Tuesday, November 20, 2007

என் மனைவியின் காதலன்..................

எனக்கு தெரியாது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளிடம் காணும் மாற்றங்கள் நான் அறியாதது இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறாள். எப்போதையும் விட என் மீது அதிகப் பிரியமாக இருக்கிறாள். எனக்கு பிடித்த உணவுப் பொருட்களாக சமைக்கிறாள். நான் அலுவலகம் செல்லும்போது ஆவலோடு கதவு வரை வந்து வழியனுப்புகிறாள். இந்த மாற்றங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதும் நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வைத்துவிடுவதும், அழைத்த தோழியிடம் தான் பிறகு பேசுவதாக சொல்வதும்.

இணையத்தில் அதிக நேரம் மூழ்கி இருக்கிறாள். எனக்கு தெரிந்திருந்த அவளுடைய மின்னஞ்சலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டாள். ஆயிரம்தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மின்னஞ்சலில் ஒரு பிரைவசி வேண்டும் என்று அவள் சொன்னபோது தலையாட்டினேன்.

என்னுடைய மின்னஞ்சலின் அவள் அறிந்த பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. அவளுடைய மாற்றங்கள் ஆச்சரியமளித்தன.


அன்று. வெளியே செல்வதற்கு தயாராக அவள் குளிக்க சென்றாள். எனது மின்னஞ்சலை பார்க்க கணிணியில் அமர்ந்தேன் நான். அவளது மின்னஞ்சல் கணக்கு லாக் அவுட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. லாக் அவுட் செய்யப்போந்தவனை அந்த மின்னஞ்சலின் தலைப்பு இழுத்து நிறுத்தியது. "வித் கிஸ்ஸஸ்".

எனது மனைவி தன் கைப்பட அனுப்பிய மின்னஞ்சல். முகவரியை பார்த்தேன் எனக்கு முற்றிலும் தெரியாத பெயர்.

ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்... பதில் மின்னஞ்சல்கள்.. "எப்படியிருக்கிறாய் கண்ணா.." .. "நீ அனுப்பிய உனது புகைப்படங்களில் நீ அழகாக இருக்கிறாய்.".. "அச்சச்சோ தனிமையில் ரொம்ப கஷ்டப்படுகிறாய் போலும்"..... "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்.." "உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்." "உம்ம்ம்ம்ம்ம்மாாாாாா"... "வித் கிஸ்ஸஸ்"...

ஒன்றிரண்டு படிக்கவும் வெலவெலத்துப் போனேன். என் அன்பு மனைவியா இப்படி. உன் அன்பு எல்லாம் வேஷமா..

எது உன்னை இவ்வாறு செலுத்தியது. அமைதியாக கணினியை விட்டு விலகினேன். அவள் குளித்து ஒப்பனை முடித்து வந்தாள். நான் எதுவும் பேசவில்லை. வெளியே சென்றோம். உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் உணவருந்தினோம். மகிழ்ச்சியாக இருந்தாள். உள்ளுக்குள் நான் நொறுங்கியிருந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனது மகிழ்ச்சி தொலைந்திருந்தது.

அடுத்த சில நாட்களில் தனியார் துப்பறியும் நிறுவனம். தொலை பேசி எண்களை சரிபார்த்தேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அதிக அளவு தொலைபேசப்பட்டிருந்தது. அந்த எண்ணின் உரிமையாளனின் பெயர் மின்னஞ்சலின் அதே பெயர்.

துப்பறியும் நிறுவனத்தின் முழுவிவரம் வந்தது. அவர்கள் இருவருமாய் சிரித்தபடி இருந்த புகைப்படங்கள். அவன் என் மனைவியின் காதலன் கல்லூரி காலத்தில் இருந்து. கல்லூரி முடித்து அவனுக்கு வேலை கிடைக்காத நிலையில் வீட்டினர் காதலை எதிர்த்த நிலையில் அவனை உதறி என்னை மணந்திருந்தாள். இது எனக்கு தெரியாதது. இன்று அவன் வாழ்க்கையில் சற்று உயர, எங்கள் தனிக்குடித்தனம் சகல வசதிகளையும் தர, அவள் வாழ்வில் மீண்டும் அவன்.

மொத்தமாய் நொறுங்கியிருந்தேன். ஆத்திரம் வந்தது. ஆனால் என்ன செய்ய.

1. அவளை அடிக்கலாம். நொறுக்கலாம். வழிக்கு கொண்டு வரலாம். சே. ஒரு எறும்பை கூட மிதித்திராத எனக்கு இப்படி ஒரு எண்ணமா.
2. அன்பாய் பேசி வழிக்கு கொண்டு வரலாம். இத்துணை நாள் நான் செலுத்திய அன்பு நம்பிக்கை அனைத்தும் உடைந்த நிலையில்............. மேலும் அன்புக்கு எங்கு செல்வேன்.
3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி அவளை விலக்கி என் வாழ்க்கைப் பாதையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவள் மேல் நான் கொண்ட அன்பால் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. அவளை பிரிவதை என்னால் தாங்க முடியாது.
4. பேசாமல் நான் இறந்து விடலாம். அவளிற்கு என் மீது அன்பு இல்லை என்ற நிலையில் நான் வாழ்வதில் பயனில்லை.

ஒரு மூலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என் சடலத்தின் மீது மாலைகள் குவிந்திருந்தன. அவள் அழுது கொண்டிருப்பதாக தோன்றியது. யார் யாரோ வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

அதோ அது அவன்தான். சந்தேகமில்லை. அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் முகத்திலும். இருவருடைய பார்வையில் இருப்பது... சீ... சீ... இது நிச்சயமாய் காதலில்லை.

மேற்கொண்டு என்னால் பார்க்கமுடியவில்லை.

வெளியேறிக்கொண்டிருந்தேன் பெரும் சூன்ய வெளியை நோக்கி மிதந்தவாறு.

25 comments:

said...

கதை ரொம்ப சீரியஸ்ஸாயிடுச்சோ :)))

டால்ஸ்டாய் எழுதிய "The Kreutzer Sonnata" படிச்ச எஃபக்டு :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

The Kreutzer Sonnata வில் வரும் கதாநாயகன் நாயகியை குத்தி கொன்று விடுகிறான். டால்ஸ்டாய் அவன் செயலை முடிந்தவரை நியாயப்படுத்துகிறார்.

இது மாற்றியோசித்த கதை. நான்கு ஆப்ஷன்களில் டால்ஸ்டாயின் ஆப்ஷன் இல்லவே இல்லை :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல முயற்சி அரை பிளேடு

முடிவினை மாற்றி இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கூடியிருக்குமோ !!-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி தேவ்.


//
முடிவினை மாற்றி இருந்தால் கொஞ்சம் அழுத்தம் கூடியிருக்குமோ !!
//

கதையிலேயே நான்கு முடிவுகள் இருக்கின்றன.

முடிவு உங்கள் சாய்ஸ் எது :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐந்தாவதாக ஒரு முடிவு கொண்ட பல படங்கள் வந்துள்ளன உங்களுக்குத் தெரியுமா?

ம்ம்ம் இன்னும் கொஞ்சம் யோசிச்சு ஆறாவது சாய்ஸ் கூடத் தரலாமே நீங்க-------------------------------------------------------------------------------------------------------------
said...

தேவ்.

//ஐந்தாவதாக ஒரு முடிவு கொண்ட பல படங்கள் வந்துள்ளன உங்களுக்குத் தெரியுமா?//

"சாரே. எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும். உங்கமனைவி எனக்கு காதலியாயிட்டு வராது." டைப் அந்த ஏழு நாட்கள் வகையறா. கரெக்டோ ?

இது அந்த வகையில் வராத கதை. இந்த மனைவி தன் காதலை கணவனிடம் சொல்ல வில்லை.


//ம்ம்ம் இன்னும் கொஞ்சம் யோசிச்சு ஆறாவது சாய்ஸ் கூடத் தரலாமே நீங்க
//

கபி அல்விதா நா கஹ்னா டைப் கதை. சந்தோஷமாக உன் காதலுடன் போ என தாராள மனதுடன் அனுப்பி வைக்கலாம் வகையறா. சரியா :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

எக்ஸலண்ட் அரைப்ளேடு...!!

ரசித்து படித்தேன்...!!! இரண்டாவது முறையும்..!!!-------------------------------------------------------------------------------------------------------------
said...

செந்தழல் ரவி said...
//எக்ஸலண்ட் அரைப்ளேடு...!!

ரசித்து படித்தேன்...!!! இரண்டாவது முறையும்..!!!
//

நன்றி. செந்தழலாரே !!!
:)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

பின்றிங்க தல :)

பதிவை படிக்கும் போது Unfaithful படம் ஞாபகத்துக்கு வருது..:))-------------------------------------------------------------------------------------------------------------
said...

Though it sounds negative,i feel this is the most logical conclusion when looking at that guy's point of view!!
ideally that guy should take therapy and learn to live without her....
but that guy has chosen otherwise-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத் said...
//பின்றிங்க தல :)

பதிவை படிக்கும் போது Unfaithful படம் ஞாபகத்துக்கு வருது..:))
//

நன்றி கோபி :))

நான் Unfaithful படம் பார்த்ததில்லை. பார்த்துட வேண்டியதுதான் :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சிவீஆர்.

நீங்கள் சொன்னது போல் அவனது அதீத அன்பு, உடைந்த அவனது நம்பிக்கை. வாழ்வின் பிடிப்பு தளர்ந்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவு.

காதல் நம்பிக்கையில் மட்டுமே வாழ்கிறது. நம்பிக்கை இறக்கும்போது காதல் இறக்கிறது. காதல் இறந்த தருணத்தில் அவனும்.....

அவனது பார்வையில் அவனது மரணம் மட்டுமே சரியான முடிவு. சரியாய்த் தோன்றும் எதுவும் சரியானதல்ல.

அவனது பார்வையில் அவன் செயல் சரியானதாக இருப்பதுபோல், அவளது பார்வையில் அவளது செயல் நியாயமானதாக இருக்க முடியும்.
பார்வைகள் பலவிதம்.

அச்சச்சோ. போட்டு குழப்ப ஆரம்பித்து விட்டேனா :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

makes perfect sense to me!
You are right! :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

அருமை.

ஆனால் அவரவர் வழி அவரவருக்குன்னு பிரிஞ்சு போயிருக்கலாம்.

அவன் மரணம் தேவை இல்லை.

'எங்கிருந்தாலும் வாழ்க.......'

இப்படி நினைக்கத்தெரியாதா அந்த மனசுக்கு????-------------------------------------------------------------------------------------------------------------
said...

ரசித்தேன்... மரண முடிவை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாத சராசரி மனிதனாய்... :)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

சமீபத்தில் இது போல ஒரு உண்மை சம்பவத்தை தோழி சென்னையில் இருந்து எழுதி இருந்தார். பெற்ரோரிடம் விவரங்கள் அறியாமல் திருமணம் செய்து தன் நிம்மதியை குலைத்ஹ்துவிட்டார்கள் என்றூ கோபித்துக்கொண்டு சொல்லாமல் தனிமையில் மகன் எங்கோ போய்விட, விருப்பபட்டு பிரிந்த மனைவியும் குழந்தையும் கணவனின் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல, முதுமையான வயதில் மனநலம் குன்றிய மருமகள், குழந்தையை ஆதரிக்க வேண்டிய கட்டாயம், முகவரி கூட தராமல் போய்விட்ட மகன் என்று ஒரு குடும்ப அமைதியே ஒரு முன்னாள் காதலால் உடைந்து போனது.
நீங்கள் சமீபத்தில் நிறைய சிறுகதைகளை எழுதுவதை படிக்கிறேன். வாழ்த்துக்கள்-------------------------------------------------------------------------------------------------------------
said...

துளசி கோபால் said...
/அருமை.
ஆனால் அவரவர் வழி அவரவருக்குன்னு பிரிஞ்சு போயிருக்கலாம்.
அவன் மரணம் தேவை இல்லை.
'எங்கிருந்தாலும் வாழ்க.......'
இப்படி நினைக்கத்தெரியாதா அந்த மனசுக்கு????//

மனித மனசு இருக்கே. அது ரொம்ப சிக்கலானது. எப்ப எப்படி யோசிக்கும்னு தெரியாதது. எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லுறது ஈஸியா இருக்கலாம் ஆனா வாழ்ந்து பார்க்க பெரிய மனப்பக்குவமே வரணும்.
ஜி said...
//ரசித்தேன்... மரண முடிவை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாத சராசரி மனிதனாய்... :)))
//

மரணம் அதுவும் தற்கொலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவில் தற்கொலை அதிகம். 1999 ஆண்டு கணக்குப்படி தற்கொலை செய்து கொண்ட ஆண்கள் 65488. பெண்கள் 45099.
மொத்தம் 110587.

பெண்களை விட தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.


என்ன இது திடீர்னு விஜயகாந்த் ரேஞ்சில கணக்கு சொல்லிட்டு இருக்கோம் :))-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொய்யர்/துரோகி(கள்)மேல் வைத்த நம்பிக்கை பொய்த்துப்போவதால் விடும் அளவுக்கு உயிர் அவ்வளவு மலிவானதல்ல. கதை என்ற அளவில் ரசனைசார்ந்து இருந்தாலும், நடைமுறையில் அம்மின்னஞ்சல்களை அச்செடுத்து, பெண்ணின் பெற்றோரை அழைத்து, ஆதாரத்தை காட்டி மணவிலக்கு செய்துவிடுவதே வேதனைகளை சற்று குறைக்க வழி.

கதை என்ற அளவில் நன்றாக இருந்தது.

அன்புடன்
அனானி-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி பத்மா அர்விந்த்...


தன் கணவன் துரோகம் செய்தால் மனைவியால் அதை வெளியே எளிதாக சொல்ல முடியும்.


ஆனால் ஒரு ஆணுக்கு... அவன் சரியில்லை அதனால்தான் அவள் அப்படி என்று சொல்வார்களோ என்று பயம். தனது சமூக அந்தஸ்து என்ன ஆவது என்ற கவலை.

பெண்களால் தங்கள் கவலைகளை கண்ணீர் விட்டு ஆற்றி விட முடிகிறது.

அழமுடியாத ஆண் உள்ளத்தால் நொறுங்கி தவறான முடிவுகளை எடுத்து விடுகிறான்.


தற்கொலை செய்து கொள்ளும் பெண்களை விட தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதும் இதனால்தான்.


ஆறுதல் சொல்ல ஒரு ஆளும், சாய்ந்து அழ ஒரு தோளும் இருந்தால் பெரும்பாலான தற்கொலைகள் தவிர்க்கப்படும்.
இது இரண்டும் இல்லாத காரத்தினாலேயே பெரும்பாலான தற்கொலைகள் நடக்கின்றன.


வருகைக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சாதாரணமாக இது போன்ற நேர்கோட்டுக் கதைகள் பிடிக்காது என்றாலும், இந்தக் கதை + சொல்லும் முறை + முடிவு பிடித்திருக்கிறது.

பெயரைப் பார்த்து உங்களைப் படிக்கமால் விட்டேனே..-------------------------------------------------------------------------------------------------------------
said...

மரணம் தான் இதற்கு தீர்வு என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
//சாதாரணமாக இது போன்ற நேர்கோட்டுக் கதைகள் பிடிக்காது என்றாலும், இந்தக் கதை + சொல்லும் முறை + முடிவு பிடித்திருக்கிறது.

பெயரைப் பார்த்து உங்களைப் படிக்கமால் விட்டேனே..
//

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

நமது புனைபெயர் வாசகர்களை விரட்டுகிறதா. :)))

வருகைக்கு நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

Divya said...
//மரணம் தான் இதற்கு தீர்வு என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
//

எந்த ஒரு பிரச்சனைக்குமே மரணம் தீர்வு அல்ல. தற்கொலை நிச்சயமாய் தீர்வு கிடையாது.

தகுந்த வழிகாட்டுதல்கள் இல்லாததால்தான் தற்கொலைகள் அதிகமாகின்றன.

கற்பனை கதையென்ற அளவிலே தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் பார்வையில் இந்த கதை.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதிலும் மரணமா?

ரொம்ப பிடிச்சிருக்கு போல!
நல்ல கதை!

இதற்கு தீர்வு சொல்ற மாதிரி முடிவு இருந்திருக்கலாம்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

அட என்ன கத எழுதனிஙளொ போங்க...
இதெ மதிரி பெங்களுர் ல ஒரு நிஜ சம்பவம் நடந்துரிச்சி?? என்ன கொடும ன அவன் தன் பொன்டடியையும் கொன்னுடான் தானும் செத்து பொயிட்டான்...-------------------------------------------------------------------------------------------------------------