே!இந்து ந்ரசிம்மன் ராமிடம்,தினமணியைத் தலைகீழாக மாற்றியுள்ள குருமூர்த்தியிடம்,உடம்பெல்லாம் விஷ்முள்ள சோமாரியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சாதியத்தை ஒரு நாளிள் அழிக்க முடியாது. 2000 ஆண்டுகளாக அது ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகளை சம படுத்துவதன் மூலம் தான் அதை அழிக்க முடியும். அந்த முயற்சிகளின் பயன் உண்மையிலே தேவை உள்ளவர்களுக்கு போய் சேற வேண்டும்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு நீங்கள் என்ன எனது க்ளோனா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பரே உங்கள் பிரச்சனை என்னவென்றே எனக்கு புரியவில்லை. முதலில் நம்மை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். கடைசியல் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்.... கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது. 60-ஆண்டுகளாக இட ஒதுக்கீடு படும்பாட்டைப் பார்த்துமா? உங்களக்கு புரியவில்லை.-------------------------------------------------------------------------------------------------------------