Tuesday, November 27, 2007

மறைந்த என் மனைவியின் நினைவாக..

என் அன்பு மனைவியே..

தேவதையாய் என் வாழ்வில் வந்த நீ இறந்து இன்று ஓராண்டு ஆகிறது. ஓரு யுகம் கடந்து போனதாய் உணர்கிறேன்.
உன் நினைவுகளை தொலைக்க முடியாதவனாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதோ உன் கல்லறையில் நின்று கதறிக் கொண்டிருக்கிறேன்.

உனக்கு ரோஜா பிடிக்காது. மல்லிகைதான் பிடிக்கும்.
தினமும் வாங்கி வந்து உன் கூந்தலில் சூடி அழகு பார்ப்பேனே.
அந்த வாசத்தை முகர்கிறேன் என்று அருகே வரும்போது சிணுங்குவாயே. நினைவிருக்கிறதா.
உன் நினைவாக இதோ மல்லிகைப் பூ. ஆனால் இது உன் கூந்தலில் ஏறாது கல்லறையை அல்லவா அலங்கரிக்கிறது.
நம் வாழ்க்கையில் விதி ஏன் இப்படி விளையாடியது ?

அருமையாய் சமைத்திருந்த உன் கைப்பக்குவத்தில் மயங்கி சமைத்த கைகளுக்கு வைர வளையல் போட வேண்டும் என்று சொன்னேன் நான்.
வெறும் வாய் வார்த்தை என்றாய்.
மறுநாளே உன் கைகளில் வளையல் மாட்டி அழகு பார்த்தேன்.
பதில் பரிசாய் நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தை விட்டுப் போகவில்லை.

நீச்சல் குளத்தில் நீந்த ஆசையென்றாய்.
தேடிச்சென்று நீந்தினோம். என் கைகளில் உனது பூ உடலின் எடையை நான் தாங்க நீ நீச்சல் பழகிய நினைவுகள்.
இன்னும் என் மனதில் நீ நீந்திக் கொண்டிருக்கிறாய்.

நீயும் நானும் கைகோர்த்து எங்கெல்லாம் சுற்றி வந்தோம்.
ஊட்டியில் அந்த மழையின் குளிரில் விரித்த அந்த குடையின் அடியில் சில்லென்று தொட்டு அணைத்து நடந்த உன் கைகளின் குளுமை.
இன்றும் என் இதயம் அந்த குளிர்கால மழையாய் உன் காதலை உணர்கிறது.

எனது உயிராகவும் உலகமாகவும் நீயே இருந்தாய்.
உனக்கென எதையும் மறுத்ததில்லை நான்.

நமது கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நீ சொன்னாய்.
பார்த்துப் பார்த்து உன் கனவிற்கு உருக் கொடுத்தேன் நான்.
நீ சொன்ன வண்ணத்தில் சுவர்கள், நீ தேர்ந்தெடுத்த கற்கள் பதித்த தரைகள்.
வீட்டின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு பொருளும் உன் தேர்வு, கட்டில், மேஜை, நாற்காலிகள், தரைவிரிப்புகள், சன்னல் கதவு திரைகள்.
இன்று அந்த வீட்டில் தனியொருவனாக நான். வீட்டின் ஒவ்வொரு பொருளும் நீ எங்கே எங்கே என்று கேட்பதாய் உணர்கிறேன்.

எப்படி இது நேர்ந்தது. அன்று ஏன் கேஸ் அடுப்பு வெடித்தது.
உன் தளிர் மேனியை தீ ஏன் தின்றது.

உனக்கு தெரியுமா. நீ இறப்பதற்கு முன்னே நான் இறந்து விட்டேன் என்பது.
அன்று நான் அலுவலகம் விட்டு விரைவாக மதியப்பொழுதில் வீட்டிற்கு வந்திருக்க கூடாது.
கட்டிலில் அவன் அணைப்பில்.. அந்த கோலத்தில் நீ. அதை நான் பார்த்திருக்க கூடாது.
அந்த கணத்தில் நான் முதலில் இறந்து போனேன்.
நீ என்னை பார்க்கவில்லை. வந்த தடம் தெரியாமல் திரும்பி விட்டேன் நான்.
அன்று இரவுதான் அந்த அடுப்பு வெடித்தது. இத்தனை நாட்களாக நன்றாயிருந்த அடுப்பு அன்று ஏன் வெடித்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தீ உன் துரோகங்களை எரித்து விட்டது.
மாசு மருவில்லாத மாறாத காதலுடன் நீ இன்னமும் என் மனதிற்குள் இருக்கிறாய்.
உன் மரணத்தின் முதலாண்டில் உன் மீது கொண்ட காதலால் கதறிக் கொண்டிருக்கிறேன் நான்.

18 comments:

said...

அடப்பாவி.............

-------------------------------------------------------------------------------------------------------------
said...

துளசி கோபால் said...
//அடப்பாவி.............//

வாங்க துளசி கோபால்.

ரொம்பவே சீரியசான கதைதான் :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு, இது கற்பனை கதையா? இல்லை உண்மை சம்பவமா????

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Divya said...
//அரை பிளேடு, இது கற்பனை கதையா? இல்லை உண்மை சம்பவமா????
//

அச்சச்சோ. டிஸ்க்ளெய்மர் போட மறந்துட்டேன். :)))

குறிப்பு:

இந்த கதை முற்றிலும் கற்பனையே. சம்பவங்களோ கதாபாத்திரங்களோ யாரையும் குறிப்பன அல்ல.

கதையில ஒரு ட்விஸ்ட் வேணும்னு வித்தியாசமா எழுதியது அவ்வளவே. :)))

நன்றி திவ்யா.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல வேளை பி.கு என்னன்னு சொன்னீங்க, நான் ஒரு நிமிஷம் குழம்பி போய்ட்டேன்!

ரொம்ப வித்தியாசமான அப்ரோச், பாராட்டுக்கள்!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உண்மையிலேயே அவளை நேசித்திருந்தால், விலகி இருந்திருக்கணும்! அல்லது
அவளை விலக்கி இருக்கணும்.

இப்படி வாழ்க்கையில் இருந்தே விலக்கியது அன்புமல்ல; காதலுமல்ல!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

Divya said...
//ரொம்ப வித்தியாசமான அப்ரோச், பாராட்டுக்கள்!//

நன்றி திவ்யா.

----------------------

VSK said...
//உண்மையிலேயே அவளை நேசித்திருந்தால், விலகி இருந்திருக்கணும்! அல்லது
அவளை விலக்கி இருக்கணும்.

இப்படி வாழ்க்கையில் இருந்தே விலக்கியது அன்புமல்ல; காதலுமல்ல!
//

உண்மை VSK ஐயா...

ஒரு கொலை எந்த வகையிலும் நியாப்படுத்த முடியாத ஒன்று.

எத்தனை கொடியவராய் மற்றவர் இருந்தபோதும் அவருக்கு மரணத்தை பரிசாய் தரும் உரிமை யாருக்கும் கிடையாது.

உணர வைத்து மன்னித்திருந்தால்... அந்த மன்னிப்பினால் வரும் குற்ற உணர்ச்சியைப் போன்ற பெரும் தண்டனை இருந்திருக்க முடியாது.

இது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்ட கதை மட்டுமே.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அதிர்ச்சி மதிப்பீடா? அது நல்லா இருக்குங்க!! :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார் said...
//அதிர்ச்சி மதிப்பீடா? அது நல்லா இருக்குங்க!! :)//

அதாவதுங்க கொத்தனார் அவர்களே. அதிர்ச்சி மதிப்பீடுன்னா. திடீர் திருப்பம். இவனுக்கு இவ்வளவு அன்பான்னு நீங்க படிச்சிக்கிட்டே வர்றப்ப திடீர்னு உண்மைய போட்டு உடைக்கிறது.

எழுதி முடிச்சிட்டு கதைய படிச்சி பார்த்தா எனக்கே அதிர்ச்சியாத்தான் இருந்தது. வெளியிட வேணாம்னு நினைச்சிட்டு சரி பரவாயில்லை கதைதானேன்னு பப்ளிஷ் பண்ணிட்டேங்க. :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//உனக்கு தெரியுமா. நீ இறப்பதற்கு முன்னே நான் இறந்து விட்டேன் என்பது.
அன்று நான் அலுவலகம் விட்டு விரைவாக மதியப்பொழுதில் வீட்டிற்கு வந்திருக்க கூடாது.
கட்டிலில் அவன் அணைப்பில்.. அந்த கோலத்தில் நீ. அதை நான் பார்த்திருக்க கூடாது.
அந்த கணத்தில் நான் முதலில் இறந்து போனேன்.//

:(

உண்மைக்கு புறம்பானது என்று ஒதுக்கிவிட முடியாது. இதுபோன்று என்னுடன் படித்த ஒருவன் திருமணமான பெண்ணிடம் நடந்து கொண்டு, அது தெரிந்து போய் அவள் முடிவு தற்கொலையில் முடிந்து, அவளுடைய பிள்ளைகள் ஆதரவற்றவர்களாகிவிட்டனர்.
:(

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹ்ம்ம்ம்
உங்க கதைகள் எல்லாமே ஒரு மார்க்கமாதான் இருக்கு!!
நல்லாவும் இருக்கு!! :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தல கதை நல்லாயிருக்கு...

ஆனா ஒரே இடத்துல சுத்தி சுத்தி வரமாதிரி இருக்கு (இதுக்கு முன்னாடி கூட மனைவியை பத்தி எழுதிட்டிங்க)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

முடிவை எதிர்பார்த்தபடியே இருந்துச்சு. சமீபமா வந்த ரெண்டு கதைகளும் ஒரே மாதிரி இருக்கே ஏன்?

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொலைபாதக காதலா இருக்கே??!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோவி.கண்ணன் said...
//உண்மைக்கு புறம்பானது என்று ஒதுக்கிவிட முடியாது. இதுபோன்று என்னுடன் படித்த ஒருவன் திருமணமான பெண்ணிடம் நடந்து கொண்டு, அது தெரிந்து போய் அவள் முடிவு தற்கொலையில் முடிந்து, அவளுடைய பிள்ளைகள் ஆதரவற்றவர்களாகிவிட்டனர்.
:( //

சில தவறுகள் வாழ்க்கைப் போக்கையே மாற்றக் கூடியன.
செய்தித்தாளில் படிக்கும் "கேஸ் வெடிப்பு." "மனைவி வெட்டிக் கொலை" போன்ற செய்திகளை படிக்கும் போது பின்னுள்ள கதை என்னவாக இருக்கும் போன்ற எண்ணங்களின் விளைவே இக்கதை.
ஏதோ மூலையில் அறிந்தும் அறியாமலுமாய் இப்படிப்பட்ட கதைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

delphine said...
//அப்பாடா! பயந்தே போய்விட்டேன்!!!!!!!!//

கதைய எழுதிட்டனே தவிர, திரும்ப படிச்சி பார்த்தப்ப எனக்கே கொஞ்சம் உதறலாதான் இருந்தது. :)
நன்றி delphine.

-------------------------

CVR said...
//ஹ்ம்ம்ம்
உங்க கதைகள் எல்லாமே ஒரு மார்க்கமாதான் இருக்கு!!
நல்லாவும் இருக்கு!! :-)//

நன்றி CVR.
ஒரே ரூட்டுல கதை எழுதறமாதிரி எனக்கே தோணுது. ரூட்டை மாத்தணும். :)))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத் said...
//தல கதை நல்லாயிருக்கு...
ஆனா ஒரே இடத்துல சுத்தி சுத்தி வரமாதிரி இருக்கு (இதுக்கு முன்னாடி கூட மனைவியை பத்தி எழுதிட்டிங்க)//

நன்றி கோபிநாத்.
ஆமா. ஒரே கதை. இரண்டு முடிவு. இரண்டு கதையாயிடுச்சி. இன்னொரு முடிவை யோசிச்சு இதுக்கு மேல எழுதறமாதிரியில்லை.
கதைய மாத்த வேண்டியதுதான்.

-----------------------------------

ILA(a)இளா said...
//முடிவை எதிர்பார்த்தபடியே இருந்துச்சு. சமீபமா வந்த ரெண்டு கதைகளும் ஒரே மாதிரி இருக்கே ஏன்?//

இளா. ஹாலிவுட் சினிமாக்காரங்கதான் கதை வறட்சி காரணமா ஒரே கதைய பார்ட் 1 பார்ட் 2 ன்னு வச்சு ஓட்டுவாங்களா.
நாம அந்த மாதிரி செய்யக் கூடாதா.

இருந்தாலும் கற்பனை குதிரைய வேற திசையில திருப்பிட வேண்டியதுதான். :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதை அனைத்துலக கணவன்மார்களுக்கும் அனுப்பி வைக்கவும்.
பொண்டாட்டி இம்சைக்கு முடிவுகட்ட நீங்கதான் தல சரியான ஆளு.

புள்ளிராஜா

-------------------------------------------------------------------------------------------------------------