Sunday, December 31, 2006

தேன்கூடு போட்டி - அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்



தேன்கூடு போட்டியில் குறும்பான தலைப்பில் பொருந்தும் என்று நான் குறும்பாக எழுதிய நாடக வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு, அதுவும் முதல் பரிசு. நம்ப முடியாமல் நான்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

பதிவுலகிற்கு மிகப்புதியவன் நான்.. எனது முதல் பதிவு நவம்பர் மாதம் இடையில்தான் துவங்கியது. உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ச்சியான பின்னூட்டங்களுமே என்னை தொடர்ச்சியாக எழுத தூண்டியது.

வலையில் எனது எழுத்துக்கள் சென்னை செந்தமிழிலேயே வந்திருக்கின்றன.

ஆனால் எனது
கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை தமிழில் நானறிந்த பேச்சுக் கூறுகளை உள்ளடக்கியது. அதன் மூன்று பகுதிகளையும் தனித்தனியாக தொடர்ந்து பதிவிட்டேன். முதலில் போட்டிக்கு என்று எழுதவில்லை. பின்னர் கதையில் இருந்த குறும்பின் தன்மை நோக்கி ஏன் இதனை குறும்பு போட்டியில் இடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற தொகுத்து ஒரே பதிவாக இட்டு போட்டியில் இணைத்தேன்.

இன்று இப்படைப்பு தெரிவு செய்யப்பட்டு வென்று இருக்கிறது.

எனது படைப்பை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலாக தொடர்ந்து படித்து ஆதரவு தந்தும் பின்னூட்டம் இட்டு பாராட்டியும் வந்த அனைவருக்கும் வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சகபதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அனைத்து போட்டி பதிவுகளையும் வாசித்தேன். மகிழ்ந்தேன்.

வலையுலகில் இத்தகு போட்டி நிகழ்வுகள் எழுதும் ஆர்வம் உடையோர்க்கு உறுதுணையான தூண்டுகோல்கள். தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கு எனது சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மற்றுமொரு போட்டி படைப்பான
ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. விற்கும் பெருமளவு ஆதரவு. தங்களின் அன்பில் நனைந்து திக்குமுக்காடிவிட்டேன்.

இந்த அங்கீகாரம் மகிழ்வை தரும் அதே வேளையில் இனி சற்று கவனம் பெறுவேன் என்பதால் பதிவில் வழக்கம் போல் கிறுக்கித் தள்ளாமல் அதே நேரத்தில் நமக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த சென்னை செந்தமிழையும் கைவிடாது தொடர்வேன்.


வெற்றி பெற்ற பதிவுகள்.

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரை பிளேடு

குறும்பு - நாமக்கல் சிபி

குறும்பெல்லாம் குறும்பா? - எஸ்.கே.

நந்தன் - ராம்

வாழ்த்துக்கள் நாமக்கல் சிபி, எஸ்.கே., ராம்.



போட்டி முடிவுகளை காண...

டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள்



வலையில் நமது பதிவுகள் பெருமளவில் நமது நிகழ்வுகளை பதிவு செய்வனவாய் அமைகின்றன. நமது வாழ்வின் நிகழ்வுகள் பிறர்க்கு படிப்பினை என்றாலும் இலக்கியத் தரத்திற்கு நிகழ்வுகளைத் தாண்டி கற்பனைகள் அவசியமாகிறது. கனவுகள் கற்பனையின் ஊற்று.. கனவுகளின் உலகம் தனியுலகம். கண்மூடிக் காணும் கனவுகளாகட்டும். அல்லது கண்திறந்து காணும் கனவுகளாகட்டும். கனவுகள் கால நேர வர்த்தமானங்களில் கட்டுப்படுவன அல்ல. விதிமுறைகளில் சிக்கித் தவிப்பன அல்ல. ஆழ்மனதின் அழகான வெளிப்பாடுகள். கனவுகளில் பேதங்களற்ற பிரிவினைகளற்ற சமுதாயங்களை காணலாம். வளமான வாழ்க்கையை காணலாம். கனவுகளில் நமது குறிக்கோள்களும் அதனை அடையும் பாதைகளையும் காணலாம். தினசரி நிகழ்வுகளிலிருந்து நம்மை பிரித்து ஆட்கொள்ளும் நித்திரையில் வரும் கனவுகள் போல் வலைத்தளத்தில் நமது நிகழ்வுகளை பதிவிடும் நாம் நமது கனவுகளையும் பதிவிடுவோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
அரை பிளேடு.



ஒரு வருஷம் ஓடி போச்சி

ஒரு வருஷம் ஓடி போச்சி..
புது வருஷம் கூடியாச்சி..

பாட்டில் ஒண்ண கையில எடுத்து
பாட்டம்ஸ் அப் சொல்லுற அண்ணாச்சி.

உன்னோட போன வருஷ
ரெசலுயூசன் என்னாச்சி...

இனி சரக்கு கிளாஸை
கையால தொட மாட்டேன்னு சொன்ன...
ஆகான்னு நினைக்க சொல்ல..
பாட்டிலோட முழுங்குன...

சிகரெட்டை விட்டுடறேன்னு சொன்ன..
புகைய விட்டுக்குனேதான் இருக்குற...

இன்னொரு வருஷம்..
அதே ரெசலுயூசன்.. அதே ஆளு....

டிஸ்கொத்தேக்கு போகுற..
டான்ஸ் ஆடி கொண்டாடுற...

கேட்டா புதுவருசத்தை
கொண்டாடுறோம்னு சொல்லுற...

ஆட்டம் போட்டாதான்
அடுத்த ஆண்டு வருமா...

சிகரெட்டோ தம்மோ
ஹெல்துதான் தருமா...

யோசிச்சி நீயும் பாரு..
இனிவாழ்க்கை டாப் கியரு...

விஷ் யூ ஹேப்பி நியூ இயரு.

Friday, December 29, 2006

ஆ. ஏ. அ. ஆனான் - 5. வரதட்சணை வாங்குவது யார் ?


கல்யாண சந்தையில ஆண்கள் ஆடுமாடுகள் போல் விற்கப்படுகிறார்கள்.
இது ஆண் மீதான பெண்களின் அடக்கு முறை இல்லையா ?

ஆண்களை சுரண்டறதுக்குன்னே பெண்கள் இந்த வரதட்சணை முறையை கண்டுபிடிச்சிருக்காங்க.

வரதட்சணை கொடுமை. இது முற்றிலும் ஒழியணும்னு சொல்றோம்.
ஆனா இது இன்னும் ஒழியல...

காரணம் யார் ?

பெண்கள்.

பெண்களுக்கு இயற்கையாவே நகை மேல ஆச.

வரதட்சணைன்ற பேர்ல இங்க நடக்குற கூத்து நகைய வெச்சு இல்ல நடக்குது.

பெண்ணை பெத்த பெண் விளம்பரம் குடுக்கறப்பவே இத்தினி பவுன் நகை போடறோம்.

(இந்த விளம்பரம்லாம் பேப்பர்ல வராதுங்கோ.. நம்ப தகுந்த வட்டாரம் மூலமா விஷயத்த கசிய விடுவாங்க. இருக்கறாங்களே இதுக்குன்னே அரட்டை கோஷ்டிங்க. )
அதுக்கு தகுந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை (!!!!!) பாருங்கன்னு சொல்லிதான மாப்பிள்ளை தேடறாங்க.

இதப்பார்த்த ஆண்பிள்ளையை பெற்றெடுத்த பெண் இது நல்ல டீலா இருக்கேன்னு பாக்குறாங்க.
நூறு சவரன் போட்டு ஒரு பெண் வர்றான்னா உடனே சரின்னிடறாங்க...

அந்த பொண்ணு படிச்சிருக்கணும் அழகா இருக்கணும்னு ஆண் புலம்பறத எல்லாம் கேட்காம கல்யாணத்தை பண்ணிடறாங்க.

நெறய சவரன் கைவசம் இருக்குன்றத தவிர வேற எந்த தகுதியும் இல்லாத பொண்ணுங்களுக்கு ஈஸியா ஒரு இளிச்சவாயன் கிடைச்சுடறான்.

நான் தெரியாமதான் கேட்குறேன்..

பொண்ணு பத்து சரவன் போட்டுக்னு வந்தா இன்னா நூறு சவரன் போட்டுக்னு வந்தா இன்னா.
இதனால ஆணுக்கு இன்னா பிரயோசனம்.

அவங்க மாட்டிக்னு வருவாங்களாம்.
பத்திரமா எடுத்து பூட்டி வெச்சு கல்யாணம் காச்சின்னா திரும்பி எடுத்து மாட்டிப்பாங்களாம்.

எவனாவது ஆயிரத்துல ஒருத்தன் கேடு கெட்டவன் இந்த நகையை புடுங்கி தொலைச்சுட்டான்னா... ஐயயோ ஆண்களே மோசம்..
வரதட்சணைன்ற பேர்ல நகையை வாங்கி குடிச்சு தொலையறாங்கன்னு பெண்கள் அமைப்புங்க மொத்தமா கோணியில கல்ல கட்டி அடிக்கிறாங்க.

நல்லா கவனிச்சு பாருங்க.

எங்க ஆயா 25 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
எங்கம்மா கல்யாணம் ஆனப்ப 50 பவுனு போட்டுக்னு வந்தாங்க.
இப்ப எனக்கு 100 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி கொடுக்கறாங்கன்னு ஒரு பொண்ணு சொன்னா, நல்லா கவனிச்சு பாருங்க.

அந்த பழைய நகையேதான் பத்திரமா பொட்டிக்குள்ள இருந்து கைமாறி வந்து இருக்கு.

இதுல இது பத்தும் பத்தாதுக்கு அந்த குடும்பத்து தாத்தா அப்பா வோட உழைப்பு உறிஞ்சப்பட்டு நகையா மாறி இருக்கு.

பொண்ணுங்களுக்கு நகை மேல இருக்கற பைத்தியம் குறையாத வரிக்கும் வரதட்சணை அப்படின்ற கொடுமை தொடர்ந்து ஆண்கள் மேல ஏவப்படும்.

தன்னோட பொண்ணு வசதியா இருக்கணும்னு சகலமும் தேஞ்சி ஓடா போற தகப்பன் ஒரு ஆண்தானே.
இந்த பெண்களோட பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாம தூக்குல தொங்குன தகப்பன்மாரு எத்தனை பேரு.

இன்னாமோ வரதட்சணை கொடுமைய ஆண்கள் ஏவறதா பில்டு அப் கொடுக்கறீங்களே.
வரதட்சணை அதிகமா வேணும்னு பொண்ண பெத்தவன கேக்கறது ஒரு பெண்தான்.

கடனோ உடனோ வாங்கியாவது பொண்ண நல்ல இடமா கொடுக்கனும்னு பின்னாடி இருந்து பில்டப் கொடுக்கறது ஒரு பெண்தான்.
மடையனான ஆண்தான் இதகேட்டு கடன் வாங்கி அதை கட்டறதுக்குன்னே தன் ஆயுச முடிச்சிக்கிறான்.

இத்த விட கொடுமை இரண்டு பொண்ணு இருந்தா அவளுக்கு மட்டும் 50 பவுனு எனக்கு 40 தானான்னு இரண்டு பொண்ணுமா சேர்ந்து பெத்தவன பிடுங்கி எடுப்பாங்க பாருங்க.

கேட்டாங்களோ கேக்கலியோ, எங்க மாமியாரு கேட்டாங்க. எம் புருசன் வண்டி கேட்டாருன்னு சும்மாவா அவங்களா கிளப்பி விடுற பொண்ணுங்க எத்தினி பேரு இருக்காங்க தெரியுமா.

காலம் மாறிடுச்சிங்க. இன்னும் கூட ஆணை அடிமடையனாக்கி வரதட்சணைக்கு அவந்தான் காரணம்னு சொல்லிக்னு இருக்கவங்கள நினச்சா...

எப்ப மாற போறீங்க நீங்க எல்லாம்.


--------


ஆடு வாங்க
மாடு வாங்க
லோன் கொடுக்கும் அரசாங்கம்
ஏழை பெண்கள்
தங்களுக்கு கணவன் வாங்க
லோன் கொடுக்குமா ?


இப்படி பெண் ஒருவர் எழுதியதா புதுக்கவிஜ ஒண்ணு படிச்சேன்.

என்னதான் இந்த பெண் வரதட்சணை கொடுமையில் பாதிக்கப்பட்டதாக சொல்லி கவிதை எழுதியிருந்தாலும் இதுல ஆணடிமைத்தனம் அப்பட்டமா தெரியறத கவனிச்சீங்கன்னா தெரியும்.

ஆணையும் ஆடுமாடு மாதிரி லோன் போட்டு வாங்கலாம்ன்ற கருத்து ஆண் இனத்துக்கே இழுக்கு இல்லையா. ஆண் என்ன ஆடா மாடா இவங்க லோன் போட்டு வாங்க.

கொஞ்சமாவது கருணை காட்டுங்க. எங்களையும் மனுசங்களா நடத்துங்க.

(தொடரும்...)