Tuesday, February 26, 2008

செல்போனில் பெண்ணை படம் பிடித்து

"ஏய். மிஸ்டர். என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க."

"நான் உங்களை போட்டோ எடுக்கலையே."

"பொய். ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி."

"மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க."

"உனக்கென்ன மரியாதை. கொண்டா அந்த மொபைலை."

அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள். புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள். அவளது படமேதான்.

"மிஸ்டர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க."

"நான் உங்களை எடுக்கணும்னு எடுக்கலை. நான் எடுத்த போட்டோவில நீங்க வந்தது தற்செயல்."

"என்ன கதை விடறீங்க."

"மிஸ். மத்த போட்டோக்களையும் பாருங்க. நான் இங்க இருக்கற ஒவ்வொரு புக் ஸ்டாலையும் படம் பிடிச்சிட்டு இருக்கேன். அந்த புக் ஸ்டாலை படம் பிடிச்சப்ப நீங்க அதுல வந்தது யதார்த்தமா வந்ததுதான்."

அவள் மத்த போட்டோக்களை பார்த்தாள். ஒவ்வொரு புத்தக நிலையத்தின் படமும் பதிவாகி இருந்தது. முல்லை பதிப்பகம், மருதம் பதிப்பகம் என..

"மிஸ். இந்த புக் ஃபேர்ல இருக்கிற ஸ்டால்களைத்தான் படம் பிடிச்சிட்டுருக்கேன். உங்களை இல்லை."

"ஆமா.. ஆனா இத்தனை புக் ஸ்டாலையும் படம்பிடிச்சு.. எதுக்கு."

"ஐ அம் ரைட்டிங் பிளாக். தமிழ்ல. இந்த புத்தகக் கண்காட்சியை பத்தி ஒரு ரைட் அப்புக்காக இந்த படங்களை எடுத்தேன்."

"ஓ. ஐ அம் சாரி."

"பரவாயில்லை. வேணுமின்னா நீங்க இருக்கற படத்தை டெலீட் பண்ணிட்டு மொபைலை கொடுங்க."

"இட். ஈஸ் ஓக்கே. இந்தாங்க."

"தாங்ஸ். மிஸ்."

"சத்தம் போட்டு உங்க கையில இருந்து மொபைலை எல்லாம் பிடுங்கி... ஐ அம் ரியல்லி சாரி."

"நோ பிராப்ளம்."

"இஃப் யூ டோண்ட் மைண்ட். நாம ஒரு காபி சாப்பிடலாமா."

முன்பின் தெரியாத தன்னை காபி சாப்பிட அழைக்கும் அவளது தைரியம் அவனுக்கு ஆச்சரியமளித்தது.

"ஓக்கே." இருவரும் அங்கிருந்த கேண்டீனுக்கு சென்றார்கள்.

"மிஸ் உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா."

"அர்ச்சனா." சிரித்தாள்.

"என் பெயர்.." அவன் ஆரம்பித்தான்.

"கிள்ளி வளவன்." அவள் முடித்தாள்.

"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்."

"வளவன் நான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறதுண்டு. உங்க பதிவுல உங்க புகைப்படம் எல்லாம் பார்த்திருக்கேன்."

"ஓ.."

"நீங்க புக் ஸ்டாலைத்தான் படம் எடுக்கறீங்கன்னு எனக்கு தெரியும். சும்மா கலாய்ச்சேன்."

"நீங்க..."

"நான் உங்க ரசிகை. ஒரு வருடத்துக்கு மேல உங்க பதிவெல்லாம் படிக்கறேன். உங்க பதிவுல முதல் பின்னூட்டம் எப்பவுமே நான் தான் போடுவேன்."

"நீங்க... மாணிக்க மலர்."

"ஆமா. மாணிக்க மலர் அப்படின்ற பெயர்ல உங்களுக்கு பின்னூட்டம் போடுவது நான்தான். நாம மின்னஞ்சல் மூலமா ரொம்பவே பேசியிருக்கிறோம். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும். என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்கும் தெரியும் என்னோட பெயரைத்தவிர.."

"வாவ். உங்களை இப்படி சந்திச்சது ஆச்சரியம்."

"எனக்கும். உங்களை இப்படி புத்தகக் கண்காட்சியில் பார்ப்போம்னு நினைக்கலை. சும்மா கலாய்ச்சேன். சாரி."

அவன் சிரித்தான்.

அவர்களுக்கு இடையே நீண்ட ஒரு மெளனம் நிலவியது.

அவள் அதை உடைத்தாள். "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது. எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."

"நானும்." என்றான் அவன்.

அவர்கள் கண்கள் பேசிக்கொண்டிருந்தன.

"காதலை பின்னூட்டத்தில சொல்ல முடியாது. நேர்லதான் சொல்லணும்."

"அப்ப சொல்லிடலாமே."

காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.

Monday, February 25, 2008

கோணிக்குள் என்ன இருக்கிறது.

"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."

"நல்ல கிரெளடு இருக்கிற செண்ட்ரல் ஸ்டேஷன்ல வாசல்ல இந்த கோணியை விட்டுட்டு யாரு போயிருப்பாங்க."

"ஏதாவது கிராமத்து டிக்கட் கோணியை வச்சுட்டு எங்கயாவது டீ சாப்பிட போயிருக்கும். வா அண்ணாத்தை நாம போவலாம்."

அந்த இரண்டு போர்ட்டர்களும் அங்கிருந்து அகன்றார்கள்.

செண்ட்ரல் ரயில்வே நிலையத்தின் மாலை நேரம். அந்த கோணி கவனிப்பாரற்றுக் கிடந்தது.

-----------

அரை மணி நேரம் கழித்து...

"அண்ணே இந்த கோணி இங்கயே இருக்கு பாருண்ணே."

"இத இங்க வச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலையே."

"திறந்து பார்ப்பமா அண்ணே."

"அட. இவனே ஏதாச்சும் ஏடா கூடமா இருக்கப் போதுடா."

அந்த சணல் கோணி ஏதாலோ நிறைந்து கட்டப்பட்டு துருத்தி கொண்டிருந்தது.

"போலீஸ்ல சொல்லுவமா.".

----------

"சார் இந்த கோணிதான். சார். பாம் ஏதாச்சும் இருக்குமா சார்"

"யாரும் கிட்ட போகாதீங்க. அலர்ட்."

"யோவ் கான்ஸ்டபிள். கிரவுட் இந்த பக்கம் வராம பாத்துக்கய்யா."

அதற்குள் மக்களுக்கு கோணியில் பாம் இருக்கும் செய்தி பரவியது. எல்லோரும் அதை ஒரு அச்சத்தோடு பார்த்தார்கள். கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.

"சார். ஒரு வேளை அந்த கோணியில பாம் இல்லைன்னா."

"யோவ். இப்படி அனாமத்தா ஒரு கோணி. அதுவும் சரக்கு குடோன் பக்கத்துல கூட இல்லாம, இப்படி ஜனங்க நடமாடுற இடத்துல இப்படி தனியா இருக்குன்னா... ஏதாச்சும் இருக்கும்யா."

"யாராச்சும் தெரியாம போட்டிருந்தா. எவ்வளவு கிராமத்து ஆளுங்க கோணியோட வாராங்க போறாங்க."

"ஏன்யா இது பப்ளிக் ப்ளேஸ். இந்த இடத்துல இப்படி ஒரு கோணியை கொண்டாந்து போட்டுட்டு போயிருக்குன்னா கட்டாயம் அதுக்குள்ள விவகாரமா பாம் ஏதாவது இருக்கலாம்."

"ஆர்.பி.எஃப். பாம் ஸ்குவாடுக்கு சொல்லியாச்சு. சார்."

-------

மக்கள் பய பீதியோடு அந்த கோணியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கோணி. ஒரு அழுக்கு சணல் கோணி.

எல்லோரிடமும் அதைப் பற்றியே பேச்சு.

இரண்டொரு நிருபர்கள் எட்டி பார்த்தார்கள். செய்திகளை முந்தித் தரும் சேனல் ஒன்றும்.

செய்தி கசியத் துவங்கியது. பதட்டம் நிலவியது. சிலர் பயத்தில் ரயில் நிலையத்தை விட்டு ஓடத் துவங்கினர்.

மோப்ப நாய்கள் வந்தன.

மெட்டல் டிடக்டர்களோடு இருவர். மெட்டல் டிடக்டர் வைத்துப் பார்த்தனர்.

சுற்றியிருந்தவர்கள் நாடித் துடிப்பு எகிறியது. மெட்டல் டிடக்டரில் எதுவும் தெரியவில்லை.

அந்த போலீஸ்காரர் வேர்த்து வழியும் தன் நெற்றியை துடைத்துக் கொண்டு கோணியைத் திறந்தார் படு ஜாக்கிரதையாக.

"சார். எருமட்டை சார்,"

"என்னது."

"பசுஞ்சாண எருமட்டை சார்." அந்த கோணி முழுதும் எருமட்டைகள் வட்டவட்டமாக...

எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.

"ஒரு ஒண்ணுமில்லாத கோணியை இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுத்து விட்டீங்களேய்யா."

"கோணி. கோணிக்குள்ள காய்ஞ்சுகோன எருமட்டை சாணி. இந்த விஷயத்தை ஏணி வெச்சு ஏத்திவிட்டுட்டீங்களேய்யா."

"நான் அப்பவே சொன்னேன் இது ஒரு சாதாரண கோணிதான்னு."

"ஆமாய்யா இப்ப சொல்லுங்க. பப்ளிக் ப்ளேஸ்ல இதோ கோணி... அதோ கோணின்னு கிளப்பிவிட்டுட்டு.... எவனோ போணியாகாத கோணியை இங்க வந்து போட்டுட்டு போயிருக்கான்.. கண்டுக்காம போவீங்களா."

அங்கு சகஜநிலை திரும்பியது.

"செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல அதுவும் நிறைய பப்ளிக் நடமாடுற எடத்துல இந்த மாதிரி கோணியெல்லாம். இனிமே கோணியை ரயில்வே ஸ்டேஷன் மாதிரி பப்ளிக் பிளேஸ்ல கொண்டு வரவே தடை விதிக்கணும்." ஒருவர் கருத்து தெரிவித்தார். இன்னொருவர் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார்.

Friday, February 22, 2008

மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது

மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.

மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.

படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.

உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.

அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.
அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும், கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம். அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.
நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.
அப்புறம் பஞ்சபூதங்கள், காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.

பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய், கை, தொடை, கால் இதிலிருந்து படைச்சாராம். (கதையா இருக்கே ?)

அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.

அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள், நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.
கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.

கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.

பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.
ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு, வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.
இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம். முறையே பருத்தி, சணல், மற்றவை.

சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான். இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.

ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம். அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம். (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)

பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு. அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.
பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.
அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்) முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.

பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.
அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.

பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும். குறைந்தது ஒரு வேதத்தையாவது.

பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது. பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.

அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.

பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.

சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.

ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது. அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.

சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.

பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.
அவர்கள் வேதம் கற்கக்கூடாது. இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.

மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு. நாலு சேப்டர் படிச்சேன். இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.

மனுவோட இந்த தர்மம் தோன்றிய புண்ணிய பூமி பிரம்மவார்த்தா. மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.

நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.

அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.
நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.

Reference: The Laws of Manu
George Bühler, translated 1886.

Tuesday, February 19, 2008

இதெல்லாம் கவிதையாடா ?

தனிமை பயம் அவனை
"பீடி"த்திருக்கிறது.
பீடி புகைநடுவே
அவன்.

பயம் என்னை
பீடித்திருக்கிறது.
அவனது கவிதை
தாள்களுடன் நான்.

------

"காதலி"
என்றான்.
என்னடா என்றால்
மூன்றெழுத்து கவிதையென்றான்.
இதெல்லாம் கவிதையாடா ?

------------

பாரி கதறினான்...
முல்லைக்கு தேர் தரவோ
கார் தரவோ காசில்லை
என்னிடம்.

போடாவென்று
சொல்லி போய்விட்டாள்
காதலி முல்லை.

(யதார்த்தக் கவிஞன் !!)

----------

மெதுவாகவும்..
ஊர்ந்தும்..
தேய்ந்தும்..
நீடித்தும்..
நின்றும்
நீண்டுகொண்டிருக்கிறது.
காலம்
அவளில்லாத காரணத்தால்.

(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)

------

கையில் பேனா...
கன்னத்தில் கைவைத்து
விட்டம் வெறிக்கிறான்.
கொட்டுகிறது கவிதை.
போட்டோ பிடித்தால்
பின்னட்டைக்கு பயன்படும்.

----------

அவள் போனதால்.
அவன் கவிதை எழுதினான்.
எலக்கியம் வளர்ந்தது.
அதை விட அவன் தாடி
நன்றாக வளர்ந்தது.

----------

வெங்காயம் அரை கிலோ.
தக்காளி கால் கிலோ.
இஞ்சி.
பச்சை மிளகாய்.
கருவேப்பிலை, கொத்தமல்லி.
உ. பருப்பு அரை கிலோ.
து. பருப்பு ஒரு கிலோ.
2 ரெக்சோனா.

(பின்குறிப்பு: ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல. மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)

-----------

Monday, February 18, 2008

அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - "தி கிங்பின்"

"பாஸ். நாம அமெரிக்காவில நியூயார்க் வந்து இறங்கிட்டோம். நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு." மாலு மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.

"வேற என்ன பண்றது. ஆசிரியர் நிறைய தமிழ்வாணன் துப்பறியும் கதை படிச்சிருப்பாரு போல. "அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர்" அப்படின்னு தலைப்பு வெச்சிட்டார். உனக்கும் எனக்கும் விசிட்டர் விசாவெல்லாம் எடுத்து எவ்வளவு செலவாயிடுச்சு தெரியுமா." ஷங்கர் சலித்துக் கொண்டான்.

"பாஸ். நீங்களேதான் டிராவல் எஜென்சியும் வெச்சிருக்கீங்களே. இதென்ன பெரிய விஷயமா." மாலு தொடர்ந்தாள்.

"நாம இங்க வெறுமனே சுத்தி பார்க்க மட்டும் வரலை. எதுக்கு வந்திருக்கோம்னு தெரியும் இல்லை"

"தெரியும் பாஸ். ஏதோ "சேஃப்டி பின்"னை கண்டு பிடிக்கணும்னு சொன்னீங்க."

"அது சேஃப்டி பின் இல்லை. கிங் பின்."

"கிங் பின்னா. கேள்வி பட்டதே இல்லையே பாஸ். அது எவ்வளவு பெரிசா இருக்கும். "

"கிங் பின் அப்படின்றது கேங் லீடர். நிழலுலக தாதா. அந்த தாதாவை கண்டு பிடிக்கிறதுதான் நம்ப பிளான்."

"தாதா ?"

"நீ மார்வல் காமிக்ஸ் எல்லாம் படிக்கிறது இல்லையா. கிங் பின்தான் ஸ்பைடர் மேனோட வில்லன். இப்ப வந்த டேர் டெவில் படத்திலயும் கிங்பின்தான் வில்லன். இங்க அண்டர் கிரவுண்ட் தாதாவை கிங்பின் அப்படின்னு சொல்வாங்க."

"வாவ். கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறோம்."

"உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்தப் போறோம்."

"வாட்?"

"உனக்கு தெரியும் இல்லையா. அமெரிக்கா பெரிய அளவுல பொருளாதார சரிவை நோக்கி போயிட்டிருக்கு. அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தா வீட்டுக் கடன். இங்க ஒரு கும்பல் வீடுகளை வாங்கிட்டு வட்டி கட்டாம விட்டுடறாங்க. இதனால வீடு ஏலத்துக்கு வருது. வாங்க ஆளில்லாம வீடு மதிப்பு குறைஞ்சு, வட்டி வீதம் குறைஞ்சு அதனால உலக பொருளாதாரமே சரிஞ்சு போச்சு. இத்தனைக்கும் பின்னாடி அந்த கும்பலோட தலைவனா ஒரு தாதா இருக்கான். அந்த கிங்பின்னை தான் நாம கண்டு பிடிக்கறோம். இதை தடுத்தி நிறுத்தி உலகப் பொருளாதாரத்தையே உயர்த்தப் போறோம்."

"பாஸ். கேட்கவே சூப்பரா இருக்கு. சின்ன வயசுல ராணி காமிக்ஸ்ல படிச்ச ஜேம்ஸ் பாண்டு கதையெல்லாம் நியாபகம் வருது."

"இது ஆக்சன் டைம்."

"தட் ஈஸ் மை ஷங்கர்." இந்த முறை அவனுக்கு புத்துணர்வு கன்னத்திலல்ல. உதட்டில் கிடைத்தது. அமெரிக்க மண்ணில்லையா.

அவன் கிறுகிறுத்துப் போனான். அவர்கள் வெளியேறும் வழிக்காக முன்னேறினார்கள்.

"பாஸ் அங்க பாருங்க NEWARK இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அப்படின்னு எழுதியிருக்கு. நாம NEWYORK தான வந்து இறங்கி இருக்கோம்."

"ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்."

"ஏர்போர்ட்ல பத்தடிக்கு இருபதடின்னு பெரிசா எழுதிவைக்கறவன் தப்பாவா எழுதியிருப்பான்."

"எனக்கும் புரியலையே. இரு பக்கத்துல கேட்கிறேன்." என்றவன் பக்கத்திலிருந்த தமிழ் இளைஞனிடம் கேட்டான் (சாஃப்ட்வேராயிருக்கும்.). "இது நியூயார்க்தானே."

அவன் ஷங்கரை பூச்சி போல பார்த்து விட்டு சொன்னான். "இது நெவார்க். நியூஜெர்சி. ஆனா நியூயார்க் பக்கம்தான்."

சிறிது நேரத்தில் மாலு ஷங்கரை பின்னி எடுத்துக் கொண்டிருந்தாள். "வந்து இறங்குனது நெவார்க்கா, நியூயார்க்கான்னு கூட தெரியலை. பெரிய துப்பறியும் நிபுணர்."

"டிக்கட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா நெவார்க்னு அடிச்சிட்டாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஹி... ஹி." வழிந்தான். "சரி வா. இங்க எதோ கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட்ல போய் கேட்டா நாமளே ஓட்டற மாதிரி கார் கிடைக்குமாம்."

"ஓக்கே. போய் காரை எடுங்க... ஆமா உங்களுக்கு லைசென்ஸ் ?"

"இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ், இண்டியன் ட்ரைவிங் லைசென்ஸ் இரண்டும் வெச்சிருக்கேன். கார் எடுக்கிறோம். நியூயார்க் லாங் ஐலண்ட்ல நாம தங்கப் போற ஹோம் ஸ்டீட் ஹோட்டல், ஜாக்சன் ஹைட்ஸ் பக்கத்துல இருக்கு. அங்க போறோம்."

"வழி தெரியுமா."

"இங்க ஜிபிஎஸ் சிஸ்டம் இருக்கு. போய்ச்சேர வேண்டிய அட்ரசை கொடுத்தா போதும். சேட்டிலைட் மூலமா கனெக்ட் ஆகி போய் சேர வேண்டிய இடத்துக்கு வழியை அதுவே சொல்லும். மேப் ஸ்கிரீன்ல தெரியும்."

"வாவ்."

----------------------

"பாஸ். ரைட்ல ஓட்டுங்க"

"ரைட்டாதான் ஓட்டுறேன்."

"அய்யோ ரைட் சைட்ல ஓட்டுங்க."

"ஆமால்ல. இந்த ஊருல ரைட் சைடுதான் ரைட் சைடு." ஒரு வழியாக அவர்கள் ஹோட்டலை போய் சேர்ந்தார்கள்.

----

அடுத்த இரண்டு நாட்களும் சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் பில்டிங், மேடம் டுஸாட்ஸ், செண்ட்ரல் பார்க் இன்னும் சில மியூசியங்கள் எல்லாம் சுற்றி பார்த்தார்கள்.

"பாஸ். உண்மைய சொல்லுங்க. சும்மா சுத்தி பார்க்கலாம்னு தான வந்தோம். கிங்பின் எல்லாம் உடான்ஸ் தானே."

"என்ன இப்படி சொல்லிட்டே. நாம வெறுமனே சுத்தி பார்த்தோம்னு நினைச்சியா. நான் கிங்பின்னோட ஆட்களோட நடமாட்டத்தையும் நோட் செஞ்சுட்டுதான் இருந்தேன். நாம தங்கியிருக்கிற ஓட்டல்லதான் கிங்பின்னோட காதலி வெனஸ்ஸா ஃபிஸ்க் தங்கியிருக்கா. அவளுடைய நடமாட்டத்தை நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்.".

"வெனஸ்ஸா பிஸ்க்தான் கிங்பின்னோட காதலி அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும்."

"சும்மாவா எத்தனை ஸ்பைடர்மேன், டேர்டெவில் கதையெல்லாம் படிச்சிருக்கேன்."

"இப்ப என்ன பண்ண போறிங்க."

"ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல். அவளை செட்யூஸ் பண்ணி கிங்பின் பத்தின ரகசியங்களை கேட்டு தெரிஞ்சுக்கப் போறேன்."

"என்னது.."

"பத்தியா என்னை தப்பா நினைச்சிட்டு. சும்மா மயக்க மட்டும்தான் செய்வேன். உண்மைகள் தெரியணும் இல்லையா.."

"சரி எப்படியோ போங்க. இந்த மூஞ்சிக்கு எவளும் மயங்க மாட்டா. நான் ஒருத்தியே உங்களுக்கு அதிகம்..."

ஷங்கர் அந்த ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்த வெனஸ்ஸாவை நோக்கி முன்னேறினான்.

"ஹாய். ஐ யம் ஷங்கர்."

"ஐ யம் வெனஸ்ஸா." வன்னிலா ஐஸ்கிரீமில் செய்தது போல் இருந்தாள்.

"யூ ஆர் பியூட்டிஃபுல். மே ஐ கிவ் யூ கம்பெனி."

"இட் ஈஸ் மை பிளஷர். யூ ஆர் சோ மேன்லி.. குட் யூ ப்ளீஸ் ஆர்டர் வைன் ஃபார் மி."

"ஷ்யூர்." ஷங்கர் மாலுவை பார்த்து கண்ணடித்தான்.

"வாட் யூ வில் ஹாவ்."

"ய கேன் ஆஃப் கோக். ஓப்பன்டு பட் நாட் ஸ்ட்ராவ்டு."

கொஞ்ச நேரத்தில் வெனஸ்ஸாவோடு அவன் அவளது அறைக்கு சென்றான்.

பின்தொடர்ந்த மாலு அந்த அறைக்கதவு சாத்தப்பட்டதால் வெளியே இருந்து பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு திரும்பினாள்.

-------
அரை மணி நேரம் போனது. ஷங்கர் திரும்பாததால் மாலு மீண்டும் அந்த அறைக்கு சென்றாள்.

உள்ளே இருந்து முக்கல் முனகல் ஒலிகள்.

அடப்பாவி. "சும்மாதான்.." அப்படின்னு சொன்னானே.

கதவை திறந்து கொண்டு நுழைந்தவள் ஷங்கரை தேடினாள்.

தரையில் ஷங்கர் கைகால்கள் கட்டப்பட்டு பனியன் ஜட்டியோடு இருந்தான். வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை பிரித்தாள்.

"பாஸ். என்ன இது. செட்யூஸ் பண்றேன்னு கிளம்பி வந்து இப்படி டிரெஸ் எல்லாம் ரெட்யூஸ் ஆகி கிடக்கறீங்க."

"ஆக்சுவலி கோக் ட்ரஸ் மேல ஊத்திக்கிச்சு. அதுக்காகத்தான் ட்ரெஸ்ஸை கழட்டினேன். ஹி.. ஹி."

"நம்பி தொலைக்கிறேன்."

"ஏமாந்த நேரமா பார்த்து கட்டி போட்டுட்டு பாக்கெட்ல இருந்த கேஷ் மொத்தமும் எடுத்துக்கிட்டா. நல்ல வேளை கார்டு எல்லாம் உங்கிட்டதானே இருக்கு."

"இப்படியா ஏமாறுவீங்க."

"இல்லை. நான் கிங் பின்னை பத்தி கேட்டதும் உஷாராயிட்டா. என்ன கட்டி போட்டுட்டு தப்பிச்சிட்டா."

"பாஸ். உங்க ட்ரெஸ் எல்லாம் இதோ இந்த மூலையில இருக்கு."

"தாங்ஸ்" எடுத்து அணிந்தான்.

"பாஸ். இந்த விளையாட்டு நமக்கு வேண்டாம். ஊருக்கு போயிடலாம்."

"முன் வெச்ச காலை பின் வெச்சு ஷங்கருக்கு பழக்கமேயில்லை. கட்டாயம் கிங் பின்னை பிடிப்பேன்."

அப்போது அவள் உள்ளே நுழைந்தாள். வெனஸ்ஸா. உடன் நான்கு தடியர்கள்.

அவர்கள் துப்பாக்கியை நீட்டினார்கள்.

-----------

"பாஸ். இவங்க நம்மை எங்க கொண்டு வந்திருக்காங்க."

"யாருக்கு தெரியும் கண்ணைக் கட்டி கொண்டு வந்திருக்காங்க. கிங் பின்னோட ஆட்களா இருக்கலாம்."

அப்போது அவர்களுக்கு எதிரே இருந்த சுவர் சுற்றியது. மறுபுறம் மேஜை. சுழல் நாற்காலி. அதில் ஒரு மொட்டைத் தலையர் இவர்களுக்கு முதுகு காட்டியபடி.

"வெல்கம் மிஸ்டர் ஷங்கர்."

"யூ... யூ... கிங் பின்."

"எஸ். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே."

"உனக்கு தமிழ் தெரியுமா."

"வேலூர் ஜெயில்ல இரண்டு வருசம் இருந்தேன். தமிழ் கத்துகிட்டேன்."

"அப்படியா.. ரோஜா படத்தில வர்ற காஷ்மீர் தீவிரவாதி தமிழ் நாட்டு ஜெயில்ல தமிழ் கத்துக்க முடியும். ஆனா அமெரிக்க கிங் பின்... எப்படி வேலூர் ஜெயில்ல..."

"ஹா.. ஹா... ஜோக்கடிச்சா நம்பிடறதா... என்னைத் தெரியலை."
கிங்பின் மொட்டைத் தலையில் தாளம் தட்டினார்.

"நீ... நீங்க.."

"ஷிவாஜி. த பாஸ். தி கிரேட் கிங்பின்."
ஷங்கரும் மாலுவும் அதிர்ச்சியானார்கள்.

"நீங்க சாஃப்ட்வேர்ல இருந்து இருநூறு கோடி சம்பாதிச்சு மக்களுக்கு உதவறதா......"

"ஹா.. ஹா.. ஹா.. அதை நீயும் நம்பறியா. நூறு இல்லை இருநூறு வருசம் பொட்டி தட்டுனாலும் இருபது கோடி கூட சாப்ட்வேர்ல சம்பாதிக்க முடியாது. நான் சம்பாதிச்சதெல்லாம் கிங் பின்னா இருந்துதான்."

"இது தப்பில்லையா."

"கண்ணா. தப்பு எதுன்னு நீ பாக்குறே. சரி எதுன்னு நான் பாக்குறேன்."

"என்ன சொல்றீங்க."

"இன்னைக்கு நீ 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்குறதுக்கு பதிலா 39 ரூபாய்கு ஒரு டாலர் வாங்கி ஈஸியா அமெரிக்கா வர முடிஞ்சிருக்கு. காரணம் யாருன்னு யோசிச்சு பார்த்தியா."

ஷங்கர் யோசிக்க ஆரம்பித்தான்.

"இந்திய கருப்பு பணத்தை ஆஃபீஸ் ரூம் போட்டு அங்கிருந்து இங்க கடத்துறேன். அந்த பணத்தை வெச்சு இங்க வீடு குறைஞ்ச விலைக்கு வாங்கி அதை எங்க ஆளுங்களை வெச்சு அதிக விலைக்கு பேங்க் லோன் போட்டு வாங்க வைக்குறேன். லாபத்துக்கு லாபம். கொஞ்ச நாள்ல அவங்க கடன் கட்டாம போக பேங்க் திவால் ஆகுது. அதனால அமெரிக்கா திவால் ஆகுது. அதனால இந்தியா சூப்பர் பவராகுது."

"இது தப்பில்லையா."

"நான் இந்திய தேசத்துக்காக உழைக்கிற ஒரு வீரன். என்னோட வழி உனக்கு தப்பா தெரியலாம். ஆனா அது இந்திய தேசத்தை முன்னேத்துற வழி. என் வழி தனி வழி."

"இருந்தாலும்..."

"கண்ணா இப்ப நான் உனக்கு இரண்டு சாய்ஸ் தர்றேன். நான் பண்றது சரின்னு நினைச்சா உன்னை கூட்டி வந்த மாதிரியே கொண்டு போய் விட்டுடுவாங்க. நான் பண்றது தப்புன்னு நினைச்சின்னா வா என்னோட ஆஃபீஸ் ரூம் போய் பேசலாம்."

"ஆஃபீஸ் ரூமா... நீங்க செய்யறது தப்புன்னு நான் எப்ப சொன்னேன்."

"ஹா... ஹா... ஹா.."

"நாங்க உங்க முகத்தை பார்க்கலாமா."

"ஹா... ஹா.. ஹா.. எனக்கு விளம்பரம் பிடிக்காது. "
அவர் ஸ்டைலாக தன் தலையில் மீண்டும் தாளம் தட்டினார்.
"ஷிவாஜியும் நானே. எம்ஜியாரும் நானே."

"அப்ப வெற்றிமோகன் எழுதினது உங்களை பத்திதானா ?"

"யாரது என்னை பத்தி எழுதறது. அடுத்த தடவை அந்த ஆளை தூக்கிட்டு வாங்க."

"விட்டுடுங்க சார். பாவம். அவர் ஒரு எலக்கியவாதி."

"சரி. நீங்க போகலாம்"
----------

மாலுவும் ஷங்கரும் அதே ஹோட்டலில் இறக்கி விடப்பட்டார்கள்.

"மாலு நாம நாளைக்கு இந்தியா திரும்பறோம்."

"அப்ப கிங்பின்."

"அவர் சட்டப் படி நடக்காம இருக்கலாம். நியாயப்படி நடக்கிறார். அதனால அவரை சட்டத்துல பிடிச்சிக் கொடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை. ஹி ஈஸ் எ கிரேட் பேட்ரியாட். ஜெய் ஹிந்த்."

------

விமானத்தின் ஜன்னலில் கீழே தெரியும் நியூயார்க்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு. (நெவார்க் அல்ல).

"இட் ஈஸ் ஆல் இன் த கேம்" என்றான் ஷங்கர்.

--------------


சி.ஐ.டி. ஷங்கர் கதைகள்:

3.
சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."
2. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".
1. மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "என்ன எழவுடா இது ?".

Wednesday, February 13, 2008

சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."

"ஹாய். பாஸ். வாட்ஸ் அப்?" மாலு ஷங்கரை அழைத்த படியே உள்ளே நுழைந்தாள்.

"மாலு. நாம ரொம்ப ஆங்கிலம் பேசுறோமாம். இது தமிழ் கதையா ஆங்கில கதையான்னு வாசகர்கள் கேள்வி கேட்கிறாங்க. தமிழ்லயே பேசுறயா."

"அப்படியே ஆகட்டும். நாதா. தங்கள் சித்தம் என் பாக்கியம்."

"கொடுமையா இருக்கு. சாதாரணமாவே பேசு.".

"சரி. சரி. ஏதாவது புது கேஸ் வந்து இருக்கா."

"எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன்னா, நாம கேஸ் நம்ம கிட்ட வரணும்னு நினைக்கிறத விட கேஸை தேடி போறதுதான் பெட்டர்னு நினைக்கிறேன்."

"ஆமா யாரோ ஒரு கொத்தனார் கூட யாரோ லீனாவோ வீணாவோ, அவங்க ஜாக்கெட்டை காணலைன்னு சொல்லியிருந்தார். நாம அந்த கேஸை எடுத்துகிட்டா என்ன பாஸ்."

"இதெல்லாம் ஒரு கேசா. நாம துப்பறியறத ஒரு ஹாபியா ஒரு த்ரில்லுக்காக பண்றோம். அதை சமூகத்துக்கு பயன்படுற மாதிரி பண்ணா என்ன."

"புரியலையே பாஸ்."

"வீ ஆர் க்ரைம் ஃபைட்டர்ஸ். சட்டத்துக்கு தப்பி நடக்கிற காரியங்களை நாம கண்டிக்கனும். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரணும். அமைதியான குற்றங்களில்லாத ஒரு சமூகத்தை படைக்கணும்."

"பாஸ். சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசறீங்களே. இது காமெடி ஸ்டோரி. நியாபகம் இருக்கட்டும்."

"எனஃப் காமெடி. ஆல் ஐ நீட் ஈஸ் ஆக்சன். இன்னிக்கு இந்த சமூகத்தை செல்லரிச்சுக்கிட்டு இருக்க முக்கியமான பிரச்சனை ப்ளூ ஃபிலிம். அதை எடுக்கறவங்களை கண்டு பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறோம். இந்த ஆப்பரேஷனுக்கு நான் வெச்சிருக்கிற பெயர் ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."

"வாவ். இண்ட்ரஸ்டிங். ஆனா அவங்களை எப்படி கண்டுபிடிப்பீங்க."

"இங்க பார்த்தியா. இது எல்லாம் ப்ளூ ஃபிலிம் சிடி டிவிடி. இதையெல்லாம் போட்டு பார்த்து...."

"ஓ. இவ்வளவு பில்ட் அப்பும் நீ ப்ளூ ஃபிலிம் பார்க்கறதுக்குத்தானா." கோபப்பட்டாள்.

"அச்சச்சோ. தப்பா புரிஞ்சிகிட்டியே. இதையெல்லாம் போட்டு பார்த்து அதுல வர்ற பங்களா. அதுல வர்ற இண்டீரியர் டிசைன் இதெல்லாம் நோட் பண்ணனும். அப்பதான் இதை எடுத்த பங்களா எதுன்னு தெரியும். நாமளும் ஈஸியா இதை எடுத்துடறவங்கள கண்டுபிடிச்சிடலாம்."

"பரவாயில்லையே ஐடியா நல்லா இருக்கே."

"நான் இந்த பத்து டிவிடியும் ஏற்கனவே பார்த்துட்டேன். இதுல வர்ற பங்களாவை பார்த்தா வளசரவாக்கம் பக்கத்துல இருக்க ஒரு பங்களா மாதிரியே இருக்கு. நாம அதை நோட்டம் விடறோம்."

"ஓ.."

"முதல்ல நீ அந்த பங்களாவுக்குள்ள போற. ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த விசிலை ஊது. அப்ப நான் கரெக்ட் டைமுக்கு வந்து உன்னை காப்பாத்துறேன். அவங்களை கையும் களவுமா பிடிக்கிறோம். இட் ஈஸ் ஆக்சன் டைம்."

"விளையாடறீங்களா. நான் ஒரு பொண்ணு ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா."

"சரி. சரி. அப்படின்னா நானே பொம்பளை வேஷத்துல போறேன்.

-------------------------

"பாஸ். பொம்பளை வேஷத்தில அழகா இருக்கீங்க."

"சரி. சரி. நான் உள்ளே போறேன். எதாவதுன்னா விசில் அடிக்கிறேன். நீ போலீசுக்கு போன் போட்டு ரவுண்ட் அப் பண்ணிடு."

"விசிலெல்லாம் பழைய டெக்னிக் பாஸ்."

"அப்ப மொபைல் போன்ல மிஸ்டு கால் கொடுக்கறேன்."

"அப்பவும் மிஸ்டு கால்தானா. அல்பம் பாஸ் நீங்க."

"சரி. சரி" பெண்வேடத்திலிருந்த ஷங்கர் உள்ளே நுழைந்தான்.

"நீதான் ஷீலாவா. உனக்காகத்தான் வெயிட்டிங்." வரவேற்ற நபர் இளம் சொட்டையர். 45 வயது.

"நீங்க". பெண்மை கலந்த குரலில் ஷங்கர்.

"ஐ யம் டாக்டர் பிரகாஷ். இது பீட்டர். உன்னோட கோ ஆர்ட்டிஸ்ட்." பீட்டர் இளித்தான்.

எடுக்கிறது அந்தப்படம். இதுல இந்த தடியன் 'கோ ஆர்ட்டிஸ்ட்.'ஆ. மலையாளப்படங்களில் வருபவனை போல் இருந்தான் அவன்.

"நாம ஷாட்டுக்கு போலாமா ஷீலா."

"என்ன மாதிரி ஷாட்."

"ரேப் சீன். நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணட்டுமா." டாக்டர் பிரகாஷ் நெருங்க..

"சார்." இன்னொரு பெண் குரல் கேட்டது... "நான் ஷீலா." அவள் உள்ளே நுழைந்தாள்.

"அப்ப இது." ஷங்கர் ஆக்சன் டைம் என்பதை உணர்ந்து கொண்டான். கடமையாக ஒரு மிஸ்டு காலை தட்டிவிட்டவன் பாய்ந்தான்...

பிரகாஷின் தாடையில் ஒரு அடி இறங்கியது. அடியா அது இடி.
"ஹா. ஹா. என்னையாடா ரேப் பண்ணுவீங்க. நான் ஆம்பிளைடா." ஷங்கர் சிரித்தான்.
ஷீலா அலறி ஓடி பதுங்கினாள்.

சுதாரித்துக் கொண்ட பீட்டரும் பிரகாஷ்ம் நெருங்கி ஷங்கரை பிடித்தார்கள். கிட்டத்தட்ட ஷங்கர் இருவரிடமும் மாட்டிக் கொள்ள மாலு அதிரடியாக எண்டரி கொடுத்தாள்.

மாலு ஷங்கர் கூட்டணியின் அதிரடி தாக்குதலில் பீட்டரும் டாக்டரும் விழுந்தார்கள்.

"மாலு, நல்ல நேரத்தில வந்து என் கற்பை காப்பாத்தின."

கீழே விழுந்தவர்கள் மலங்க மலங்க பார்த்தார்கள்.

"என்ன பார்க்கறீங்க. நீங்க அந்த மாதிரி படம் எடுக்கறது எனக்கு எப்படி தெரியும்னா. துப்பறியும் சிங்கம் ஷங்கரை என்னன்னு நினைச்சீங்க." ஷங்கர் கர்ஜித்தான்.

"அந்த மாதிரி படமா." அடியின் வலியோடு டாக்டர் முனக.

"எஸ். நீங்க ரேப் சீன் எடுக்கறேன்னு சொன்னதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். மாலு போலீஸ்க்கு போன் போடு. இவன்களை பிடிச்சி கொடுக்கலாம்."

அப்போதுதான் அந்த ஆசாமி உள்ளே ஓடி வந்தான். "சார். டைரக்டர் சார்..."

இன்னொரு வில்லன். மாலுவும் ஷங்கரும் அலர்ட்டானார்கள். "யாருய்யா நீ.."

"நான் புரொடக்சன் மேனேஜர்."

"அடப்பாவிகளா. புரோடக்சன் மேனேஜர் வச்சு அந்த மாதிரி படம் எடுக்கற அளவுக்கு ஆயிடுச்சா."

"என்னய்யா சொல்றீங்க. அங்க மொத்த யூனிட்டும் டைரக்டருக்காக காத்துக்கிட்டு இருக்கு. "தங்கை" சீரியலுக்காக....."

"தங்கை சீரியலா... இரண்டு வருசமா ஓடுதே அந்த மெகாசீரியலா.... இந்த ஆளு ரேப் அது இதுன்னானே" ஷங்கர் குளறினான்.

"ஆமாய்யா. ஹீரோயினோட அஞ்சாவது தங்கச்சி பத்து வருஷம் ஹாஸ்டல்ல தங்கி படிச்சு பெரிய பொண்ணாகி அக்காவை பாக்க வருது. வர்ற வழியில வில்லன் மயக்கி கொண்டு போய் அவளை கற்பழிச்சிடுறான். அந்த ஷாட்டை இன்னைக்கு புது ஆர்டிஸ்ட்டை வெச்சி எடுக்கறோம்."

"யோவ் புரொடக்சன். அந்த ஆளுகிட்ட என்னய்யா கதை பேசிக்கிட்டு. முதல்ல என்னை தூக்குய்யா." டைரக்டர் பிரகாஷ்.

"நீங்க டாக்டர் பிரகாஷ்? டீவி சீரியல்..."

"ஏன்யா. டாக்டருக்கு படிச்சா டிவி சீரியல் டைரக்ட் பண்ண கூடாதா. யோவ். புரொடக்சன். போலீசுக்கு போன் போடுய்யா... இவங்களை...."

"போலீசா." ஷங்கர் மாலுவை பார்த்தான்.

மாலு ஷங்கரை பார்க்க இருவருமாக தப்பி வெளியே ஓடினர்.

ஷங்கர் பைக்கை ஸ்டார்செய்ய தப்பி வந்து சேர்ந்தார்கள்.

இந்த தடவை ஷங்கருக்கு மாலுவிடம் இருந்து தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது எனர்ஜி பூஸ்ட் கன்னத்தில்.

வீங்கிய கன்னத்தை தடவியபடி ஷங்கர் "இட் ஈஸ் ஆல் இன் த கேம்." என்றான் சோகமாக.

---------------------------

மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்

காதல்.
இந்த மூணு எழுத்து வார்த்தை மனுசனை படுத்தியெடுக்கிற மாதிரி வேறு எதுவும் படுத்தியெடுக்கிறதா தெரியலை.

அப்படியும் மனுசப் பயலுங்க காதலிச்சிட்டுதான் இருக்காங்க. ஏன் ?

உலகம் தோணுண காலத்துல இருந்து இந்த காதல் கருமம் இருந்துகிட்டுதானே இருக்கு.
எம்புட்டு காலம். எவ்வளவு காதல். இன்னும் இங்க காதல் ஏன் இருக்கு.

காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?

காதல் கதகதப்பான நெருப்பு. அந்த கதகதப்புதான் மனுசனை இன்னும் காதலிக்க வைக்குது.
ரொம்பவே நெருங்கிட்டாலும் அதே நெருப்பு சுட்டெரிச்சுடுது.

காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம். என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும். அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.

காதல் சுயமிழத்தல். சுயநினைவிழத்தல். தன்னையே இழத்தல். அது ஒரு போதை. மதுவை குடித்தவன் மயங்குவது போல் அதுவும் ஆளை மயக்குகிறது. ஆனால் தேவையான போதை.
எல்லாத்துலயும் ஒரு அளவு தெளிவு வேணும். காதலில் கூட.

காதல் தப்பில்லை. சில சமயம் காதலிக்கிறவங்க தப்பா இருக்கிறதால காதலே தப்போன்னு தோணிடும்.

காதல்ன்றது என்ன. காதல் என்பது அன்பு. ஆண் பெண் இருவருக்கு இடையே இருக்கக்கூடிய அதீத அன்பு. தங்கள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலிக்கப்படுபவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். ஆனால் நடைமுறையில் காதல் ஏதேனும் ஒரு கட்டத்தில் காலாவதியாகிவிடுகிறது.

வெறும் பணத்தையோ இல்லை அழகையோ பார்த்து வந்தா அது காதல் இல்லை.
அந்த காதல்ல எதிர்பார்ப்பு மட்டும் இருக்குமே தவிர அன்பு இருக்காது.

உண்மையான காதல் என்பது எந்த காதலில் காதலன் அல்லது காதலியின் தோளில் சாய்ந்து அழ முடியுமோ அந்த காதல்தான்.
பொய்யான காதல் வாழ்வின் தோல்வியின் போது நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.

காதலியுங்க. அன்பைத் தேடி காதலியுங்க.

நாம மறுத்தாலும் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் இந்த உலகம் இருக்கிற வரைக்கும் காதல் இருக்கும்.

அதே போல காதல் இருக்கிற வரைக்கும்தான் இந்த உலகமும் இருக்கும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

(எச்சரிக்கை: காதல் மனநலத்திற்கு தீங்கானது.)

Monday, February 11, 2008

காதல் என்பது வெங்காயம்....

கண்டவுடன் காதல்.
அழகான வானவில்.
மழைநின்றதும் மறைந்துவிடும்.

----------------

காதல் ஒரு வெங்காயம்.
உரித்தால் ஒன்றுமில்லை.
வெட்டினால் கண்ணீர் வரும்.

---------

காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.
வேண்டாம்.
எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.

----------

காதலிப்பது
அறிவோடு யோசிப்பது.
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

---------

உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல
எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.
யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.

---------

காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.
ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.

----------

காதலென்பது ஒரு புதைகுழி.
எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ
அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது.

----------

உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.
பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.
மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.

------------


காதலுக்கு கண்ணில்லை.
கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.
கண்திறந்தால் காணாமல் போகிறது.

------------

காதல் ஒரு கவசம்.
மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.

காதலில்லாத காமம் சாத்தியம்.
காமமில்லாத காதல் ????

-------------

காதல் கணத்தில் தோன்றுகிறது.
நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.
மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.
மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.

----------

பிப்ரவரி 14
இன்னுமோர் முட்டாள்கள் தினம்.

---------

காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.

--------

Monday, February 04, 2008

எனது தற்கொலை பற்றிய தகவல்...

அன்புள்ள நட்புக்கு

இன்றைய தினம் நான் மரணிக்கவிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எத்துணை பேருக்கு தனது மரணத்தை பிறருக்கு அறிவித்து விட்டு மரணிக்கும் பேறு கிடைக்கும் என்று தெரியவில்லை. சொல்லி விட்டு விடைபெறும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆம். நான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.

அதிர்ச்சி வேண்டாம். பிறப்பு போல் இறப்பும் இந்த புவியில் மிக சகஜமானதுதான்.

என்ன இறப்பை எல்லோரும் விரும்புவதில்லை. ஆனால் நான் விரும்புகிறேன்.

வாழ்வில் நான் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன். சுகங்கள் சோகங்கள் அனைத்தையும்.

சோகங்கள் வந்தபோதும் சில பற்றுக்கோடுகள் இருந்ததால் இதற்குமுன் எளிதில் அதை கடந்து வந்திருக்கிறேன்.

இந்த தருணத்தில் எனது பற்றுக்கோடுகள் அனைத்தும் உடைந்து விட்டதாய் உணருகிறேன்.

எனது வாழ்வின் மகிழ்ச்சிகள் தொலைந்து போயுள்ளன. எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.

எத்தருணத்தில் இது நிகழ்ந்தது என்பதை நான் அறிவேன். அது எனது வாழ்வின் சோகம்.

இன்று என்னைச் சுற்றி தனிமை மட்டும் மிஞ்சியிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் இருந்தாலும் தனிமையை மட்டுமே உணர்கிறேன். அது மிக கொடுமையாக இருக்கிறது.

இருத்தலின் இறத்தல் நன்று என்று உணர்கிறேன்.

இனி எதுவும் எனது முடிவை மாற்ற முடியாது என்ற நிலையில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.

இன்றைய தினம் மாலை 6 மணியளவில் இவ்வுலகை துறக்கிறேன். நான் யார் என்பதை அறிய முயல வேண்டாம். என் மரண செய்தி எட்டும் போது நான் யார் என்பது தெரிய வரும்.

சொல்லாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால்தான் இந்த மின்னஞ்சல்.

போகிறேன் எனது மரணத்தில் வாழ்வு முழுமையடைந்தது என்ற மகிழ்வுடன்.

---பெயர் தெரிவிக்க விரும்பாத நண்பன்.

----------------------------------------------------------------------------------


திகைப்படைந்திருந்த ஷங்கரை மாலு உலுப்பினாள். "என்னாச்சு".

"நீயே படி." படித்தவள் தானும் அதிர்ச்சியானாள். "இது.. இது..".

"யார்னு தெரியலை... மெயில் ஐடி abcdef1234@gmail.com. னு இருக்கு. இந்த மெயில் அனுப்பறதுக்காக புதுசா ஒரு மெயில் ஐடி திறந்திருக்கலாம். 'எனது தற்கொலை பற்றிய தகவல்' அப்படின்ற சப்ஜக்டோட வந்திருக்கு."

"மெயில் படிச்சு பார்த்தாலே அதிர்ச்சியாயிருக்கு. போகஸா இருக்குமா."

"இருக்கும். இருக்கணும். ஆனா படிச்சு பார்த்தா அப்படி தோணலை.".

"யாருன்னு கண்டுபிடிச்சு காப்பாத்த முடியாதா..."

"உலகத்தோட எந்த மூலையில இருந்தும் வந்திருக்கலாம். ஐ.பி. அட்ரசை வெச்சு கண்டு பிடிக்கலாம். மணி இப்ப மதியம் 3. நமக்கு இன்னும் மூணு மணிநேரம்தான் இருக்கு."

"to, cc யில இருக்க பெயர்களை வெச்சு. யார் யாருக்கெல்லாம் காமன் ஃபிரெண்டுன்னு பார்த்து கண்டுபிடிக்கலாமா."

"பார்த்துட்டேன். எல்லா மெயிலும் bcc யில போட்டு மெயில் அனுப்பியிருக்கணும்."

ஐ.பி. அட்ரசை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். மின்னஞ்சல் எக்மோரில் இன்டர்னெட் மையத்திலிருந்து வந்ததாக தெரிந்தது.

அவர்கள் அந்த இணைய மையத்தை அடைந்த போது நேரம் 4:45.

"எக்ஸ்கியூஸ் மி. மதியம் இங்க இருந்து 2:30 மணிக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பினவரை பத்தி தெரிஞ்சுக்க முடியுமா."

"எத்தனையோ பேர் வர்றாங்க. போறாங்க. ஃபுளோட்டிங் பாப்புலேசன் இங்க அதிகம் சார். ஏதாவது அடையாளம் சொல்லுங்க."

"அந்த மெயில்ல நான் தற்கொலை செய்துக்க போகிறேன்னு இருந்தது."

"அந்த பைத்தியமா இருக்கும். மதியம் ஒரு பைத்தியம் சார். பார்த்தா பைத்தியம்னே தெரியாது. பிரெளஸ் செஞ்சிட்டிருந்தது. கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில இருந்து வந்து பிடிச்சுட்டு போனாங்க."

"தாங்ஸ்." அங்கிருந்து கிளம்பினார்கள்.

"ஒரு வேளை அந்த பைத்தியம்தான் மெயில் அனுப்பியிருக்குமோ." மாலு.

"அப்படித்தான் தோணுது. ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சுடலாம்."


-----------------

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.

தலைமை மருத்துவரின் முன் அமர்ந்திருந்தனர் மாலுவும் ஷங்கரும்.

"மிஸ்டர் ஷங்கர். உங்களுக்கு வந்த மெயிலை அனுப்பியது கதிரேசனேதான்."

"கதிரேசன்."

"எஸ். அவர் இங்க இருக்க ஒரு பைத்தியம். மதியம் தப்பிப்போய் இன்டர்நெட்ல இருந்து மெயில் அனுப்பியிருக்காரு. எனக்கும் மெயில் வந்து இருக்கு."

"ஓ."

"கவலைப்படாதீங்க அவரைப் பிடிச்சிட்டோம். இனி பயமில்லை."

"தாங்ஸ் டாக்டர். ஆனா அவர் ஏன் இப்படி."

"அவர் ஒரு மென்பொறியாளர். டைவர்ஸீ. அவரது மனைவி பிரிஞ்சு போனது அவரை பெரிய அளவுல பாதிச்சு, அந்த அதிர்ச்சிகளால அவரது மனநிலை பாதிச்சுருக்கு. தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து மத்தவங்க காப்பாத்தியிருக்காங்க. ஒரு கட்டத்துல பேசறதையே நிறுத்தி மரம் மாதிரி ஆயிட்டார். அவரால யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனா பேசுறதை நிறுத்தி தன்னையே மறந்திட்ட அவரை குணப்படுத்தறதுக்காக உறவினர்களும் நண்பர்களுமா இங்க சேர்த்திருக்காங்க. அவரோட ரெக்கார்ட்ஸ் படி இன்னைக்கு அவரோட திருமண நாள். தப்பிச்சு போனவரை கஷ்டப்பட்டு கொண்டு வந்து செடடிவ் கொடுத்து படுக்க வெச்சிருக்கோம். இனி பிரச்சனையில்லை."

"எனக்கு எப்படி அவர்கிட்ட இருந்து மெயில்."

"எங்க ரெக்கார்ட்ஸ் படி அவருக்கு துப்பறியும் கதைகள், நாவல்கள் பிடிக்கும். உங்க கதைகளை அவர் படிச்சிருக்கலாம்."

"நல்லது டாக்டர். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹிம்."

தடால் என்ற சத்தம் கேட்டது. கூச்சல் குழப்பங்கள். மூவருமாக வெளியே எட்டி பார்த்தனர்.

"டாக்டர். கதிரேசன் ஐந்தாவது மாடியில இருந்து குதிச்சிட்டார்." நர்ஸ் அலறினாள்.

மூவரும் கீழிறங்கி ஓடினார்கள்.

அங்கு கதிரேசன் இரத்த வெள்ளத்தின் நடுவே பிணமாக.....

ஷங்கர் தனது வாட்சை பார்த்தான். நேரம் மாலை 6:00.


--------------------------