Thursday, January 17, 2008
நீங்க காதலிச்சு இருக்கீங்களா ???
"நீங்க காதலிச்சு இருக்கீங்களா". அதிகம் பழகாத ஒருவனிடம் இருந்து வரும் கேள்வி.
நாங்கள் அன்றுதான் சந்தித்திருந்தோம். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டிமன்றத்தில் எனது கல்லூரி சார்பில் கலந்துகொண்டு பேருந்தில் திருவண்ணாமலை திரும்பி கொண்டிருந்தேன்.
(தலைப்பு பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழா ? சமூக உணர்வா ? காதலா ? )
எனது அருகில் அவன் அமர்ந்தான்.
"நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க."
"நன்றி. நீங்களும் ரொம்ப நல்லாவே பேசினீங்க கதிர்வேல். பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழ்தான் அப்படின்னு நடுவர் தீர்ப்பு சொன்னார்னா அதுக்கு உங்க பேச்சு அப்புறம் வாதங்கள்தான் காரணம்."
"நன்றிங்க." என்றான் அவன்.
"கலைக்கல்லூரில என்ன படிக்கிறீங்க கதிர்."
"தமிழ். BA. எனக்கு ஆச்சரியங்க. இஞ்சினியரிங் கல்லூரியில இருந்து வந்து பட்டிமன்றம் பேசுறீங்க."
"ஒரு ஆர்வம்தான்." சிரித்தேன்.
ஓடும் பேருந்தில் ஊர் போய் சேர இரண்டு மணி நேரம் இருக்க இன்னும் என்ன என்னமோ பேசினோம்.
ப்ளஸ் டூ முடித்து தான் முதலில் ஆசிரியர் பயிற்சி முடித்ததாகவும், வேலைக்கு பதிந்து அது கிடைக்க ஐந்தாண்டுகள் ஆகலாம் என்பதால் இப்போது கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிப்பதாகவும் அவன் சொன்னான்.
"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலேன்னு நீங்க பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல நல்ல கவிதையெல்லாம் மேற்கோள் காட்டினீங்க."
"பாரதிதாசனை காதல் கவிஞர்னு சொல்லுறது அபத்தம். தோற்கப் போகிற தலைப்புன்னு தெரியும். இருந்தாலும் கொடுத்த தலைப்பில்தானே பேசமுடியும்." சிரித்தேன்.
"இருந்தாலும் அருமையாக பேசினீங்க. காதலை பாடாத கவிஞன் இல்லை. காதலை பாடாதவன் கவிஞனே இல்லை. அப்படின்னு நீங்க சொன்னீங்க பாருங்க அதுக்கு கைவலிக்கிற அளவுக்கு நான் கைதட்டினேன்."
"நன்றி. ஆனா என்னன்னா எனக்கு காதல் பிடிக்காது. தலைப்புக்காகத்தான் பேசினேன். எதிர்காலத்துல தமிழுக்கு எதாவது கஷ்டம் வந்து நான் கவிஞன் ஆனாக்கூட காதலை பாடத கவிஞனனாகத்தான் இருப்பேன்."
அப்போதுதான் அந்த கேள்வியைக் கேட்டான். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".
"இல்லை. படிக்கிற காலத்துல காதல்னு சொல்லிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வழியறதும், அவங்களுக்கு லெட்டர் கொடுக்கிறதும். அவங்களுக்கு பாடிகார்டு மாதிரி பின்னாடியே போறதும். எனக்கு பிடிக்கிறதில்லை."
"என்னை மாதிரியே யோசிச்சு இருக்கீங்க. என்னதான் நம்ம மனசு கல் கோட்டை மாதிரி இருந்தாலும் காதல் காத்து மாதிரி உள்ள நுழைஞ்சிடுது. அப்ப மனசு அலையடிச்ச மணல் கோட்டை மாதிரி கரைஞ்சு போயிடுது." கவிதையாய் பேசினான்.
அவனையே பார்த்தேன். இப்போது நான் கேட்டேன். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".
"காதலிக்கப்பட்டிருக்கிறேன். காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகமானது."
"இண்ட்ரஸ்டிங். சொல்லுங்களேன்." கேட்பதற்கு எனக்கு நேரமிருந்தது. பாதி தூரபயணம் மீதியிருந்தது.
"இளவரசிகளை தேடிப்பிடித்து காதலிக்க நான் இளவரசன் இல்லைங்க. காதல்ன்றது எனக்கு வரமாயிருக்க முடியாது. சாபமாய்த்தான் இருக்கும். என்னுடைய அப்பா கூலி தொழிலாளி. அம்மா பீடி மண்டியில பீடி சுத்துறாங்க. மூணு தங்கச்சிங்க. நானும் லீவ் நாள்ள மண்டியில பீடி சுத்துவேன். கஷ்டத்திலதான் படிக்கிறேன். செலவு அதிகமில்லா அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில படிச்சிட்டேன். அதே மாதிரி ஒரு டிகிரி வேணும்னு அரசு கலைக் கல்லூரியில தமிழ் மூணாவது வருடம். நானெல்லாம் காதலிக்க முடியுமா சொல்லுங்க."
அமைதியாயிருந்தேன்.
அவன் தன் கதையை தொடர்ந்தான்.
------------
"காதல் எப்ப வரும்னு நினைக்கிறீங்க. முதல் பார்வையிலேயே வருமா. இல்லை பழகி பார்த்து புரிஞ்சிகிட்ட பின்னாடி வருமா?"
"என்னை பொறுத்த வரைக்கும் முதல் பார்வையிலேயே ஏதாவது வந்தா அது பேரு காதல் இல்லை காமம். பழகி நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னாடி வந்தா அது சுயநலம்." நான் சொன்னதற்கு சிரித்தான்.
"நிறைய பெண்கள் கிட்ட பழகறோம். ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கே தவிர அதை காதல்னு சொல்ல முடியறதில்லை. என்னுடைய வகுப்பில இருபது பெண்கள். எங்க துறையில முதலாமாண்டு இரண்டாமாண்டு எல்லாம் எடுத்துகிட்டா கூட ஒரு அறுபது பேராவது இருப்பாங்க. நான் கல்சுரல் செக்கரட்ரியா மற்ற துறையில இருக்கிறவங்க கிட்டயும் பழகுறேன். எப்படியும் நூறு பெண்கள் இருக்கிற சூழ்நிலையில எல்லார்கிட்டயும் பேச பழக இருந்தாலும் ஒரு தொலைவு இருக்கவே செய்யுது. அவங்க கிட்ட பேசும்போது ஒரு உதறல் கூட இருக்கும். நட்பு இருக்குமே தவிர காதல் எல்லாம் வந்ததில்லை. இந்த சிச்சுவேஷன்லதான் அந்த லெட்டர்."
"லெட்டரா.."
"ஆமா. காலேஜ் விட்டு வீடு கிளம்ப என்னுடைய சைக்கிளை எடுக்கறப்ப சைக்கிள் கேரியர்ல இருந்தது. அழகா இதயம் படம் போட்ட காகித உறை. யார் வெச்சிருப்பாங்கன்னு சுத்தி முத்தும் பார்த்தா யாரும் இல்லை."
"அப்புறம். "
"என்னுடைய பெயர் எழுதியிருந்த அந்த கவரை பிரிச்சு பார்க்கிறேன். அன்புள்ள கதிர்வேலுவுக்கு அப்படின்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தது."
"ம்.."
"நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். உங்கள் இனிய பேச்சு பழகும் விதம் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுடன் நட்பாக பழகிவிட்டு எப்படி காதலை சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் குடும்ப நிலையிலிருந்து உங்களை பற்றி எல்லாமே நான் அறிவேன். நீங்கள் என் காதலை நிராகரித்துவிட்டால் நமது நட்பும் உடன் சேர்ந்து உடைந்து விடும் என்பதால் மிகவும் தயங்குகிறேன். ஆனால் மனதிலுள்ள காதலை சொல்லாமலே வைத்திருக்க முடியுமா. சொல்லிவிடலாம் என்றுதான் இந்த கடிதம். இந்த கடிதத்தில் கூட என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயக்கமாகவே இருக்கிறது. எந்த தருணத்தில் உங்கள் மீது காதல் வந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் உங்களுக்கு என் மீது தனிப்பட்ட நேசமோ காதலே இருக்காது என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணாக என்னுடைய காதலை என்னால் நேரடியாக சொல்ல முடியாது. அப்படி சொல்லி நிராகரிக்கப்பட்டுவிட்டால் அதை தாங்கும் சக்தி எனக்கு கிடையாது. என்னுடைய காதலை விவரித்து என்னால் இக்கடிதத்தில் முழுமையாக எழுதமுடியவில்லை. என்னுடைய காதல் விவரிக்க முடியாதது. என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாளைய தினம் பிப்ரவரி 14. நீங்கள் எனக்காக உங்களிடம் இருக்கும் பச்சை நிற சட்டையை அணிந்து கல்லூரிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன். என்னுடைய தயக்கத்தை உதறி தங்களிடம் என் காதலை சொல்வேன். அப்படி நீங்கள் பச்சை சட்டையில் வராவிட்டால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உங்கள் நிலையறிந்து விலகிவிடுவேன். ஆனால் என் மனதில் உங்கள் மீதான காதல் அழியாத ஓவியமாக என்றும் இருக்கும். அப்படி நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாளைய தினத்திற்காக காத்திருக்கிறேன்.
காதலுடன்....
அப்படின்னு எழுதியிருந்தது. யார் எழுதியதுன்னு தெரியலை."
"அடுத்த நாள் பச்சை சட்டையில் போனீங்களா...".
"இல்லை. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா கடிதத்தை திரும்பி திரும்பி படிச்சு பார்த்தா விளையாட்டு இல்லைன்னு தோணிச்சு."
"ம்.."
"என்னுடைய நிலையில் காதலுக்கு எல்லாம் இடமில்லை. அடுத்த நாள் கருப்பு சட்டையில போனேன்."
"ஓ."
"இரண்டு நாள் கழிச்சு என்னுடைய சைக்கிள் கேரியர்ல இன்னொரு கடிதம்."
"அதில என்ன இருந்தது.."
"அன்பானவருக்கு...
எனது உள்ளம் உடைந்த நிலையில் எழுதுகிறேன். என் காதலை மறுக்க நீங்கள் பச்சை சட்டை அணியாமல் வந்திருக்கலாம். ஆனால் எனது மனதை உடைப்பது போல் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தீர்கள். எனது காதல் தோற்றாலும் இனியும் நான் உங்களிடம் எப்போதும் போல பழகுவேன். இனி எப்போதும் என்னுடைய காதலையோ என்னையோ நான் வெளிப்படுத்திக் கொள்ளப் போவதில்லை. யாரும் அறியாமல் என் மனதில் பூத்த இந்தக் காதல் யாரும் அறியாமல் என் மனதோடு காலத்திற்கும் இருந்து என் மரணத்தில்தான் மடியும்.
நான் உங்களை
காதலித்தேன்.
காதலிக்கிறேன்.
காதலிப்பேன் காலமெல்லாம்.
ஆனால் அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பது மை அல்ல. என் இரத்தம். ஏனெனில் இந்தக் காதல் என் இரத்தத்தில் ஊறியது. இதை இரத்தத்தால் சொல்வது பொருத்தம் அல்லவா. என்னுள் சூல் கொண்டு கருவாகி உருவாகி கனிந்த காதலை அதற்கு உரியவரிடம் சொல்லி விட்டேன் என்ற திருப்தி ஒன்றே எனக்கு போதும். இனி உங்களுக்கு என் காதலால் தொல்லை தரமாட்டேன். நான் யார் என்பதை அறிய முயலவேண்டாம். என் கையெழுத்தை வைத்து என்னை கண்டுபிடிக்க முடியாது. மாற்றி எழுதியிருக்கிறேன். என்றும் நீங்கள் உங்கள் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவனிடத்தில் எந்த நாளும் உங்களுக்காக பிரார்த்திப்பேன். காதல் சிதைந்த நிலையில் மாறாத அன்புடன்... காதலை சுமக்கும் ஒருத்தி."
"படிச்சதும் நான் பெரிய தப்பு செஞ்சிட்டனோன்னு தோணுச்சு. யாராயிருக்கும். இரத்தத்தால காதலை சொல்லி..... எவ்வளவு காதல் இருந்திருந்தா. தப்பு பண்ணிட்டேன். இந்த அளவுக்கு காதல் இருக்கிற பெண்ணை ஏமாத்திட்டேன் அப்படின்னு ஒரு குற்ற உணர்வு. இந்த காதலுக்கு பதிலா நான் என்ன தர முடியும். காதலை தவிர...."
"யாருன்னு தெரிஞ்சதா."
"இல்லை. இந்த கடிதம் வந்து ஒரு மாசமாகுது. யாராயிருக்கும்னு முடிஞ்ச வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன். ஒரு நல்ல காதலை இழந்துட்டேன். இன்னிக்கு நீங்க காதலை பத்தி பேசினப்ப மனசு என்னமோ செஞ்சுது. உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு."
எங்களுக்கிடையில் பெரும் மெளனம் நிலவியது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
"ஆனா. காதலைவிட காதலிக்கப்பட்டவனுடைய நலன் முக்கியம்னு அந்த பெண் தன்னை வெளிப்படுத்திக்காம விலகிட்டது என்னை பாதிச்சுருச்சு. என்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு பெண்தான்னு நல்லா தெரியுது. என்னுடன் நட்போட பழகிக்கிட்டுருக்கவங்கள்ல அவ யாரு அப்படின்னு நான் எப்படி தெரிஞ்சுக்கிறது. கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. அவளை எப்படியும் நான் கண்டுபிடிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ யாரு எப்படியிருப்பா அப்படின்றது எனக்கு தெரியலை. ஆனா யாராயிருந்தாலும் இந்தக் காதல் இந்த அன்பு இழக்கப் படவேண்டிய ஒன்று இல்லை. இந்த அன்புக்காக எதுவும் செய்யலாம். அவளை கண்டுபிடிச்சு என் காதலை கட்டாயம் சொல்லுவேன்."
பஸ் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது.
"காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது. உங்க காதலை நீங்க கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்." விடைபெற்றேன்.
எனது பயணம் முடிந்தது. அவன் தன் காதலைத் தேடி முடிவுறதா அவன் பயணத்தில் பிரிந்து பயணித்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
கதை சொன்னவனும் நிஜம். கேட்டவனும் நிஜம். எனவே அனுபவங்களின் கீழ் கொண்டு வந்து விட்டேன்.
ஆணிகளின் நடுவில் ஒரு ஒத்தடமாய் நினைவிலிருந்து எழுத துவங்கி ஆணி காரணமாக பாதி கதையை பதிந்து இப்போது ஒரே பதிவாக... ஒரே கதையாக..
பின்னூட்டி துரிதப்படுத்திய வெட்டி, CVR மற்றும் கொத்தனாருக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------
சரி..இன்னோரு பொண்ணு லட்டர் தருவதாக வைத்துக் கொள்வோம், டிட்டோ அதே மாதிரி..
என்ன பண்ணுவார்..
பார்க்காத அந்தப் பொண்ணு மேலேயும்...காதல் வருமா..
இல்லை..முதல்ல சொன்ன காரணத்தினாலே...முதல் பொண்ணு மேலே மட்டும் காதல் வருமா..
புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.. ;)
*********************************
அனுபவம் புதுமை...அவனிடம் கண்டாய்...!!!
நல்லா எழுதியிருக்கீங்க..
-------------------------------------------------------------------------------------------------------------
அனுபவமா? அதான் இன்னும் அரைபிளேடாகவே இருக்கீரா? :))
-------------------------------------------------------------------------------------------------------------
ஐயா tbcd
கல்யாணம் ஆன உங்கள இன்னொரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுதுன்னு வெச்சிக்குவோம்... நீங்க என்ன பண்ணுவீங்க. :)
காதல் கல்யாணம் இரண்டும் வாழ்க்கையில ஒரு முறைதான் வரும். சில துரதிர்ஷ்ட சாலிகளுக்கு இரண்டும் ஒரே பொண்ணுகிட்ட வரும் :))
----------
இலவசம்..
கதைகேட்ட அனுபவம்தான்யா நமது.
:)))
-------------------------------------------------------------------------------------------------------------
\\இலவசம்..
கதைகேட்ட அனுபவம்தான்யா நமது.
:)))\\\
என்ன தல ஒரு சோகமாக சொல்றிங்க.. ;))))
-------------------------------------------------------------------------------------------------------------
அவள் சொல்லும்போது வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ தேடி அலைய வேண்டி வந்துருச்சே!!
அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு முடிஞ்சா கண்டு பிடிங்க தல! :-)
-------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர்...
//கதை சொன்னவனும் நிஜம். கேட்டவனும் நிஜம். எனவே அனுபவங்களின் கீழ் கொண்டு வந்து விட்டேன்.//
ஆமாம்.. நீங்க கதை சொன்னீங்க. நாங்க கேட்டுக்கிட்டோம் ;)
-------------------------------------------------------------------------------------------------------------
:) ennathu neenga TVM pu?
-------------------------------------------------------------------------------------------------------------
ஹாய் அரை பிளேடு,
வெட்டி சொன்னாரு, அரை பிளேடு ஒரு சூப்பர் கதை போஸ்ட் பண்ணிருக்காங்கன்னு,ஸோ இப்போ உங்க வலைதளத்திற்கு விஜயம்!
ரொம்ப நல்லா இருக்கு கதை,
\\காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது.\\
I totally agree with this!
அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சாரா கதிர்ன்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கிறது!
-------------------------------------------------------------------------------------------------------------
//காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது//
மற்றவங்க காதல் கதையைக் கேப்பதும் சுகம் தான்..
(ஆனா சில வேளை பொறாமையும் இருக்கும், சோகமும் இருக்கும்)
-------------------------------------------------------------------------------------------------------------
சினிமா காட்சி மாதிரி இருக்கு. ஆனா சினிமாத்தனம் இல்ல.
காதலிக்கறத விட காதலிக்கப்படுவது பெரும் சுகம்.
-------------------------------------------------------------------------------------------------------------
எழு்த்து நடை ரசிக்கும் படியா இருக்கு நண்பரே. :)
காதலிக்கிறவனுக்கும் நிம்மதி இல்லை.. கதலிக்கப் படறாவனுக்கும் நிம்மதி இல்லை.. அந்தோ காதலின் மகிமை. காதலை குறை சொல்லி எதுனா பேசினா அடிக்க வராய்ங்க. அதனால நான் எதும் சொல்லலப்பா. :)
//"காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது. உங்க காதலை நீங்க கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்." விடைபெற்றேன்.
எனது பயணம் முடிந்தது. அவன் தன் காதலைத் தேடி முடிவுறதா அவன் பயணத்தில் பிரிந்து பயணித்தான்.//
ஆஹா இத யாரவது டிவி சீரியல் டைரக்டர் பார்த்தார்னா 5 வருஷத்துக்கு நம்மள அழ வைப்பாரே. :(
-------------------------------------------------------------------------------------------------------------
அழகான அனுபவம்... மிக அழகாக புணைந்திருக்கிறீர்கள்.. மிகவும் ரசித்தேன்...
-------------------------------------------------------------------------------------------------------------
டிபிசிடியின் கேள்விதான் என்னுடையதும். இன்னொரு கடிதம் வந்தால்....அப்ப என்ன செய்வாராம். ஆனாலும் காதலிக்க அல்லது விரும்பபடுறதும் சுகம்தான். அதுக்குத்தானே காதலிக்கவும் விரும்பவும் செய்றாங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
கோபிநாத் said...
\\இலவசம்..
கதைகேட்ட அனுபவம்தான்யா நமது.
:)))\\\
//என்ன தல ஒரு சோகமாக சொல்றிங்க.. ;))))//
கோபிநாத், சோக கதை இல்லையா :))
January 18, 2008 1:07:00 AM PST
-------------------------------------------------------------------------------------------------------------
CVR said...
//அவள் சொல்லும்போது வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ தேடி அலைய வேண்டி வந்துருச்சே!!
அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு முடிஞ்சா கண்டு பிடிங்க தல! :-)//
ரயில் சினேகம் போல் இது. பஸ் சினேகம். பயணம் முடிந்த பின் சகபயணிகளை நாம் சந்திப்பதேயில்லை.
கதை சொன்னவனின் பெயரும் முகமும் கூட மறந்துவிட்டது. கதை மட்டும் நினைவில்..
-------------------------------------------------------------------------------------------------------------
வெட்டிப்பயல் said...
//சூப்பர்...//
//ஆமாம்.. நீங்க கதை சொன்னீங்க. நாங்க கேட்டுக்கிட்டோம் ;)//
கேட்டுகிட்டதுக்கு நன்றி வெட்டி.
January 18, 2008 11:25:00 AM PST
-------------------------------------------------------------------------------------------------------------
//Vino said...
:) ennathu neenga TVM pu?//
ஆமாங்க. பக்கம்தான். :)
-------------------------------------------------------------------------------------------------------------
Divya said...
//ஹாய் அரை பிளேடு,
வெட்டி சொன்னாரு, அரை பிளேடு ஒரு சூப்பர் கதை போஸ்ட் பண்ணிருக்காங்கன்னு,ஸோ இப்போ உங்க வலைதளத்திற்கு விஜயம்!
ரொம்ப நல்லா இருக்கு கதை,
\\காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது.\\
I totally agree with this!
அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சாரா கதிர்ன்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கிறது!\\
நன்றி திவ்யா. நட்சத்திர வாழ்த்துக்கள்.
வாழ்க்கையின் சுவாரசியமே சில முடிச்சுகள் அவிழாமல் இருப்பதில்தான் இருக்கிறது. :))
-------------------------------------------------------------------------------------------------------------
Maayavan said...
//மற்றவங்க காதல் கதையைக் கேப்பதும் சுகம் தான்..
(ஆனா சில வேளை பொறாமையும் இருக்கும், சோகமும் இருக்கும்)//
நன்றி மாயவன்.
சோகம், வலி, சுகம், அமைதி, அன்பு, பொறாமை, ஊடல், கூடல் கலவையே காதல்.
இத்துணையும் இருப்பதால்தான் மனித குலம் காதலை கொண்டாடுகிறது போலும்.
-------------------------------------------------------------------------------------------------------------
//தம்பி said...
சினிமா காட்சி மாதிரி இருக்கு. ஆனா சினிமாத்தனம் இல்ல.
காதலிக்கறத விட காதலிக்கப்படுவது பெரும் சுகம்.//
நன்றி தம்பி.
"கண்ணின் கடைப்பார்வை கன்னியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" -- பாரதிதாசன்.
காதல் தரும் உந்து சக்தி அளவிடமுடியாதது.
-------------------------------------------------------------------------------------------------------------
//SanJai said...
//எழு்த்து நடை ரசிக்கும் படியா இருக்கு நண்பரே. :)
காதலிக்கிறவனுக்கும் நிம்மதி இல்லை.. கதலிக்கப் படறாவனுக்கும் நிம்மதி இல்லை.. அந்தோ காதலின் மகிமை. காதலை குறை சொல்லி எதுனா பேசினா அடிக்க வராய்ங்க. அதனால நான் எதும் சொல்லலப்பா. :)//
நன்றி சஞ்சய்.
கஷ்டங்கள் தந்து காதல் மனிதனை ஞானியாக்குகிறது. :).
//ஆஹா இத யாரவது டிவி சீரியல் டைரக்டர் பார்த்தார்னா 5 வருஷத்துக்கு நம்மள அழ வைப்பாரே. :(//
டிவீ சீரியல் டைரக்டர்கள் காதலை எங்க எடுக்கிறாங்க. கூட்டு குடும்பத்தில் பெண் படுற கஷ்டம்தான் அவங்க சப்ஜக்டே :))
-------------------------------------------------------------------------------------------------------------
நவீன் ப்ரகாஷ் said...
//அழகான அனுபவம்... மிக அழகாக புணைந்திருக்கிறீர்கள்.. மிகவும் ரசித்தேன்...//
நன்றி நவீன் ப்ரகாஷ்.
-------------------------------------------------------------------------------------------------------------
//G.Ragavan said...
டிபிசிடியின் கேள்விதான் என்னுடையதும். இன்னொரு கடிதம் வந்தால்....அப்ப என்ன செய்வாராம். ஆனாலும் காதலிக்க அல்லது விரும்பபடுறதும் சுகம்தான். அதுக்குத்தானே காதலிக்கவும் விரும்பவும் செய்றாங்க.//
என்னங்க சொல்றது. காதல்ன்றது ஒரு உணர்வு. அந்த உணர்வு ஒருத்தர் கிட்ட மட்டும்தான் வரணும்னு கட்டாயம் இல்லையே.
கதிர்வேல் தன்னுடைய காதலியை கண்டுபிடிக்கலைன்னு வச்சிப்போம். என்ன பண்ணியிருப்பார். தங்கைகளுக்கு கல்யாணம் ஆனதும் தானும் கல்யாணம் பண்ணிட்டிருப்பாரு.
அப்போது இந்த இரண்டு கடிதங்களையும் அவர் பத்திரமா வச்சிருந்தாலும் வச்சிருக்கலாம். தொலைச்சிருந்தாலும் தொலைச்சிருக்கலாம்.
வாழ்க்கையில் எல்லாமே கடந்து போகும்... காதலும்....

Post a Comment