Tuesday, November 27, 2007

விற்றது தமிழ்.....

"மூவுலகையும் ஓர் குடையின் கீழ் ஆளும் அரசே. ஆயிரம் யானைகளை தனியனாக நின்று வெட்டி வீழ்த்திய வீராதி வீரனே. இப்போரில் நீ பெற்ற வெற்றியை பாடலாய் பாட யான் வந்தேன்."

"பாடும் புலவரே. பாடும். ஒவ்வொரு பாடலுக்கும் நூறு பொன் பரிசு."

"மன்னா உன் கொடைத் தன்மையே தன்மை."

அன்றைய புலவன் விற்றது தமிழ்.

----------------

"கவிஞரே நல்ல சிச்சுவேசன். ஹீரோயின் கனவுல ஹீரோவும் கவர்ச்சி நடிகையும் ஆடுறாங்க."

"நல்லது. எப்படிப்பட்ட பாடல் வரிகள் வேண்டும் உங்களுக்கு."

"சும்மா ஜிவ்வுன்னு சூடு ஏறனும். பிரட்யூசர் இந்த பாட்டை ரொம்ப எதிர்பார்க்கிறார்."

"சரசமாக பாடும் பாடலில் சற்று விரசத்தை விரவ விட சொல்கிறீர். நானும் சற்று எதிர்பார்க்கிறேன்."

"நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாவே கிடைக்கும். பாட்டை ஜமாய்ச்சிடுங்க."

இன்றைய கவிஞன் விற்றது தமிழ்.

--------------

"தமிழகத்தில் தமிழ் கற்றுத் தராத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".
செய்தித் தாளினை வைத்துக் கொண்டு தலைவனை பார்க்க ஓடி வந்திருந்தான் அவன்.

"என்ன தலைவரே. இப்படி சொல்லிட்டீங்க. உங்களுக்கு பினாமியா நான் நடத்துற பள்ளிக் கூடங்க நாலிலேயே தமிழ்ப் பாடம் கிடையாது. நம்ம பள்ளிக்கூடங்க என்ன ஆகிறது."

தலைவர் சிரித்தார்.

"ஆட்சிக்கு வந்தா தமிழுக்கு ஏதாவது செய்யணும்யா. நாளைக்கு ஒரு பய நம்மளை நீ என்ன செஞ்சன்னு கேள்வி கேட்க கூடாது பாரு."

"தலைவரே. ஆனா நம்ம பள்ளிக்கூடம் எல்லாம்."

"அரசாணையோட மூணாவது பக்கத்துல நாலாவது பத்தியில அரசின் சிறப்பு அனுமதி பெற்ற பள்ளிக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்னு இருக்கு. நம்ம பள்ளிக்கூடம் எல்லாம் அதுல வரும்."

"தலைவரே. எங்கயோ போய்ட்டீங்க."

"அது மட்டும் இல்லையா. கிட்டத்தட்ட இந்த மாதிரி 1600 பள்ளிக் கூடம் இருக்கு. அத்தனை பயலும் அலறியடிச்சிட்டு வருவான். சிறப்பு அனுமதிக்கு ஒரு ரேட் போட்டு்ட்டோம்னு வை ஒரு கலக்சன் போட்டுடலாம் இல்லை."

"தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க." தலைவரின் காலில் விழுந்தான்.

அரசியல் விற்றது தமிழ்.

-------------

"சார். ரொம்ப நல்ல கதை சார். கேளுங்க சார்."

"சரி சொல்லுய்யா. "

"ஹீரோ ஒரு மாதிரி மன நிலை சரியில்லாத ஆளு. அவனுக்கு பிரியமானவங்க எல்லாம் செத்துடறாங்க. சின்ன வயசுலேயே அவங்க அம்மா. அப்புறமா அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரு. அப்புறம் அவங்க அப்பா. யாருமே இல்லாத அனாதையா நிக்கிறான். "

"என்னய்யா கத இது."

"இருங்க சார் சொல்லி முடிக்கலை. சின்ன வயசுல ஹீரோ காதலிச்ச பொண்ணு கூட அவனை விட்டுட்டு எங்கயோ கண்காணாத தூரத்துல போயிடுது."

"சாதாரண கதையா இருக்கே."

"இல்லை சார். முக்கியமான திருப்பமே இப்பதான் வருது. போலீசால ஹீரோ பாதிக்கப்படுறான். தன்னுடைய இந்த நிலைக்கு சமுதாயம்தான் காரணம்னு ஹீரோ நினைக்கிறான். கொலை பண்ண ஆரம்பிக்கிறான். சார். ஒண்ணு இல்லை இரண்டு இல்லை. இருபத்தி மூணு கொலை. டிக்கெட் கொடுக்க மாட்டேன்னு சொன்ன ரயில்வே கிளார்க். டிரெயின்ல பார்த்த போலீஸ்காரன். பீச்ல இருந்த காதல் ஜோடி. எல்லாரையும் போட்டுத் தள்றான்."

"ஏன்யா. வாழைக் குலையாயா அவன் சீவி தள்ளுறதுக்கு. கதை சரி வரலையே."

"இருங்க சார். ஹீரோ ஏன் கொலை பண்றான்னு கேளுங்க. அங்கதான் சார் இருக்கு கதையோட முக்கியமான விஷயமே."

"என்னய்யா அது."

"ஹீரோ தமிழ் படிச்சான். தமிழ் நாட்டுல தமிழ் படிச்சவனுக்கு வேலை இல்லை. ஹீரோ தமிழுக்காக பாடுபடறான். தமிழோட இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபடறான். யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க."

"ம்..."

"இரண்டாயிரம் வருசத்து தமிழுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான் சிவனா மாறுறான். அழிக்கிறான்."

"இது நல்லா இருக்குய்யா. நிச்சயமா ஓடும். வித்தியாசமா இருக்கு. இந்த கதையை கரெக்டா எடு. இன்னாமோ இலக்கிய வளர்ச்சி அது இதுன்னியே. அதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் சரிவராது. தூக்கிடு."

"சரி. சார்."

"பராவாயில்லையா. வித்தியாசமா யோசிக்கிறீங்க. நாம இந்த படத்தை எடுக்கலாம்."

"தாங்ஸ் சார்"

கற்றது தமிழ் - விற்றது தமிழ்.

-----------------------------------------------------


13 comments:

said...

படத்தின் விமரிசனமா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர்ங்கண்ணா... சும்மாப் பின்னுறீங்கப் போங்க-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்த வீணையில் சத்தம் நல்லா வருங்க. இந்த மிருதங்க மாடல்தான் இப்போ ரொம்ப பேமஸ். அந்த கஞ்சிரா பார்க்கறீங்களா? இந்த வயலின் வந்து 100 வருஷன் பழசுங்க. ஆனா ஒண்ணு சொல்லறேன் உங்க கலர் கருப்பு அதனால உங்களுக்கு எல்லாமே டபுள் ரேட்தான்.

சிவாஜி படத்தில் இசைக்கருவிகள் விற்றது தமிழ்! :))

போட்டுத் தாக்குங்க மாமோய்!-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹா ஹா ஹா... அருமை... :)

//"இரண்டாயிரம் வருசத்து தமிழுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான் சிவனா மாறுறான். அழிக்கிறான்."//

அப்பிடியே இந்த நாட்டை அழிச்சிட்டு வர்ற ITகாரனுகளையும் ரவுண்ட் அடிக்கிறோம்'ன்னு சேர்த்திருக்கலாம் அரைபிளேடு-------------------------------------------------------------------------------------------------------------
said...

விற்றது தமிழ்... சும்மா நெத்தியடி

வாழ்த்துக்கள்

//அப்பிடியே இந்த நாட்டை அழிச்சிட்டு வர்ற ITகாரனுகளையும் ரவுண்ட் அடிக்கிறோம்'ன்னு சேர்த்திருக்கலாம் அரைபிளேடு//

வழிமொழிகிறேன் ;-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

back to form :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

நெத்தியடி, சாட்டையடி கேள்விப்பட்டிருக்கேன். இது அதையும் தாண்டி....

ஒரு பதிவுல நான் போட்ட பின்னூட்டம் இது

ரெண்டாயிரம் வருஷ தமிழ் படிச்சவனுக்கு வெறும் ரெண்டாயிரம். இருபது வருஷ கம்ப்யூட்டர் படிச்சவனுக்கு இருபதாயிரம்....

(தமிழோ, கம்ப்யூட்டரோ) படிச்சவனுக்கு வெறும் இருபதாயிரம். படிக்காமலே ஓடிப்போய் சினிமாவுல சேந்தவனுக்கு ரெண்டு லட்சம்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர் விமர்சனம் தல...;))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரு பக்கம் மட்டும் சத்தம் வந்தா போதுமா? ரெண்டு பக்கமும் வந்தாதானே சூடு பறக்கும். பறக்கட்டும்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

துளசி கோபால் said...
//படத்தின் விமரிசனமா?//

விமர்சனம் முழுமையான அலசலாக இருக்கும். படம் என்னுள் ஏற்படுத்திய ஒரு பார்வை. :))
படத்தில் தமிழ் வெறும்ப வியாபார உத்தி என்ற ஆதங்கம்.

*****************************

தேவ் | Dev said...
//சூப்பர்ங்கண்ணா... சும்மாப் பின்னுறீங்கப் போங்க//

நன்றிங்கண்ணா. :)))


*****************************

இலவசக்கொத்தனார் said...
//இந்த வீணையில் சத்தம் நல்லா வருங்க. இந்த மிருதங்க மாடல்தான் இப்போ ரொம்ப பேமஸ். அந்த கஞ்சிரா பார்க்கறீங்களா? இந்த வயலின் வந்து 100 வருஷன் பழசுங்க. ஆனா ஒண்ணு சொல்லறேன் உங்க கலர் கருப்பு அதனால உங்களுக்கு எல்லாமே டபுள் ரேட்தான்.
சிவாஜி படத்தில் இசைக்கருவிகள் விற்றது தமிழ்! :))
போட்டுத் தாக்குங்க மாமோய்!//

கொத்தனாரே. இது இந்த வரிசையில் வராது.
கதாநாயகி தமிழ் இசைக்கு செய்யும் இந்த சேவையை பாராட்ட நாம் கடமைப் பட்டிருக்கிறோம். :)))

*****************************

இராம்/Raam said...
//ஹா ஹா ஹா... அருமை... :)
அப்பிடியே இந்த நாட்டை அழிச்சிட்டு வர்ற ITகாரனுகளையும் ரவுண்ட் அடிக்கிறோம்'ன்னு சேர்த்திருக்கலாம் அரைபிளேடு//

படம் ITக்காரன ரவுண்டு கட்டுதா இல்லையா என்கிற பிரச்சனையை விட (படத்தில் ஒரு சிறுபகுதி என்ற அளவில் அதுவும் புறந்தள்ளத்தக்க பகுதியே.), தமிழ் படித்ததுதான் கொலைகளுக்கு காரணம் என்பது போன்ற பார்வை ஒத்துக்கொள்ள முடியாததாக இருந்தது.
படம் நிறுத்தும் தமிழ் அரசியல் கதையாடல் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை.

*****************************

பிரேம்குமார் said...
//விற்றது தமிழ்... சும்மா நெத்தியடி
வாழ்த்துக்கள்
வழிமொழிகிறேன் ;-)//

நன்றி பிரேம்குமார்.

*****************************

வெட்டிப்பயல் said...
//back to form :-)//

நன்றி பாலாஜி.
நலமா. பர்மிஷன் வாங்கிக் கொண்டு பதிவுகள் போட ஆரம்பிக்கவும். :)))

*****************************

PPattian : புபட்டியன் said...
//நெத்தியடி, சாட்டையடி கேள்விப்பட்டிருக்கேன். இது அதையும் தாண்டி....
ஒரு பதிவுல நான் போட்ட பின்னூட்டம் இது
ரெண்டாயிரம் வருஷ தமிழ் படிச்சவனுக்கு வெறும் ரெண்டாயிரம். இருபது வருஷ கம்ப்யூட்டர் படிச்சவனுக்கு இருபதாயிரம்....
(தமிழோ, கம்ப்யூட்டரோ) படிச்சவனுக்கு வெறும் இருபதாயிரம். படிக்காமலே ஓடிப்போய் சினிமாவுல சேந்தவனுக்கு ரெண்டு லட்சம்.
//

நன்றி புபட்டியன்.

படித்தது தமிழோ கணினியோ.
வெறும் சம்பளத்தை முன்னிறுத்தி நுகர்வு கலாச்சாரம் பேசும் படத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.
தமிழ் படித்தவன் அல்லது கணினி படித்தவனின் சமூக பங்களிப்பை கதை கேள்விகேட்டிருந்தால் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

*****************************

கோபிநாத் said...
//சூப்பர் விமர்சனம் தல...;)) //

நன்றி கோபிநாத்.

*****************************

ILA(a)இளா said...
//ஒரு பக்கம் மட்டும் சத்தம் வந்தா போதுமா? ரெண்டு பக்கமும் வந்தாதானே சூடு பறக்கும். பறக்கட்டும்... //

படத்தில் இருக்கிற வன்முறை சூட்டை தாங்க முடியவில்லை.
அதுவும் தமிழை காரணமாக காட்டியது சுத்தமாக ஒத்துக் கொள்ள முடியாதது.

நன்றி.-------------------------------------------------------------------------------------------------------------
said...

காசுக்காக அடுத்த நாட்டுக்கு வேலை செய்யற உங்களை மாதிரியான அறிவை விக்கும் விபசாரிகளே....
10 வருடத்துக்கு முன் வெளிநாடு போவது இந்திய துரோகம் என்றீர்கள்........-------------------------------------------------------------------------------------------------------------
said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/-------------------------------------------------------------------------------------------------------------
said...

மது,
நீங்க யாருன்னே தெரியலை. இப்படி யந்திரமாட்டம் எல்லார் பதிவுகளிலும் போய் யந்திரப்பின்னூடம் போடரதை நிறுத்துங்க.

தனியா ஒரு ப்ளொக் திறந்து உங்க கருத்துக்களையோ கண்டுபிடிப்புகளையோ சொல்லுங்க.
அதுதான் ஒர்கவுட் ஆகும்.-------------------------------------------------------------------------------------------------------------