Tuesday, January 29, 2008

காந்தி என்றொரு மனிதன் இருந்தான்

கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948). ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா? அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.

காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை. அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று பயணித்தது. "அகிம்சை" மூலம் காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்று நமது வரலாற்று பாடபுத்தகங்கள் படிப்பிக்கின்றன.

சுதந்திரம் பெற்றுத்தந்தது "அகிம்சை வழி போராட்டங்கள்" மட்டுமல்ல. பல காரணிகளில் அதுவும் ஒன்று என்றாலும் அதன் பங்கை மறுப்பதற்கில்லை.

இன்றைய சூழலில் காந்திய தத்துவமான "அகிம்சை" இன்னும் எடுபடக் கூடியதா ?

காந்திய தத்துவார்த்த அரசியல்தான் என்ன. அறவழி போராட்டங்கள், அனைவரையும் நேசித்தல், வன்முறையை எதிர்க்க அகிம்சை வழியில் போராட்டம். இவை இன்றும் செல்லுபடியாகுமா?

"லகே ரஹோ முன்னா பாய்" திரைப்படம் இந்த கேள்வியை என்னுள் கிளறிவிட்டது. அடிதடியை தொழிலாக கொண்ட ஒருவன் காதலிக்காக காந்தியை உள்வாங்கி காந்தியவாதியாக மாறுகிறான். சமூகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் காந்திய முறையில் தீர்வு சொல்கிறான் வானொலியின் பண்பலையில்.
தீர்வுகள் பலன் தருகின்றன.

"எனது வாசலில் தினமும் பீடாவை துப்பிச் செல்லும் அடாவடியான பலவான் ஒருவனை என்ன செய்ய. அவனிடம் சண்டை போட்டு பீடாவை துப்பாதே என்று அடித்து சொல்லலாமா."
"வேண்டாம். அவனிடம் இன்முகம் காட்டு. அவன் துப்பிய இடத்தை இன்முகத்தோடு தூய்மை செய்."
அவன் தினமும் துப்ப இவனும் இன்முகத்தோடு தூய்மை செய்கிறான்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள், அவன் துப்ப துப்ப இவனும் சிரித்தபடி தூய்மை செய்கிறான்.
நான்காம் நாள் துப்பியவன் உணர்ந்து துப்பாமல் மன்னிப்பு கோரி செல்கிறான்.
காந்தியம் வெல்கிறது.

ஒரு கன்னம் அறைந்தவனுக்கு மறு கன்னம் காட்டினால் அவன் வெட்கி திருந்துவான் என்பது காந்தியம்.
இது எல்லா நிலைகளிலும் சாத்தியமா?

ஒருவன் தன் தினசரி வாழ்வில் தன்னை அறைபவர்க்கு மறுகன்னம் காட்டிக் கொண்டிருந்தால் வாழ முடியுமா. இரு கன்னத்திலும் மாறி மாறி அறைபடுபவன் என்ன செய்வான்?

தினசரி வாழ்வில் காந்தியத்தின் சாத்தியம் காந்தியை போன்றோர்க்கு மட்டும். இத்துணை பெரிய மனிதர் இவ்வளவு பணிந்து வருகிறார் என்பதால் எதிராளியும்/அமைப்பும் பணிந்து போவான்/போகும்.
அகிம்சை ஆயுதம் தனி நபர்களை பொறுத்தவரை, பலமுள்ளவர்கள் அல்லது தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமானது. பயன்தரக்கூடியது.
புலி புலால் உணவை மறுதளித்தால் கவனிக்கப்படும். ஒரு மான் மறுதளித்தால் ?

ஒரு சாதாரணன் ஏற்கனவே பணிந்து கிடப்பவன் இன்னும் பணிவதால் என்ன சாதிக்க முடியும். காணாமல்தான் போவான்.
இந்த திரைப்படத்திலும் ஏற்கனவே பெரிய ரெளடியாக இருப்பவன் பணிந்து காந்தியம் பேசுவதாலேயே சாதிக்கிறான்.

மிகச் சாதாரணன் வாழ்வில் காந்தியம் பயனற்றதே.
எல்லோரும் காந்தியை தனிமனித வாழ்வில் பின்பற்றினால் என்ன ஆகும் ?
வேர்க்கடலை வியாபாரம் நன்றாக ஆகும். (சொன்னவர் கண்ணதாசன் என்று நியாபகம்).

காந்தி தன்னளவில் தன் கொள்கைகளை சோதித்து சத்திய சோதனையாக மேற்கொண்டார். அவர் அளவில் அது சரியே. அவர் தனது சோதனைகளில் வென்றார் என்பதற்கு அவருக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குண்டுகளே சான்று.
காந்தி மகாத்மா என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று இன்னொரு மனிதர் பிறந்து வருதலும் சாத்தியமில்லை. அவருடைய கொள்கைகள் அரசியலில் தூய்மையும் எளிமையும் நேர்மையையும் வலியுறுத்தியவை.
அவை சாதாரணன் தனிமனித வாழ்வில் கைக்கொள்ள வேண்டியவை அல்ல. மக்கள் சேவைக்கென்று வரும் அரசியல்வாதிகள்/குழுக்கள் கைக்கொள்ள வேண்டியவை.

ஒற்றைச் சுள்ளி எளிதாக உடையும். கட்டுச் சுள்ளி எதிர்ப்பை தாங்கி நிற்கும். காந்தியவாதம் குழுக்களுக்கானது. சமூகம் குழுவாக இயங்கும் போது தனது துவேசங்களை களைந்து அகிம்சை வழியில் நடப்பதை உறுதி செய்வது. இன்றைய நிலையில் கொள்கை/மத/இன/சாதி ரீதியாக ஒன்றுபட்டு வலிமை பெறும் குழுக்கள்/அவற்றின் எதிர்குழுக்கள் காந்தியத்தை/அகிம்சையை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அதுவே வன்முறைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும்.
இன்றைய நிலையில் அரசியல் குழுக்கள்/கட்சிகளிடம் காந்தியவாதம் கவலைக்கிடமாகவே உள்ளது.
அதற்காக காந்தியம் காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.
அது என்றும் இருக்கும்.
குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.

7 comments:

said...

//குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.//

அங்கு மட்டுமே!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரசியல் வியாதிகளுக்கும் அந்தப் 'பெயர்' இல்லீன்னா யாவாரம் எப்படி ஆகும்?

அவர் இருந்து இதையெல்லாம் பார்த்துருக்கோணும்(-:-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிகநல்ல பதிவு

மிக்க நன்றி. ஆழமான கருத்துக்கள்..-------------------------------------------------------------------------------------------------------------
said...

பேரறிஞர் அண்ணா எ௯ழுதிய 'உலக உத்தமர் காந்தி' என்ற நூலை படித்திருக்கிறீர்களா? - நாகூர் இஸ்மாயில்-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்தனார்..

காந்திய கொள்கைகளை பின்பற்றும் அரசியல்வாதி இன்றைய ஆடம்பர அரசியல் சூழலில் இருக்க முடியுமா. முகமூடியை மட்டும் வைத்துக்கொண்டு சமரசம் செய்து கொள்பவர்கள்தான் அதிகம்.

-------

துளசி கோபால் அவர்களே..

ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தியிலும் கடவுளை காணலாம்.

-----

நன்றி தமிழ்மணி அவர்களே.

----

நாகூர் இஸ்மாயில் அவர்களே. அண்ணாவின் "உலக உத்தமர் காந்தியை" படித்ததில்லை. படிக்க எண்ணம் கொண்டுள்ளேன். நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிக அருமையாகச் சொன்னீர்கள் அரைபிளேடு. அகிம்சை என்பது ஏற்கனவே இம்சிக்க வலுவுள்ளவன் என்று நிறுவியவனுக்கான ஆயுதம்; இவ்வளவு வலியவன், இவ்வளவு மேலானவன் தாழ்ந்து வருகிறான் என்பது தான் அகிம்சைக்கு மேலும் வலு தருகிறது என்று சொல்லும் கருத்து ஏற்புடையதாகத் தோன்றுகிறது. வலிமையற்றவன் அகிம்சையைக் கடைபிடித்தால் என்ன கடைபிடிக்காவிட்டால் என்ன இரண்டுமே ஒன்று தான்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது மேலும் சில எண்ணங்கள் தோன்றின. செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல்லிடத்துக் காக்கில் என் காவாக்கால் என் என்று கேட்பார் வள்ளுவர். இங்கே நீங்கள் சொல்லும் கருத்தும் அது தானே. செல்வாக்கு இருக்கும் இடத்தில் அகிம்சையைக் கடைபிடித்தால் அது பயன் தரும்; செல்வாக்கு இல்லாத இடத்தில் அகிம்சை இருந்தால் தான் என்ன இல்லாவிட்டால் தான் என்ன?

இறைவன் எல்லா வகையிலும் பெரியவன்; வலியவன்; அனைத்தையும் அறிந்தோன்; எங்கும் உறைபவன். இவ்வளவு பெரியவன் அடியவர்களுடன் நீருடன் நீர் கலந்தது போல் பழகும் நீர்மைக் குணமும் கொண்டிருப்பதால் தான் அவனுக்குப் பெருமை என்று சமய நூல்களும் சொல்கின்றனவே.-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி குமரன்.

"வலியார்முன் தன்னை நினைக்க தாம்தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து."

இந்த குறளின் அர்த்தமே இன்றைய நிலையில் காந்தியமாக இருக்க முடியும்.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------