Tuesday, February 26, 2008

செல்போனில் பெண்ணை படம் பிடித்து

"ஏய். மிஸ்டர். என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க."

"நான் உங்களை போட்டோ எடுக்கலையே."

"பொய். ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி."

"மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க."

"உனக்கென்ன மரியாதை. கொண்டா அந்த மொபைலை."

அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள். புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள். அவளது படமேதான்.

"மிஸ்டர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க."

"நான் உங்களை எடுக்கணும்னு எடுக்கலை. நான் எடுத்த போட்டோவில நீங்க வந்தது தற்செயல்."

"என்ன கதை விடறீங்க."

"மிஸ். மத்த போட்டோக்களையும் பாருங்க. நான் இங்க இருக்கற ஒவ்வொரு புக் ஸ்டாலையும் படம் பிடிச்சிட்டு இருக்கேன். அந்த புக் ஸ்டாலை படம் பிடிச்சப்ப நீங்க அதுல வந்தது யதார்த்தமா வந்ததுதான்."

அவள் மத்த போட்டோக்களை பார்த்தாள். ஒவ்வொரு புத்தக நிலையத்தின் படமும் பதிவாகி இருந்தது. முல்லை பதிப்பகம், மருதம் பதிப்பகம் என..

"மிஸ். இந்த புக் ஃபேர்ல இருக்கிற ஸ்டால்களைத்தான் படம் பிடிச்சிட்டுருக்கேன். உங்களை இல்லை."

"ஆமா.. ஆனா இத்தனை புக் ஸ்டாலையும் படம்பிடிச்சு.. எதுக்கு."

"ஐ அம் ரைட்டிங் பிளாக். தமிழ்ல. இந்த புத்தகக் கண்காட்சியை பத்தி ஒரு ரைட் அப்புக்காக இந்த படங்களை எடுத்தேன்."

"ஓ. ஐ அம் சாரி."

"பரவாயில்லை. வேணுமின்னா நீங்க இருக்கற படத்தை டெலீட் பண்ணிட்டு மொபைலை கொடுங்க."

"இட். ஈஸ் ஓக்கே. இந்தாங்க."

"தாங்ஸ். மிஸ்."

"சத்தம் போட்டு உங்க கையில இருந்து மொபைலை எல்லாம் பிடுங்கி... ஐ அம் ரியல்லி சாரி."

"நோ பிராப்ளம்."

"இஃப் யூ டோண்ட் மைண்ட். நாம ஒரு காபி சாப்பிடலாமா."

முன்பின் தெரியாத தன்னை காபி சாப்பிட அழைக்கும் அவளது தைரியம் அவனுக்கு ஆச்சரியமளித்தது.

"ஓக்கே." இருவரும் அங்கிருந்த கேண்டீனுக்கு சென்றார்கள்.

"மிஸ் உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா."

"அர்ச்சனா." சிரித்தாள்.

"என் பெயர்.." அவன் ஆரம்பித்தான்.

"கிள்ளி வளவன்." அவள் முடித்தாள்.

"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்."

"வளவன் நான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறதுண்டு. உங்க பதிவுல உங்க புகைப்படம் எல்லாம் பார்த்திருக்கேன்."

"ஓ.."

"நீங்க புக் ஸ்டாலைத்தான் படம் எடுக்கறீங்கன்னு எனக்கு தெரியும். சும்மா கலாய்ச்சேன்."

"நீங்க..."

"நான் உங்க ரசிகை. ஒரு வருடத்துக்கு மேல உங்க பதிவெல்லாம் படிக்கறேன். உங்க பதிவுல முதல் பின்னூட்டம் எப்பவுமே நான் தான் போடுவேன்."

"நீங்க... மாணிக்க மலர்."

"ஆமா. மாணிக்க மலர் அப்படின்ற பெயர்ல உங்களுக்கு பின்னூட்டம் போடுவது நான்தான். நாம மின்னஞ்சல் மூலமா ரொம்பவே பேசியிருக்கிறோம். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்கும் தெரியும் என்னோட பெயரைத்தவிர.."

"வாவ். உங்களை இப்படி சந்திச்சது ஆச்சரியம்."

"எனக்கும். உங்களை இப்படி புத்தகக் கண்காட்சியில் பார்ப்போம்னு நினைக்கலை. சும்மா கலாய்ச்சேன். சாரி."

அவன் சிரித்தான்.

அவர்களுக்கு இடையே நீண்ட ஒரு மெளனம் நிலவியது.

அவள் அதை உடைத்தாள். "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது. எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."

"நானும்." என்றான் அவன்.

அவர்கள் கண்கள் பேசிக்கொண்டிருந்தன.

"காதலை பின்னூட்டத்தில சொல்ல முடியாது. நேர்லதான் சொல்லணும்."

"அப்ப சொல்லிடலாமே."

காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.

Monday, February 25, 2008

கோணிக்குள் என்ன இருக்கிறது.

"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."

"நல்ல கிரெளடு இருக்கிற செண்ட்ரல் ஸ்டேஷன்ல வாசல்ல இந்த கோணியை விட்டுட்டு யாரு போயிருப்பாங்க."

"ஏதாவது கிராமத்து டிக்கட் கோணியை வச்சுட்டு எங்கயாவது டீ சாப்பிட போயிருக்கும். வா அண்ணாத்தை நாம போவலாம்."

அந்த இரண்டு போர்ட்டர்களும் அங்கிருந்து அகன்றார்கள்.

செண்ட்ரல் ரயில்வே நிலையத்தின் மாலை நேரம். அந்த கோணி கவனிப்பாரற்றுக் கிடந்தது.

-----------

அரை மணி நேரம் கழித்து...

"அண்ணே இந்த கோணி இங்கயே இருக்கு பாருண்ணே."

"இத இங்க வச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலையே."

"திறந்து பார்ப்பமா அண்ணே."

"அட. இவனே ஏதாச்சும் ஏடா கூடமா இருக்கப் போதுடா."

அந்த சணல் கோணி ஏதாலோ நிறைந்து கட்டப்பட்டு துருத்தி கொண்டிருந்தது.

"போலீஸ்ல சொல்லுவமா.".

----------

"சார் இந்த கோணிதான். சார். பாம் ஏதாச்சும் இருக்குமா சார்"

"யாரும் கிட்ட போகாதீங்க. அலர்ட்."

"யோவ் கான்ஸ்டபிள். கிரவுட் இந்த பக்கம் வராம பாத்துக்கய்யா."

அதற்குள் மக்களுக்கு கோணியில் பாம் இருக்கும் செய்தி பரவியது. எல்லோரும் அதை ஒரு அச்சத்தோடு பார்த்தார்கள். கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.

"சார். ஒரு வேளை அந்த கோணியில பாம் இல்லைன்னா."

"யோவ். இப்படி அனாமத்தா ஒரு கோணி. அதுவும் சரக்கு குடோன் பக்கத்துல கூட இல்லாம, இப்படி ஜனங்க நடமாடுற இடத்துல இப்படி தனியா இருக்குன்னா... ஏதாச்சும் இருக்கும்யா."

"யாராச்சும் தெரியாம போட்டிருந்தா. எவ்வளவு கிராமத்து ஆளுங்க கோணியோட வாராங்க போறாங்க."

"ஏன்யா இது பப்ளிக் ப்ளேஸ். இந்த இடத்துல இப்படி ஒரு கோணியை கொண்டாந்து போட்டுட்டு போயிருக்குன்னா கட்டாயம் அதுக்குள்ள விவகாரமா பாம் ஏதாவது இருக்கலாம்."

"ஆர்.பி.எஃப். பாம் ஸ்குவாடுக்கு சொல்லியாச்சு. சார்."

-------

மக்கள் பய பீதியோடு அந்த கோணியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கோணி. ஒரு அழுக்கு சணல் கோணி.

எல்லோரிடமும் அதைப் பற்றியே பேச்சு.

இரண்டொரு நிருபர்கள் எட்டி பார்த்தார்கள். செய்திகளை முந்தித் தரும் சேனல் ஒன்றும்.

செய்தி கசியத் துவங்கியது. பதட்டம் நிலவியது. சிலர் பயத்தில் ரயில் நிலையத்தை விட்டு ஓடத் துவங்கினர்.

மோப்ப நாய்கள் வந்தன.

மெட்டல் டிடக்டர்களோடு இருவர். மெட்டல் டிடக்டர் வைத்துப் பார்த்தனர்.

சுற்றியிருந்தவர்கள் நாடித் துடிப்பு எகிறியது. மெட்டல் டிடக்டரில் எதுவும் தெரியவில்லை.

அந்த போலீஸ்காரர் வேர்த்து வழியும் தன் நெற்றியை துடைத்துக் கொண்டு கோணியைத் திறந்தார் படு ஜாக்கிரதையாக.

"சார். எருமட்டை சார்,"

"என்னது."

"பசுஞ்சாண எருமட்டை சார்." அந்த கோணி முழுதும் எருமட்டைகள் வட்டவட்டமாக...

எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

"ஒரு ஒண்ணுமில்லாத கோணியை இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுத்து விட்டீங்களேய்யா."

"கோணி. கோணிக்குள்ள காய்ஞ்சுகோன எருமட்டை சாணி. இந்த விஷயத்தை ஏணி வெச்சு ஏத்திவிட்டுட்டீங்களேய்யா."

"நான் அப்பவே சொன்னேன் இது ஒரு சாதாரண கோணிதான்னு."

"ஆமாய்யா இப்ப சொல்லுங்க. பப்ளிக் ப்ளேஸ்ல இதோ கோணி... அதோ கோணின்னு கிளப்பிவிட்டுட்டு.... எவனோ போணியாகாத கோணியை இங்க வந்து போட்டுட்டு போயிருக்கான்.. கண்டுக்காம போவீங்களா."

அங்கு சகஜநிலை திரும்பியது.

"செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல அதுவும் நிறைய பப்ளிக் நடமாடுற எடத்துல இந்த மாதிரி கோணியெல்லாம். இனிமே கோணியை ரயில்வே ஸ்டேஷன் மாதிரி பப்ளிக் பிளேஸ்ல கொண்டு வரவே தடை விதிக்கணும்." ஒருவர் கருத்து தெரிவித்தார். இன்னொருவர் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார்.

Friday, February 22, 2008

மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது

மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.

மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.

படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.

உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.

அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)

அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.

அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.

கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.

பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.

சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.

ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)

பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.

பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.

பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.

அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.

சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.

ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.

சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.

மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.

மனுவோட இந்த தர்மம் தோன்றிய புண்ணிய பூமி பிரம்மவார்த்தா. மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.

நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.

அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.

Reference: The Laws of Manu
George Bühler, translated 1886.