Sunday, March 09, 2008

ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்

புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.

அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.

இது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏன் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.

"ராதை." புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.

"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்."

"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்."

"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்."

"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல."

"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ."

"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்."

"கண்ணா...."

"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை.."

"கண்ணா.. ஆனால் என் கணவன்."

"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. "

"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்."

"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா." மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.

ராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராதை தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...

விளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.

ஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.

"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்." ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்."

"நிச்சயமாக.."

"நிச்சயமாக ராதா. எனது கண்ணே."

கண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.
---

வீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.
பரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.

கண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.

ராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.
கணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.

கண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.

கண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.

அவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.

சமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.
ஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.
கண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.

கண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.

----------

8 comments:

said...

என்ன தலைவா... உடம்பு கிடம்பு சரியில்லையா?? கொஞ்ச நாளா ஒரே சோக மயமா இருக்கு தங்கள் பதிவு. காதல் தோல்வியா?? ஆமா, என்றால் நம்ம திவ்யா கிட்ட கவுன்சலிங் போங்க. என்னமோ தெரியல உங்க சோகம் எங்களையும் தொற்றிக்கொண்டது!!

கண்ணனும் மற்றவர்களை போல பிறந்து இறந்தவன் தானே. கடவுளாகவே இருப்பினும் பூமியில் பிறந்ததால் அவன் மனிதன்தான். அவன் இராதையை உடல் இச்சையை தனிப்பதற்காக பயன்படுத்தியிருப்பான் என்ற தங்கள் கணிப்பு ஒருவேளை உண்மையாக கூட இருக்கலாம்... எவர் கண்டார்?-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கருப்பன்.

மனசு உடம்பு எல்லாம் நலமே. :)

இது இன்னுமொரு கதை அவ்வளவே.

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//
வித்தியாசமான வாசிப்புகள், மாற்றுக் கருத்து வாசிப்புகள் பாதிக்கின்றன. கொஞ்சநாள் கண்டதையும் படிக்கும் பழக்கத்தை தள்ளி வைத்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
//
வித்தியாசமான வாசிப்புகள்!, மிகவும் நல்ல விஷயம்தான். தொடர்ந்து வித்தியாசமாக செய்தால் அந்த செயலில் வித்தியாசம் குறைந்து, கடைசியில் இல்லாமலேயே போகும். நமக்கென்று இருக்கும் பாணியை அவ்வப்போது காட்டவேண்டும். வித்தியாசமான முயற்ச்சிகள் வரவேற்க தக்கது ஆனால் தொடர்ச்சியான வித்தியாசத்தை தவிர்க்கவும்!

//
வாசிப்பதையெல்லாம் நம்பும் காலம் ஒன்று இருந்தது. அது இனிமையானது.
//
நான் வாசிப்பது மிக அரிது, எழுதுவது மிக மிக மிக மிக அரிது, சொல்லப்போனால் எழுதுவது எனக்கு ஒரு passion எல்லாம் கிடையாது. (எனது எண்ணற்ற எழுத்து பிழைகள் மூலம் தாங்கள் ஏற்கனவே யூகித்திருப்பீர்). நான் நிறைய கேட்பேன். எனக்கு படிப்பதைவிட, எழுதுவதைவிட கேட்பது மிகவும் பிடிக்கும். நீங்களும் ஒலி ஊடகங்கள் மூலம் விஷயத்தை தெரிந்து கொள்ள முயலுங்களேன்!!

//
வாசிப்புத் தளங்களை மாற்ற வேண்டும். பதியும் விஷயங்களும் தன்னால் மாறும்.
//
100% சரியாக கூறினீர்கள், நாம் படிக்கும்/கேட்கும் விஷயங்கள் நம்மை ஏதாவது ஒரு பக்கம் biasedஆக மாற்றிவிடுகிறது. அதனால் நாம் படிக்கும்/கேட்கும் விஷயம் வெவ்வேறாக இருப்பின் நமது எண்ணங்கள் விரிந்த கோணத்தில் இருக்கும்!!

//
மனசு உடம்பு எல்லாம் நலமே. :)
//
அப்பாடி, இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. பின்னே தலைவனுக்கு ஒன்னுனா தொண்டர்களும் அது சேரும் அல்லவா ;-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.//

இதத்தான் “தண்ணீரில் நிற்கும் போதும் வியர்க்கிறது” என்று வைரமுத்து எழுதினாரோ-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கருப்பன்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

அருண்மொழி

"தண்ணீர் தணல் போல் எரியும்." என்று கண்ணதாசன் கூட எழுதியதாக நினைவு.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல

கதை நல்லாருக்கு...ஆனா இது உண்மையில் நடந்த ஒன்னா? எனக்கு கண்ணன் ராதை விஷயம் தெரியாது அதான்..;)-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத்

பாகவதத்திற்கு பிந்தைய இலக்கியங்களில் ராதையின் கதை காணக்கிடைக்கிறது.

ராதை கண்ணனை விட ஒரு வயது பெரியவள். ராதையின் பிறந்த நட்சத்திரம் ராதாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

கண்ணனின் 16008 மனைவிகளில் ஒருத்தியாக ராதை இல்லை என்பதே இந்த கதைக்கு அடிப்படை.

மற்று இது கற்பனை கதையே மூலக்கதைகளைப் போலவே :)

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------