Thursday, March 06, 2008

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.

சீதை முனகினாள். "ஆ... இராவணா...".

இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.

சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.

"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."

சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."

"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"

"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."

"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."

"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."

"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".

"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."

"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."

"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."

"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."

"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."

"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."

"சுவாமி.."

"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."

"மன்னியுங்கள்."

"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."

இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.

அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.

--------------

ஆண்டுகள் பல கடந்தன.

தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.

"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."

"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.

"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."

"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."

இராமன் கல்லாயிருந்தான்.

"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."

"எனது புதல்வர்கள் ?"

"ஆம்."

"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".

"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.
"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."

இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.

"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."

பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.

"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."

தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.

15 comments:

said...

ஆதாரங்கள் ஏதுமற்ற கற்பனைக் கதை. கதையின் பின்னிருக்கும் உளவியல் பார்வைக்காக எழுதப்பெற்றது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.//

"பிறன் மனை நோக்கா பேராண்மை" அல்லவோ?

வித்தியாசமான சிந்தனைதான்.

நீங்கள் இராமாயணம் மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துவிடுவது நல்லது. :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்ரீதர் நாராயணன்

//
"பிறன் மனை நோக்கா பேராண்மை" அல்லவோ?
வித்தியாசமான சிந்தனைதான்.
நீங்கள் இராமாயணம் மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துவிடுவது நல்லது. :-)
//

அளவுக்கு அதிகமாக இராமாயணம் படித்ததன் விளைவுதான் இந்த பதிவு என்று நினைக்கிறேன்.

இராமயணத்தில் எழுந்த சில கேள்விகளின் விடையாகவே இந்த கதை.

1. ஒரு வண்ணாத்தி வாய் சொல்லிற்காக நாடாளும் மன்னவன் தன் காதல் மனைவியை கானகம் அனுப்பினான் என்பது ஒப்புக் கொள்ள தக்கதாய் இல்லை.

2. வெளியேற்றப்பட்ட சீதை தன் தந்தை வீட்டிற்கும் செல்லவில்லை.

3. இருபது ஆண்டுகளாக சீதை என்ன ஆனால் என்று கூட பாராத இராமன் "தன் மனையின் நலனும் நோக்காத பேராண்மை படைத்தவன் போலும்."

4. திரும்பி வந்த சீதை இராமனோடு இணைய இயலாமால் பூமி தேவியை வேண்ட, பூமி பிளந்து சிம்மாசனத்தில் அவளை ஏந்தி உள்வாங்கி கொள்கிறது. ஏன் சீதையால் இராமனோடு மீண்டும் இணைய இயலவில்லை.

உத்தர ராமாயணத்தின் முரண்படுகளால்தான் இராமாயணம் இராமன் பட்டாபிஷேகத்துடன் முடிவடைந்து விடுகிறது. இராமன் என்ற ஆளுமையும் அங்கேயே முடிவடைந்து விடுகிறது.

அதற்கு பிறகு சராசரியான இராமன். ராமராஜ்ஜியத்தில் சீதைக்கு இடம் இல்லை.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

இதே சாயலில் நடிகர் கமல் கூட ஒரு கதை எழுதியிருப்பாரு. சீதையை ஆக்னி தேவன் காதலிப்பது போல.

இதை படிக்கும் போது அந்த கதை ஞாபகத்துக்கு வருது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு,

பூமி பிளந்து விழுங்கியதா, இல்லை கணவன் (அல்லது அரசன்) குழிதோண்டி புதைததை காப்பிய கர்த்தாக்கள் புனைந்து எழுதினரா... என்பது வித்தியாசமான சிந்தனைதான்.

நான் சொல்ல வந்தது அதைப் பற்றி அல்ல.

இராம காதை, ஒரு காப்பியமாகவோ, தேவ / அசுர போராகவோ, ஆரிய / திராவிட போராகவோ பார்ப்பதை விட ஒரு சாதாரண கதையாக நான் அணுகுகிறேன்.

இராமன் என்ற ஒரு அரசன் தன் தந்தைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற கானகமேகுகிறான். அங்கே இன்னொரு அரசன் அவன் மனைவியின் அழகில் மயங்கி அவளை சிறையெடுத்து செல்ல, தான் சம்பாதித்த புதிய நன்பர்களுடன் அவளை மீட்டெடுக்கிறான்.

முக்கியமாக, ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அவளை சிறையெடுக்கும் ஒரு அரசன் - அதாவது commanding personality - அவளை தீண்டாமல் இருப்பானோ? இருக்க முடியுமோ?

சீதையின் கற்புக்கு களங்கமில்லை என்று பல உபகதைகள் சொல்லப்பட்டாலும் (இராவணனுக்கு கிடைத்த சாபம், அக்னி பிரவேசம் இத்யாதி, இத்யாதி) எளிமையாக பார்த்தால் சீதை இராவணனின் அந்தபுரத்தில் பல நாட்கள் இருந்தாள் என்றுதான் கொள்ளவேண்டும். அவளுக்கு இராவணன் மேல் லயிப்பு உண்டாகியிருக்கலாம். தவறில்லையே.

ஆனால் 'பேராண்மை' என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததைத்தான் நான் சுட்டி காட்டினேன்.

அடுத்தவர் மனைவியின் அழகினால் கவரப்பட்டு திருட்டுத்தனமாக அவளை சிறையெடுத்தது பேரரண்மையா?

தொலைந்து போன மனைவியை தேடி பெரும் போர் புரிந்து மீட்டெடுத்தது பேராண்மையா? மீண்டும் அயோத்திக்கு திரும்பி வேறு ஒரு பெண்ணண மணந்து அரசாள முடியாதா என்ன?

இராமனின் பல்வேறு குணங்களில் இந்த போர்குணமே மிகவும் சிறப்பு என்பது எனது கணிப்பு.

பின்னர் காட்டுக்கு அனுப்பினார். பூமாதேவி பிளந்து விழுங்கினாள் என்பதெல்லாம் 'அவதார' படுத்துவதற்க்காக எழுதப்பட்ட கதைகளாக இருக்கலாம்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத்

கமலஹாசனின் கதையை தீராநதியில் படித்ததாக நினைவு. சீதை தீயில் இறங்கியதை வைத்து வரும் கதையாடல் அது.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Lion King 1 1/2 - மாதிரியில்ல இருக்கு, நான் ஏதோ ராமன் சீதைனு தலைப்புல பார்த்தவுடன். நம்ம பெருந்தலைவர் அரைபிளேடோட பிளாக் நிச்சயம் ஹாக் செய்யப்பட்டிருச்சுனு நினைச்சு ஓடோடி வந்தேன்... வந்தபிறகுதான் தெரிந்தது இது நம்ம அ.பி அவர்களின் மற்றும் ஓர் சிறந்த பதிவுனு!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

விளக்கங்களுக்கு நன்றி ஸ்ரீதர் நாராயணன்.

//அடுத்தவர் மனைவியின் அழகினால் கவரப்பட்டு திருட்டுத்தனமாக அவளை சிறையெடுத்தது பேரரண்மையா?
//

நிச்சயமாக பிறன் மனை கவருதல் பேராண்மையன்று.


//அவளுக்கு இராவணன் மேல் லயிப்பு உண்டாகியிருக்கலாம். தவறில்லையே.//

இத்தகு லயிப்பு இயல்பானதாக இயற்கையானதாக கூட இருக்கலாம். ஆனால் ஒரு பெண் ஒருவனைத்தான் மனதால் வரிக்க வேண்டும் என்ற விதிகளுக்கு இது எதிரானது என்பதால் சீதை குற்ற உணர்வில் சிக்குகிறாள்.

"பேராண்மை" என அவள் இராவணனை பகர்ந்ததை தன் மீது தவறில்லை என்றும் தன் மனம் பிறழ சூழலும் இராவணனின் ஆளுமையுமே காரணம் என்று நியாயப்படுத்த பார்த்ததாக கொள்ளலாம்.

கூடாத நினைவு கொண்டோம் என்று கருதுவதாலேயே ராமன் முன் கூனிக்குறுகி நிற்கிறாள். மாற்றானை மனதால் கொண்டவளை வாழ்வில் கொள்ளேன் என்று ராமன் புறந்தள்ளுகிறான்.

ராமன், சீதை என்ற அவதாரமாக்கல்களை புறந்தள்ளி அவர்களை உணர்ச்சிகளால் உந்தப்பெறும் மனிதர்களாக கொண்டே இந்த கதையாடல் நிகழ்ந்தது.

ராமன் மனிதனாக செயற்கரும் செயல்கள் செய்தவனாயினும் சறுக்கிய இடங்கள் பல. பொருந்திய போர்க்குணத்தோடு எதிரியை வென்ற அவன் தன் தனிப்பட்ட வாழ்வில் பெரும் தோல்வியையே எப்போதும் கொண்டவனாயிருந்தான்.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்

எனது வலைப்பூ சிலதினங்களுக்கு முன் ஹாக் செய்யப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் இரண்டே மணிநேரத்தில் மீட்டெடுத்தேன். விலைமதிக்க முடியாத பல வலைப்பூக்கள் அழிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட்டன. :)

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
சீதை முனகினாள். "ஆ... இராவணா..."
//
இராமன், சீதை "ஆ... இராமா..." என்று முனகியிருந்தாலும் "கணவன் பெயரை பத்தினி கூறக்கூடாது" என கோபப்பட்டிருக்கலாம்!!

//

பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.
//
இதைத்தான் ஆங்கிலத்தில் Irony என்பார்களா??



-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிக நன்றாக வந்திருக்கிறது கதை.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

படிக்கும் போது கூச்சமாக உணர்ந்தாலும் மாற்றுப் பார்வை என்ற அளவில் நன்கு இருக்கிறது இந்தக் 'கற்பனை'. நீங்கள் அப்படிச் சொன்னாலும் இது தான் உண்மை என்று சொல்லி இதனைத் தரவாக வருங்காலத்தில் யாரேனும் காட்டும் வாய்ப்புகள் உண்டு. அது திரும்பத் திரும்பத் தரவாகக் காட்டப்பட்டுப் பின்னர் உண்மை என்று நிறுவப்படவும் வாய்ப்புண்டு.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருப்பன்..
//இராமன், சீதை "ஆ... இராமா..." என்று முனகியிருந்தாலும் "கணவன் பெயரை பத்தினி கூறக்கூடாது" என கோபப்பட்டிருக்கலாம்!!//

சபையில் மனைவி கணவன் பெயர் சொல்லக்கூடாது என்று இருக்கலாம்.

தனிமையில், காதலில் காமத்தில் சுயமிழத்தலே நிகழும். காதல் எஜமான அடிமை பாவம் பாவித்தால் அது காதலன்று.

//இதைத்தான் ஆங்கிலத்தில் Irony என்பார்களா??//

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இராமன் அவளுடைய தவறுக்கு தண்டனை கொடுத்தான். ஆனால் அவளுக்காக அழுதான்.

சீதையின் குற்றம் மன்னிக்க கூடியதா என்பது மறுபக்கம் இருக்கட்டும்.

மன்னிப்பவன்தான் கடவுள். மன்னிக்க முடியாதவன் மனிதன்.

இராமன் மனிதனே.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

//மிக நன்றாக வந்திருக்கிறது கதை.//



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி குமரன்.

"மனதால் மாசடைந்த மனைவி. மன்னிக்க முடியாத கணவன்." இதுதான் கதை.

இந்த கற்பனை கதை இராமாயணத்தில் பொருந்தி போனதால் எடுத்தாண்டு இருக்கிறேன்.

இராமன் கடவுளாக இருந்தாலும் மண்ணில் மனிதனாய்த் தோன்றியவன். மனிதனுக்கு அவன் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை அனுசரித்து நடந்தவன். கடவுள் என்பதற்காக எந்த விதிகளையும் தனக்காகவோ மற்றவர்க்காகவோ அவன் தளர்த்திக் கொள்ளவில்லை.

சிறந்த போர்வீரன். தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் பேணியவன். தர்ம நெறி தவறாதவன். இக்காரணங்களால் மனிதன் கடவுளாக உயர்ந்தான்.

கடவுளாக நானும் அவனை வணங்குகிறேன். ஆனால் கடவுள்களும் கேள்விக்கு அப்பாற் பட்டவர்கள் அல்ல. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

இராமாயணம் பற்றிய பல பார்வைகள் இருக்கின்றன. இராமனும் சீதையும் சகோதர சகோதரிகள் என்று சொல்லும் பொளத்த இராமயணத்தை அறிந்திருப்பீர்கள். அதில் இராவணனே இல்லை.

இந்த தேசத்தில் மனிதன் இராமனைப் பற்றியும், கடவுள் இராமனைப் பற்றியும் கதைகள் மலிந்திருக்கின்றன.

வால்மீகி உத்தர இராமயணத்தை எழுதாத பட்சத்தில் அது குறித்து நிலவும் கதைகள் பலவிதமானவை.

இந்த கதை அதில் ஒரு மாறுபட்ட பார்வை மட்டுமே.

நான் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் வெறும் கட்டுக் கதைகள் என்று புறந்தள்ளவில்லை. அவற்றை வாழ்வியல் கதைகளாக உளவியல் பேசும் கதைகளாக பார்க்கிறேன்.

எது நீதி. எது முறை. எது தர்மம். என்பதிலான பார்வைகள் ஒவ்வொருவருக்கும் மாறும். இக்கதைகளின் கதைமாந்தர்களுடைய பார்வையிலும்.

வாலியின் பார்வையில் இராமன் மறைந்திருந்து தாக்கிய கோழை என்பது போல... பல்வேறு பார்வைகள்.

இது தரவாகி கடவுள் இராமனுக்கு இழுக்காகாது என்பது எண்ணம்.

அதானால்தான் இது கற்பனைக் கதை என்றும், மாறுபட்ட உளவியல் பார்வை என்றும் முதல் பின்னூட்டத்தில் சொன்னேன்.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------