Sunday, December 16, 2007

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சை

குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.
"தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.



7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.

8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)




10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).

12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது.

முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்து நான் வைத்திருந்த ஒரு படத்தை நண்பன் திருப்பதி வெங்கடாசலபதி என்று கண்டு பிடித்து சொன்னது நினைவுக்கு வருகிறது.
திருப்பதி சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்.

"முருகனோ" இல்லை "சீனுவாசனோ"... டப்பு இச்சினவாடே தேவுடு. :)

"டா வின்சி கோட்"க்கு இணையான மர்மம் திருப்பதியிலும் இருக்கின்றதோ என்னவோ.

"டாவின்சி கோடில்" ஏசுவுக்கு மனைவியும் மகளும் உண்டு என்ற வாட்டிகன் ரகசியத்தை ஐசக் நியூட்டன் முதல் டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.

44 comments:

said...

இது எல்லாம்..உங்களுக்கே உங்களுக்கு தோன்றிய கேள்விகளா...??????

:))))))))))))))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்டார்ட்....ம்யூஜிக்:-)))))


ரண்டி ரண்டி ரண்டி


ஜருகண்டி......



-------------------------------------------------------------------------------------------------------------
said...

He is "ALLAH"



-------------------------------------------------------------------------------------------------------------
said...

TBCD அவர்களே..

விக்கிபீடியாவில் ஊர்ந்து கொண்டிருந்த போது... திருப்பதி பற்றிய கட்டுரையில் பின் வரும் வரிகள் கிடைத்தன.

The identity of the deity is still disputed . Though many believe it is Vishnu but several facts point out the possibility of Murugan being the deity. This is felt because of few reasons. Firstly, the temple is on a hill adjoining Tamil Nadu and belongs to the early AD period. Most hill temples of India in that period belonged to Lord Murugan. The word ThiruVenkatachalpathy is formed of few sub-words Thiru Vel irrukkum eedum or Thiruvenkadam and thalapthy. In other words, the place of the lord holding the sacred vel. The left hand of the deity is in a position as if holding something which Murugan has. The deity marries two wives in the daily rituals which Murugan has and not Vishnu. The deity has a chubby face something only Murugan in his child avatar has.


பார்க்க: http://en.wikipedia.org/wiki/Tirupathi

சில தேடல்களும் காலம் காலமாக உள்ள சில கேள்விகளும் என்னுடைய கேள்விகளுமாக சேர்ந்தே இந்தப் பதிவு :))

----------

துளசி கோபால் அவர்களே..

வேலனும் வேங்கடவனும் ஒன்று என்பதை இந்த கலியுகத்தில் மக்களுக்கு உணர்த்தவே இறைவன் இவ்வாறு உள்ளான் போலும். :))

--------

கலியுக சித்தரே..

எங்குமுள்ள பரம்பொருள் முருகனாகவோ.. மாலவனாகவோ எவ்வடிவத்திலும் தொழத்தக்கதே.

உருவமற்ற அல்லாவும் அப்பரம்பொருளே.

தங்களின் வாக்கு சித்தரின் வாக்கே.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

திருப்பதியில் இருப்பது பெருமாளா முருகனா என்பதற்கு இவற்றை விட இன்னும் அழகான வாதங்கள் இருக்கின்றன. சிவன் என்றும் அம்பிகை என்றும் கூட வாதங்கள் உண்டு.

1. இந்த வாதம் கொஞ்சம் வீக்கான வாதம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்றால் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை, சென்னை அருகே திருநீர்மலை போன்ற இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களும் முருகன் கோவில்கள் என்று சொல்லிவிடலாம்.

2. வேல் + இடம் = வேலிடம் என்று ஆகும். வேங்கடம் ஆகுமா என்று தமிழறிஞர்கள் தான் சொல்ல வேண்டும். நான் அறிந்த தமிழ் இலக்கணப்படி அப்படி ஆகாது.

3. வைணவத்திலும் ஈஸ்வரன் என்றால் கடவுள் தான். வைணவ தத்துவங்களில் எல்லாம் கடவுளைக் குறிக்க ஈஸ்வரன் என்ற சொல்லைத் தான் பயன்படுத்துகிறார்கள். சேதனம் (அறிவுள்ளது), அசேதனம் (அறிவில்லாதது), ஈஸ்வரன் (இறைவன்) என்று தான் முப்பெரும் தத்துவங்களாக வைணவம் கூறுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த வாதம் அடிபட்டுப் போகிறது.

4. மதில் சுவர்களில் கருடாழ்வார் இல்லை என்பது உண்மை. சிங்கங்கள் இருக்கின்றன. முருகன் கோவில் என்றால் சிங்கமா இருக்கும்? மயில் அல்லவா இருக்க வேண்டும்? சிங்கம் இருப்பதால் இது அம்பிகை கோவில் என்பவர்கள் உண்டு.

5. பாலா என்பது அம்பிகையின் பெயர் - பாலா திரிபுரசுந்தரி என்பார்கள். அதனாலும் பாலாஜி என்பது அம்பிகை என்று சொல்பவர்கள் உண்டு. பாலன் முருகன் அதனால் பாலாஜி என்ற வாதத்தை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன்.

6. இந்த ஒற்றுமையை பல முருகன் ஆலயங்களில் பார்க்கலாம். திருச்செந்தூர் முருகன் உருவம் தான் உடனே நினைவிற்கு வருகின்றது. ஆனால் திருச்செந்தூரிலும் முருகன் சிலையில் வேல் இல்லை. அதனால் அது வேலை வைத்துக் கொள்வதற்காக அமைந்த அமைப்பா அல்லது தற்செயலா என்ற கேள்வி உண்டு. சங்கு சக்கரங்கள் இருக்கும் கைகள் வேங்கடநாதனின் திருவுருவத்தில் இல்லை; தோள்களில் தான் சங்கு சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை.

7. உண்மையான மூலவர் சிலையைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அப்படி பார்ப்பதற்கான சிறப்பு தரிசன சேவையும் இருக்கின்றது என்று நினைக்கிறேன். நான் பார்த்ததில்லை.

8. தமிழெழுத்துகள் என்பதால் இது முருகன் கோவில் என்று இந்த வாதம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். தமிழ் எழுத்துகள் பெருமாளின் கோவிலிலும் இருக்கலாம். ஆராய்ச்சி முழுதுமாக நடந்ததா என்று தெரியாது. ஆனால் திருமலை தேவஸ்தானம் செய்யும் இலக்கியச் சேவைகளைக் காணும் போது அப்படி ஆய்வு நடக்காமல் இருக்குமா என்பது ஐயமே.

9 இது மகா சொத்தை வாதம். எத்தனையோ பெருமாள் கோவில்களில் திருமகள் மண்மகளுடன் பெருமாள் திருவருவம் இருக்கின்றது. அவையெல்லாம் வள்ளி தெய்வயானையுடன் இருக்கும் முருகப்பெருமான் திருவுருவமா?

10. அவதாரங்கள் நிறைய உண்டு. அவற்றில் பத்தை மட்டுமே சிறப்பாக தசாவதாரம் என்று சொல்கிறோம். கபிலர், ஹம்ஸம், வியாசர் என்று தசாவதாரக் கணக்கில் வராத அவதாரங்கள் நிறைய உண்டு. அதனால் இந்த வாதமும் ஏற்புடையது இல்லை.

11. தலவரலாறு என்பதால் அது ஆதாரபூர்வமானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஆனந்த ராமாயணம், துளசி ராமாயணம் போன்ற ராமாயணங்களில் மாயாசீதையான வேதவதி (சத்யவதி இல்லை) பற்றி இருக்கிறது.

12. வாரியார் சுவாமிகள் மட்டும் இல்லை. பழைய இலக்கியங்களிலும் வேங்கடத்தில் முருகன் கோவில் இருந்ததாக குறிப்பு இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஆனால் அந்த கோவில் இந்தக் கோவில் தானா என்பதில் ஐயமுன்டு. பழைய தமிழ் இலக்கியங்களில் வேங்கடம் குறிப்பிடப்படும் போது அது பெருமாள் கோவிலாகத் தான் குறிப்பிடப்படுகிறது. சிலப்பதிகாரத்தைப் பார்க்கவும். நீங்கள் சொல்வது போல் மாற்றப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட மாற்றம் சிலப்பதிகாரத்திற்கும் மிக முற்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

விக்கிபீடியா ஆதாரம் அருமையான ஆதாரம் தானே அரைபிளேடு. அவற்றை ஆதாரமாகத் தந்து டாக்டர் பட்டம் பெற்றுவிடலாமா? :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

http://www.chendurmurugan.com/muru_in.jpg



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பதில்களுக்கு மிக்க நன்றி குமரன்.

1. தாங்கள் சொன்னது போல் மலை மேல் இருக்கும் வைணவ ஆலயங்களும் பல இருக்கின்றன.
சோளிங்கர், திருநீர்மலை இன்னும் பல. இவ்வாலயங்களில் பெருமளவில் நரசிம்ம மூர்த்தியே இருக்கிறார்.
(காஞ்சி வரதராஜர் கோவில் மலை மீது இல்லை).
"குன்றுதோராடல்" என்று அனைத்து குன்றுகளையும் குமரனின் அறுபடைவீடாக சொன்னாலும், குமரனில்லாத குன்றுகளும் இருக்கின்றன என்பது உண்மையே.

2. வேல்+ இருக்கும் + இடம் = வேங்கடம் என்று இலக்கண புணர்ச்சி விதிப்படி ஆக முடியாதுதான்.
அலர் மேல் மங்கை (அலர் = தாமரை) அலமேலுமங்கா என தெலுங்கில் எப்படி புணர்ந்து திரிந்ததோ அது போல் திரிந்திருக்கலாம்.

3. வைணவமும் ஈஸ்வரன் என்று குறிக்கும் என்பது நானறியாத செய்தி. நன்றி.

4 & 5. அன்னையின் சிங்கம் மைந்தனின் மதில் சுவரில் இருக்க முடியாதா. நீங்கள் சொன்னது போல் பாலாம்பிகையின் ஆலயமாகவே இருக்குமோ.

6. நீங்கள் கொடுத்த சுட்டியில் திருச்செந்தூர் முருகனின் திருவுருவத்தின் இடது கரத்தைப் பாருங்கள். திருப்பதி இறைவனின் இடது கரத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.

7. சுப்பிரபாத சேவைகள் இருப்பதுபோல் அபிஷேக சேவைகள் உண்டா என்பதை நானும் அறியேன்.

8. தமிழெழுத்துக்கள் இருப்பதால் முருகன் கோவில் என்று சொல்லவில்லை. இந்த எழுத்துக்கள் சொல்லும் செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி.

9. வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனுக்கும், திருப்பதியில் மண்மகள் திருமகளுடன் இருக்கும் சீனுவாசனுக்கும் அதிக ஒற்றுமை இருக்கிறது என்பதே செய்தி.
முருகனோ என்று மயங்கவைக்கும் அளவில் இந்த ஒற்றுமை இருக்கும். நான் சிறிது காலம் முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்தே திருப்பதி படம் ஒன்று வைத்திருந்தேன். அந்த அளவிற்கு ஒற்றுமை.
அந்த படம் நெட்டில் கிடைக்கவில்லை.

10. ஆம். இது அவதாரமாக நிகழவில்லை. திருமகளை தேடி இறைவன் பூமிக்கு இறங்கி வருகிறார்.

11. மாயா சீதை வேதவதியே பத்மாவதி. தலவரலாறு புராண இதிகாசங்களோடு ஒத்துப்போக வேண்டியது இல்லைதான்.

12. சிலப்பதிகாரத்திலோ பழைய இலக்கியங்களிலோ இது குறித்த வரிகளை படித்ததில்லை. எப்போதாவது நேரம் கிடைத்தால் வரிகளை ஆராய வேண்டும்.

நீங்கள் சொல்வது போல் விக்கிபீடியா பயனர்களால் எழுதப்படுவது. நாளைக்கு யாரும் இந்த வரிகளை ஆட்சேபிக்கலாம். மாற்றலாம் :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

காஞ்சிபுரம் வரதாராஜர் கோவிலுக்கு இன்னொரு பெயர் அத்திகிரி (வடமொழியில் ஹஸ்திசைலம் என்று சொல்வார்கள்). கேள்விபட்டிருக்கிறீர்களா? அதுவும் ஒரு சிறு குன்றின் மேல் தான் இருக்கிறது. கோவில் வாசலில் இருந்து கருவறைக்குச் செல்லும் போது படிகள் ஏறிச் செல்வதைக் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சோளிங்கர் மட்டும் தானே நரசிம்மர் இருக்கும் மலை. பெரும்பாலும் என்று சொல்லும் வகையில் மற்ற எந்த மலையில் நரசிம்மர் இருக்கிறார்?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அண்ணே அரைபிளேடு

திருமாலா, முருகனா-ன்னு கேட்டுட்டா போச்சா?
குமரன் பாருங்க, சிவனா, அம்பாளா-ன்னு கேட்டிருக்காரு! :-)
பதிலைச் சொல்லுங்க!

இவிங்க-ல்லாம் யாருமே இல்லை!
புத்தர்-ன்னு நான் சொல்றேன்!
பல பேரு புத்தகமே போட்டிருக்காங்க!
தவக் கோலத்துல புத்தர் நிக்குறாரு!
மொட்டையை மறைக்க கிரீடம் மாட்டியாச்சு!

இழுத்த காதை மறைக்க, கர்ண குண்டலம் சாத்தியாச்சு.
கீழே பத்ம பீடம்!
இன்னும் எவ்ளோ இருக்குதுங்க! :-))))

கோவிந்தா! கோவிந்தா!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,நல்ல ஆராய்ச்சிப் பதிவு.
திருப்பதி கோவில் முருகன் கோவிலே என அறிஞர் பலரும் கூறுகிறார்கள்.
தவிர குமரன் சொல்வது போல அபிஷேக தரிசனம் திருப்பதியில் இல்லை.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

குமரன் சொன்ன கருத்துக்களுக்கு மேலதிகமான சில கருத்துக்கள்!

1.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்-னு எகனை மொகனையாச் சொல்றது அழகான வழக்கம் தான்!

காஞ்சியில் செயற்கைக் குன்று - சுவாமி மலை போலவே! அத்திகிரின்னு பேரு! நரசிம்மர் இல்லை! வரதராஜன்!

கடலூர் திருவந்திப்புரத்தில் குன்றின் மேல் அயக்ரீவர்! தேவநாதப் பெருமாள்!

திருக்குறுங்குடியில் மலைமேல் நம்பிப் பெருமாள்!

பத்ரிநாத்தில் பத்ரிநாதர்!
அகோபில மலை மேல் நரசிம்மர்! சிங்க வேள் குன்றம்!!

அது சரி...
பரங்கி மலை மேல் புனித தோமையர்
- இது எல்லாம் குமரன் கோயிலா என்ன? :-)

2. வேல் + இடம் = வேலிடம்!
வேங்கடம் ஆகாது!
வேங்கடம் தமிழ்ச் சொல்லா என்ற சுப்ரபாதப் பதிவில், தமிழ்ச் சொல்லே என்று பேசப்பட்டது! வாசித்துப் பாருங்கள்!
http://verygoodmorning.blogspot.com/2007/07/13.html
வெம்மையான பிறவிக் கடனைத் தீர்க்கும் இடம் வேங்கடம் என்று ஆன்மீக விளக்கமாகவும்,

இராம.கி ஐயாவின் வேங்கடத்து நெடியோன் மேல்விளக்கப் பதிவில்
http://valavu.blogspot.com/2007/08/1.html
வேகும் கடம் என்றும் வெய்யிலால் சுட்டெரிக்கும் மலை திரிந்த பாலை நிலம் என்றும் பேசப்பட்டது. அதையும் பாருங்கள்!

3. வைணவத்தில் சத், சித், ஈஸ்வரன் என்று குமரன் சொல்லிவிட்டார்! ஈஸ்வரன் என்பது தன்னிகரல்லாத் தலைவன்! அந்த வகையில் தான் வேங்கடேஸ்வரன்!
இது அண்மைக் காலத்தில் வழங்கலான பெயர் தான்!
சிலப்பதிகாரம், ஆழ்வார்கள் காலம் தொட்டு வேங்கடமுடையான் என்ற பெயரே வழக்கம்!

நாதமுனிகள் என்ற வைணவ குருவின் மைந்தர் ஈஸ்வர முனிகள் என்று பெயர்! அவரும் வைணவ குருவாய், ஆளவந்தாருக்கு ஆசாரியராய் இருந்தவர்! எனவே ஈஸ்வர என்ற பெயர் மட்டுமே வைத்துக் கொண்டு முடிவு கட்டவும் முடியாது!

மேலும் இராவணனை இராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் என்று சொல்வதால் அவன் சிவனாகி விட முடியுமா என்ன? :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாலாஜி, முருகன் எல்லாம் வலைப்பதிய வரலாம் போல! இங்கதான் அவருதாங்க இவரு அப்படின்னு பேசிக்கிட்டு இருக்கோம். அங்கயுமா? :))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

4.
கருவறை மதில் சுவர்களில் கருடாழ்வார் இல்லை என்பது உண்மை. சிங்கங்கள் இருக்கின்றன. அதுவும் மூலைக்கு ஒன்றாய் தான்!
இதை வைத்து ஆலய மூர்த்தியை நிர்ணயிக்க முடியாது!

அப்படிப் பார்த்தால், சுவர் இல்லாமல் விமானத்தில் கருடன் உண்டு! ஆனந்த நிலைய விமானத்தின் புகைப்படங்களைப் பாருங்கள்!

நரசிம்மர் ஆலயங்களில் சிங்கம் மதில் சுவர்களில் உண்டு!
திருமலை மட்டும் இல்லை! இன்னும் பல பெருமாள் கோவில்களில் மதில் சுற்றில் சிங்கங்கள் உண்டு!

காஞ்சிபுரம் வைகுந்த விண்ணகரம் பெருமாள் கோயில் - நந்திவர்ம பல்லவன் எழுப்பியது! அங்கும் சிம்மம் உண்டு! காஞ்சி வரதராசர் கோயிலிலும் சிம்மங்கள் உண்டு! இது முற்றிலும் பல்லவ வழக்கமே!

திருமலையில், பல்லவ அரசி சாமவை தான் ஏற்படுத்திய பல கொடைகளின் நினைவாகச் சிம்மங்கள் பொறித்ததைச் சாசன வல்லுநர்கள் சொல்லி உள்ளார்கள்! சாசனங்களின் படங்களை TTD Museumத்தில் காணலாம்!

5. பாலா என்பது அம்பிகையின் பெயர் - பாலாம்பிகை திருக்கடவூரில் இருக்கும் அம்பாள் பெயர்! அபிராமி அம்மன் இல்லாது, இன்னொரு அம்பாள் இருக்கிறாள்! காலசம்கார மூர்த்தியுடன்-பாலாம்பிகை!

பாலாஜி என்ற பெயர், வடநாட்டு பக்தர்களால் அண்மைக் காலத்தில் செல்லமாக உண்டான பெயர்!

ஹதிராம்ஜி என்ற வடநாட்டுப் (மராத்தி என்று நினைக்கிறேன்) பெரியவர் திருமலையில் மடம் அமைத்து, தொண்டு புரிந்து வந்தார்! அவர் வம்சத்தினருக்கு பாவாஜி என்ற பட்டப் பெயர் உண்டு! திருமலையானிடம் உள்ள ஈடுபாட்டால் அவனையும் பாவாஜி என்று அழைத்து மகிழ்ந்தது தான் பாலாஜி பற்றிய தோற்றம்!

இன்றும் ஹதிராம்ஜி மடம் திருமலையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆலய நிர்வாகத்தை இந்த மடத்திடம் கொடுத்து வைத்திருந்தனர்!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதே கருத்தை காஞ்சி சங்கராச்சாரியாரரின் தெய்வதின் குரல் முதல் பாகத்தில் காணலாம்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பார்ப்பனீய கும்மிக் கதைகளுக்கு மத்தியில் ஏதேனும் ஆராய்ச்சிக் கட்டுரை படிக்க விரும்புவோர்களுக்காக... :-)

"Tirupati Balaji was a Buddhist Shrine"

http://www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf

இதுவும் கும்மியென்று சொல்லலாம், ஆனால் புராண/புரட்டு நம்பிக்கைகள் தாண்டி விரிவாக ஆராய்ப்பட்ட ஒன்று.

உண்மை என்பது இதையும் தாண்டி இருக்கலாம். ஆனால் குறைந்த பட்சம் ஐஸ்வர்ராய ராய்களுக்காக சிறப்பு வழிவிடும் பாலாஜியைத்தாண்டி அடுத்த கட்ட உண்மையை அறிய ஒரு வாய்ப்பு.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

6 & 7

நீங்கள் சொல்வது போல் அது வேல் வைக்கும் போஸ் இல்லை! :-)
திருச்செந்தூர், பழனி இங்கெல்லாம் கூட முருகப் பெருமான் கையில் வேல் இருக்காது. தோளின் மேல் சார்த்தி வைத்திருப்பார்கள்!

வேங்கடவனுக்கு, நீங்கள் குறிப்பிடும் அந்தக் கோலத்துக்கு உள்ளுறை பொருள் வேறு! இங்கே காணுங்கள்!
http://verygoodmorning.blogspot.com/2007/12/blog-post.html

@ குமரன்!
Sorry thalaiva! wrong info!!
சங்கு சக்கரங்கள் தோளில் சார்த்தி வைக்கப்படவில்லை!
வேங்கடத்து மூலவருக்கு நான்கு திருக்கரங்கள்!

முன்னிரு கரங்கள் பார்வைக்கு எளிதாய் தெரியும்! பின்னிரு கரங்கள் அலங்காரத்தில் உற்றுக் கண்டால் தெரியும்!

இன்னும் தெளிவாகப் பார்க்கணும்-னா...வெள்ளிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்விக்கும் போது, ஈசியாப் பார்க்கலாம்! பார்த்தும் உள்ளேன்!!

இதைக் காண்பதற்கு என்றே TTD ஒரு சேவை வைத்துள்ளது. அபிஷேகம் (பூராபிஷேகம்) என்று சொல்லப்படும் சேவைக்கு முன்பதிவு செய்தால், நான்கு கரங்களையும் காணலாம்!

சங்கு சக்கரங்கள் பின்னிரு கைகளில் தாங்கி நிற்பதை அப்போது காணலாம்!
என்ன ஒரே ஒரு வித்தியாசம்...
சங்கு சக்கரங்கள் மூலவரின் கற்சிலையோடு சேர்ந்ததாய் இருக்காது. தங்க நிற சங்கு சக்கரங்கள், பின்னிரு கைகளில் fuse செய்யப்பட்டு இருக்கும்!
இதைத் திருமஞ்சனத்தின் போது யாரும் காணலாம்!

ஏன் இப்படி? அது தனிக் கதை! தனிப் பதிவு! :-)
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லும் திருவேங்கடவன் காட்சி இதோ!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் "கையில்" ஏந்தி,

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
என்று சங்கு சக்கரங்கள் ஏந்தி நிற்பதாகத் தான் பாடுகிறார்!
பூவாடைத் தரிசனம் பற்றியும் சொல்கிறார். இன்றும் பூலங்கி சேவை உண்டு!

பின்னாளில் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு சங்கு சக்கரங்கள் எடுத்து அளிக்கப்பட்டன என்று தல வழக்குகள் சொன்னாலும்...
பின்னாளில் இந்தப் பதிவு போலவே பல குழப்பங்கள் தோன்றின!

இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் இறைவனிடமே விடை தீர்க்க எண்ணிய இராமானுசர், மற்றும் திருச்சுகனூர் சைவத் தலத்தார்கள், மூலவரின் சன்னிதியில் சங்கு-சக்கரம், மான்-மழுவும் வைத்து, கதவைக் காப்பிட்டனர்!
அரச முத்திரை பொறித்து நடை சாத்தப்பட்ட பின்னர்...இராமானுசர் ஆதிசேடனாய் வேண்டிக் கொள்ள,
பெருமான் சங்கு சக்கரங்களை ஏற்றுக் கொண்டான்! மறு நாள் முத்திரை உடைத்து இந்தக் காட்சியைக் கண்ட அரசனும், சைவர்களும் ஒப்புக் கொண்டு அமைதி பெற்றனர்! கைகளில் நிரந்தரமாக fuse-உம் செய்யப்பட்டது! - இது பன்னிரண்டாம் நூற்றாண்டு!

இதற்கான வரலாற்றுத் தரவுகள் ஒரு சிலவே கிடைக்கின்றன! அவற்றுள் திருமலைக் கோயிலொழுகு என்ற சில நூல்கள், வைணவர் ஒருவர் எழுதியதால், முடிந்த முடிவாகச் சிலர் ஒப்புவதில்லை!
அதனால் இதை எந்தக் காலத்திலும் ஊதிக் கொண்டே இருக்கலாம்! :-)))

ஆனால் அதற்கெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு இளங்கோ காட்டிய சங்கு சக்கரக் காட்சி வேண்டுமானால் பதில் சொல்லும்!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள்//

இதை TTD சாசனங்கள், கல்வெட்டுகள் section-இல் பாருங்கள்!
http://tirumala.org/activities_publi_others_english.htm
T.T.D.Inscription Report ன்னு இருக்கும்! காசு கொடுத்து வாங்கணும் தல! :-)))

//9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு//
குமரன் சொல்லிட்டாரு! மகா சொத்தையான வாதம்! :-)

மேலும் ஆலயத்தில் தாயார் சன்னிதியே கிடையாது! உற்சவருக்குத் தான் திருமகள், மண்மகள்!

//10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில்,//

குமரன் இதுக்கும் சொல்லிட்டாரு!
குதிரை முகமான அயக்ரீவர் அவதார லிஸ்ட்டில் எடுத்துக் கொள்ளப்படவில்லை! இதுக்கு எல்லாம் ஏன்-னு ஆன்மீக விளக்கங்கள் உண்டு!

திருவேங்கடமுடையான் அவதாரம் கிடையாது! பிறந்து வளர்ந்து என்றெல்லாம் பூர்ணாவதாரமாக வரவில்லை! அப்படியே குன்றின் மேல் கல்லாகி நிற்கின்றாய் கண்ணா-ன்னு பாட்டில் வருமே! அதான்!

//11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது.//

பொதுவா தல புராணங்களை, வரலாறாகக் கொள்ளமாட்டார்கள்! வேதவதி கதை துளசி, அத்யாத்ம ராமாயணம் போன்றவற்றிலும் உண்டு!

//12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்//

இதற்கு எனக்குச் சுட்டியோ, சான்றோ, ஒலிநாடாவோ தர இயலுமா?

ஏன் கேட்கிறேன்-னா வாரியார் சுவாமிகள் விரிவுரை ஒன்றை நான் பள்ளியில் கேட்டுள்ளேன்! அப்போது வேங்கடவன் பற்றிய குறிப்பைச் சொல்லுவார். அதில் திருமலை முருகன் ஆலயம் அல்ல என்று அருணகிரியார் பாடலையே எடுத்துக் காட்டுவார்! அந்தத் திருப்புகழைத் தேடித் தருகிறேன்!

திருமலையில் குமாரதாரா என்னும் நீர்வீழ்ச்சி (தீர்த்தம்) உண்டு! ஸ்கந்த புராணத்தில் முருகன் தவம் செய்ததாகச் சொல்லப்படும் நீர்நிலை அது!

அது தவிர முருகன் ஆலயம் என்று சொல்லப்படும் வேங்கட மலை வேறு ஒரு இடமாக இருக்க வாய்ப்புகள் நிறையவே உண்டு!
முருகன் ஆலயமாகப் பெரிதும் அறியப் பட்டிருந்தால் நக்கீரர் முதற்கொண்டு பின்னால் வந்த பல முருக பக்தர்கள் பாடி இருப்பார்களே! குமரகுருபரர், அருணகிரி, பாம்பன் சுவாமிகள் என்று பலரும் ஒரு குறிப்பாச்சும் கொடுத்திருப்பார்களே!

பழந்தமிழ் இலக்கியத்தில் சிலம்பு, பரிபாடல், அகநானூற்றில் மாமூலனார் பாடல் என்று எல்லாவற்றிலும் வேங்கடவன், மாயோன் தான்! :-)
தமிழ் இலக்கியத்துக்கு எல்லாம் முன்னாடி என்னவா இருந்துச்சுன்னு கேட்டா...தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.//

ஹிஹி!
டாவின்சிக்கு எதிர் சமயம் இல்ல! அதனால சுளுவா வெளிவரலை!
இங்க தான் ஆறு சமயம் அறுபது கட்சின்னு இருந்துச்சே! ரொம்ப டகால்டி வேலை எல்லாம் பண்ண முடியாது!

வேங்கடவன் மார்பில் இருக்கும் திருமகள் (ஸ்ரீவத்சம்) என்னும் அந்தத் திருமறு...சிலையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது!
அதனால் இப்படி ஒரு பெண் இருப்பதையும் கண்டு, வேறொரு புருஷனாக அந்தத் தெய்வத்தைக் கொள்ளும் அளவுக்கு ஆழ்வார்கள் தரம் இறங்க மாட்டார்கள் என்பதே என் துணிபு!

//எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது//

அதாச்சும், ஆழ் மனசு எதைப் பார்க்க விரும்புதோ, அதைத் தான் கண்ணும் பாக்குது! :-)

என்ன தான் புள்ளி விவரங்களையும் ஆதாரங்களையும் அடுக்கினாலும், பல அறிஞர்கள் இதைப் பற்றிப் பேசி விட்டாலும்,
சில விஷயங்கள் கெளம்பிடுச்சின்னா, ஓயவே ஓயாது! :-)
இது அந்த மாதிரி விஷயம்!

//அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்//

நல்லா உத்துப் பாத்துட்டு வாங்க தல! உத்து உத்து பாத்தாலும், சுத்தி சுத்தி வந்தீங்க-ன்னு தான் வருவோம்! :-)

இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி கண்டு புடிச்சிடலாம்னா, இந்நேரம் பல பேருக்கு எளிதில் அகப்பட்டு இருப்பானே! அதானே இறைவன் கணக்கு! :-)

அடுத்த முறை திருமலையில் நீங்க அரோகரா ன்னு கூவினாலும் அதுவும் அவனுக்கு உகப்பாகத் தான் இருக்கும்! :-)
ஏன்னா ஆழ்வார் சொல்லிய படி, "இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து"!


தல...பதிவாப் போட வேண்டியது, பின்னூட்டமா நீண்டு போச்சி! சாரி! :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிகத்தீவிரமாய் விவாதம் நடப்பதினால் இந்தசுட்டியினை இனைக்கிறேன்.

http://sadhayam.blogspot.com/2005_12_01_archive.html

தேவைப்பட்டால் திருப்பதி ஒரு பௌத்த/சமண மடாலயமாக இருக்க வாய்ப்புள்ளதற்கான காரணிகளுடன் தனிபதிவிடுகிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இரண்டாம் சொக்கன்,
நான் முன்னர் சொன்னபடி ( "Tirupati Balaji was a Buddhist Shrine" --> http://www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf ) புத்த மதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கவே அதிக வாய்ப்பு என்று நினைக்கிறேன். சமணமாக இருந்திருக்கலாம- என்பது பற்றிய தகவலை அறிய ஆவல்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

// kannabiran, RAVI SHANKAR (KRS):
மேலும் இராவணனை இராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் என்று சொல்வதால் அவன் சிவனாகி விட முடியுமா என்ன? :-)//

இராவணன் சிவன் இல்லை..

அவன் சிறந்த சிவபக்தன் என்பதால் தான் அவனை இராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் என்று சொல்வார்கள்..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடிச்சான் பாருய்யா அரைபிலேடு ....சிக்சர்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//6. நீங்கள் கொடுத்த சுட்டியில் திருச்செந்தூர் முருகனின் திருவுருவத்தின் இடது கரத்தைப் பாருங்கள். திருப்பதி இறைவனின் இடது கரத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.//

தலைவா! இதையும் கொஞ்சம் பாருங்க! கன்னியாகுமரி அம்மன்!
http://media.radiosai.org/Journals/Vol_04/01APR06/images/H2H%20special/kanyakumari.jpg
இங்கேயும் இடது கரம் அப்படியே தான் இருக்கு! வடவேங்கடம்-தென் குமரி! என்னா கனெக்சன் பாத்தீங்களா? :-)

செந்தூர் முருகப்பெருமானின் திருக்கரம் தொடையின் மேல் வைத்து, எல்லா விரல்களும் விரிந்து இருக்குங்க! எல்லா விரலும் விரிந்து இருந்தா எப்படி வேலைப் பிடிக்க முடியும்? அதுவும் வேலை இடுப்புக்குக் கீழ் யாரும் பிடிப்பாங்களா என்ன? கற்பனை செய்து பாருங்க!

திருப்பதி-ன்னு இல்லை!
பல ஆலயஙகள், தாஜ் மகால்-னு சர்ச்சைகள் வீசிக்கிட்டே தான் இருக்கும் போல!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது முருகப்பெருமானே அல்ல! அது பெண்ணுருவம்-னு நேத்து பொன்னியின் செல்வன் போன்ற நல்ல யாகூ குழுமத்தில் பார்த்து திகைத்துப் போனேன்!
http://www.ponniyinselvan.net/messages/view/thiruparamkundram-the-non-muruga-temple-011237.html



-------------------------------------------------------------------------------------------------------------
said...

எதுக்குப்பா இவ்வளவு பிரச்சினை பேசாம முருகனையும் பெருமாளையும் கூப்பிட்டு பாப்பையா முன்னிலையில பட்டிமன்றம் வச்சி பார்த்துடலாம் இல்ல



-------------------------------------------------------------------------------------------------------------
said...

குமரன் தங்கள் இரு கேள்விகளுக்கும் கே.ஆர். எஸ். பதில் சொல்லிவிட்டார்.

காஞ்சியில் செயற்கைக் குன்று. அகோபில மலை மேல் நரசிம்மர்.


-----------------------


கே.ஆர். எஸ்.

புத்தம். நாராயணம். சரணம். கச்சாமி !!!

----------

அறிவன்

அபிஷேக தரிசனம் இருப்பதாக கே.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார்.

பார்க்க..

http://www.etirupati.com/services.htm

டிக்கட் ஒருவருக்கு ரூ. 750.

அடுத்த முறை இந்த தரிசனத்திற்கு டிக்கட் வாங்கி செல்ல வேண்டும். :))

----------


இலவசக்கொத்தனார்...

இவர்தான் அவரா அவர்தான் இவரா கன்ப்யூசன் திருப்பதியில மட்டும் இல்லை.

பூரி ஜெகன்னாதர் புத்தராம்.
ஐயப்பனுக்கு "தர்ம சாஸ்தா" அப்படின்னு புத்தர் பேர் இருக்குறதால அவரும் புத்தராம்.
(பார்க்க கல்வெட்டு அவர்கள் குறிப்பிட்ட "Tirupati Balaji was a Buddhist Shrine" புத்தகம்)
எனக்கொன்னவே மலைமேல இருக்கறதால ஐயப்பன் ஒரிஜினலா முருகரோன்னு டவுட்டு :))

-------------


மீனா அருண்

நான் தெய்வத்தின் குரல் படித்ததில்லை. ஜகத்குருவுக்கும் சந்தேகம் வந்திருப்பதால் மலையில் இருப்பவர் முருகன்தான் என்ற நமது கட்சி வலுவாகிறது. :))

---------

கல்வெட்டு அவர்களே..

தங்கள் சுட்டியை கண்டதும் புத்தகத்தை தரவிரக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன்.

முடித்துவிட்டுத்தான் மீண்டும் பதில் பின்னூட்டம் போடவே வந்தேன். அந்த அளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது.

படித்து முடித்தவுடம் போதி சத்துவர்தான் "அவலோகிதா" என்ற நாமம் தாங்கி புலிக்குன்றத்தில்(திருப்பதிதான்) எழுந்தருளியுள்ள இறைவன் என்பதை நம்பவே ஆரம்பித்து விட்டேன்.

:))

தங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி.

--------



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இரண்டாம் சொக்கரே..

தங்கள் சுட்டிக்கு நன்றி. படித்துப் பார்த்தேன். அக்கட்டுரை தொடர் பெருமளவு கல்வெட்டு அவர்கள் குறிப்பிட்ட புத்தகத்தின் சாரமாகவே இருக்கிறது. :)

நன்றி.

தாங்கள் சமணக் கோவில் என்று வாதிடுவதை கேட்க ஆவலாக உள்ளேன். திருப்பதி மலையிருக்கும் தீர்தங்கரர்... திகம்பரரோ ? சுவேதாம்பரரோ ?

:))

---------

வசந்தம் ரவி..

சிக்சர் அடிப்பது நமது நோக்கமல்ல. :)

நமது நோக்கம் கடவுளை அறிவது.
கடவுளை நோக்கிய பயணம் மிக நீண்டது. சைவமோ, வைணவமோ, சாக்தமோ, சரவணமோ, பெளத்தமோ, ஜைனமோ. இந்த ஆறுமே திருப்பதி மலையை சொந்தம் கொண்டாடுகின்றன. எம்மார்க்கமும் எமக்கு ஷண்மார்க்கமே. ஷண்முகனின் மார்க்கமே !!!

:))

------

மாயவன் / கே.ஆர்.எஸ்.

இலங்கை நகருக்கு இறைவன் (ஈஸ்வசரன்) என்ற பொருளில்தான் இராவணன் இலங்கேஸ்வரன் என்று வழங்கப்பட்டான்.

இராவணேஸ்வரன் என்பதே தவறான வழக்கு.

அதே போல் வெங்கட மலையின் இறைவன் என்ற பொருளிலேயே வெங்கடேசுவரன் வழங்கப்படுகிறான் போலும்.

அந்த வெங்கட மலையின் ஈஸ்வரன்
யார் என்பதுதானே இந்த பதிவு.

-------


புரட்சித் தமிழன்..

நீங்கள் சொல்லும் பட்டிமன்றத்தை இராமானுஜர் பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே ஏற்பாடு செய்தாராம்.

அந்த பட்டிமன்றத்தில் வென்றுதான் "நிராயுதபாணியாக" இன்னாரென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது இருந்த இறைவனுக்கு சங்கு சக்கரம் பொருத்தி "கோவிந்தனாய்" வெளிக்கொணர்ந்தனர்.

அந்த வாத பிரதிவாதங்கள் பெரிதும் தெரியாத நிலையில்.. மீண்டும் நேரடி ஒளிபரப்பில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம். :))

-------



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கே.ஆர்.எஸ்.

1. குன்றுகள் தோறும் என் கண்கள் குமரனையே காண்கின்றன. என் கண்களின் பிழை போலும். குறிஞ்சிக் கடவுளல்லவா.

பரங்கிமலை ஏறினாலும் முருகனைத்தான் வணங்கி வருவேன் என்று நினைக்கிறேன். :))

முருகன் ஆதித் தமிழனல்லவா.

ஒருவேளை திருப்பதி முதலில் முருகன் கோவிலாக இருந்து, பின்னர் பொளத்த ஆலயமாக மாறி, இடையில் பாலாம்பிகையாக கருதப்பெற்று... இராமானுஜரால் சங்கு சக்கரம் பொருத்தப்பட்டு ஸ்ரீநிவாசனாக மாறி இருக்குமோ.


2. வேகும் கடம் - பாவங்கள் வேகும் இடம். இந்த பாவங்களை எரிக்கும் இறைவனாக ஒரு காலத்தில் முருகனே இருந்து இருப்பானோ.

(அந்தணர் ஓருவர் கீழ்க்குல மங்கையை மணக்க, அதனால அவருக்கு பாவம் சூழ... அந்த பாவத்தை இறைவன் எரித்தான். அதனால்தான் அவன் வெங்கடேசன் என தல புராணம் கூறுகிறது.)

இராம.கி. ஐயா "தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூற்றாண்டு) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய திருமால் உறையும் மலையாகத் தான் வேங்கட மலையைக் கூறுகிறார்." என தமது பதிவில் குறித்திருக்கிறார்.

இடையில் 12 ஆம் நூற்றாண்டிலேயே இராமானுஜர் திருப்பதியை வைணவத்தலமாக நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. இறைவனின் பெயர்களைத்தானே ஆராய்கிறோம்.

"ஈஸ்வர முனிகள்" என்று வைணவர் ஒருவரின் பெயரை இறைவனுடைய பெயராக பொருத்திப் பார்க்க இயலுமா.

அந்த காலகட்டத்தில் ஒரே வீட்டில் அண்ணன் தம்பி ஒருவர் சைவராகவும் மற்றவர் வைணவராகவும் இருந்ததும் நடந்ததே. (பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியானும் சிவன் கோவில் பட்டரும்.)

எதிர்காலத்தில் தங்கள் பிள்ளை சைவனா, வைணவனா என்று அறியாத நிலையில் பெற்றோரன்றோ பெயரிடுகின்றனர். :))

4. பல்லவர்கள் காலம் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான். திருப்பதியின் சிம்மம் பல்லவர்களுடையது என்றால் கோவில் அப்போதுதான் வந்தது என்றாகிவிடும். மற்று பல்லவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தில் இப்படி ஒரு புகழ்பெற்ற வைணவ ஆலயம் இருப்பதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே. இத்துணைக்கும் பல்லவர்கள் வைணவக்கோவில்கள் பலவற்றையும் எழுப்பியவர்கள். பல்லவர்கள் திருப்பதி கோவிலுக்கு மானியம் கொடுத்ததாக எங்கும் இல்லை. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு சோழர்களான இராஜ இராஜன் மற்றும் இராஜேந்திரனின் குறிப்புகளிலும் திருப்பதி இல்லை.

பல்லவ அரசி சாமவை... இவருடைய காலம் பற்றிய குறிப்புகள் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

5. பாவாஜி வழிபட்டவர்தான் "பாலாஜி" என்ற பெயர்க்காரணம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை. இந்தப் பாவாஜி என்பவருடைய காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாலாஜி என்பது இறைவனுடைய வெகு சமீபத்திய பெயர். விக்கிபீடியா Balaji (though this is a more recent name).

விக்கிபீடியா சொல்லும் பாலாஜி பெயர்க்காரணம்...
Lord Venkateshwara's temple is at the top of the seven hills in the place called Tirumala. The temple of the Lakshmi, in the form of Princess Padmavati, is located at the foot of the seven hills at Tirupati, in a town called Tiruchanur. Another legend that goes by is that of a boy called Bala. This boy was a helper boy, who was one day wrongly accused as a thief. He ran for his life when he was chased by people. He was hit on the head by the mob and his head was bleeding profusely. He ran to the Tirupathi temple of Lord Vishnu and ran to the main door where GOD is placed. When the people entered the temple they couldn't find the boy but saw the head of God's idol bleeding.It was considered that the boy was sheltered and protected by God himself and the priests put cloth on the idol's head to stop the bleeding. So we see white covering on the God's idol and the presiding God is called BALAJI.



6. வேலை இடுப்புக்கு மேல் பிடித்து விறைப்பாக நிற்க முருகன் என்ன வாயிற் காவலனா. இடுப்பு கீழ் இடது கையை தழைத்து தொட்டும் தொடதவனாய் தன் வேலை தோளில் சாய்த்து ஒய்யாரமாய் இளநகை புரியும் இறைவனல்லவா. அதே போன்ற தோற்றமல்லவா திருமலையில் உள்ளது. முருகன் ஆலயங்களில் பெரும்பாலும் வேல் தனியாக செய்யப்பட்டு அல்லவா சார்த்தப் பெறும்.

ஆனால் ஆகம விதிப்படி திருமாலோ நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் இரண்டில் சங்கு சக்கரத்தோடு இருக்க வேண்டியது நியமமல்லவா.

சங்கு சக்கரங்கள் மட்டுமல்ல இரண்டு கைகளே ப்யூஸ் செய்யப்பட்டவை என்றும் படித்தேன். :))

சிலப்பதிகாரப் பாடலுக்கு நன்றி.

எனது கேள்வி...
சிலப்பதிகார கதை பூம்புகாரில் தொடங்கி மதுரையில் நடந்து வஞ்சியில் முடிவது.

பாடியவர் சமணத்துறவியான இளங்கோவடிகள்.

திருவேங்கடம் உறையும் திருமாலை பாடவேண்டிய தேவை சிலப்பதிகாரத்தில் எந்த கட்டத்தில் நிகழ்கிறது.

இடைச்செருகலாக இருக்குமோ :))

பகவத் கீதையிலேயே இடைச்செருகல்கள் இருக்கிறதாம்.

இராமானுஜர் இறைவனை சங்கு சக்கரத்தை ஏற்க வைத்த அறிவுத் திறத்தை சிலர் சிலாகிக்கிறார்கள்.

இறைவன் கருடரூபராக வந்து எனது கோவில் என்று சொல்லாமல் பூட்டிய கதவுகளின் பின் சங்கு சக்கரத்தை ஏற்றது ஏன் :))

8. திருப்பதி கல்வெட்டுகள் தேவஸ்தான வெளியீடுகளில் இருக்கும். காசு கொடுத்து வாங்கியே ஆராயலாம்.

ஆனால் தேவஸ்தானம் தனக்கு பாதகமாக இருக்கும் கல்வெட்டு செய்திகளை தனது வெளியீட்டில் சேர்த்திருக்குமா :))

9. //மேலும் ஆலயத்தில் தாயார் சன்னிதியே கிடையாது!//

நீங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறீங்க. வைணவ கோவில்களில் இருக்க வேண்டிய பிரகார மூர்த்திகள் அனைவரும் மிஸ்ஸிங். ஏன்.

உற்சவரும் முருகர் மாதிரியேதான் இருக்காருன்றதுதான் நாம சொல்ல வர்றது. உற்சவர் ஏன் உள்ளே இருக்கும் சாமியின் அலங்காரம் போலவே இல்லை :))

11. //அப்படியே குன்றின் மேல் கல்லாகி நிற்கின்றாய் கண்ணா//

மூலவர் சுயம்பு. அதைத்தான் இந்த பிற்கால பாடல் சொல்கிறது.

முன்னர் வேறுசிலையாய் இருந்ததை பின்னர் வேறுவிதமாய் அலங்கரித்து சுயம்பு என்று சொல்லலானது.

அனைத்து அலங்காரங்களுக்கும் பின் மூல சிலை தனது அடையாளம் முற்றிலும் மறைந்ததாக புதியதொரு வடிவமாகவே ஆகிப்போனது.

சரி. சரி. அடுத்த முறை வெள்ளி நடக்கும் அபிஷேகத்திற்கு சென்று பார்க்க வேண்டும். :)

வெள்ளி தோறும் அபிஷேகம் நடப்பதும், மஞ்சள் பயன்படுத்தப்படுவதும் அம்பாள் என்பதால் என்று படித்தேன் :))

12. வாரியாருடைய கந்தபுராண சொற்பொழிவு ஆடியோக்களில் இருப்பதாக படித்ததுதான். கேட்டதில்லை. வாரியாருடைய சொற்பொழிவை கேட்க வேண்டும். :))

13. குமரதாரா நீர்வீழ்ச்சியும் குமரனுடைய கோவில் என்று உறுதிபடுத்துவதே.

இந்த ஷேத்திரம் ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது என்றும், அந்த ஆதிவராகத்தை வழிபடவே குமரன் தவமிருந்தார் என்றும் சொல்லுவர். குமரன் வழிபட்டது கோவிந்தனையன்று.

எனவே ஆதிவராகமும் குமரனும்தான் இந்த தலத்திற்கு உரியவர்களாய் இருப்பரோ.

தலபுராணம் சீனுவாசன் ஆதிவராகத்திடம் இந்த தலத்தில் தான் கோவில் கொள்ள வேண்டிக் கொள்வதாகவே சொல்கிறது.

குமரகுருபரர், அருணகிரி, பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் காலத்திற்கு முன்பே இராமனுஜர் வைணவத்தலமாக இதை நிறுவுவிட்டார்.

மாயோன் என்ற பெயர் முருகனுக்கும் பொருந்துவதே.

இலக்கியங்களில் திருவேங்கடம் என்பதே பெரிய ஆராய்ச்சியாக இருக்கும்.
----------

உங்களுக்கு மற்றுமொரு கேள்வி.

திருப்பதி தவிர்த்து வேறு வைணவத்தலம் எதிலாவது மொட்டையடிக்கும் வழக்கம் உண்டா.

திருவரங்கத்தில் யாராவது மொட்டை அடிப்பார்களா.

மொட்டை அடிப்பது வைணவப் பாரம்பரியமா.

பழனி, திருத்தணி, செந்தூர் என்று தலமெங்கும் முருக பக்தர்கள் மொட்டை அடிக்கிறார்கள்.

அதே போல் திருப்பதியிலும் இறைனுக்கு நாமம் சாத்தியபின்னும் பழக்கம் விடாத பக்தர்கள் மொட்டையடிக்கிறார்கள் போலும்.


--------

அம்பிகையோ..
முருகனோ..
கோவிந்தனோ..
புத்தனோ...

இறை நம்பிக்கை என்பது ஒரு தேடல். இத்தகு தேடலைத் தரும் இறைவன் திருப்பதி உறைபவன்.

அந்த
"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.

அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இத பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாசியே (வேற யாரோ) பதிவு போட்டதா நியாபகம்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

திருப்பதி முருகனா ? பாலாஜியா ?
எனக்கு கவலை இல்லை.

சுவையான லட்டு கிடைக்கும். அதுக்கு பங்கம் வந்துடக் கூடாது.
:)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரொம்ப நாளா இருக்கும் சந்தேகம் தான். இருந்தாலும் பரமேஸ்வரன் (அது முருகனோ ஸ்ரீநிவாஸனோ என்ன வடிவமானாலும்) இருக்குமிடமென்பதால் பெருசா அலட்டிக்கறதில்லை. :P

குமரன் முதல் ஆளா வந்தது ஆச்சரியம் இல்லை. கே.ஆர்.எஸ்ஸும் தான். பல புது தகவல்களை தந்திருக்கிறார்கள்.

யுவர் ஆனர், மை இசுமால் கொஸ்டின் இஸ் - வேர் இஸ் ஜி.இரா வென் வீ நீட் ஹிம்? :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிவகங்கை மாவட்டத்தாரிடையே அழகர் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வழக்கம் உண்டு. அப்படிப் பார்த்தால் சிவன் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வழக்கம் தமிழரிடையே உண்டு. (காட்டு: புள்ளிருக்கு வேளூர் - வைத்தீசுவரன் கோயில்.) இது போலப் பல்வேறு அய்யனார் கோயில்களிலும் கூடப் பெருவாரியானவர்கள் மொட்டை அடிப்பார்கள். (தென்பாண்டி நாட்டில் பெரும்பாலரின் குலத் தெய்வம் அய்யனார் தான்.) மொட்டை அடிப்பது ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதாகும். இது திராவிடர் என்ற இனக்குழுவினரின் பழக்கம். பிறக்கும் குழந்தைக்கு இந்திந்தக் கோயில்களில் மொட்டை போடுவதாகக் கூடப் பலரும் வேண்டிக் கொள்வார்கள். (வடக்கே இந்தப் பழக்கம் மிகக் குறைவு.) சிவநெறியாளர், விண்ணவ நெறியாளர் என்ற இருவரிடமும் இந்தப் பழக்கம் உண்டு.

அழகர் கோயில் பெருமாள் கோயிலில் கீழே மலையடிவாரத்தில் தான் மொட்டை அடிப்பார்கள். மேலே இருக்கும் சோலைமலை முருகனுக்கு அல்ல. (குன்றுதோறாடல் என்ற பெயரை முருகனை ஒட்டிச் சோலைமலை முருகனுக்குச் சொல்வார்கள்.)

வேங்கடவன் கோயில் திருமாலுடையதா, முருகனுடையதா என்ற வாதம் நெடுநாட் பட்டது. ஆனாலும் கிடைக்கும் ஆதாரங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால், குறைந்தது 2000 ஆண்டுகளாக வேங்கடத்துக் கோயில் விண்ணவன் கோயிலைத் தான் குறிக்கிறது என்று அழுத்தமாகச் சொல்லலாம். அதில் ஐயமில்லை.

மாயோன் என்ற சொல் முருகனைக் குறிப்பதாய் நான் கண்டதில்லை. எங்கு அப்படி வருகிறது என்று சொன்னால் தெளியமுடியும். சேயோன் என்பதே முருகனைக் குறிக்கும். சிலம்பில் மதுரையை ஒட்டி வரும் ஆய்ச்சியர் குரவை இடைச்செருகலாய் இருக்க வழியில்லை. மதுரைக் காண்டத்தில் தலைமாந்தர் தங்கியிருப்பது கோட்டைக்கு வெளியே உள்ள முல்லை நிலம் சார்ந்த ஆயர் பகுதி. கோவலன், மாதவி என்ற பெயர்களும், பல்வேறு முல்லைநில விவரிப்புக்களும் மாயோனை ஒட்டிய பழக்கங்களை நமக்கு உணர்த்தும். இதே போலக் குறிஞ்சியைச் சொல்லும் போது சேயோனைப் பற்றிய குறிப்புகள் மிகுந்து வரும். மாயோனுக்கும் சேயோனுக்கும் தமிழரிடையே எப்போதும் பெருத்த செல்வாக்கு உண்டு. கருப்பும் சிவப்பும் இன்று நேற்றல்ல; நெடுநாளாக நம்மை ஆட்டிப் படைத்திருக்கின்றன. :-) சிலம்பை ஆழப் படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல,

நம் கருத்துக்கு ஒத்துவராத தரவுகளை 'இடைச்செருகல்' என்பது ஒரு மகா மகா சொத்தையான வாதம். இப்படிப் பார்த்தால் எந்த ஒரு தரவையும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்காது. கருத்துகளைத் தரவின் அடிப்படையில் மாற்றிக் கொள்ளும் திறந்த மனது தான் எந்த ஆய்விற்கும் ஏற்றது. அது இல்லாவிட்டால் ஆய்வு செய்வதே வீண் வேலை. அதற்குப் பின்னர் உங்கள் விருப்பம்.

திருமலை மேல் இருப்பது திருமாலா முருகனா சிவனா அம்பிகையா புத்தனா என்ற விவாதங்கள் பல நாட்களாக இருக்கின்றன. திருமால் என்று பல நூறு வருடங்களாக வணங்கப்படுகிறான். ஆனால் ஆதியில் எந்த உருவமாக இருந்தது என்பதில் இது வரை நான் பார்த்த தரவுகளால் தெளிவு இல்லை.

நான் அறிந்த வரையில் இருக்கும் கருத்துகளை முன்பு சொல்லிச் சென்றேன். அவ்வளவு தான். பின்னர் மற்றவர் வைக்கும் கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//திருப்பதி தவிர்த்து வேறு வைணவத்தலம் எதிலாவது மொட்டையடிக்கும் வழக்கம் உண்டா//

உண்டு!

//திருவரங்கத்தில் யாராவது மொட்டை அடிப்பார்களா//

இல்லை!

//மொட்டை அடிப்பது வைணவப் பாரம்பரியமா//

ஆமாம்! பாரம்பரியம் என்று சொல்லாவிட்டாலும் வைணவத்தி்லும் இந்தச் சடங்கு உண்டு!


//உங்களுக்கு மற்றுமொரு கேள்வி//

அட எப்பப் பாரு நீங்களே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா எப்படி? :-)
இந்தாங்க பிடிங்க...

சமய வழக்கமாய் மொட்டை அடிக்கும் பழக்கம் தமிழர்களுக்கே உரிய ஒன்றா? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் சொல்வது என்ன?

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். தமிழர்கள் பலர், வாழ்வில் ஒரு முறையாச்சும் மொட்டை போடுகிறார்கள். இந்த வழக்கம் பற்றி நம் இலக்கியங்கள் சொல்வது என்ன?
இல்லை ஒன்றுமே சொல்லவில்லையா? (என்ன கொடுமை சரவணன்! :-)

மொட்டை அடிக்கும் வழக்கம் முருக வழிபாட்டுக்கு மட்டுமே உரியதா?
பெரியபாளையம், சமயபுரம், மாரியம்மன் என்று அம்மன் ஆலயங்களிலும் உள்ளது அல்லவா?

மொட்டை சமண/பெளத்த வழக்கமாகவே கருதப்பட்ட காலம் ஒன்று உண்டல்லவா? இது எப்படி முருக வழிபாட்டுக்கு வந்தது!
காவடி எடுப்பது இடும்பன் கதையின் ஆதாரம் உண்டு! அதே போல் மொட்டை போடுவதற்கு ஏதாச்சும் இருக்கா?

இல்லை சமண/பெளத்த வழக்கத்தை முருகனின் வழக்கமாகவும் ஆக்கி விட்டார்களா?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரியும் சிவனும் ஒண்ணு - அறியாதவர் வாயிலே மண்ணு.

திருப்பதி - சிரீனிவசனா - முருகனா - விவாதம் சூடு பிடித்துப் பலப்பல ஆதாரங்கள் தரப் பட்டிருக்கின்றன.

புதுப் புது செய்திகள். இருக்கட்டும்.

பல காலமாக திருப்பதி வைணவத்தலம் என நாம் தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகிறோம். நதிமூலம் ரிஷிமூலம் - ஆராயக்கூடாது. அடி முடி கண்டவரில்லை.

நடுவினில் புத்தரோ என ஒரு ஐயப்பாடு. தேவைதானா ?

//அந்த
"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.

அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !//

இதுதான் முடிவு



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சீனு
சதயம் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.
http://sadhayam.blogspot.com/2005_12_01_archive.html

நன்றி.

------------

இராம. கி. ஐயா

மொட்டையடித்தல் குறித்த விரிவான விளக்கங்களுக்கு நன்றி.

முருகன் "மாயோன் மருகனாகவே" குறிக்கப்படுகிறான். தாங்கள் சுட்டியது போல் "மாயோன்" என்பது முருகனை குறிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.
சிலப்பதிகாரத்தை விரிவாக படிக்க இருக்கிறேன்.

மிக்க நன்றி.

---------

குமரன்

இடைச்செருகல் என்று சொல்வது உண்மையிலேயே சொத்தையான வாதம்தான். இடைச்செருகலுக்கு வாய்ப்பு இருக்குமோ என்பதுதான் கேள்வி. அவ்வண்ணம் இருக்க முடியாதென்றே கருதுகிறேன்.

திருப்பதியை புத்த தலமாக நிறுவும் புத்தகத்தில் சிலப்பதிகார ஆதாரம் நூல் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புறந் தள்ளப்படுகிறது. சிலம்பு எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்வது அபத்தம்.

------

கே.ஆர்.எஸ்.

அதுதானே. இலக்கியங்களில் மொட்டையடித்தல் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

கேட்டீங்களே ஒரு கேள்வி..

மொட்டை எப்படி முருக வழிபாட்டுக்கு வந்தது.

ஐயா, முருகன் தானே மொட்டையடித்து கோவணாண்டியாக பழனியில் நிற்கும் தெய்வம்.

தெய்வமே மொட்டையடித்து நிற்கும் போது பக்தர்கள் அடிக்க மாட்டார்களா.

புத்தரோ கோவிந்தனோ எங்கும் மொட்டைத் தலையோடு இல்லை என்பதும் உற்று நோக்கத்தக்கது.

:)

-----------

சீனா..

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாதுதான். இருந்தாலும் இறைநம்பிக்கை என்பது ஒரு தேடல்தானே. :)

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐயா சான்றோர்களே,
மிக நல்ல வாதம். பாராட்டிற்குரிய விஷயம் என்னவென்றால், ஒருவரும் மற்றவரை தாக்கிப் பேசாமல் நயமாகவும் அழகாகவும் ஒப்புதலையும் எதிர்ப்பையும் தெரிவிப்பது ஒரு அரிய அழகு. Please keep it up.

சிலப்பதிகாரமென்பது ஒரு கற்பனைக் கதை என்பதற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன். சரியாக நியாபகமில்லை எனினும், சிலப்பதிகாரத்தில் நடந்தவை போன்று நிஜமாகவே நடந்ததா என்பதற்கு சான்று எங்குமில்லை என நினைக்கிறேன். எனவே, சிலப்பதிகாரத்தில் வரும் எடுத்துக்காட்டு எந்த வகையில் ஏற்புடையது என்ற கேள்வி எழுகிறது. ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் கல்கியின் கற்பனைத் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மர்மம் தொடர்கிறது... ;-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிப்ரவரி மாச ஞான ஆலயம் புக் வாங்கி பாருங்க. "திருப்பதி மலை மேல் இருப்பவன் யார்?" அப்டீன்னு ஒரு கட்டுரையே வந்துருக்கு. வழக்கம ஆன்மீக கட்டுரைகளையே எழுதும் எழுத்தாளர் அரவிந் சுப்பிரமணியமே இந்த கட்டுரைல இது பெருமாள் மட்டும் தானா, சிவன், அம்பாள், முருகனாகவும் இருக்கலாம் அப்டீன்னு ஆதாரங்களை அடுக்கியிருக்கார்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.

அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !//

:)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அதாச்சும், ஆழ் மனசு எதைப் பார்க்க விரும்புதோ, அதைத் தான் கண்ணும் பாக்குது! :-)

என்ன தான் புள்ளி விவரங்களையும் ஆதாரங்களையும் அடுக்கினாலும், பல அறிஞர்கள் இதைப் பற்றிப் பேசி விட்டாலும்,
சில விஷயங்கள் கெளம்பிடுச்சின்னா, ஓயவே ஓயாது! :-)
இது அந்த மாதிரி விஷயம்!

நல்லா உத்துப் பாத்துட்டு வாங்க தல! உத்து உத்து பாத்தாலும், சுத்தி சுத்தி வந்தீங்க-ன்னு தான் வருவோம்! :-)

இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி கண்டு புடிச்சிடலாம்னா, இந்நேரம் பல பேருக்கு எளிதில் அகப்பட்டு இருப்பானே! அதானே இறைவன் கணக்கு! :-)
//

மிக அருமை. மிக உண்மை. வாழ்த்துகள் கே.ஆர்.எஸ் அவர்களே.

அரைபிளேடு,

கல்வெட்டு அவர்களின் திருப்பரங்குன்ற கோவிலைப் பற்றிய பதிவை படித்தீர்களா?

மேலும், வீயெஸ்கே பதிவில் முருகனுக்கு தேவயானி என்ற மனைவி இருப்பதற்கான ஆதாரமே இல்லை என்று விவாதம் நடந்தது.

நிற்க! வரலாறு சிலசமயம் நிகழ்கிறது. பல சமயம் உருவாக்கப் படுகிறது. வேறு சில சமயம் கேள்விக்குட்படுத்தப் படுகிறது.

எத்தனை விவாதங்கள் நடந்தாலும் இன்றைய பக்த கூட்டம் 'வேங்கட்ட ரமணா... ஏழுமலையாண்டவா... கோவிந்தா! கோவிந்தா!' என்று கூவிக்கொண்டே பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது.

பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரைபிளேடு,
பதிவுக்கு மிக்க நன்றி.

பதிவும், பின்னூட்டங்களும் சுவையாகவும், அறிந்திராத பல தகவல்களை அறியக் கூடியதாகவும் உள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்மணத்தில் பண்பான, கண்ணியமான , சுவையான கருத்துப் பரிமாற்றம் இந்தப் பதிவின் மூலம் நட்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

தமிழ்மணத்தின் அறிஞர்கள், ஆன்மீகவாதிகள் என நான் கருதும் இராம.கி ஐயா, குமரன், ரவிசங்கர் கண்ணபிரான், மற்றும் கல்வெட்டு போன்றோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இன்னும் மெருகேற்றுகிறது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

எப்படி இருக்கீங்க அரைபிளேடு? நலமா?

ரொம்ப நாள் கழிச்சி, இந்தப் பதிவுக்கு வரேன்! அண்மையில் இந்தியப் பயணத்தில் திருமலை சென்று வந்தேன்! அங்க கிடைச்ச லட்டு இங்கும் கிடைக்குமா? அல்வா தான் கிடைக்கும்-ன்னு சொல்லக் கூடாது :))

இந்த முறை தரிசனத்தின் போது, உங்க ஞாபகமும் வந்தது. உங்களுக்குப் புண்ணியம் தான் போங்க! :)

திருப்பாவாடைச் சேவையில், ஆபரணங்கள் களைந்து, நெடிய மேனித் திருக்கோலம்! மிக எளிதில் சங்கு சக்கர தரிசனத்தைக் காணலாம்! கரங்களில் தான் இருக்கும்! தோள்களில் அல்ல!

சரி, மேட்டர் இது தான்! இங்கேயே விவாதம் என்பதால், இங்கேயே இதைப் பதிந்தும் வைக்கிறேன்!

வாரியார் சுவாமிகள் திருவேங்கடத்தில் இருப்பது முருகப் பெருமான் என்று சொல்லவில்லை! அதற்கான ஒலிநாடா: திருத்தணி-திருப்பதி. இங்கு அந்தந்த தெய்வங்களை அப்படியே பேசுகிறார் சுவாமிகள்! சென்னையில் வாங்கியாந்தது! அதைக் கேட்டுக்கிட்டே இந்தப் பின்னூட்டத்தையும் பதிக்கிறேன்!

மேலும் அருணகிரியின் திருப்புகழும் எடுத்துத் தருகிறார்!
//உலகீன்ற பச்சை உமை அண்ணன்
வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சார்ங்க சக்ர கரதலன்-அவன் மருகோனே//
என்பது திருவாஞ்சியத் திருப்புகழ்!
இதில் மிகத் தெளிவாக வட வேங்கடத்தில் இருப்பது பெருமாளே என்று அருணகிரி குறித்து விட்டார்!

அருணகிரி இராமானுசருக்குப் பின் வந்தவர் என்று சொன்னாலும், முருகனை அருணகிரியே அறிய மாட்டாரா என்ன?

ஒரு பேச்சுக்குச் "சதியே" நடந்திருந்தாலும், அருணகிரி இதைப் பற்றிப் பாடாமல் வேண்டுமானால் போய் இருக்கலாம்!
ஆனால் வலிந்து வேங்கடத்தில் சக்கரம் ஏந்திய பெருமாள், உமையின் அண்ணன் என்று பாடுகிறார் என்றால்...
அருணகிரி பொய் சொல்கிறாரா? :)
அதை முருகச் செல்வர்களும், முருகப் பதிவர்களும் ஒப்புவார்களா? :)

வாரியார் சுவாமிகள் இன்னொன்றும் குறிப்பிட்டார் ஒலிநாடாவில்!
அதாவது திருமலை(திருவேங்கடம் அல்ல) என்ற ஒரு தலம், திருநெல்வேலி-குற்றாலத்துக்கு அருகிலும் உள்ளது! அது முருகன் கோயில்! பொதிகை மலை ஆலயம்!
குற்றாலம்/செங்கோட்டை/பண்பொழில் மார்க்கத்தில் அமைந்துள்ளது.
http://senkottaisriram.blogspot.com/2007/09/thirumalaikoil.html
http://thecomforts.com/thecomforts_directory.asp?spc=2376

இந்தத் திருமலையைத் தான் அருணகிரியும் பாடியுள்ளார்! கந்த குரு கவசத்திலும் வருகிறது!
//திருமலை முருகா நீ திட ஞான மருள்புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலமகற்றிடுவாய் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் என்று பாடற் தொகுப்பும் உள்ளது!

எதையும் பகுத்தறியாது, வெறுமனே திருமலை என்று யாரோ கிளப்பி விட, அது எப்படி எல்லாம் பற்றும் என்பதற்கு இந்தத் திருவேங்கட சர்ச்சை ஒரு உதாரணம்! :)

மிக முக்கியமான ஒன்று!
இராமானுசருக்கும் மிக மிக முற்பட்ட, முதற் சங்க காலத்து நக்கீரர் கூட வேங்கடத்து இறைவனை முருகப் பெருமான் என்று குறித்தார் இல்லை!

அவர் காலத்தை ஒட்டிய பரிபாடல்களும் வேங்கடத்து நெடியோனை மாலவன் என்று தான் குறிக்கின்றன!

அதற்குப் பின்னால் பக்தி இலக்கிய காலகட்டத்திலும் நாயன்மார்களோ, இன்னும் சைவப் பெரியோர்களோ, ஒருத்தர் கூட, மருந்துக்கு கூட, திருவேங்கடம் முருகத் தலம் என்று சொன்னாரில்லை!

இவர்களுக்கு எல்லாம் அப்புறம் வந்தது தான்....
யாரோ ஒரு புண்ணியவான் கொளூத்திப் போட்ட பட்டாசு! :)
அதன் பின்னால் தான் இராமானுசர் நிறுவ வேண்டிய நிலைக்குப் போய் விட்டது!

சங்கு சக்கரங்கள் எப்பவும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் சிலையிலேயே இருக்கும் என்ற வாதமும் முற்றிலும் தவறு!
வைணவத் திருப்பதிகளில் முதல் பதியான திருவரங்கத்தில், அரங்க நாதனுக்கு சங்கு சக்கரங்களே கிடையாது! எந்தப் படத்திலும் பாருங்கள்! வெறும் பாம்பணை மட்டுமே!
http://sagareswar.com/images/101316%5B12-8%5D.jpg

சங்கு சக்கரம் இல்லை! அதனால் அவன் அரங்கன் இல்லை, அறுமுகன்! சோலைகள் சூழ்ந்த திருவரங்கம். சோலைகள் என்றால் குறிஞ்சி நிலம் தான்! என்று புதிதாக யாரேனும் கிளப்பிவிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்! :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்து மதம் எங்கே போகிறது - அக்னிஹோத்தரம் தாத்தாச்சாரி எழுதிய புத்தகம்.

நக்கீரன் வெளியீடு..

அதில் ஏழுமலையானுக்கு பின்னலுடன் கூடிய ஜடை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காளி என்று சொல்கிறார்....



-------------------------------------------------------------------------------------------------------------