Monday, November 26, 2007

அவன் சாமியார் ஆனது ஏன் ?

"பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். இவ்வையத்தொருமுறை பிறந்த பிறப்பும் தொலைக்கும் வழியறியேன். இறைவா. இன்னொருமுறை பிறவா வரம்தா".
இழுத்து நிறுத்திய குரலுக்குரியவனை பார்த்தேன்.

பரதேசிக்கோலம். இடுப்பில் காவி. எங்கோ நிலைத்த பார்வை.

இளைஞன் அவன். இருபத்தியெட்டு வயதுக்குள்தான் இருக்கும் என்று தோன்றியது.

இந்த சிறுவயதில் ஏனிந்த தவக்கோலம்.

எதைத்தேடுகிறான் இவன். "நான் யார்?" என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்திக் கிளம்பி ஞானம் தேடிய ரமணனின் புண்ணிய பூமியாம் இந்த அருணை மலையின் அடிவாரத்தில் இவன் தேடுவது என்ன.

ஞானமா ? மோட்சமா ? பிறப்பறுக்க கிளம்பி வந்தது ஏன் ?

அதோ அந்த களையான முகத்தில் மண்டிக் கிடக்கும் தாடியும், பரட்டைத் தலையும்.

"இவனா.." என்றான் உடன் வந்த நண்பன்.

"இந்த சாமியாரை உனக்கு தெரியுமா."

"எங்க ஊர்தான். நல்ல குடும்பம். அப்பா பிள்ளை இரண்டே பேரு. பெரிய மளிகை கடை. நல்ல வியாபாரம். அப்பாவுக்கு உதவியா கடையா பார்த்துக்கிட்டு இருந்தான். ஊரே திரண்டு வந்து கல்யாணமாச்சு இவனுக்கு".

எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சாமியார் எங்களை கவனிக்காதவனாய் பாட ஆரம்பித்தான்.
"அண்ணா மலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று."

"பாடுறான் பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா மண்டைய போட, சுத்தி இருந்தவங்க ஏமாத்திட எல்லாம் கடன்ல போச்சு. கடை. வீடு எல்லாம்."

"அச்சச்சோ..."

"அப்புறம் என்ன. பொண்டாட்டி பிள்ளைய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா. பின்னாடியே போனான். மாமியார் வீட்டுல நாய் பாடு. பொண்டாட்டியும் மதிக்கலை. வெளிய வந்திட்டான்."

இல்லானை இல்லாளும் மதியாள் போலும். "அப்புறமா..."

"கொஞ்ச நாள் இங்க அங்க சுத்துனான். எதோ ஒரு கட்டத்துல சித்த பிரமை பிடிச்சவனா ஆயிட்டான். கொஞ்ச நாள்ல காணாம போனவன்தான். இதோ இங்க சுத்திக்கிட்டு இருக்கான்."


"அட. தகப்பன் போனான். பாட்டன் போனான். பிள்ளைகளும் அவன்பின்னாலே.
சுற்றி சுழன்றிடும் உலகத்திலே சுகத்தில் வாழ்பவர்கள் யாரும் இல்லே.
எதைஎதையோ சுற்றாதே.
பதைபதைத்து நிற்காதே.
அண்ணாமலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று" அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

வாழ்க்கையில் ஏதோ ஒன்று எங்கேயே உடைந்த தருணத்தில் இப்படி ஆனான் போலும். தோற்ற அந்த கணத்தில் தோள்கொடுத்து தேற்றியிருக்க வேண்டியள் தள்ளி விட்டபின் வாழ்க்கையை தள்ளிவிட்டவன் இவன்.

"வெற்றி பெறுகிற ஆணுக்கு பின்னாடி பெண் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது. ஆனா இங்க இருக்கிற நிறைய சாமியார்ங்க பின்னாடி இரண்டு பெண்கள் இருக்கிறாங்க. ஒண்ணு அவனுடைய மனைவி. இன்னொன்னு அவனுடைய மாமியார்."

நண்பனின் அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.

"வெற்றுக் கைகளுடன் பிறந்து பலவகையில் பற்றுக்களை பிடித்தவரே.
மறுமுறை பிறப்பீரா. இல்லையொரு தனிவழிபோவீரா.
அண்ணாமலையை சுற்று சுற்று. அறுந்து போகும் பற்று".

அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

5 comments:

said...

பாடல் இளையராஜாவின் ரமண மாலை.-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\இல்லானை இல்லாளும் மதியாள் போலும்\\

இந்த வரிகள் பைபிளில் வரும் 'யோபு'வின் மனைவியின் நடத்தையை உணர்த்தியது,

மனதை கணக்க வைத்தது இந்த பதிவு!-------------------------------------------------------------------------------------------------------------
said...

கலக்கல் தல ;-))

எப்படி தல இப்படி வித்தியாசமாக கதை அமைக்கிறிங்க..;))-------------------------------------------------------------------------------------------------------------
said...

//Divya said...
\\இல்லானை இல்லாளும் மதியாள் போலும்\\

இந்த வரிகள் பைபிளில் வரும் 'யோபு'வின் மனைவியின் நடத்தையை உணர்த்தியது,

மனதை கணக்க வைத்தது இந்த பதிவு
//


பழைய ஏற்பாட்டை படித்திருக்கிறேன். ஆனால் "யோபு"வின் கதை நினைவில் வரவில்லை. மற்றுமொருமுறை படிக்க வேண்டும்.

நன்றி திவ்யா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத் said...
//கலக்கல் தல ;-))
எப்படி தல இப்படி வித்தியாசமாக கதை அமைக்கிறிங்க..;))
//

அது வந்து தலைவா.
யாரோ ஒருத்தரு சொல்லி கீறாருபா.
"கதைய எழுத்தாளன் எழுத தொடங்குறான். ஆனா கடைசில கதை எழுத்தானை எழுதிட்டு போயிடுது" அப்படின்னு.


அந்த மாறி ஏதோ நடக்குதுன்னு நினைக்கிறேன் :))))-------------------------------------------------------------------------------------------------------------