Wednesday, January 30, 2008

என்ன எழவுடா இது ?

கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர். உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட். சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது. நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக இருந்தாள். மேலும் அந்த... வேண்டாம். பேக் டு ஹீரோ.

ஷங்கர் அந்த குடியிருப்பை நோட்டமிட்டவனாக சிக்லெட்டை மெல்ல துவங்கினான். துப்பறியும் சிங்கம் ஷங்கருக்கு சிக்லெட் புத்துணர்வு தரும் என்பது உலகமறிந்த செய்தி. (கதாநாயகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதால் நமது நாயகன் சிக்லெட்டுக்கு மாறிவிட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.).

"பாஸ். இந்த ஃப்ளாட்ஸ்லதானா ?"

"எஸ் மாலு. இந்த அசோசியேசன் செக்ரட்ரி நரேஷ் அய்யர்தான் கால் பண்ணியிருந்தார். ஒரு திருட்டு நடக்கிறதாவும் அதை கண்டு பிடிக்கணும்னும் சொன்னார்."

"வாவ். நான் உங்க கிட்ட சேர்ந்து இந்த நாலு மாசத்துல முதல் கேஸ். திருட்டா ? த்ரில்லிங்.".

"முதல்ல இந்த பகுதியை நோட்டம் விட்டுக்கிட்டு அப்புறம் உள்ளே போவோம். "

"பாஸ். இந்த நாலு மாசத்துல நீங்க எனக்கு சாலரியே கொடுத்ததில்லை. ஆஃப்டர் திஸ் கேசாவது....".

"யூ சில்லி. யூ ஆர் நாட் ஜஸ்ட் மை அசிஸ்டன்ட். ஆல்சோ மை லவர். உனக்கு எதுக்கு சாலரி."

"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்னோட அப்பா கிட்ட நீங்க பெரிய துப்பறியும் புலின்னு சொல்லி வெச்சிருக்கேன். எத்தனை கேஸ் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு கேக்குறார். அட்லீஸ்ட் அச்சீவ் சம்திங் இன் திஸ் கேஸ் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே. ஓக்கே. குட் யூ ப்ளீஸ் கிவ் மி சம் எனர்ஜி பூஸ்ட்."

"ப்ச்" (சிக்லெட்டோடு இப்போது மாலுவின் முத்தமும் நமது நாயகனுக்கு புத்துணர்வு தருவது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். - ஆர்.)

இருவருமாக மாடியேறிச் சென்று "F" இலக்கமிட்ட வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினர்.
ஒரு சொட்டைத் தலையர் எட்டிப் பார்த்தார்.

"குட் மார்னிங். மிஸ்டர் ஐயர்."

"ஐ அம் நாட் ஐயர். ஐயம் ஐயங்கார்."

"வாட்?"

"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."

"என்ன எழவுடா இது" மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஷங்கர். "மிஸ்டர் நரேஷ் ஐயர்......"

"ஓ. அவரா. அவர் எதிர்ல F."

"ஆனா இதுதானே F".

"இது E. எழுத்தோட கால் உடைஞ்சிருச்சி." மாலு தலையிலடித்துக் கொண்டிருந்தாள்.

--------------

"கம் இன் மிஸ்டர் ஷங்கர். ஐ அம் நரேஷ் ஐயர். செக்ரட்ரி ஃபார் திஸ் ரெசிடென்சியல் அப்பாரட்மெண்ட்ஸ்."

நரேஷ் ஐயர் அவர்களை வரவேற்றார். "ப்ளீஸ் பீ சீட்டட்." அமர்ந்தார்கள்.

"மிஸ்டர் நரேஷ் இங்க திருட்டு போறதா சொல்லியிருந்தீங்க இல்லையா."

"எஸ்."

"ஐ அப்சர்வ்டு தி திங்ஸ் அரவுண்டு. ப்ராக்சிமிட்டி ஆஃப் அதர் பில்டிங்ஸ். யூ ஹவ் ஏ வாட்ச்மேன் அரவுண்ட் தி கிளாக். பட் ஸ்டில் திருட்டு போகுதுன்னா... ஐ திங்க் திருடன் பக்கத்து பில்டிங்ல இருந்து கயிறு மூலமா உங்க பில்டிங்குக்கு வந்து திருடியிருக்கலாம்."

"நோ. நோ. யூ ஆர் மிஸ்டேகன்."

"மே பி. ஐ ஜஸ்ட் சஜஸ்டட் எ பாசிபிலிட்டி. எங்க என்ன என்ன வேல்யபிள்ஸ் ஜிவல்லரீஸ் திருட்டு போச்சுன்னு சொல்றீங்களா."

"நான் உங்களை வரச்சொன்னது வேற ஒரு திருட்டுக்கு. தண்ணி திருட்டு."

"என்னது."

"எஸ். வாட்டர். யூ சீ. இந்த ஃப்ளாட்ஸ்க்காக டெய்லி ஒரு வாட்டர் லாரி ஃபுல்லா தண்ணி கொண்டு வந்து பேஸ்மண்ட் டேங்க் ஃபில் பண்றோம். அதுதான் திருட்டு போகுது."

"ஓ" (என்ன எழவுடா இது. திரும்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.).

"காலையில 6 ஓ க்ளாக் ஃபில் பண்ற வாட்டர் மதியம் 12 ஓ க்ளாக்குக்குள்ள காணாம போயிடுது. யூ ஹவ் டு இன்வஸ்டிகேட் திஸ்."

"தண்ணிதானே சார். இதுக்கு போய் இன்வஸ்டிகேஷன் எல்லாம்."

"நோ. நோ. யூ சீ. ஹவ் காஸ்ட்லி தி வாட்டர் ஈஸ். 500 ருப்பீஸ் ஃபார் ஒன் ட்ரிப் இன் லாரி. அண்டு ஐ அம் தி ஆன்சரபிள் செக்ரட்ரி."

"ஓக்கே. யாராவது அதிகமா யூஸ் பண்ணி காலியாகியிருக்கும்.".

"நோ. இட் ஈஸ் நாட் யூஸ்டு டு பி லைக் திஸ். லாஸ்ட் ஒன் வீக்காகத்தான் இப்படி ஆகுது."

"ஓக்கே சார். வீ வில் ஹவ் யுவர் கேஸ்". மாலு அறிவித்தாள்.

"மாலு" என்று துவங்கிய ஷங்கரை கண்களால் அடக்கினாள்.

"தாங்ஸ். ஹோப் யூ வில் ஃபைன்ட் இட் அவுட். எனக்கு ஆஃபிஸ் போகணும். ஐ வில் பி பேக் பை ஃபைவ் இன் த ஈவினிங்."

"ஓக்கே சார். வீ வில் ஹேங்க் அரவுண்ட் அண்டு வில் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".

அவர் கிளம்பி சென்றார்.

"ஓழுங்கா இந்த கேசையாவது கண்டுபிடிங்க." என்ற மாலுவை ஷங்கர் பரிதாபமாக பார்த்தான்.

---------------------

மாலை திரும்பிய நரேஷை மகிழ்ச்சியோடு வரவேற்றது நமது துப்பறியும் ஜோடி.

"சார். வீ ஹவ் ஃபைன்ட் இட் ஃபார் யூ.". ஷங்கர் அறிவித்தான்.

"ரியலி."

"இட் ஈஸ் யுவர் வாட்ச்மேன்."

"ஓ."

"வீ வாட்ச்டு. அந்த காவல்கார கிழவன் 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் தொட்டி தண்ணியையும் வெறும் மண் தரையில ஊற்றி காலி செஞ்சுட்டான்."

"அப்படியா."

"ஸீ. போட்டோ ஃப்ரூப். வீ ஹவ் டேக்கன் பிக்சர்ஸ் ஆஃப் ஹிம் இன் ஆக்சன்."
போட்டோக்களை நரேஷ் பார்த்தார்.

"பைத்தியக்காரத்தனமா இருக்கு. வெறும் தரையில தண்ணிய இறைச்சுக்கிட்டு."

"ஐ திங்க் ஹி மஸ்ட் பி எ சைக்கோ."

"முனுசாமி..."
அந்த காவல் கிழவன் பம்மியபடி வந்தான்.

"என்ன இது. நீ ஏன் தண்ணியை இப்படி வீணடிச்சு இருக்க."

"ஐயா செக்ரட்ரி அம்மாதான்..."

"அம்மாவா..."

"அம்மா உங்க கிட்ட சொல்லலீங்களா?"

"வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்." வெளியேயிருந்து உள்ளே நுழைந்த அவள் மிஸஸ் ஷீலா அய்யர் வைஃப் ஆஃப் மிஸ்டர் நரேஷ் ஐயர்.

"ஸீ திஸ் பிக்சர்ஸ் ஃபார் யுவர் செல்ஃப்." ஐயர் போட்டோக்களை அவளிடம் நீட்டினார்.

"எஸ். ஃபார் அவர் ரெசிடென்ஸ் உமென்ஸ் அசோஷியேசன் வீ நீட் எ பேட்மின்டன்ட் கோர்ட் வித் கிராஸ். நான்தான் முனுசாமியை லான்ல புல் வளரட்டும்னு தண்ணி விட சொன்னேன். வை யூ பிக்சர்டு இட்?"

"நத்திங்." நரேஷ் அய்யர் மென்று முழுங்கினார்.

"புல்ஷிட்." அவள் போய்விட்டாள்.

"சாரி. " நரேஷ் அய்யர் நமது ஜோடியிடம் மென்று முழுங்கினார்.
"ஆக்சுவலி எங்களுக்குள்ள பத்து நாளா சண்டை. நாங்க பேசிக்கிறது இல்லை. அதுல அவ எங்கிட்ட சொல்லாம விட்டுட்டா போல. ஐ அம் ரியலி சாரி."

"நோ பிராப்ளம் சார். இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

நமது ஜோடி சோகமாக வெளியேறியது.

"ஷங்கர் இனியும் இந்த துப்பறியற வேலை உங்களுக்கு தேவையா. ப்ளீஸ் ஜாயின் த பிசினஸ் ஆஃப் யுவர் டாட். அட்லீஸ்ட் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே". ஷங்கர் தலையாட்டினான்.

"தட் ஈஸ் நைஸ் ஆஃப் யூ."..... "ப்ச்ச்ச்" இன்னொரு முறை புத்துணர்வு கிடைத்தாலும் ஷங்கர் இனி எதையும் கண்டு பிடிக்கப்போவதில்லை.

(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

Tuesday, January 29, 2008

காந்தி என்றொரு மனிதன் இருந்தான்

கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948). ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா? அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.

காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை. அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று பயணித்தது. "அகிம்சை" மூலம் காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்று நமது வரலாற்று பாடபுத்தகங்கள் படிப்பிக்கின்றன.

சுதந்திரம் பெற்றுத்தந்தது "அகிம்சை வழி போராட்டங்கள்" மட்டுமல்ல. பல காரணிகளில் அதுவும் ஒன்று என்றாலும் அதன் பங்கை மறுப்பதற்கில்லை.

இன்றைய சூழலில் காந்திய தத்துவமான "அகிம்சை" இன்னும் எடுபடக் கூடியதா ?

காந்திய தத்துவார்த்த அரசியல்தான் என்ன. அறவழி போராட்டங்கள், அனைவரையும் நேசித்தல், வன்முறையை எதிர்க்க அகிம்சை வழியில் போராட்டம். இவை இன்றும் செல்லுபடியாகுமா?

"லகே ரஹோ முன்னா பாய்" திரைப்படம் இந்த கேள்வியை என்னுள் கிளறிவிட்டது. அடிதடியை தொழிலாக கொண்ட ஒருவன் காதலிக்காக காந்தியை உள்வாங்கி காந்தியவாதியாக மாறுகிறான். சமூகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் காந்திய முறையில் தீர்வு சொல்கிறான் வானொலியின் பண்பலையில்.
தீர்வுகள் பலன் தருகின்றன.

"எனது வாசலில் தினமும் பீடாவை துப்பிச் செல்லும் அடாவடியான பலவான் ஒருவனை என்ன செய்ய. அவனிடம் சண்டை போட்டு பீடாவை துப்பாதே என்று அடித்து சொல்லலாமா."
"வேண்டாம். அவனிடம் இன்முகம் காட்டு. அவன் துப்பிய இடத்தை இன்முகத்தோடு தூய்மை செய்."
அவன் தினமும் துப்ப இவனும் இன்முகத்தோடு தூய்மை செய்கிறான்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள், அவன் துப்ப துப்ப இவனும் சிரித்தபடி தூய்மை செய்கிறான்.
நான்காம் நாள் துப்பியவன் உணர்ந்து துப்பாமல் மன்னிப்பு கோரி செல்கிறான்.
காந்தியம் வெல்கிறது.

ஒரு கன்னம் அறைந்தவனுக்கு மறு கன்னம் காட்டினால் அவன் வெட்கி திருந்துவான் என்பது காந்தியம்.
இது எல்லா நிலைகளிலும் சாத்தியமா?

ஒருவன் தன் தினசரி வாழ்வில் தன்னை அறைபவர்க்கு மறுகன்னம் காட்டிக் கொண்டிருந்தால் வாழ முடியுமா. இரு கன்னத்திலும் மாறி மாறி அறைபடுபவன் என்ன செய்வான்?

தினசரி வாழ்வில் காந்தியத்தின் சாத்தியம் காந்தியை போன்றோர்க்கு மட்டும். இத்துணை பெரிய மனிதர் இவ்வளவு பணிந்து வருகிறார் என்பதால் எதிராளியும்/அமைப்பும் பணிந்து போவான்/போகும்.
அகிம்சை ஆயுதம் தனி நபர்களை பொறுத்தவரை, பலமுள்ளவர்கள் அல்லது தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமானது. பயன்தரக்கூடியது.
புலி புலால் உணவை மறுதளித்தால் கவனிக்கப்படும். ஒரு மான் மறுதளித்தால் ?

ஒரு சாதாரணன் ஏற்கனவே பணிந்து கிடப்பவன் இன்னும் பணிவதால் என்ன சாதிக்க முடியும். காணாமல்தான் போவான்.
இந்த திரைப்படத்திலும் ஏற்கனவே பெரிய ரெளடியாக இருப்பவன் பணிந்து காந்தியம் பேசுவதாலேயே சாதிக்கிறான்.

மிகச் சாதாரணன் வாழ்வில் காந்தியம் பயனற்றதே.
எல்லோரும் காந்தியை தனிமனித வாழ்வில் பின்பற்றினால் என்ன ஆகும் ?
வேர்க்கடலை வியாபாரம் நன்றாக ஆகும். (சொன்னவர் கண்ணதாசன் என்று நியாபகம்).

காந்தி தன்னளவில் தன் கொள்கைகளை சோதித்து சத்திய சோதனையாக மேற்கொண்டார். அவர் அளவில் அது சரியே. அவர் தனது சோதனைகளில் வென்றார் என்பதற்கு அவருக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குண்டுகளே சான்று.
காந்தி மகாத்மா என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று இன்னொரு மனிதர் பிறந்து வருதலும் சாத்தியமில்லை. அவருடைய கொள்கைகள் அரசியலில் தூய்மையும் எளிமையும் நேர்மையையும் வலியுறுத்தியவை.
அவை சாதாரணன் தனிமனித வாழ்வில் கைக்கொள்ள வேண்டியவை அல்ல. மக்கள் சேவைக்கென்று வரும் அரசியல்வாதிகள்/குழுக்கள் கைக்கொள்ள வேண்டியவை.

ஒற்றைச் சுள்ளி எளிதாக உடையும். கட்டுச் சுள்ளி எதிர்ப்பை தாங்கி நிற்கும். காந்தியவாதம் குழுக்களுக்கானது. சமூகம் குழுவாக இயங்கும் போது தனது துவேசங்களை களைந்து அகிம்சை வழியில் நடப்பதை உறுதி செய்வது. இன்றைய நிலையில் கொள்கை/மத/இன/சாதி ரீதியாக ஒன்றுபட்டு வலிமை பெறும் குழுக்கள்/அவற்றின் எதிர்குழுக்கள் காந்தியத்தை/அகிம்சையை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அதுவே வன்முறைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும்.
இன்றைய நிலையில் அரசியல் குழுக்கள்/கட்சிகளிடம் காந்தியவாதம் கவலைக்கிடமாகவே உள்ளது.
அதற்காக காந்தியம் காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.
அது என்றும் இருக்கும்.
குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.

Monday, January 21, 2008

"கார்"ட்டூன் ரத்னா........










இது உங்கள் லட்ச ரூபாய் காரை இழுத்துச் செல்லும்.











நன்றி: "மிட் டே"