Thursday, January 31, 2008

மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".

(வாசகர்களுடைய பேராதரவை பெற்ற உலகபுகழ் துப்பறியும் சிங்கம் சி.ஐ.டி. ஷங்கர் இனி துப்பறியமாட்டார் என்று அறிவித்திருந்தோம். இதை கண்டித்து வாசகர் கடிதங்கள் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஒரு வாசகர் மீண்டும் ஷங்கருடைய துப்பறியும் கதைகள் வரவில்லையெனில் தீக்குளிப்பேன் என்று எழுதியிருந்தார். வாசகர்களுக்காக இதோ மீண்டும் வந்துவிட்டார் சி.ஐ.டி. ஷங்கர் - ஆசிரியர்.).

"என்ன இது.?" மாலு கோபத்துடன் செய்தித்தாளை வீசியெறிந்தாள்.

"உலகப்புகழ்பெற்ற சி.ஐ.டி. ஷங்கர் அவர்களின் துப்பறியும் நிறுவனம் புதிய இடத்திற்கு மாறியுள்ளது. முகவரி xxxxx. போன் xxxxx.". என்ற விளம்பரத்தை அவள் வட்டமிட்டிருந்தாள்.

அதே கோபத்தோடு ஷங்கரது கணினித்திரையை பார்த்தாள். "யோனி. முலை. ஆண்குறி." போன்ற வார்த்தைகள் கணினித்திரையெங்கும் இறைந்து கிடந்தன.

"ஆஃபீஸ்ல உட்கார்ந்து அந்த மாதிரி சைட் எல்லாம் வேற படிக்கறியா ?" மேலும் கோபமானாள்.

"அச்சச்சோ. இது தமிழ்மணம். தமிழ்பதிவு. இலக்கிய தமிழ். பின் நவீனத்துவம். எக்ஸ்பிரசனிசம். நீ தப்பா புரிஞ்சுகிட்ட...." குளறினான்.

"அந்த கண்றாவியை அப்புறம் வெச்சுக்கறேன். மொதல்ல இந்த கண்றாவிக்கு பதில் சொல்லு. துப்பறியும் வேலை வேண்டாம்னு சொன்னேன் இல்லையா ?".

"ஆமாம். ஆனா பாரு அப்பாவோட ட்ராவல் ஏஜென்சி போரடிக்குது. வாழ்க்கையில த்ரில் வேண்டாமா?"

"அதுக்காக.".

"பாரு பிசினசை நான் விடல. துப்பறியும் தொழில் பார்ட் டைம். ட்ராவல் ஏஜென்சியோட அட்ரஸ்தான் அதுக்கும் கொடுத்திருக்கேன்."

போன் அடித்தது. எடுத்தான்.

"ஷங்கர் டிடக்டிவ் ஏஜென்சி."

"எஸ்."

"சார். எங்க வீட்டு செப்டிக் டாங்க் அடைச்சிருச்சி. எங்க அடைச்சிருக்குன்னு துப்பறிஞ்சு சொல்றீங்களா."

"வையா. போனை." வைத்தான். "ஹி. ஹி. ராங் நம்பர்." அவளிடம் வழிந்தான். நல்ல வேளை போன்ல அவன் பேசுனதை அவ கேட்டிருக்க மாட்டா என்று சமாதானமானான்.

"மாலு. நான்தான் பார்ட் டைம்னு சொல்றனே. கன்சிடர் பண்ணேன். நீயும் வழக்கம் போல எனக்கு அசிஸ்டண்ட்டா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.".

பார்ட் டைம் என்பதில் அவள் சமாதானம் ஆனாள். "வேற வழி. பேயை காதலிச்சா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும். இருந்து தொலைக்கிறேன்.".

"தாங்ஸ் மாலு." வழிந்தான்.

அப்போதுதான் அவன் வந்தான். வயது 35 இருக்கும்.

"சார் உள்ளே வரலாமா ?"

"நீங்க ?".

"நேனு எர்ரபள்ளி வெங்கடநாராயண ஸ்ரீனிவாச காந்திகிருஷ்ண ரெட்டி. நீங்கதானே தி ஃபேமஸ் டிடக்டிவ் ஷங்கர்."

"ஆமா. வாங்க ரெட்டி."

ரெட்டி நாற்காலியில் அமர்ந்தான்.

"சொல்லுங்க."

"சார். பெரிய மனசு பண்ணி என்னோட கேசை எடுத்துக்கணும்."

ஷங்கர் மாலுவை பார்த்து கண்சிமிட்டினான். பார்த்தாயா புது கேஸ் என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.

"கேசை சொல்லுங்க."

"என்ன சொல்ல சாரே. நான் ஒரு பாவப்பட்ட மனுச ஜன்மம். சினி இண்டஸ்ட்ரில கேட்டு பாருங்க. நேனு எந்த பெரிய ஃபைனான்சியர்னு எல்லாரும் சொல்லுவாங்க."

"அப்படியா. மேல சொல்லுங்க."

"உங்களுக்கு பப்பிஸ்ரீ தெரியுமில்லையா?"

"கவர்ச்சிக்கன்னி பப்பிஸ்ரீயை தெரியாதவன் தமிழனே இல்லை சார்.".

"அவளேதான். அவ என்னுடைய பொண்டாட்டி."

"ஓ."

"சீக்ரெட் மேரேஜ் சார். ஆந்திராவுலே விஜயவாடாவுல பெல்லி சேஸ்குன்னானு. ஒரு வருசம் ஆகுது. யாருக்கும் தெரியாது."

"இண்ட்ரஸ்டிங். பப்பிஸ்ரீக்கு கல்யாணம் ஆயிருச்சா."

"பாருங்க. எங்க மேரேஜ் நல்லாதான் போயிட்டிருந்தது. ஆனா பப்பிஸ்ரீக்கு திடீர்னு ஒரு பாய் ஃபிரெண்டு. அவன் கூட சுத்துறா. தப்பு பண்றா. சொன்னா கேக்குறதில்லை. நேனு எந்த பாதபட்குன்னானுன்னு மீக்கு தெள்ளிது சார்."

"புரியுது. இதுக்கு எங்க கிட்டே ஏன் வந்தீங்க."

"நான் அவளை விவாகரத்து செய்யணும். அதுக்கு எனக்கு அவ தப்பா நடக்கிறான்றதுக்கான ஃப்ருஃப் வேணும். நீங்கதான் எனக்கு ஹெல்ப் செய்யணும். "

ரெட்டி கதறி கதறி அழ ஆரம்பித்தான்.

"டேக் இட் ஈஸி ரெட்டி. உங்க கேசை நாங்க எடுத்துக்கறோம். உங்க மனைவியை நாங்க வாட்ச் பண்றோம். உங்களுக்கு வேண்டிய ஃப்ரூஃப் இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு கொடுக்குறோம்."

கதறி அழுத ரெட்டியை ஆறுதல் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

-----------------------------------------------

"மாலு என்னமோ சொன்னியே. இங்க பார்த்தியா ரெட்டி மொத்த பேமண்ட்டையும் கேஷாவே கொடுத்துட்டு போயிருக்கான். பிஃப்டி தவுசண்டு." ஷங்கர்.

"அவன் கேட்ட ஆதாரம் எல்லாம்." இது மாலு.

"இந்த ஷங்கரை யாருன்னு நினைச்சே. சும்மா ஒரு வாரமா பப்பிஸ்ரீயை வாட்ச் பண்ணினேன். அவளும் அவ பாய்ஃபிரண்டும் சோலா ஷெரட்டன்ல புக் பண்ணின ஓட்டல் ரூம்ல யாருக்கும் தெரியாம கேமராவை ஃபிக்ஸ் பண்ணினேன். தேவையான ஆதாரம் போட்டாவாவே கிடைச்சிருச்சி."

"ஓ."

"அந்த போட்டோவெல்லாம் நீ பார்க்கலையே. சும்மா கிளுகிளுப்பா இருந்தது. மூணு நாள் முன்னாடிதான் ரெட்டி எல்லாத்தையும் வாங்கிகிட்டு போனான். இன்நேரம் ரெட்டி அதை தன் வக்கீல் கிட்ட கொடுத்து இருப்பான். அவனோட கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிருக்கும். நம்ம கேஸ் கிராண்ட் சக்சஸ்"

"ப்ரில்லியண்ட். நான் ரிலேட்டிவ் மேரேஜ்காக போன இந்த ஒரு வாரத்துல நீ இவ்வளவையும் தனியாவே சாதிச்சு இருக்கியே". அவனுக்கு வேண்டிய புத்துணர்வு டபுள் டோசாக அவன் கன்னத்தில் கிடைத்தது.

"தட் ஈஸ் மை ஷங்கர்."

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

டெலிபோன் ஒலித்தது. "அடுத்த கிளையண்டா இருக்கும்" பெருமையாக ஷங்கர் போனை எடுத்தான்.

"ஹல்லோ. டிடக்டிவ் ஷங்கர் ஸ்பீக்கிங்."

"யோவ் உனக்கு அறிவிருக்கா ?" மறுமுனையில் கோபமான பெண்குரல்.

"மேடம். யார் நீங்க. ராங் நம்பர்னு நினைக்கிறேன்."

"கரெக்ட் நம்பர்தான். நான் பப்பிஸ்ரீ பேசுறேன். நீதானே ரெட்டிக்கு போட்டோ எடுத்து கொடுத்தது."

"ஆமா. உங்க கணவர் ரெட்டி உங்க நடத்தையில சந்தேகப்பட்டு ஆதாரம் கேட்டாரு.".

"கணவனா. அந்த ஆளு என்னோட மேனேஜரா இருந்தான். ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் வேலையை விட்டு துரத்தினேன். நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற என்னோட பாய் ஃபிரரெண்ட் கூட இருக்க போட்டோவை நீ அவனுக்கு எடுத்து கொடுத்திருக்கே."

"ஆ..."

"ஆமாய்யா. ரெட்டி அந்த போட்டோவை காண்பிச்சு வெளியிட்டுடுவேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணி அஞ்சு லட்சம் என்கிட்ட வாங்கிட்டான். சரி அஞ்சு லட்சத்தோட தொலையுதுன்னு கொடுத்து போட்டோவை வாங்கிட்டேன். அதுகூட விசிட்டிங் கார்ட்ல உன் அட்ரசும் போன் நம்பரும் இருந்தது."

"ஓ.."

"ஆனா அந்த ராஸ்கல் இன்டர்நெட்ல வேற படத்தை போட்டு விட்டுட்டான். என் மானமே போச்சு."

"சாரி. மேடம்."

"சாரி. என்னய்யா. சாரி. இன்னும் நாலு நாள்ல உனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறேன்."

போனை வைத்துவிட்டாள். ஷங்கரும் மாலுவும் பேயறைந்தவர்கள் ஆனார்கள்.

-------

நான்கு நாட்கள் ஓடின. ஷங்கர் வக்கீல் நோட்டீஸ் வரும் என்று பயந்திருந்தான்.

அன்று டெலிபோன் மணியடித்தது.

"ஹல்லோ ஷங்கர். பப்பிஸ்ரீ இயர்."

"மேடம். நீங்க வக்கீல் நோட்டீஸ்னு..."

"பர்கெட் இட். இன்னைக்கு பேப்பர் பார்த்தியா.". அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தது.

சுருக்கமான செய்தி: புகைப்படத்தில் இருப்பது நானல்ல - பப்பிஸ்ரீ மறுப்பு. டூப்பாகவோ அல்லது ஒட்டு வேலையாகவோ இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். உடன் இருக்கும் நபர் யார் என்றே தெரியாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

"உன் மேல கேஸ் போட்டா அந்த ஃபோட்டோவில இருக்கிறது நான்தான்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு வக்கீல் சொன்னார். நான் கேஸ் எதுவும் போடலை."

"தாங்ஸ் மேடம்."

"நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும் ஷங்கர். தமிழ்ல படமே இல்லாம மலையாளத்துல மட்டும் பண்ணிட்டு இருந்தேன். இந்த மேட்டர் வந்ததுல நாலு தமிழ் படம் புக் ஆகியிருக்கு."

"ஓ. கங்கிராட்ஸ் மேடம்.".

"நீங்களும் இதை பத்தி யாருகிட்டயும் மூச்சு விடாதீங்க. முக்கியமா என் பாய் ஃபிரெண்ட் பத்தி. நாங்க ஒரு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்."

"வெரி நைஸ் ஆஃப் யூ மேடம். நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்."

"தாங்ஸ்" அவள் போனை வைத்து விட்டாள்.

"அப்பாடா" நிம்மதி பெருமூச்சு விட்டனர் மாலுவும் ஷங்கரும்.

(வாசகர்கள் சி.ஐ.டி. ஷங்கரின் இந்த சாகசத்தை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இனி ஷங்கரும் மாலுவும் அவ்வப்போது வந்து தங்கள் சாகசத்தை நிகழ்த்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

Wednesday, January 30, 2008

என்ன எழவுடா இது ?

கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர். உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட். சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது. நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக இருந்தாள். மேலும் அந்த... வேண்டாம். பேக் டு ஹீரோ.

ஷங்கர் அந்த குடியிருப்பை நோட்டமிட்டவனாக சிக்லெட்டை மெல்ல துவங்கினான். துப்பறியும் சிங்கம் ஷங்கருக்கு சிக்லெட் புத்துணர்வு தரும் என்பது உலகமறிந்த செய்தி. (கதாநாயகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதால் நமது நாயகன் சிக்லெட்டுக்கு மாறிவிட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.).

"பாஸ். இந்த ஃப்ளாட்ஸ்லதானா ?"

"எஸ் மாலு. இந்த அசோசியேசன் செக்ரட்ரி நரேஷ் அய்யர்தான் கால் பண்ணியிருந்தார். ஒரு திருட்டு நடக்கிறதாவும் அதை கண்டு பிடிக்கணும்னும் சொன்னார்."

"வாவ். நான் உங்க கிட்ட சேர்ந்து இந்த நாலு மாசத்துல முதல் கேஸ். திருட்டா ? த்ரில்லிங்.".

"முதல்ல இந்த பகுதியை நோட்டம் விட்டுக்கிட்டு அப்புறம் உள்ளே போவோம். "

"பாஸ். இந்த நாலு மாசத்துல நீங்க எனக்கு சாலரியே கொடுத்ததில்லை. ஆஃப்டர் திஸ் கேசாவது....".

"யூ சில்லி. யூ ஆர் நாட் ஜஸ்ட் மை அசிஸ்டன்ட். ஆல்சோ மை லவர். உனக்கு எதுக்கு சாலரி."

"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. என்னோட அப்பா கிட்ட நீங்க பெரிய துப்பறியும் புலின்னு சொல்லி வெச்சிருக்கேன். எத்தனை கேஸ் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு கேக்குறார். அட்லீஸ்ட் அச்சீவ் சம்திங் இன் திஸ் கேஸ் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே. ஓக்கே. குட் யூ ப்ளீஸ் கிவ் மி சம் எனர்ஜி பூஸ்ட்."

"ப்ச்" (சிக்லெட்டோடு இப்போது மாலுவின் முத்தமும் நமது நாயகனுக்கு புத்துணர்வு தருவது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். - ஆர்.)

இருவருமாக மாடியேறிச் சென்று "F" இலக்கமிட்ட வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினர்.
ஒரு சொட்டைத் தலையர் எட்டிப் பார்த்தார்.

"குட் மார்னிங். மிஸ்டர் ஐயர்."

"ஐ அம் நாட் ஐயர். ஐயம் ஐயங்கார்."

"வாட்?"

"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."

"என்ன எழவுடா இது" மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஷங்கர். "மிஸ்டர் நரேஷ் ஐயர்......"

"ஓ. அவரா. அவர் எதிர்ல F."

"ஆனா இதுதானே F".

"இது E. எழுத்தோட கால் உடைஞ்சிருச்சி." மாலு தலையிலடித்துக் கொண்டிருந்தாள்.

--------------

"கம் இன் மிஸ்டர் ஷங்கர். ஐ அம் நரேஷ் ஐயர். செக்ரட்ரி ஃபார் திஸ் ரெசிடென்சியல் அப்பாரட்மெண்ட்ஸ்."

நரேஷ் ஐயர் அவர்களை வரவேற்றார். "ப்ளீஸ் பீ சீட்டட்." அமர்ந்தார்கள்.

"மிஸ்டர் நரேஷ் இங்க திருட்டு போறதா சொல்லியிருந்தீங்க இல்லையா."

"எஸ்."

"ஐ அப்சர்வ்டு தி திங்ஸ் அரவுண்டு. ப்ராக்சிமிட்டி ஆஃப் அதர் பில்டிங்ஸ். யூ ஹவ் ஏ வாட்ச்மேன் அரவுண்ட் தி கிளாக். பட் ஸ்டில் திருட்டு போகுதுன்னா... ஐ திங்க் திருடன் பக்கத்து பில்டிங்ல இருந்து கயிறு மூலமா உங்க பில்டிங்குக்கு வந்து திருடியிருக்கலாம்."

"நோ. நோ. யூ ஆர் மிஸ்டேகன்."

"மே பி. ஐ ஜஸ்ட் சஜஸ்டட் எ பாசிபிலிட்டி. எங்க என்ன என்ன வேல்யபிள்ஸ் ஜிவல்லரீஸ் திருட்டு போச்சுன்னு சொல்றீங்களா."

"நான் உங்களை வரச்சொன்னது வேற ஒரு திருட்டுக்கு. தண்ணி திருட்டு."

"என்னது."

"எஸ். வாட்டர். யூ சீ. இந்த ஃப்ளாட்ஸ்க்காக டெய்லி ஒரு வாட்டர் லாரி ஃபுல்லா தண்ணி கொண்டு வந்து பேஸ்மண்ட் டேங்க் ஃபில் பண்றோம். அதுதான் திருட்டு போகுது."

"ஓ" (என்ன எழவுடா இது. திரும்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.).

"காலையில 6 ஓ க்ளாக் ஃபில் பண்ற வாட்டர் மதியம் 12 ஓ க்ளாக்குக்குள்ள காணாம போயிடுது. யூ ஹவ் டு இன்வஸ்டிகேட் திஸ்."

"தண்ணிதானே சார். இதுக்கு போய் இன்வஸ்டிகேஷன் எல்லாம்."

"நோ. நோ. யூ சீ. ஹவ் காஸ்ட்லி தி வாட்டர் ஈஸ். 500 ருப்பீஸ் ஃபார் ஒன் ட்ரிப் இன் லாரி. அண்டு ஐ அம் தி ஆன்சரபிள் செக்ரட்ரி."

"ஓக்கே. யாராவது அதிகமா யூஸ் பண்ணி காலியாகியிருக்கும்.".

"நோ. இட் ஈஸ் நாட் யூஸ்டு டு பி லைக் திஸ். லாஸ்ட் ஒன் வீக்காகத்தான் இப்படி ஆகுது."

"ஓக்கே சார். வீ வில் ஹவ் யுவர் கேஸ்". மாலு அறிவித்தாள்.

"மாலு" என்று துவங்கிய ஷங்கரை கண்களால் அடக்கினாள்.

"தாங்ஸ். ஹோப் யூ வில் ஃபைன்ட் இட் அவுட். எனக்கு ஆஃபிஸ் போகணும். ஐ வில் பி பேக் பை ஃபைவ் இன் த ஈவினிங்."

"ஓக்கே சார். வீ வில் ஹேங்க் அரவுண்ட் அண்டு வில் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".

அவர் கிளம்பி சென்றார்.

"ஓழுங்கா இந்த கேசையாவது கண்டுபிடிங்க." என்ற மாலுவை ஷங்கர் பரிதாபமாக பார்த்தான்.

---------------------

மாலை திரும்பிய நரேஷை மகிழ்ச்சியோடு வரவேற்றது நமது துப்பறியும் ஜோடி.

"சார். வீ ஹவ் ஃபைன்ட் இட் ஃபார் யூ.". ஷங்கர் அறிவித்தான்.

"ரியலி."

"இட் ஈஸ் யுவர் வாட்ச்மேன்."

"ஓ."

"வீ வாட்ச்டு. அந்த காவல்கார கிழவன் 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் தொட்டி தண்ணியையும் வெறும் மண் தரையில ஊற்றி காலி செஞ்சுட்டான்."

"அப்படியா."

"ஸீ. போட்டோ ஃப்ரூப். வீ ஹவ் டேக்கன் பிக்சர்ஸ் ஆஃப் ஹிம் இன் ஆக்சன்."
போட்டோக்களை நரேஷ் பார்த்தார்.

"பைத்தியக்காரத்தனமா இருக்கு. வெறும் தரையில தண்ணிய இறைச்சுக்கிட்டு."

"ஐ திங்க் ஹி மஸ்ட் பி எ சைக்கோ."

"முனுசாமி..."
அந்த காவல் கிழவன் பம்மியபடி வந்தான்.

"என்ன இது. நீ ஏன் தண்ணியை இப்படி வீணடிச்சு இருக்க."

"ஐயா செக்ரட்ரி அம்மாதான்..."

"அம்மாவா..."

"அம்மா உங்க கிட்ட சொல்லலீங்களா?"

"வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்." வெளியேயிருந்து உள்ளே நுழைந்த அவள் மிஸஸ் ஷீலா அய்யர் வைஃப் ஆஃப் மிஸ்டர் நரேஷ் ஐயர்.

"ஸீ திஸ் பிக்சர்ஸ் ஃபார் யுவர் செல்ஃப்." ஐயர் போட்டோக்களை அவளிடம் நீட்டினார்.

"எஸ். ஃபார் அவர் ரெசிடென்ஸ் உமென்ஸ் அசோஷியேசன் வீ நீட் எ பேட்மின்டன்ட் கோர்ட் வித் கிராஸ். நான்தான் முனுசாமியை லான்ல புல் வளரட்டும்னு தண்ணி விட சொன்னேன். வை யூ பிக்சர்டு இட்?"

"நத்திங்." நரேஷ் அய்யர் மென்று முழுங்கினார்.

"புல்ஷிட்." அவள் போய்விட்டாள்.

"சாரி. " நரேஷ் அய்யர் நமது ஜோடியிடம் மென்று முழுங்கினார்.
"ஆக்சுவலி எங்களுக்குள்ள பத்து நாளா சண்டை. நாங்க பேசிக்கிறது இல்லை. அதுல அவ எங்கிட்ட சொல்லாம விட்டுட்டா போல. ஐ அம் ரியலி சாரி."

"நோ பிராப்ளம் சார். இட் ஈஸ் ஆல் இன் த கேம்."

நமது ஜோடி சோகமாக வெளியேறியது.

"ஷங்கர் இனியும் இந்த துப்பறியற வேலை உங்களுக்கு தேவையா. ப்ளீஸ் ஜாயின் த பிசினஸ் ஆஃப் யுவர் டாட். அட்லீஸ்ட் ஃபார் அவர் லவ் சேக்."

"ஓக்கே". ஷங்கர் தலையாட்டினான்.

"தட் ஈஸ் நைஸ் ஆஃப் யூ."..... "ப்ச்ச்ச்" இன்னொரு முறை புத்துணர்வு கிடைத்தாலும் ஷங்கர் இனி எதையும் கண்டு பிடிக்கப்போவதில்லை.

(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)

Tuesday, January 29, 2008

காந்தி என்றொரு மனிதன் இருந்தான்

கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948). ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா? அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.

காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை. அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று பயணித்தது. "அகிம்சை" மூலம் காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்று நமது வரலாற்று பாடபுத்தகங்கள் படிப்பிக்கின்றன.

சுதந்திரம் பெற்றுத்தந்தது "அகிம்சை வழி போராட்டங்கள்" மட்டுமல்ல. பல காரணிகளில் அதுவும் ஒன்று என்றாலும் அதன் பங்கை மறுப்பதற்கில்லை.

இன்றைய சூழலில் காந்திய தத்துவமான "அகிம்சை" இன்னும் எடுபடக் கூடியதா ?

காந்திய தத்துவார்த்த அரசியல்தான் என்ன. அறவழி போராட்டங்கள், அனைவரையும் நேசித்தல், வன்முறையை எதிர்க்க அகிம்சை வழியில் போராட்டம். இவை இன்றும் செல்லுபடியாகுமா?

"லகே ரஹோ முன்னா பாய்" திரைப்படம் இந்த கேள்வியை என்னுள் கிளறிவிட்டது. அடிதடியை தொழிலாக கொண்ட ஒருவன் காதலிக்காக காந்தியை உள்வாங்கி காந்தியவாதியாக மாறுகிறான். சமூகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் காந்திய முறையில் தீர்வு சொல்கிறான் வானொலியின் பண்பலையில்.
தீர்வுகள் பலன் தருகின்றன.

"எனது வாசலில் தினமும் பீடாவை துப்பிச் செல்லும் அடாவடியான பலவான் ஒருவனை என்ன செய்ய. அவனிடம் சண்டை போட்டு பீடாவை துப்பாதே என்று அடித்து சொல்லலாமா."
"வேண்டாம். அவனிடம் இன்முகம் காட்டு. அவன் துப்பிய இடத்தை இன்முகத்தோடு தூய்மை செய்."
அவன் தினமும் துப்ப இவனும் இன்முகத்தோடு தூய்மை செய்கிறான்.
ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள், அவன் துப்ப துப்ப இவனும் சிரித்தபடி தூய்மை செய்கிறான்.
நான்காம் நாள் துப்பியவன் உணர்ந்து துப்பாமல் மன்னிப்பு கோரி செல்கிறான்.
காந்தியம் வெல்கிறது.

ஒரு கன்னம் அறைந்தவனுக்கு மறு கன்னம் காட்டினால் அவன் வெட்கி திருந்துவான் என்பது காந்தியம்.
இது எல்லா நிலைகளிலும் சாத்தியமா?

ஒருவன் தன் தினசரி வாழ்வில் தன்னை அறைபவர்க்கு மறுகன்னம் காட்டிக் கொண்டிருந்தால் வாழ முடியுமா. இரு கன்னத்திலும் மாறி மாறி அறைபடுபவன் என்ன செய்வான்?

தினசரி வாழ்வில் காந்தியத்தின் சாத்தியம் காந்தியை போன்றோர்க்கு மட்டும். இத்துணை பெரிய மனிதர் இவ்வளவு பணிந்து வருகிறார் என்பதால் எதிராளியும்/அமைப்பும் பணிந்து போவான்/போகும்.
அகிம்சை ஆயுதம் தனி நபர்களை பொறுத்தவரை, பலமுள்ளவர்கள் அல்லது தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமானது. பயன்தரக்கூடியது.
புலி புலால் உணவை மறுதளித்தால் கவனிக்கப்படும். ஒரு மான் மறுதளித்தால் ?

ஒரு சாதாரணன் ஏற்கனவே பணிந்து கிடப்பவன் இன்னும் பணிவதால் என்ன சாதிக்க முடியும். காணாமல்தான் போவான்.
இந்த திரைப்படத்திலும் ஏற்கனவே பெரிய ரெளடியாக இருப்பவன் பணிந்து காந்தியம் பேசுவதாலேயே சாதிக்கிறான்.

மிகச் சாதாரணன் வாழ்வில் காந்தியம் பயனற்றதே.
எல்லோரும் காந்தியை தனிமனித வாழ்வில் பின்பற்றினால் என்ன ஆகும் ?
வேர்க்கடலை வியாபாரம் நன்றாக ஆகும். (சொன்னவர் கண்ணதாசன் என்று நியாபகம்).

காந்தி தன்னளவில் தன் கொள்கைகளை சோதித்து சத்திய சோதனையாக மேற்கொண்டார். அவர் அளவில் அது சரியே. அவர் தனது சோதனைகளில் வென்றார் என்பதற்கு அவருக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குண்டுகளே சான்று.
காந்தி மகாத்மா என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று இன்னொரு மனிதர் பிறந்து வருதலும் சாத்தியமில்லை. அவருடைய கொள்கைகள் அரசியலில் தூய்மையும் எளிமையும் நேர்மையையும் வலியுறுத்தியவை.
அவை சாதாரணன் தனிமனித வாழ்வில் கைக்கொள்ள வேண்டியவை அல்ல. மக்கள் சேவைக்கென்று வரும் அரசியல்வாதிகள்/குழுக்கள் கைக்கொள்ள வேண்டியவை.

ஒற்றைச் சுள்ளி எளிதாக உடையும். கட்டுச் சுள்ளி எதிர்ப்பை தாங்கி நிற்கும். காந்தியவாதம் குழுக்களுக்கானது. சமூகம் குழுவாக இயங்கும் போது தனது துவேசங்களை களைந்து அகிம்சை வழியில் நடப்பதை உறுதி செய்வது. இன்றைய நிலையில் கொள்கை/மத/இன/சாதி ரீதியாக ஒன்றுபட்டு வலிமை பெறும் குழுக்கள்/அவற்றின் எதிர்குழுக்கள் காந்தியத்தை/அகிம்சையை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அதுவே வன்முறைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும்.
இன்றைய நிலையில் அரசியல் குழுக்கள்/கட்சிகளிடம் காந்தியவாதம் கவலைக்கிடமாகவே உள்ளது.
அதற்காக காந்தியம் காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.
அது என்றும் இருக்கும்.
குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.

Monday, January 21, 2008

"கார்"ட்டூன் ரத்னா........










இது உங்கள் லட்ச ரூபாய் காரை இழுத்துச் செல்லும்.











நன்றி: "மிட் டே"

Thursday, January 17, 2008

நீங்க காதலிச்சு இருக்கீங்களா ???


"நீங்க காதலிச்சு இருக்கீங்களா". அதிகம் பழகாத ஒருவனிடம் இருந்து வரும் கேள்வி.

நாங்கள் அன்றுதான் சந்தித்திருந்தோம். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டிமன்றத்தில் எனது கல்லூரி சார்பில் கலந்துகொண்டு பேருந்தில் திருவண்ணாமலை திரும்பி கொண்டிருந்தேன்.
(தலைப்பு பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழா ? சமூக உணர்வா ? காதலா ? )
எனது அருகில் அவன் அமர்ந்தான்.

"நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க."

"நன்றி. நீங்களும் ரொம்ப நல்லாவே பேசினீங்க கதிர்வேல். பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழ்தான் அப்படின்னு நடுவர் தீர்ப்பு சொன்னார்னா அதுக்கு உங்க பேச்சு அப்புறம் வாதங்கள்தான் காரணம்."

"நன்றிங்க." என்றான் அவன்.

"கலைக்கல்லூரில என்ன படிக்கிறீங்க கதிர்."

"தமிழ். BA. எனக்கு ஆச்சரியங்க. இஞ்சினியரிங் கல்லூரியில இருந்து வந்து பட்டிமன்றம் பேசுறீங்க."

"ஒரு ஆர்வம்தான்." சிரித்தேன்.

ஓடும் பேருந்தில் ஊர் போய் சேர இரண்டு மணி நேரம் இருக்க இன்னும் என்ன என்னமோ பேசினோம்.
ப்ளஸ் டூ முடித்து தான் முதலில் ஆசிரியர் பயிற்சி முடித்ததாகவும், வேலைக்கு பதிந்து அது கிடைக்க ஐந்தாண்டுகள் ஆகலாம் என்பதால் இப்போது கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிப்பதாகவும் அவன் சொன்னான்.

"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலேன்னு நீங்க பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல நல்ல கவிதையெல்லாம் மேற்கோள் காட்டினீங்க."

"பாரதிதாசனை காதல் கவிஞர்னு சொல்லுறது அபத்தம். தோற்கப் போகிற தலைப்புன்னு தெரியும். இருந்தாலும் கொடுத்த தலைப்பில்தானே பேசமுடியும்." சிரித்தேன்.

"இருந்தாலும் அருமையாக பேசினீங்க. காதலை பாடாத கவிஞன் இல்லை. காதலை பாடாதவன் கவிஞனே இல்லை. அப்படின்னு நீங்க சொன்னீங்க பாருங்க அதுக்கு கைவலிக்கிற அளவுக்கு நான் கைதட்டினேன்."

"நன்றி. ஆனா என்னன்னா எனக்கு காதல் பிடிக்காது. தலைப்புக்காகத்தான் பேசினேன். எதிர்காலத்துல தமிழுக்கு எதாவது கஷ்டம் வந்து நான் கவிஞன் ஆனாக்கூட காதலை பாடத கவிஞனனாகத்தான் இருப்பேன்."

அப்போதுதான் அந்த கேள்வியைக் கேட்டான். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".

"இல்லை. படிக்கிற காலத்துல காதல்னு சொல்லிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வழியறதும், அவங்களுக்கு லெட்டர் கொடுக்கிறதும். அவங்களுக்கு பாடிகார்டு மாதிரி பின்னாடியே போறதும். எனக்கு பிடிக்கிறதில்லை."

"என்னை மாதிரியே யோசிச்சு இருக்கீங்க. என்னதான் நம்ம மனசு கல் கோட்டை மாதிரி இருந்தாலும் காதல் காத்து மாதிரி உள்ள நுழைஞ்சிடுது. அப்ப மனசு அலையடிச்ச மணல் கோட்டை மாதிரி கரைஞ்சு போயிடுது." கவிதையாய் பேசினான்.

அவனையே பார்த்தேன். இப்போது நான் கேட்டேன். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".

"காதலிக்கப்பட்டிருக்கிறேன். காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகமானது."

"இண்ட்ரஸ்டிங். சொல்லுங்களேன்." கேட்பதற்கு எனக்கு நேரமிருந்தது. பாதி தூரபயணம் மீதியிருந்தது.

"இளவரசிகளை தேடிப்பிடித்து காதலிக்க நான் இளவரசன் இல்லைங்க. காதல்ன்றது எனக்கு வரமாயிருக்க முடியாது. சாபமாய்த்தான் இருக்கும். என்னுடைய அப்பா கூலி தொழிலாளி. அம்மா பீடி மண்டியில பீடி சுத்துறாங்க. மூணு தங்கச்சிங்க. நானும் லீவ் நாள்ள மண்டியில பீடி சுத்துவேன். கஷ்டத்திலதான் படிக்கிறேன். செலவு அதிகமில்லா அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில படிச்சிட்டேன். அதே மாதிரி ஒரு டிகிரி வேணும்னு அரசு கலைக் கல்லூரியில தமிழ் மூணாவது வருடம். நானெல்லாம் காதலிக்க முடியுமா சொல்லுங்க."

அமைதியாயிருந்தேன்.

அவன் தன் கதையை தொடர்ந்தான்.

------------


"காதல் எப்ப வரும்னு நினைக்கிறீங்க. முதல் பார்வையிலேயே வருமா. இல்லை பழகி பார்த்து புரிஞ்சிகிட்ட பின்னாடி வருமா?"

"என்னை பொறுத்த வரைக்கும் முதல் பார்வையிலேயே ஏதாவது வந்தா அது பேரு காதல் இல்லை காமம். பழகி நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னாடி வந்தா அது சுயநலம்." நான் சொன்னதற்கு சிரித்தான்.

"நிறைய பெண்கள் கிட்ட பழகறோம். ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கே தவிர அதை காதல்னு சொல்ல முடியறதில்லை. என்னுடைய வகுப்பில இருபது பெண்கள். எங்க துறையில முதலாமாண்டு இரண்டாமாண்டு எல்லாம் எடுத்துகிட்டா கூட ஒரு அறுபது பேராவது இருப்பாங்க. நான் கல்சுரல் செக்கரட்ரியா மற்ற துறையில இருக்கிறவங்க கிட்டயும் பழகுறேன். எப்படியும் நூறு பெண்கள் இருக்கிற சூழ்நிலையில எல்லார்கிட்டயும் பேச பழக இருந்தாலும் ஒரு தொலைவு இருக்கவே செய்யுது. அவங்க கிட்ட பேசும்போது ஒரு உதறல் கூட இருக்கும். நட்பு இருக்குமே தவிர காதல் எல்லாம் வந்ததில்லை. இந்த சிச்சுவேஷன்லதான் அந்த லெட்டர்."

"லெட்டரா.."

"ஆமா. காலேஜ் விட்டு வீடு கிளம்ப என்னுடைய சைக்கிளை எடுக்கறப்ப சைக்கிள் கேரியர்ல இருந்தது. அழகா இதயம் படம் போட்ட காகித உறை. யார் வெச்சிருப்பாங்கன்னு சுத்தி முத்தும் பார்த்தா யாரும் இல்லை."

"அப்புறம். "

"என்னுடைய பெயர் எழுதியிருந்த அந்த கவரை பிரிச்சு பார்க்கிறேன். அன்புள்ள கதிர்வேலுவுக்கு அப்படின்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தது."

"ம்.."

"நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். உங்கள் இனிய பேச்சு பழகும் விதம் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுடன் நட்பாக பழகிவிட்டு எப்படி காதலை சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் குடும்ப நிலையிலிருந்து உங்களை பற்றி எல்லாமே நான் அறிவேன். நீங்கள் என் காதலை நிராகரித்துவிட்டால் நமது நட்பும் உடன் சேர்ந்து உடைந்து விடும் என்பதால் மிகவும் தயங்குகிறேன். ஆனால் மனதிலுள்ள காதலை சொல்லாமலே வைத்திருக்க முடியுமா. சொல்லிவிடலாம் என்றுதான் இந்த கடிதம். இந்த கடிதத்தில் கூட என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயக்கமாகவே இருக்கிறது. எந்த தருணத்தில் உங்கள் மீது காதல் வந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் உங்களுக்கு என் மீது தனிப்பட்ட நேசமோ காதலே இருக்காது என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணாக என்னுடைய காதலை என்னால் நேரடியாக சொல்ல முடியாது. அப்படி சொல்லி நிராகரிக்கப்பட்டுவிட்டால் அதை தாங்கும் சக்தி எனக்கு கிடையாது. என்னுடைய காதலை விவரித்து என்னால் இக்கடிதத்தில் முழுமையாக எழுதமுடியவில்லை. என்னுடைய காதல் விவரிக்க முடியாதது. என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாளைய தினம் பிப்ரவரி 14. நீங்கள் எனக்காக உங்களிடம் இருக்கும் பச்சை நிற சட்டையை அணிந்து கல்லூரிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன். என்னுடைய தயக்கத்தை உதறி தங்களிடம் என் காதலை சொல்வேன். அப்படி நீங்கள் பச்சை சட்டையில் வராவிட்டால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உங்கள் நிலையறிந்து விலகிவிடுவேன். ஆனால் என் மனதில் உங்கள் மீதான காதல் அழியாத ஓவியமாக என்றும் இருக்கும். அப்படி நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாளைய தினத்திற்காக காத்திருக்கிறேன்.

காதலுடன்....
அப்படின்னு எழுதியிருந்தது. யார் எழுதியதுன்னு தெரியலை."

"அடுத்த நாள் பச்சை சட்டையில் போனீங்களா...".

"இல்லை. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா கடிதத்தை திரும்பி திரும்பி படிச்சு பார்த்தா விளையாட்டு இல்லைன்னு தோணிச்சு."

"ம்.."

"என்னுடைய நிலையில் காதலுக்கு எல்லாம் இடமில்லை. அடுத்த நாள் கருப்பு சட்டையில போனேன்."

"ஓ."

"இரண்டு நாள் கழிச்சு என்னுடைய சைக்கிள் கேரியர்ல இன்னொரு கடிதம்."

"அதில என்ன இருந்தது.."

"அன்பானவருக்கு...

எனது உள்ளம் உடைந்த நிலையில் எழுதுகிறேன். என் காதலை மறுக்க நீங்கள் பச்சை சட்டை அணியாமல் வந்திருக்கலாம். ஆனால் எனது மனதை உடைப்பது போல் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தீர்கள். எனது காதல் தோற்றாலும் இனியும் நான் உங்களிடம் எப்போதும் போல பழகுவேன். இனி எப்போதும் என்னுடைய காதலையோ என்னையோ நான் வெளிப்படுத்திக் கொள்ளப் போவதில்லை. யாரும் அறியாமல் என் மனதில் பூத்த இந்தக் காதல் யாரும் அறியாமல் என் மனதோடு காலத்திற்கும் இருந்து என் மரணத்தில்தான் மடியும்.

நான் உங்களை
காதலித்தேன்.
காதலிக்கிறேன்.
காதலிப்பேன் காலமெல்லாம்.

ஆனால் அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பது மை அல்ல. என் இரத்தம். ஏனெனில் இந்தக் காதல் என் இரத்தத்தில் ஊறியது. இதை இரத்தத்தால் சொல்வது பொருத்தம் அல்லவா. என்னுள் சூல் கொண்டு கருவாகி உருவாகி கனிந்த காதலை அதற்கு உரியவரிடம் சொல்லி விட்டேன் என்ற திருப்தி ஒன்றே எனக்கு போதும். இனி உங்களுக்கு என் காதலால் தொல்லை தரமாட்டேன். நான் யார் என்பதை அறிய முயலவேண்டாம். என் கையெழுத்தை வைத்து என்னை கண்டுபிடிக்க முடியாது. மாற்றி எழுதியிருக்கிறேன். என்றும் நீங்கள் உங்கள் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவனிடத்தில் எந்த நாளும் உங்களுக்காக பிரார்த்திப்பேன். காதல் சிதைந்த நிலையில் மாறாத அன்புடன்... காதலை சுமக்கும் ஒருத்தி."

"படிச்சதும் நான் பெரிய தப்பு செஞ்சிட்டனோன்னு தோணுச்சு. யாராயிருக்கும். இரத்தத்தால காதலை சொல்லி..... எவ்வளவு காதல் இருந்திருந்தா. தப்பு பண்ணிட்டேன். இந்த அளவுக்கு காதல் இருக்கிற பெண்ணை ஏமாத்திட்டேன் அப்படின்னு ஒரு குற்ற உணர்வு. இந்த காதலுக்கு பதிலா நான் என்ன தர முடியும். காதலை தவிர...."

"யாருன்னு தெரிஞ்சதா."

"இல்லை. இந்த கடிதம் வந்து ஒரு மாசமாகுது. யாராயிருக்கும்னு முடிஞ்ச வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன். ஒரு நல்ல காதலை இழந்துட்டேன். இன்னிக்கு நீங்க காதலை பத்தி பேசினப்ப மனசு என்னமோ செஞ்சுது. உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு."

எங்களுக்கிடையில் பெரும் மெளனம் நிலவியது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"ஆனா. காதலைவிட காதலிக்கப்பட்டவனுடைய நலன் முக்கியம்னு அந்த பெண் தன்னை வெளிப்படுத்திக்காம விலகிட்டது என்னை பாதிச்சுருச்சு. என்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு பெண்தான்னு நல்லா தெரியுது. என்னுடன் நட்போட பழகிக்கிட்டுருக்கவங்கள்ல அவ யாரு அப்படின்னு நான் எப்படி தெரிஞ்சுக்கிறது. கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. அவளை எப்படியும் நான் கண்டுபிடிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ யாரு எப்படியிருப்பா அப்படின்றது எனக்கு தெரியலை. ஆனா யாராயிருந்தாலும் இந்தக் காதல் இந்த அன்பு இழக்கப் படவேண்டிய ஒன்று இல்லை. இந்த அன்புக்காக எதுவும் செய்யலாம். அவளை கண்டுபிடிச்சு என் காதலை கட்டாயம் சொல்லுவேன்."

பஸ் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது.

"காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது. உங்க காதலை நீங்க கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்." விடைபெற்றேன்.

எனது பயணம் முடிந்தது. அவன் தன் காதலைத் தேடி முடிவுறதா அவன் பயணத்தில் பிரிந்து பயணித்தான்.




நீங்க காதலிச்சு இருக்கீங்களா

கதை முழுமை பெற்று இங்கு உள்ளது.



பின்னூட்டி துரிதப்படுத்திய CVR, வெட்டி, கொத்தனாருக்கு நன்றி.

Tuesday, January 15, 2008

எயுதனதுல புட்சது

போன வருசத்துல நாம இன்னா எயுதிக்கிறமோ அதுல நமக்கு புட்சது இன்னான்னு சொல்லனுமாம்.

இப்படி ஒரு விளையாட்டு ஓடிக்கினுகீது. நண்பர் வெட்டியார் நம்மளையும் இதுல இயுத்து விட்டுட்டாரு.

பதிவுலகத்துல நாம இன்னா எயுதி சாதிச்சோம் அப்படின்னு நினைச்சி பார்த்தா நாம இன்னும் இங்க இருக்கறதே சாதனைதான்னு தோணுது.

இன்னா எயுதிக்கிறோம்னு திரும்பி பார்த்தா... கதை எயுதி இருக்கிறோம். கவிஜ எயுதி இருக்கோம். சர்ச்சைய கிளப்புற விஷயத்தை அப்பப்ப தொட்டு இருக்கோம்.
அப்புறம் இருக்கவே இருக்கு உப்புமா, ஜல்லி, மொக்கை எல்லாம். ரைட் சைடுல "ஏற்கனவே எயுதனது"ன்றதுக்கு அடியில எல்லாமே இருக்கு.

திரும்பி பார்த்தா குறுக்கால ஆறு மாசமா தலைமறைவா இருந்து கூட 64 பதிவு எயுதி இருக்கோம்ன்றது ஆச்சரியமாதான் இருக்கு.

இருந்தாலும் புட்சதா எதாவது ஒண்ணு சொல்லணுமாமே.

என்னான்ட ஒரு பிரச்சனை என்னன்னா ஒரு எழுத்தாளனா (!!) என்னோட பதிவு எல்லாமே எனக்கு பிடிக்கும். ஒரு விமர்சகனா என்னோட எந்த பதிவுமே எனக்கு பிடிக்காது.

சரி புட்சதா பதிவு சொல்லணும்னு வந்தாச்சு. முட்டைய ஒடைக்காம ஆம்லெட் போட முடியுமா என்ன.

எனக்கு காதல் கதைகள்லாம் பிடிக்காது. ஆனா நானே காதல் கதை எழுதி இருக்கேன்றது எனக்கே ஆச்சரியம்.
அந்த ஆச்சரியத்தையே இங்க சஜஸ்ட் பண்ணிடறேன்.
"கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்... "

புதிய பதிவர்கள் படித்திராத பட்சத்தில் எனது ஆல்டைம் ஃபேவரிட் காமெடி .கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை.

மேலும் நகைச்சுவைக்காக..
மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!! .
ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி .
அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.



அப்பாலிக்கா என்ன... அடுத்து மத்தவங்களை ஆட்டத்துக்கு கூப்பிடணுமாம்.
தெரிஞ்சோ தெரியாமலோ அரைபிளேடு "ஆணியவாதி" அப்படின்னு ஒரு இமேஜ் பில்ட் அப் ஆயிடுச்சி.
அதை உடைக்க இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கலாம்.

ஆறு பெண் பதிவர்களை தங்கள் சிறந்த படைப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு அழைக்கிறேன்.

1. ஷைலஜா. (http://shylajan.blogspot.com) - (2007 ல் இவர் அதிகம் எழுதவில்லை. இப்போது மீண்டும் அதிகம் எழுதுகிறார். கவிதை பக்கங்கள்.)
2. மை ஃபிரண்ட் (http://engineer2207.blogspot.com/) - (பதிவுகளை விட பின்னூட்டங்களில் இவரை அதிகம் படித்திருக்கிறேன். சிறந்த பதிவை படிக்க தர கோருகிறேன்)
3. காயத்ரி (http://gayatri8782.blogspot.com) - (கவிதாயினி. 76 கவிதைகள் இவரது பக்கத்தில் இருக்கிறது. எனக்கு கவிதை பயம். அதுவும் பெண் எழுதிய கவிதை என்றால் சுத்த அலர்ஜி. தங்களுடைய சிறந்த கவிதையை பகிர்ந்து எனது கவிதை பயத்தை போக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.)
4. ப்ரியா வேங்கடகிருஷ்ணன் (http://tamilkkalvi.blogspot.com/) (இவர் நட்சத்திரமானதும்தான் முதல் தடவையாக வாசித்தேன். ஆச்சரியமூட்டும் தமிழார்வம். 2007 இல் அதிகம் எழுதவில்லை. தமிழை நிறைய எழுதவும் இதுவரை தான் எழுதியதை பகிர்ந்து கொள்ளவும் இவரை கேட்டுக்கொள்கிறேன்.)
5. தூயா. (http://thooya.blogspot.com) - (இவரது சமையல்கட்டு பக்கங்களை பார்த்து சில சமையல் குறிப்புகளை முயன்றுள்ளேன். பதிலுக்கு பதில் பழிவாங்குவதற்காக இப்போது அவரை பதிவெழுத அழைக்கிறேன்.)
6. செல்லி (http://pirakeshpathi.blogspot.com) - (வெரைட்டியான பதிவுகள். இலக்கிய இன்பம் தொடரை இவர் படங்களுடன் தந்தது நன்றாக இருந்தது.).

துவங்கிய சர்வேசருக்கும் அழைத்த வெட்டியாருக்கும் தொடர்ஓட்டத்திலுள்ள பதிவர்களுக்கும் நன்றிகள்.

லட்ச ரூவா காரு. சிரிப்பு வருது பாரு.