Thursday, December 20, 2007

மாமு... மாமு... போலீஸ் மாமு....

நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது.
எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.
காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.
பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்.
"நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே."
"சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும் நிஜமாகவே பார்க்கவில்லை நான்.
"போர்டு பார்க்கலைன்னா என்னா. இது ஒன்வேன்னு தெரியாதா."
"தெரியாது சார். நான் கொஞ்சம் புதுசு."
"சரி. சரி. ஐம்பது ரூபா கொடுத்துட்டு நகரு."
"ஃபைனா சார்.".
"ஆமா. கொடுத்துட்டு போயிட்டே இரு."
"சரி. சார். தர்றேன். ரிசிப்ட் கொடுப்பீங்களா."
"ரிசிப்டா..."
"ஆமா சார். நான் ஃபைன் கட்டுனதுக்கு ரிசிப்ட்."

அந்த டிராபிக் போலீஸ் என்னை வித்தியாசமாக பார்த்தார்.
"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்காரு. அவர்தான் ரிசிப்ட் கொடுக்க முடியும். அவர் வர நேரமாகும். நீ ஃபைன கொடுத்துட்டு நகரு."
"பரவாயில்லை சார். நான் இருந்து ரிசிப்ட் வாங்கிகிட்டே போறேன்." யோசித்தார்.
"சரி. கொஞ்சம் நில்லு."
கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வண்டியின் பின் ஏறிக்கொண்டார். "பனகல் பார்க் பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு விடு."

அந்த அலுவலகத்திற்கு வெளியே வண்டியை நிறுத்தி இருவருமாய் உள்ளே சென்றோம்.
இன்னொரு போலீஸ்காரரிடம் கொண்டு நிறுத்தினார்.
"என்னய்யா."
"சார். ஒன்வேயில வந்ததுக்காக பிடிச்சேன்."
"சரியா. இங்க ஏன் கூட்டி வந்த."
"ஒன்வேயில வந்ததுக்கு ஃபைன் கட்டணும்னு சொன்னேன். ரிசிப்டு கேக்கறாரு."
அவர் என்னை பார்த்தார்.
"என்ன நீங்க பிரஸ்ஸா."
"இல்லை சார். ஒன்வே. ஃபைன் கட்டுன்னு சார் சொன்னாரு. சரி ரிசிப்டு கொடுங்கன்னு கேட்டேன்."
"எங்க வேலை பார்க்கறீங்க."
சொன்னேன். மேற்கொண்டு என் அலுவலகம் எங்கே வீடு எங்கே என்ற விசாரணைகள்.
"இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்காரு. அவருதான் ரிசிப்டு தரணும். சரி. இந்த பேப்பருல உங்க அட்ரஸ் வண்டி நம்பர் எழுதுங்க."
அவர் கொடுத்த வெள்ளைத்தாளில் எனது முகவரியும் வண்டி எண்ணையும் எழுதினேன்.
"சரி பணத்தை கொடுத்துட்டு போங்க. ஈவினிங் இந்த பக்கமாதானே போவீங்க. வந்து ரிசிப்டை வாங்கிட்டு போங்க."
ஐம்பது ரூபாயை கொடுத்தேன். "தாங்ஸ் சார்."
நேரத்தை பார்த்தேன். 10:15.

அச்சோ. அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. அலுவலகம் சென்றதும் இருந்த ஆணிகளை பிடுங்கி கிளம்பும் போது இரவு 8:30.
இதற்கு மேல் எங்கே சென்று நான் ரிசிப்டு வாங்குவது. அப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.

இன்று வரை எனக்கு தெரியாத விஷயம். ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு. அதற்கு ரிசிப்ட் உண்டா.
அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.

Wednesday, December 19, 2007

ஒரு போர்வீரனின் கதை..

எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன். இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.
இது சொர்க்கமா. இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.
இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.

இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே. இது என்ன கசக்கிறது. மீண்டும் மயங்குகிறேன்.

இம்முறை கண்களை திறக்கிறேன். ஏதோ தெளிவாக உணர்கிறேன். சிரித்தபடி அந்தப் பெரியவர்.

"ஐயா. நான் யார். நீங்கள் யார். இது எந்த இடம்."

"பொறுமை தம்பி. மிகவும் களைத்திருக்கிறாய்.".

"இல்லை ஐயா. இப்போது மிகவும் தெம்பானவனாக உணர்கிறேன். தாங்களே என்னைக் காப்பாற்றி போஷித்தவர் என்று அறிகிறேன். ஆயின் எதுவும் நினைவில் இல்லை. தாங்கள் விளக்க முடியுமா."

"தம்பி. நீ நமது தேசத்தின் குதிரை வீரன். நானொரு சாதாரணத்துறவி. இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் நீ காட்டிய வீரத்தை நினைத்தால் எனக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது."

"ஆம். ஐயா நினைவுக்கு வருகிறது. நமது பகையரசன் கிழக்கு கோட்டையில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் நமது படைப்பிரிவு கிளம்பியது. குதிரைவீரர்களும் காலாட் படையினரும் பல எந்திரப் பொறிகளுடன் கிளம்பினோம். கோட்டையின் மதில் சுவரை தாக்கியழித்து கோட்டையை கைப்பற்ற யுத்தமும் துவங்கினோம். நினைவுக்கு வருகிறது. ஆயின் யுத்தம் என்னவானது. நாம் வென்றோமா ?"

"துரதிர்ஷ்ட வசமாக இல்லை தம்பி. மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்தது. நமது வீரர்கள் மதிலை உடைத்து உள் போந்தார்கள். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நானும் உங்கள் உடனிருந்தேன். கோட்டையை முற்றுகையிட்டு எரியூட்டினோம். என்னமாய் போரிட்டாய் தம்பி நீ. கிட்டத்தட்ட வெல்லும் தருணத்தில் பகைவனின் வடதிசைப் படைகள் வந்து சேர்ந்தன. எண்ணிக்கையில் குறைவான நமது படை அழித்து தள்ளப்பட்டது. நான் பின் வாங்கினேன். போரில் காயம் பட்ட நீ மயங்கி விழுந்தாய். உனது குதிரை உன்னை நமது எல்லையில் கொண்டு வந்து சேர்த்தது. உன்னைக் காப்பாற்றி சிகிச்சையளித்தேன்."

"ஐயா. ஏன் அவ்வாறு செய்தீர்கள். புறமுதுகு காட்டியன் என்ற பழி எனக்கு தேவையா. அந்த யுத்தத்திலேயே நான் வீரமரணம் அடைந்திருக்கக்கூடாதா."

"தம்பி. தேசம் இன்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. அதை வீணில் போக்காதே. அந்த யுத்தத்தில் நாம் தோற்றிருக்கலாம். ஆனால் நமது சேதத்தை விட பகைவனின் சேதம் இருமடங்கு அதிகம். கிழக்குக் கோட்டையை முற்றிலும் எரியூட்டிவிட்டோம். பகையரசன் புலம் பெயர்ந்து இப்போது மேற்குக் கோட்டையில் இருக்கிறான். நமது அரசரும் மேற்குக் கோட்டை மீதான படையெடுப்புக்கு படைகளை திரட்டி வருகிறார்."

"நல்ல செய்தி ஐயா. நானும் படைப்பிரிவில் சென்று சேர விரும்புகிறேன்."

"மகிழ்ச்சி. அடுத்த ஐந்து தினங்களுக்கு ஊர்க்காவல் படையில் இரு. அரசரின் செய்தி வந்ததும் படையினருடன் சென்று சேர்வாய்."

"மிக்க நன்றி ஐயா."

--------

அடுத்த ஐந்து நாட்களும் ஊர்க்காவல் படையில் ஊரைச் சுற்றி வந்தேன். அந்த ஐந்து தினங்களும் ஐந்து மணித்துளிகளாய்ப் பறந்து மறைந்தன.

இந்த தேசத்தின் மக்கள்தான் இந்த போர்க்காலத்தில் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். வீரர்களுக்கு வேண்டிய தானியம் உழவர்களின் மிகுந்த உழைப்பில் தேவைக்கு அதிகமாகவே வந்து சேர்ந்து கொண்டிருந்தது.

போருக்கு தேவையான வண்டிகள் இயந்திர பொறிகள் செய்வதற்கு நாட்டின் தெற்குப்பகுதி காடுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அங்கு நான் சென்ற போது நான் கண்ட காட்சிகள் என் கண்களை அகலத்திறப்பனவாய் இருந்தது.
கொல்லர்களின் உலைக்களத்தில் வால்களும் வேல்களும் வெகுவாக தயாராகிக் கொண்டிருந்தன. காட்டை ஒட்டிய துறைமுகத்தில் மரக்கலங்கள் கம்பீரமாக நின்றிருந்தன.

அந்தத் துறவியை அங்கு சந்தித்தேன்.
"தம்பி அந்த மரக்கலங்களை பார்த்தாயா. இந்த முறை யுத்தம் தரையிலல்ல கடலில்." புன்னகைத்தார்.
"கப்பல்களில் வீரர்கள் கிளம்புகிறோம். படைப்பிரிவு எதிரி பார்க்காத இடத்தில் கரையில் இறங்கி பகைவனின் கோட்டையை நோக்கி முன்னேறும். அதே நேரத்தில் கப்பல்கள் கடற்கரை பிரதேசங்களை தாக்கி அழிவு ஏற்படுத்தும். எதிரிப் படைகள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படும் போது காவல் அதிகமில்லாத கோட்டையை நம்படை மோதி கைப்பற்றும்."
"திட்டம் வெகு அருமை ஐயா."
"நம் அரசரை என்னவென்று நினைத்தாய்."

------------

எதிரியின் மண்ணில் வந்து இறங்கிகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கப்பல் பயணம் அத்துனை சுகமானதாக இல்லை. இந்த நேரத்தில் நமது கப்பல் படை எதிரியின் கடலோர கிராமங்களை அலைகழித்துக் கொண்டிருக்கும். எதிர்பார்த்தது போல் எதிரி்ப் படைகள் கோட்டையை சுற்றி அதிகம் இல்லை.

கோட்டையைத் தாக்க துவங்கினோம். எந்திரப் பொறிகள் கோட்டையை நோக்கி கவண் கற்களையும் தீப்பந்தங்களையும் வீசின. வெளிப்போந்த வீரர்களை என்னுடனான குதிரைப்படை எதிர்கொண்டு மோதியது. தலைகளை வெட்டி வீசி முன்னேறிக் கொண்டிருந்தேன். கோட்டை எரியத் துவங்கியது. திட்டமிட்டபடி என் தலைமையிலான சிறு படைப்பிரிவு கோட்டையின் பின்வாசலை நோக்கி முன்னேறியது.

நினைத்தது சரியே. தப்பித்து வடக்குக் கோட்டைக்கு செல்வதற்காக பகையரசன் நான்கு மெய்க்காப்பாளர்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்.

"விடாதீர்கள். தாக்குங்கள்" பாய்ந்தோம்.

எனது வேல் பகையரசனின் மார்பில் பாய்ந்தது. வேகமாக குதிரையை செலுத்திக் கொண்டு வாளை சக்கரவாகமாக சுழற்றினேன்.
பகையரசனின் தலை கணத்தில் துண்டானது.

"வெற்றி. வெற்றி."

------------


"யூ ஆர் விக்டோரியஸ்" என்று என் கணினித் திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எட்டு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த மைக்ரோசாஃப்டின் "ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்" தந்த அலுப்புடன் தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.
தூக்கத்திலும் கனவு.

இம்முறை கப்பல் தலைவனாக "கலபதி"யாக பத்துக் கப்பல்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறேன்.
எதிரியின் துறைமுகத்தையும் அதனருகில் இருக்கும் கோட்டையையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை.
"தளபதி கோட்டையின் சுவரிலிருந்து பீரங்கிகள் குண்டு மழை பொழிகின்றன. இரண்டு கப்பல்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டன. என்ன செய்வது."
என்ன செய்யலாம். தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

Sunday, December 16, 2007

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சை

குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.
"தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.



7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.

8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)




10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).

12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது.

முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்து நான் வைத்திருந்த ஒரு படத்தை நண்பன் திருப்பதி வெங்கடாசலபதி என்று கண்டு பிடித்து சொன்னது நினைவுக்கு வருகிறது.
திருப்பதி சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்.

"முருகனோ" இல்லை "சீனுவாசனோ"... டப்பு இச்சினவாடே தேவுடு. :)

"டா வின்சி கோட்"க்கு இணையான மர்மம் திருப்பதியிலும் இருக்கின்றதோ என்னவோ.

"டாவின்சி கோடில்" ஏசுவுக்கு மனைவியும் மகளும் உண்டு என்ற வாட்டிகன் ரகசியத்தை ஐசக் நியூட்டன் முதல் டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.